Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
நாகேஷ் - மலைக்கவைத்த அந்த மகத்தான ஓட்டம்...!

சோழ.நாகராஜன்

ஒவ்வொரு கனமும், ஒவ்வொரு காலமும் வாழ்க்கையுடன் சதா மல்லுக்கட்டிக் கொண்டேயிருக்கிற மனித சமுதாயத்தை கொஞ்சநேரம் எல்லா துயரங்களையும் மறந்து சிரிக்க வைக்கிற மனிதர்கள்தான் உண்மையில் மகத்தானவர்கள். அப்படியொரு மகத்தான மனிதரைத் தமிழகம் அண்மையில் இழந்துவிட்டது. அவர்தான் நாகேஷ்.

தமிழ் சினிமாவில் மிக அழுத்தமான தடம்பதித்தவர் நாகேஷ். சொந்த அனுபவத்தைச் சொல்ல வேண்டுமானால் கூட, நான் சின்னஞ்சிறுவனாக இருந்த காலத்தில், அப்பா-அம்மாவின் கண்டிப்பு ஏற்படுத்திய மனப்புண்களுக்கு பல நேரங்களில் சந்தோஷமான மருந்தாக நாகேஷ்தான் இருந்திருக்கிறார் என்பதை இப்போது என்னால் உணர முடிகிறது. இந்த அனுபவம் தமிழகத்தின் மைந்தர்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்.

சினிமா போஸ்டர்களின் நாகேஷ் முகம் எப்போதும் என்னோடு ஆத்மார்த்தமாக உறவாடிக் கொண்டேயிருந்திருக்கிறது. வார இதழ்களின் பக்கங்களில், தினசரி பத்திரிகைகளில் என்று எங்கே கண்டாலும் நாகேஷ் என்னுடன் நெருங்கி உறவாடியது போல வேரொரு கலைஞர் செய்திருப்பாரா எனத் தெரியவில்லை. நாகேஷுக்காக மட்டும் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை என்சிறு வயதிலேயே 13 முறை பார்த்திருக்கிறேன்.

தாராபுரம் குண்டுராவ்/ நாகேஷ் என்ற கலைஞனானது ஒரு சுவையான கதை. ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. அதற்காக அவர் தந்த விலையும் கொஞ்சமல்ல.

தான் ஒரு பெரிய கலைஞனாகிவிட வேண்டும் என்ற தாகம் இளம்வயது குண்டுராவுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது. "திரும்பி வந்தால் பெரிய ஆளாகி, பெயரும் புகழும் பெற்றுத்தான் ஊர் திரும்புவேன்" என்று சொல்லி சென்னைக்கு ஓடிய குண்டுராவுக்கு ரயில்வே குமாஸ்தா வேலைகிடைத்தது. ஆனால், அந்த வேலை அவரது மனசையும் நிறைக்கவில்லை, வயிற்றையும் நிரப்பவில்லை. ஆனால் தன்னுடைய சக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமெச்சூர் நாடகக்குழுவை நடத்தி வந்தது அவருடைய ஆசைக்குத் தோதாகிப்போனது.

அந்தக்குழுவினரின் நாடகத்தில் அவருக்கும் ஒரு சிறு வேடம் கிடைத்தது. அந்த நாடகத்தை பார்க்க வந்த எம்.ஜி.ஆர்., குண்டுராவ் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அவரது ஒல்லியான உருவத்துக்குப் பொருத்தமான வயிற்றுவலி நோயாளிப் பாத்திரம் அது. எம்.ஜி.ஆர். பாராட்டிய முகூர்த்தமோ என்னவோ குண்டுராவுக்கு நாடக வாய்ப்புகள் பல தேடிவந்தன.

அவரின் அறைத் தோழர்கள் கவிஞர் வாலியும், நடிகர் ஸ்ரீகாந்த்தும்/ வாலி. வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார், அதோடு சினிமா பாடல்களும் எழுதுவார். ஸ்ரீகாந்த் -அமெரிக்கத் தூதரலுவலகத்தில் பணிசெய்து கொண்டே நாடகங்களிலும் நடித்து வந்தார். குண்டுராவின் இந்த அறை நட்பு அவரின் கலைத்தீயில் நெய் சொரிந்தது. கே.பாலச்சந்தர் போன்ற நாடக கர்த்தாக்களின் தோழமையும் குண்டுராவுக்கு பக்கபலமாகின.

அவரின் நாடகத்தை ஒருமுறை பார்க்க நேர்ந்த தயாரிப்பாளர் பாலாஜியின் மூலம் சினிமாவின் கதவு அவருக்காகத்திறந்தது. கொஞ்ச நாளிலேயே முற்றிலும் மாறுபட்ட ஒரு கலைஞனாக தமிழ் சினிமா அவரை வளர்த்தெடுத்துக் கொண்டது. குண்டுராவ்/ நாகேஷ் ஆனார். நாடகங்கள், சினிமாக்கள் என சுறுசுறுப்படைந்தவருக்கு ஊரிலே போட்டுவந்த சபதம் நினைவுக்கு வந்தது.

புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கினார். கொஞ்சம் பணக்கட்டுக்களை ஒரு பெட்டியில் அடுக்கிக் கொண்டார், புறப்பட்டார் தன் ஊருக்கு. 'அம்மா சந்தோஷப்படுவாள்' மனசு படபடத்தது. அங்கே அவருக்காக என்ன செய்தி காத்திருந்தது தெரியுமா? அவரது தாயாரின் மரணச் செய்தி.

அவருக்குப் பின்னால் தான் கே.பாலச்சந்தர் போன்ற அவரது நாடக சகாக்களின் சினிமா பிரவேசம் நடந்தது. கே.பாலசந்தர், ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன் என்று உச்சம் கண்ட பல இயக்குநர்களுக்கும் நாகேஷ் என்ற கலைஞன் மீது அளவில்லாத நம்பிக்கை இருந்தது. நாகேஷூக்கோ தன்னம்பிக்கை அளவில்லாமல் இருந்தது. இந்த அரிய சகாப்தம் தமிழ் சினிமா ரசிகர்களின் பொற்காலமானது.

ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அந்த சினிமா பித்து செல்லப்பா ஒரு உன்னத நகைச்சுவைப் பாத்திரமல்லவா? அது இன்றைக்கும் காலத்தை வென்று நிற்கிறதே!

'திருவிளையாடல்' தருமியைத் தமிழகத்தின் பல தலைமுறைகளும் நினைவில் கொள்ளுமே! 'தில்லானா மோகனாம்பாள்' சவடால் வைத்தி என்ன லேசுப்பட்டா ஆசாமியா?

இன்னும் சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, அனுபவி ராஜா அனுபவி, என்று நாகேஷின் காவியத் திரைப்படங்களின் பட்டியலுக்குக் கொஞ்சம் நீளம் அதிகம்தானே? அதிலும் நகைச்சுவை தாண்டி, ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகராக அவர் வெளிப்படக் காரணமாக அமைந்த திரைக்காவியங்களல்லவா நீர்க்குமிழியும், எதிர்நீச்சலும். அதேபோன்ற இன்னும் சில படங்களும்!

நாகேஷுக்கு, ஹாலிவுட் சகலகலா 'ஜெர்ரி லூயிஸ்' மீது அளவுகடந்த ஈர்ப்பு உண்டு. உருவ ஒற்றுமையும், நடிப்பு வெளிப்பாட்டுப் பாணியும் சினிமா ஆய்வாளர்களை வியக்க வைத்து, இருவரையும் ஒப்பிட்டுப் பேசவைத்தன. மேற்கத்திய பாணி நடிப்பும், நடனத்திறனும் நாகேஷுக்கு இயல்பாக சிறப்புச்சேர்த்தன.

எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி என்று முன்னணி நட்சத்திரங்கள் எல்லாரோடும் அதிகம் நடித்த ஒரே நகைச்சுவை கலைஞன் நாகேஷ்தான். காலையில் எம்ஜிஆர் படத்தில், மாலையில் சிவாஜியுடன், இரவு இன்னொரு நட்சத்திரத்தின் படத்தில், இடையிடையே நாடகங்கள் என்று ஒரு சமயம் நாகேஷின் ஓட்டம் பலரையும் மலைக்க வைத்திருக்கிறது.

தனது காதல் மனைவி ரெஜினாமேரியை, அவரது ஆச்சாரக் குடும்பம் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்புக்காட்டியபோதும், அவ்வப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தனது 'நாகேஷ் தியேட்டர்' கடனில் மூழ்கிய சமயத்திலும், தனது மூன்று மகன்களில் தன்னைப்போலவே சினிமாவுக்கு வந்த ஆனந்த்பாபு எதிர்பார்த்த அளவு சோபிக்காமல் போனபோதும், அதன் தொடர்ச்சியாக ஆனந்த்பாபுவின் உடலும் மனமும் பாதிப்படைந்த போதும் தன் வாழ்நாளெல்லாம் எல்லோரையும் மகிழ்வித்த நாகேஷ், துயரங்களில் மூழ்க நேர்ந்தது.

சொந்த வாழ்வின் சோகச் சுமைகள் அவரை வாழ்க்கை குறித்து அவநம்பிக்கை தொணிக்கும் தத்துவங்களைப் பேசவைத்திருக்கின்றன, அதோடு குடிக்கவும் வைத்திருக்கின்றன. ஆனாலும், மிகமிகச் சிறந்த கலைஞனாகவே ரசிகர்களை அவர் எட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவில் நாகேஷ் உண்டாக்கிய அதிர்வுகளுக்கு இணையாக, ஈடாக இன்னொருவர் வந்து ஏற்படுத்திவிட முடியுமா என்றால், முடியாது என்பதே நிச்சயமான பதிலாக இருக்க முடியும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com