Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
இறங்கிப் போனவர்கள்

ம.காமுத்துரை

"தங்கம் விலை திடீர் சரிவு.. பவுனுக்கு ரூபாய் 128 குறைவு...!

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி பேரல் எழுபது டாலரானது...."

"பரவால்லயே... இன்னொரு வாரத்துல வெல எறங்கிரூம்போல..." தந்திப் பேப்பரின் தலைப்புச் செய்தியைப் படித்து விட்ட சந்தோசத்தில் காத்தவராயன் தாளை மடித்து நெட்டு பெஞ்சியின் விளிம்போரமாய்ப் போட்டான்.

அவனது கெக்கலியான பேச்சும் பேப்பரை வீசிப் போட்ட தொனியும் காளிதாசுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. மறுபடியும் முறைத்து தனது எதிர்ப்பைத் தெரியப்படுத்தினான்.

வாத்தியாருக்கு ரெண்டாந் தடவையாக முகத்தில் தண்ணீரை 'ஷவர்' செய்துவிட்டு, ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த அவரது சொந்தத் துண்டை எடுத்து பூப்போல முகம் துடைத்து விட்டான்.

"எட்டாயிரத்துக்கு வந்திர்ச்சாம்ல காளி...." அவனது எதிர்ப்புகள் எதையும் கவனியாதவனாய் காத்தவராயன் மறுபடி பேசலானான். அடுத்து சவரஞ்செய்து கொள்ளவும் தயாராயிருந்தான்.

முகம் துடைத்ததும் கண்ணாடி பார்த்த வாத்தியார் அதன் வழியே காத்தவராயனையும் நோட்டம் விடுவதை அறிந்தான். பொறுக்கவில்லை அவனுக்கு.... "யேன்... பத்துப் பவுன்ல ஓம்பொண்டாட்டிக்கி வக்கெப்பிரி எடுக்கப் போறியாக்கும்... அமுக்கிட்டு சும்மார்ரா... சாமி...."- சுள்ளென விரட்டினான்.

"எட்டாயிரத்துக்கு எந்த ஊர்லடா விக்கிறாக. ஒம்பது பத்துன்னு எகிறிக்கிட்டிருக்கு தெரிமா..." மீதமிருந்த ஈரத்தை கைகளால் இழுகியபடி சொன்னார் வாத்தியார். உறக்கச் சடவு நீங்கி இருந்தது. கொட்டாவி விட்டு கைகளை நெட்டிமுறித்து கண்களைத் திறந்ததும் "வசூல்ராஜா" ஆட்டக்காரியின் வாளிப்பான கால்கள் பேச்சைச் சுருக்கியது.

கண்ணாடி இழுப்பறையிலிருந்து ஸ்நோவை எடுத்து அவரது முகமெங்கும் பொட்டிட்டான். அதனைத் தேய்த்து முழுப்பரப்பும் பூசினான் காளிதாஸ். அதன் சுகந்தமான வாசனை அந்தக் கடை முழுக்கு மணம் பரப்பியது. இரண்டு சேர் போட்டிருந்தாலும் காளிதாஸ் ஒருவன்தான் வேலைபார்ப்பான். ஏதாவது திருவிழா - பண்டிகை காலங்களில் வெளியூரிலிருந்து சொந்தக்காரன் ஒருத்தனைப் பிடித்து இழுத்து வந்து உதவிக்கு வைத்துக் கொள்வான். சாப்பாடு போட்டு வேலையில் பாதிச் சம்பளமாகத் தர வேண்டும். வாத்தியார் மறுபடி கண்ணை மூடிக் கொண்டு சாய்ந்தார். இந்த இடைவெளியிலாவது காத்தவராயனை வெளியேற்றிவிட வேண்டும். போடா என சைகை செய்தான். அவன் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டே இருந்தான்.

"இதோட நிக்கிமா... இன்னம் ஏறுமாசார்..." எப்படியாவது வாத்தியாரின் கவனம் காத்தவராயன் மீது செல்லாதிருக்க வேண்டும். இதுக்குத்தான் யார்ட்டயும் அதிகமா பழக்கம் வச்சுக்கக்குடாது....

"ஏன்... பொம்பளப்பிள்ள பெத்திருக்கியா..." கண் திறவாமலே கேட்டார்.

அது உண்மைதான்,ரெட்டைக் குழந்தையாகப் பெற்றுப் போட்டிருந்தாள். அந்தக் குற்றத்திற்காகவே அவளை பிறந்த வீட்டிற்கு அடித்து விரட்டி இருந்தான். ஆறுமாதத்திற்குப் பிறகு இப்போதுதான் வந்திருக்கிறாள்.

"ரெண்டு பொம்பளப் பிள்ளீக சார்..." இவனுக்காக காத்தவராயன் பதில் சொன்னான்.

"ஓங்கிட்ட கேட்டாரா.. வெளிய போய் நில்லுடாங்கறே... இய்யின்னு இளிச்சிட்டு நிக்கிற... ஆளும் மொகறையும். உடுப்பாச்சும் வெள்ளையா இருக்கா... பெட்ரோல் ஊத்திப் பத்தவச்சாலும் பிடிக்காதுபோல... அம்பிட்டு அழுக்கு... பொழப்பக் கெடுக்காதடா... நாத்தம் புடிச்சவனெ..." என்று காரசாரமாய் பேசிடவாய் வந்தாலும், பெரிய கஸ்டமர் முன்னால் வாய் திறக்க முடியவில்லை. "ஆமா சார் கடங்கார நாய்கள பெத்துப் போட்டுட்டா..." என்று ஆத்தாளின் வார்த்தை அவனது வாய் வழியே வந்து விழுந்தது.

வாத்தியார் சிரித்தார்.

"அதுக்குத்தானப்பா நாங்க, ஒங்காளுக்கு ஓட்டுப்போட வேணாம்னு சொன்னம்..."- காத்தவராயன் எழுந்து நின்றான். வாத்தியார் இறங்கினதும் பேச்சுவாக்கில் உட்கார்ந்து விட வேணும். ரெம்ப நேரம் ஆகிப் போனது. எத்தினியோ பேர் மாத்தி மாத்தி வந்து விடுகிறார்கள். கலெம்பற கண்ணுமுழிச்சதும் வந்தான்.... சாயங்காலம் வெங்காய லோடு வந்துவிடும். நாலு மணிக்கெல்லாம் தள்ளுவண்டியோடு சந்தையில் நின்றால்தான் நாலுகாசு பாக்க முடியும். தீபாவளி நேரம் வேற..."

.....,இருந்தாலும் சின்ன ராவுத்தருக்கு இம்புட்டு வீம்பு ஆகாது. ஒழைக்கிற மனுசன் சுத்தம் பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? எப்பப்பாத்தாலும் சட்ட அழுக்கா இருக்கு வேஷ்டி அழுக்கா இருக்குன்னு.. வேலைக்கு நிக்கிறப்பயெல்லா மொகஞ்சுளிச்சுக்கிட்டுத்தாம் பேசுவாரு... வெங்காய வீச்சத்த விடவா உடம்பு நாத்தம் மீறுது...? ஒரு வாரமா முடியவெட்டுடா, மொகத்த வழிடான்னு உபத்தரவம் தாங்கல... காலைல செரச்சா, கழுத, சாயங்காலமே புளுக்குன்னு ஒருச்சாண் மயிரு வளந்துருது... தெனமுஞ் செரச்சுக் கிட்டே இருந்தா கஞ்சிப் பாட்ட பாக்க வேணாமா...

"இந்தா பார்ரா காத்தவராயா.. இன்னிக்கெல்லா சுத்தபத்தமா வரலைனுவையி... சடநாயி மாதிரி முடியுங்கிடியுமா வந்தே.. சரக்கு ஏத்திவிட மாட்டே..." என்றார்.

அவர நம்பித்தான் பொழப்பு ஓடுது... சொன்னுதுக்காவாச்சும் சவரம் பண்ணீறலாம்னு வந்தா... இங்க இம்புட்டு வாதன... கண்ணாடி பார்த்தான். நெசமாகவே சடைபிடிச்சுத் தான் போயிருந்தது மயிர். முகத்திலும் நீளமாகத்தொங்க ஆரம்பித்திருந்தது. அரிப்பும் தாங்க முடியல.

"நீ... அம்மா கட்சியாக்கும்...." வாத்தியார் கேட்டார். இப்போது காளிதாஸ் பவுடர் அடித்துக் கொண்டிருந்தான்.

"சார்...!" தெளிவாகக் கேட்கவில்லை.

"இல்ல... நீ. ஏ.டி.எம்.கேயா..."

"இப்ப விசயகாந்துக்கு மாறிட்டேன் சார்..."

கேகே.... என சிரித்தார் வாத்தியார். "பார்ரா.. ஏம்ப்பா..."

"அவரு லெட்டருப் போட்டு கூப்புட்டாரு சார்.... மாறிட்டான்..." கடுப்பாய்ப் பேசினான் காளிதாஸ். தீபாவளிக்குப் பத்துநாள் தான் இருக்கு... நாலு பெரிய மனுசருக்கு நல்லபடியா செரச்சு மனங்குளிர செஞ்சு. போனசப் பிடிச்சறலாம்னா.... தொலைய மாட்டேங்கிறானே... சும்மாவே...ஓங்கடைல சுத்தம் பத்தாதுப்பான்னு பேச்சு... இந்த லட்சணத்தில் இவன் வேற.....

"எம்ஜியாருக்குப் பெறகு இவரு தாங்சார் எதியும் எதித்துக் கேக்குறாரு... ஆருக்கும் பயப்பட மாட்டேங்குறாரு.... படத்துல கூட போலீஸ் ஐ.ஜி.யா வந்தார்னு வெயிங்க ஒடம்பு ரோமமெல்லா நட்டுக் குத்தலா நிக்கிதுங்களே... அம்பட்டுப் பேச்சு.. சண்ட... ஆளுகளும் நல்லா சேர்றாங்க.. இந்த வட்டம் அவருதாங்க மொதலமைச்சரு..."

அவன் சொல்லி முடித்ததும் கெக்கேகே எனச் சிரித்தான் காளிதாஸ். எதிரிக் கட்சிக்காரனை கேலி செய்கிற மனம் ஏறிக் கொண்டது.

வாத்தியார் கண்ணாடியில் மீசை மயிரை சரி பார்த்தார். அதைக் கண்டதும் உடனே கத்தரிக் கோலோடு குனிந்தான் காளிதாஸ். அப்போதும் அவனது சிரிப்பு முடியவில்லை.

கத்திரியைத் தடுத்த வாத்தியார், "என்னா.. எகடாசியான சிரிப்பு...." அவருக்கும் சிரிப்பு வந்தது.

"இல்ல சார். கொடி தூக்குனவகள்லாம் மொதலமைச்சர்னா.. வேற சோலிக்கு ஆருதேம் போறது...."

"யேம்பா... ஆசப்படக் கூடாதா..." கத்திரியை தன் கையில் வாங்கி மீசையிலிருந்த நரைமுடியைக் கத்தரித்தார்.

'ஆசப்படக் குடாதுசார்...!"

"என்னாப்பா அநியாயமா இருக்கு....!"

"ஆமா சார்... நாங்க என்னாசார் கொறவச்சம்...? அரிசி ஓர் ரூவாய்க்கிப் போடுறம். அரசெலவு சாமான் அம்புட்டும் அம்பது ரூவாய்க்கித் தரோம். பிள்ள பொறந்தா காசு. பொறக்க முன்னாடி கெர்ப்பத்துக்கு காசு. பள்ளியொடத்துல பீசு ஓசி, புஸ்தகம், துணிமணி இலவசம், படிக்க காசு,வயசாளிக்கு பென்சனு...கலரு டி.வி, அடுப்பு.. என்னா சார் வீடும், பொண்டாட்டியும் மட்டுந்தே தரல... செத்தாக்கூட பொதைக்க காஸ் தாரமேசார்.... இம்புட்டும் குடுத்துப் புட்டு நாங்க வீட்டுக்குள்ள இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு கெடப்பம். இவரு நல்லா... சீவி சிங்காரிச்சு. மொகத்துல மேக்கப்பத் தடவி பேசுனாருன்னா.. ஒடனே சியெம் ஆயிடுவாகளா..." மூச்சுவாங்கப் பேசினான் காளிதாஸ்.

வாத்தியார் சேரை விட்டுக் கீழிறங்கினார். பெரிய சுமையை இறக்கி வைத்தது போல அந்த சேரும் 'நறமுறவெனக் கூச்சலிட்டு அடங்கியது. அடுத்து அதில் ஏறி உட்கார தயாராய் கண்ணாடி முன்னால் வந்து நின்று கொண்டான் காத்தவராயன். வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்று மனசுக்குள் பிரார்த்தனை வேறு.

"என்னா.. பேச்சக்காணாம்... பதில் சொல்லூ..." தூண்டிவிட்டு வாத்தியார் வாசலில் நின்று சட்டையை உதறலானார். காத்தவராயன் சமாதானத்துக்கு வரத் தயாரானான். ரெம்பப் பேசினால் வேலை செய்ய முடியாதென அனுப்பிவிடலாம். காது கேட்காத மாதிரி இருந்தான்.

"அடுத்த வாரம் 'அம்மா வாராகளாம்ல"- காளிதாஸ் வாத்தியாரிடம் கேட்டான்.

"அவக கட்சிலதேன் சார்.. வண்டில ஏறி உக்காந்ததுமே...பிரியாணிப் பொட்டலம் தண்ணி பாக்கெட்.. காசு...கரிக்டாக் குடுத்துருவாங்க...." - காத்தவராயன் பதில் சொன்னபடி சாய்வு நாற்காலியில் ஏறி உட்கார்ந்தான். அவனுக்கும் 'கிரிபுறி' என முனகல் செய்தது சேர்.

"என்னா... நீவாட்டுக்கு ஏறி உக்காந்துட்ட.... துணியை மடித்து வைத்து சீப்பு பல்லிடுக்கில் பிரஸ் விட்டு சுத்தம் செய்தபடி கேட்டான் காளிதாஸ்.

"நேரமாச்சுப்பா... வேலைக்கிப் போகணும்..." கெஞ்சினான். கண்களில் கூடுதலான பவ்யம் இறைஞ்சியது.

"ம்ஹூம்.. இப்ப முடியாது... அப்புறம் வா... எறங்கு..."

"காசு வச்சிருக்கனப்பா.. இந்தா வாங்கிக்க..." சட்டைப் பையிலருந்து ரூபாய் நோட்டை எடுத்தான்.

"கேட்டனா ஓங்கிட்ட... இப்ப முடியாது... நாளக்கி வா...."

"நேத்தும் இதே தான சொன்ன..."

"சொன்னேன்ல..."அதற்கு மேல் பேச்சுவரவில்லை. ஓரக்கண்ணால் வாத்தியாரைப் பார்த்தான். அவர் உட்கார்ந்த சீட்டில் காத்தவராயன் உட்காருவதைப் பார்த்துவிட்டாரோ.. "எம் பொழப்பக் கெடுத்திராத... சொன்னாக்கேளு..."- கவிழ்ந்த சேரை நேரே நிமிர்த்தி இறக்கினான்.

"வாடிக்கையா ஒங்கிட்டத்தானப்பா வெட்டிக்கிறேன்... நிய்யே இப்படிச் சொன்னா...."

வாத்தியார் பார்ப்பது போலத் தெரிந்தது.... " இம்புட்ட முடிக்கி எங்கிட்ட கத்திரி இல்ல... பிளேடு பத்தாது.. போ..."

காத்தவராயனுக்கும் புரிந்தது. "யே குளிச்சுட்டுத்தா வாரேங் காளிதாசு.. நேத்தே குளிச்சிட்டே.. இன்னிக்கி வேலய முடிச்சிட்டு தாம்பா குதிப்பாங்க....

கண்ணை மூடிக் கொண்டு முடியவே முடியாதென்றான். வெங்கலா கோயிலுக்கு மொட்டை எடுக்க அவசரமாப் போக வேணுமென்றான்.

இருவரும் வாதம் பண்ணிக் கொண்டிருக்கையில் வாத்தியார் சட்டையை மாட்டிக் கொண்டு மறுபடி உள்ளே வந்தார். சார் நிற்க, தான் அமர்ந்திருப்பது சரியா என காத்தவராயன் யோசிக்குமுன்பே அவனது உடல் அனிச்சையாய்த் துள்ளிக் குளித்து சேரிலிருந்து இறங்கியது.

"கத்தி இருக்கா காளிதாசு... நெகத்த வெட்டணும்..."

"சார்..."

"புளேடுக்கு வர மாட்டேங்குது..." என்றபடி நெட்டுப் பெஞ்சில் உட்கார்ந்தார்.

"ந்தா தரேன் சார்...."- கண்ணாடி இழுப்பறையை சரக்கென திறந்து ஆக்சா' பிளேடால் தீட்டிய கத்தியை எடுத்தான். "எந்த நெகம் சார்...?"

"கால் பெருவிரல்தே... இரும்பா கெட்டிச்சுப் போச்சு பாரு..."- காலைத் தூக்கிக் காட்டினார்.

"அப்பிடியே இருங்க சார்...." சப்பென காலடியில் சம்மணம் போட்டு உட்கார்ந்தவன், அவரது காலைத் தூக்கி தன் மடியில் வைத்து பெருவிரல் நகக்கண்ணிலிருந்த அழுக்கைச் சுரண்டிவிட்டு, கத்தியை சிமிண்ட் தரையில் ஒரு தரம் தீட்டிக் கொண்டு நகத்தை நறுக்கினான்.

"ஓம் பேரு காத்தவராயனா...." வாத்தியார் கேட்டார்.

காளிதாசின் செய்கையினை நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த காத்தவராயன் வாத்தியாரின் அழைப்பில் தடுமாறி... 'ஆமாசார்' என்றான்.

"காளிதாசு சொன்னபடி... ஒனக்கு கலர் டி.வி. வந்துருச்சா..." சாதாரணமாகக் கேட்டார்.

சேரை இறுகப்பற்றிய காத்தவராயன் "டி.வி.யா" என்று ஒரு மாதிரியாகச் சிரித்தான்." நா செத்தா பொதைக்க சுடுகாடு கெடைக்குமான்னு கேளுங்க சார்... நான் நொளஞ்சாலே கடை ஏவாரங் கெட்டுடும்னு சாதியப் பாத்து செரைக்கவே மாட்டேங்குறான் சார்... டி.வி... கீ.வீ... "- என்று சொல்லியபடி தனது அழுக்குச் சட்டையினை உதறி மாட்டிக் கொண்டு வாசலில் இறங்கினான்.

கடைசிப் படி மிதித்தவன் வேகமாய்த் திரும்பிக் கத்தினான், "லேய்... இது...... நீடிக்காதுடா...."



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com