Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
சு.சாமி மீது முட்டை எறியலாமா?
இளமதி

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

இந்துமதி, சிவசங்கரி, விமலாரமணிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ரமணி சந்திரன் இன்னும் முன்னுக்கு நிற்கும் மர்மம் என்ன?

லேசான அல்லது லகுவான வாசிப்பு சுகத்தை விரும்பும் வாசகர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதுதான் அந்த "மர்மம்" போலும்.



மோடி பிரதமராக வந்து நாட்டை வழிநடத்த வேண்டும் என்கிறார்களே அம்பானியும், மிட்டலும்...?

மதக்கலவரங்களால் நாடு ரத்தக்களரியானாலும் பரவாயில்லை; தாங்கள் கொழித்தால் போதும் என்பதே பெருமுதலாளிகளின் நினைப்பு. இப்படியும் கூறலாம்: மதக்கலவரங்களால் நாடு கொந்தளித்தால்தான் தாங்கள் கொழிக்க முடியும் என்பது அவர்களின் நினைப்பு. மதவெறி என்பதே வர்க்கப்போர் மற்றும் சமூகநீதிப் போராட்டத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் கேவலமான உத்திதான். இந்த மோடியை அண்மையில் தமிழ்நாட்டுக்கு கூட்டி வந்து கொண்டாடியிருக்கின்றன இந்துத்துவா சக்திகள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தமிழக மக்கள். குஜராத் மதக்கலவரத்தை மறந்துவிடக்கூடாது.



ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர்

"திருமங்கலத்து யானையாம் நீ, திருக்குறள் வழி நிற்பதால், இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்துவிடுவாய்" என்று கலைஞர் கவிதை (விடுதலை 13.1.09) எழுதியிருப்பது பற்றி....?

திருமங்கலத்து யானை இன்னாசெய்தாருக்கு நன்னயஞ் செய்யவில்லை, "நாணயம்" செய்தது. இந்த வேலையைத் தமிழகம் முழுக்கச் செய்ய முடியும் என்று கலைஞர் நினைத்தால் ஏமாந்து போவார். "அவர்கள் கொடுக்கிற பணம் உங்களுடையது, ஆகவே வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்குப் போடுங்கள், அது எங்களுக்குரியது" என்று அந்தக் காலத்தில் மக்களைப் பார்த்து அண்ணா சொன்னார். அப்படி 1967இல் நடக்கவும் செய்தது. அதை மறந்துவிடக்கூடாது இவர்.



பாவலர் அறிவரசன், திருலோக்கி

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கருப்பு நிலாவாக ஒளிரத் தொடங்கியுள்ள அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கலாமா?

முதலாளித்துவத்தின் ஓர் உச்சமாகிய ஏகாதிபத்தியம் என்கிற அமைப்பு முறை அமெரிக்காவில் நிலவுகிறது. இதையொரு தனிமனிதரால் சட்டென்று மாற்றிவிட முடியும் என்று கனவு காணாதீர்கள். ஆட்சிக்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஈராக் யுத்தத்தை நிறுத்தவில்லை. மாறாக, ஆப்கனுக்கு கூடுதல் படைகளை அனுப்பப் போகிறார் என்று செய்தி வருகிறது. ஏகாதிபத்தியம் என்பது அந்த நாட்டு ஜனாதிபதியினது உடலின் நிறத்தைப் பொறுத்தது அல்ல, அது ஆழமான பொருளாதார சுயநலத்தில் அடங்கியுள்ளது.



ஒரு வேளை இலங்கை ராணுவத்திடம் பிரபாகரன் மாட்டிக் கொள்ளும் அவலம் நேர்ந்தால் தமிழ் ஈழத்தின் விழைவுக்குத் தீர்வு எவ்வாறு அமையும்?

"முகத்தில் அறையும் முல்லைத் தீவு கடிதம்" ஒன்று (ஜுனியர் விகடன் 22.2.09) வெளியாகியுள்ளது. அதுபோல வன்னிப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் பேட்டி (குமுதம் ரிப்போர்ட்டர்) வெளியாகியுள்ளது. இவற்றிலிருந்து புரிபடுகிற விஷயம், அவர்களது உடனடிக் கவலை பிரபாகரன் பற்றியோ அல்லது தமிழ் ஈழம் பற்றியோ அல்ல என்பது. அது, இலங்கை ராணுவத்தின் கொடூரக் குண்டு மழையால் அப்பாவித் தமிழர்கள் புழுப்பூச்சிகளாய் நசுங்கிச் சாகிறார்களே என்பது. முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு பகுதியில் ராணுவம் குண்டுவீசியதில் ஒரு குடும்பமே கரிக்கட்டைகளாய்க் கிடக்கும் படம் வெளியாகியுள்ளது. புத்தனைப் போற்றும் நாட்டில் இத்தனை ரத்தவெறியா என்று நமது நெஞ்சம் திடுக்கிடுகிறது. அங்கு உடனடித் தேவை போர் நிறுத்தம். இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய கடமை ஐ.நா. சபைக்கு உள்ளது. இலங்கையில் இருப்பது வெறும் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல, ஒரு தேசிய இனப்பிரச்சனையும் கூட இந்தியாவை போன்று மாநில ஆட்சி முறை அங்கு இல்லாததே விவகாரத்தின் மூல காரணம். இதை ஐ.நா.சபை உணர வேண்டும். இதையே தமிழ்நாட்டில் உள்ள சில அதிதீவிர அமைப்புகளும் உணர வேண்டும். "இலங்கைத் தமிழர் பிரச்சனை தீரவில்லை என்றால் தமிழ்நாடு தனிநாடாகப் போய்விடும்" என்று மிரட்டக்கூடாது. இது இலங்கைத் தமிழருக்கு மிகப்பெரும் கேட்டை விளைவிப்பது. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று உண்மையிலேயே நினைப்பார்களேயானால் பிரிவினை கோஷத்தை இவர்களது உதடுகள் உச்சரிக்காமல் இருக்கட்டும். இந்திய மத்திய அரசில் இருப்போர் சிலர் இதைச் சுட்டிக்காட்டியே நமது நாட்டின் கடமையை முடக்கிப் போடுகிறார்கள்.



எஸ்.நமச்சிவாயம், ராமநாதபுரம்

ஜெயா டி.வி.யில் "எங்கே பிராமணன்?" என்கிற தொடர் வருகிறதே, பார்க்கிறீர்களா?

துக்ளக் சோ ஏற்கெனவே எழுதியிருந்த இதே தலைப்பிலான நாவல் போன்ற நூல்தான் இப்போது டி.வி. தொடராக வருகிறது. ஒவ்வொரு நாளும் சோ தோன்றி நேர்முக விளக்கம் வேறு தருகிறார். அந்த நூலின், இந்தத் தொடரின் சாரம் இதுதான் - பிராமணியம் என்பது எப்போதுமே நல்ல விஷயம்தான் என்றும், தற்போதுதான் பிராமணர்கள் பலர் அதன் வழி நடப்பதில்லை என்றும் கூற வருகிறார். இது மிகப்பெரிய சரித்திர மோசடி. பிராமணியம் என்பது ஆதி முதல் இன்று வரை சாதியம் மற்றும் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு சமூகக் கட்டமைப்பு. அதை இன்றளவும் காக்கத் துடிக்கிறார்கள் பிராமணியவாதிகள். இதன் ஏகப்பிரதிநிதியாகத் தன்னை வரித்துக் கொண்டு வாதாடுகிறார் சோ. "வெறுக்கத்தக்கதா பிராமணியம்?" என்கிற கேள்வித் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி, வெறுக்கத்தக்கதல்ல என்று விடை கூறியவர்தான் இந்த மகானுபாவர். பிராமணப் பெற்றோருக்குப் பிறந்துவிட்ட காரணத்தாலேயே ஒருவரை வெறுக்கக்கூடாது என்பது நியாயம். ஆனால், பிராமணியம் என்கிற பிற்போக்கு சமூகக் கட்டமைப்பு வெறுக்கத்தக்கதே, அதை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும். ஜெயா டி.வி.யோ இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணப்படுகிறது.



கே.தண்டாயுதபாணி, சென்னை

புதிதாக ஐ.ஐ.டி.கள் துவங்கப்போவது பற்றி உங்கள் கருத்து?

நல்ல விஷயம்தான். ஆனால், இந்த ஐ.ஐ.டி.களின் ஆசிரியர் நியமனத்தில் ஏற்கெனவே தலித் மக்களுக்கு இருந்த இடஒதுக்கீட்டைப் பறிக்க இன்னொரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் இது அநியாயம். இடஒதுக்கீட்டால் தகுதி - திறமை பறிபோய்விடும் என்று ஐ.ஐ.டி. நிர்வாகிகள் மூக்கால் அழுகிறார்களாம்.

இந்தத் "தகுதி - திறமையாளர்கள்" இங்கே படித்து முடித்ததும் வெளிநாட்டுக்குச் செல்லத் துடிக்கிறார்களே அது என்ன "தகுதி - திறமை?" வாய்ப்பு கொடுக்காத வரை தகுதி - திறமையை அறிய முடியாது என்கிற உண்மைதான் இடஒதுக்கீடாக வடிவம் எடுத்திருக்கிறது. இதை ஒழிக்க முனைகிற காங்கிரஸ் ஆட்சியாளர்களைச் சமூக நீதியாளர்கள் மன்னிக்கமாட்டார்கள்.



எல்.ராஜேந்திரன், தேனி

சுப்பிரமணியசுவாமி மீது முட்டை எறிந்தது தவறுதானே?

தவறுதான். அதேபோல இந்துத்துவாவைக் காக்க சு.சாமி எடுக்கும் அவதாரங்களும் தவறுதான். காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட சாமியார்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இந்துத்துவாவை வளர்ப்பது சம்பந்தமாக ஓர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார் சாமி. சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றதை எதிர்த்துத்தான் உயர்நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கினார் சாமி. இவர் மீது முட்டை வீசி இவரைத் தியாகியாக்கக்கூடாது. இவரது மடிசஞ்சித்தனத்தை எதிர்த்து, விடாது இயக்கம் நடத்த வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com