Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
ஒரு மகாகவியைப் பற்றி ஒரு மாமேதை...

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

ரவீந்திரநாத் தாகூர் பற்றி இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி இங்கே...

மகாகவி ரவீந்திரநாத் தாகூர் வெறும் கலைஞனாக மட்டும் இருக்கவில்லை. கவிதை, பாடல், நாடக ஆக்கம், நாட்டியம், ஓவியம் தீட்டுதல் முதலான பல்வேறு கலைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததுபோல் மக்கள் சேவையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தாகூர் 1884ஆம் ஆண்டு இறுதியில் பிரம்மசமாஜத்தின் செயலாளராகி பொதுச்சேவையில் இறங்கினார். நவீன இந்துமதத்தை -அதாவது, பங்கிம் சந்திரர் இந்துமதப் பழமையைப் புதுப்பிக்க முனைந்து நடத்திய பிரச்சாரத்தை அவர் பகிரங்கமாக எதிர்த்தது இந்தக்கட்டத்தில்தான்.

தாகூர் மிக விரைவிலேயே அரசியல் நடவடிக்கையில் அக்கறை காட்டினார். 1886ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். அது மட்டுமல்ல; 'மாதாவின் வேண்டுகோளைக் கேட்டபிறகே நாமெல்லாம் இங்கே கூடியிருக்கிறோம்' என்று சொல்லும் ஒரு பாடலை தாகூர் பாடினார். அவரது பாடல், மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு உத்வேகமூட்டியது.

பிரிட்டிஷ் இந்தியாவில் வைஸ்ராய் லிட்டன் பிரபு 1877-இல் டில்லியில் பெரும் ஆடம்பர அமர்க்களத்துடன் ஒருகோலாகல தர்பார் நடத்தியதைக் கடுமையாக நையாண்டி செய்து தாம் எழுதிய மனத்தை ஈர்க்கும் கவிதையொன்றை அவ்வாண்டு நடைபெற்ற இந்து விழாவில் பாடினார் தாகூர். அந்தக் கவிதையை மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். பிரபல கவிஞர் நவீன் சந்த்ரன் அக்கவிதையை வாழ்த்தி அன்றே ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார்.

1898இல் பிரிட்டிஷ் இந்திய அரசு தேசவிரோத நடவடிக்கைத் தடுப்புச்சட்டம் என்றொரு சட்டம் கொண்டு வந்தது. திலகர் கைது செய்யப்பட்டது இந்தச்சமயத்தில்தான். தாகூர் இந்தச் சட்டத்தை எதிர்த்து கல்கத்தாவில் கண்டனக்கூட்டம் நடத்தினார். தொடர்ந்து, இது கண்டனத்திற்குரிய தடைச்சட்டம் என்று விமர்சனக் கட்டுரையொன்றும் எழுதிப் பிரபலப்படுத்தினார். இந்தச் சமயங்களிலெல்லாம் தாகூரின் நடவடிக்கைகளை போலீஸ் கண்காணித்ததுடன், அவரை பிரிவு பி-12 என்பதன் பேரில் ஒரு கவனிக்கத்தக்கப் புள்ளியாக அறிவிக்கவும் செய்தது. திலகருக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ள கல்கத்தாவில் நிதி திரட்டுவதில் முன்னின்று செயல்பட்டவர் தாகூர்.

வங்காளத்தில் உருவான புரட்சி அமைப்புகள் மீது அவருக்கு அனுதாபம் உண்டு. அந்த அமைப்புகளில் ஒன்றில் அவர் சிறிதுகாலம் அங்கம் வகிக்கவும் செய்தார். அவர் தமது நூல்கள் பலவற்றிலும் புரட்சியாளர்களைப் பாராட்டியும் வாழ்த்தியுமிருந்தார். 1898-99ல் தாகூர் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியிருந்தார்: "மக்களின் இதயங்களில் காங்கிரஸ் முழுமையாக இடம்பெற வேண்டுமென்றால் அது தேசத்திற்கு முழு சேவை செய்ய வேண்டும். அதல்லாமல் சட்டரீதியான காரியங்களுக்காக வேண்டி எஜமானர்களின் முன்னால் நின்று காங்கிரஸ் வாலாட்டுமேயானால் அதற்கு ஏதேனும் கொஞ்சம் ரொட்டித்துண்டு கிடைக்கும்; சில வேளைகளில் அவமானமும் கிடைக்கும்."

அறிவாளிகளாகிய எழுத்தாளர்களுக்கு அரசியல் தேவையில்லையென்று மார்க்சிஸ்ட் அல்லாத இலக்கியவாதிகள் கூறும் வாதத்தை தாகூரின் வாழ்க்கையும் பணிகளும் முழுமையாக நிராகரிக்கின்றன. 1905ல் தொடங்கிய வங்கப் பிரிவினை எதிர்ப்பு இயக்கத்தில் தாகூர் தீவிரமாகப் பங்கேற்றார். சுதேசி இயக்கமொன்றும் பிரிட்டனுக்குப் பதிலாக இருக்கப்போவதில்லை என்றும், இணையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தேவையானது" என்றும் அவர் வாதிட்டார்... 1919ல் காந்திஜியைக் கைது செய்த சமயத்திலும், ஜாலியன் வாலாபாக் படுகொலை சமயத்திலும் தாகூர் மிகக் கோபங்கொண்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து, தமக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய அனைத்து கௌரவப் பதவிகளையும் தூக்கியெறிந்துவிட்டார். அதற்குப் பின்னர் அவர் எழுதிய பல நூல்களிலும் அந்த எதிர்ப்பின் அடையாளங்களைக் காணலாம்.

1917ஆம் ஆண்டு ரஷ்யப்புரட்சி நிகழ்ந்தபோது தாகூர் அதுகுறித்து தமது உள்ளத்துப் பிரதிபலிப்பை 'மாடர்ன் ரிவ்யூ' எனும் ஆங்கில மாதப் பத்திரிகையின் 1918 ஜூலை இதழில் வெளியிட்டார். இதோ அது- "ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியைக் குறித்து நாம் குறைந்த அளவே அறிந்துள்ளோம். நமக்குக் கிடைத்திருக்கும் உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மிகப் பெரிதாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள கொடுங்கோன்மையினால் அந்நாடு சந்திக்கிற கடுந்துயர்களுக்குக்கிடையே மனித ஆன்மாவின் வெல்லற்கரிய ஆற்றல் வெளிப்படுவதுதான் அங்கே நடக்கிறதா? நம்மால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை. குழப்பங்களிலிருந்து உருவெடுக்கிற நிராசையினால்அந்நாடு ஒருபோதும் வழிதவறிப் போய்விடாது. ஒருநாடு என்ற நிலையில் அந்நாடு ஒருவேளை தோற்றுப்போகலாம். ஆனாலும் மகத்தான அந்தத் தரிசனங்களின் பதாகையைக் கையில் ஏந்தியுள்ள தோல்வியானது ஒரு மங்கல்மட்டுமே- ஒரு புது யுகத்தின் சூரிய உதயத்திற்கு முன்னிருக்கும் நட்சத்திரத்தின் மங்கல் அது!"

1991-இல் சோவியத் யூனியனில் நடந்த நிகழ்ச்சிப்போக்குகளைப் பார்த்து இது உலக சோசலிசத்தின் முடிவை குறிப்பதாக உள்ளதென மதிப்பீடு செய்தது எவ்வளவு அர்த்தமற்றது என்பதை அழுத்தம் தரப்பட்டுள்ள அவரது வாசகங்கள் தெளிவாக்குகின்றன. உலக சோசலிசத்தின் தற்காலிகத் தோல்விகூட அடுத்து நிகழும் நிரந்தர வெற்றிக்கு ஒரு வழிகாட்டி என்பதுதான் சோவியத் ரஷ்யா உருவாகி அரையாண்டு ஆவதற்கு முன்பே தாகூர் சொன்ன தீர்க்க தரிசனத்தின் பொருள்.

"கலை கலைக்காக' என்பதை தாகூர் முற்றிலும் நிராகரித்தார். இலக்கியப் படைப்புக்கு இலட்சியங்கள் அவசியம் என்கிற தமது கருத்தை தாகூர் இவ்வாறு விளக்கிக் கூறினார்: "கலை கலைக்காக, என்று வாதிடுகிறவர்கள் உண்மையைக் காண மாட்டார்கள். இலக்கியத்திற்கு வாழ்க்கையின் உண்மைகளுடன் இருக்கிற உறவை நிராகரித்தால் காவியம் முழுமை பெறுவதில்லை. வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டே எல்லாமும் நிலைபெற்றுள்ளன. இந்தக் கண்ணோட்டத்தை ஒரு கலைஞன் நிராகரித்துவிட முடியாது"

இதன் பொருள், கலையின் அழகியல் அம்சத்தைத் தாகூர் புறக்கணிக்கிறார் என்பதல்ல. மாறாக, அழகியல் அம்சங்களுடன் மனித வாழ்க்கையைக் காண வேண்டுமென அவர் வலியுறுத்துகிறார். அதனால்தான் உலக மகாகவியாகிய அவரால் ரஷ்யப் புரட்சியை வரவேற்கவும், அந்தப் புரட்சி தோல்வியுற்றால்கூட எதிர்காலத்தில் ஒரு முன்னோடியாக அந்தத்தோல்வி இருக்கும் என்று சொல்ல முடிந்தது.

-

(தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்களின் கட்டுரைகளும் உரைகளும் கொண்ட "காலத்தின்றெ நேர்க்குப் பிடிச்ச கண்ணாடி" எனும் மலையாளத் தொகுப்பு நூலிலிருந்து.

உரை நிகழ்த்தியது 1992 நவம்பர் 29)

இ.எம்.எஸ். நினைவு நாள் : மார்ச் 19



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com