Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
முற்றத்து மரங்கள்

பாஸ்கரன்

நேர்ந்து விடக்கூடாத இடர் ஒன்றைத் தவிர்க்க நினைக்கும் மன உலகின் சஞ்சலமிக்க சிருஷ்டியாய் யாதொரு வீட்டிலும், வெளியிலுமாய் அக்குழந்தையொன்று செடிகளுடனும் பொம்மைகளுடனும் தனித்த உலகில் என்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது.

இத்தன நாளில் ஒரு முறை கூட இந்த எண்ணம் வந்ததாகத் தெரியவில்லை. வீட்டில் சண்டை வந்து முட்டி மோதி அழுது கண்ணீரும் கம்பலையுமாகத்தான் இந்த ஊரில் குடியேறினேன்.

அம்மா சொன்னாள்: "தூர தொலைவுக்கா போற. ஆத்திர அவசரத்துக்கு ஓடி வந்துர மாட்டோமா."

எல்லாத்தையும் லாரியில் ஏத்தி குலுங்கிக் குலுங்கி வந்த போது தான் மனசும் குலுங்கியது, பால் காய்ச்சி கொண்டாடி ஒன்னரை வருசம் கழிந்து விட்டது. நேரம் காலம் தெரியாமல் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி வருவதும் போவதுமாக அலைந்தேன். தெருவிலேயே தினசரி ஏழெட்டு தடவை நடந்தேன். பிறகு தான் தெரிந்தது ஊரை ஏற்கத்தான் மனசு கிடந்து இப்படி அல்லாடி அலைக்கழித்த விஷயம். இப்போது மறுபடி அந்த மாதிரி ஒரு எண்ணம்.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, சாயந்தரம் நாலு மணி போல அவளுக்கு வலி எடுத்தது. மாடியிலிருந்தபடியே பக்கத்து வீட்டு பெரியம்மாவிடம் கேட்டதற்கு, "சுக்கு போட்டு காபி குடி" என்றார். ஆனாலும், வலி நின்றபாடில்லை.

நேரம் கடந்த போதும் வலி நிற்கவில்லை என்றதும் ரெண்டு பேருக்கும் பயம் வந்து விட்டது. மஞ்சள் பையில் ரெண்டு சேலைய எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி மாடியிலிருந்து கீழிறங்கி தெருவில் நடந்தோம்.

தெருவெல்லாம் மனுசமக்கள் இருந்தாலும் நானும் அவளும் ஒத்தையில இருப்பது போலத்தான் நடந்தோம்.

எல்லோருக்கும் வழிவிட்டு ஓரமாகத்தான் நடந்தோம். அவளுக்கு வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. பதட்டமும் பயமும் என்னை ஆக்கிரமித்தது.

"நடந்தா நல்லது தான்" என்று சொன்ன போது அவளின் முகம் கோபத்தால் சிவந்துவிட்டது. ஆஸ்பத்திரிக்கு போக அரை மணி நேரம் ஆனது. பெரிய டாக்டர் பக்கத்திலிருந்த யோகா கிளாசுக்கு போயிருந்தார். சின்ன டாக்டர் தான் டெலிவரி ரூமுக்குப் போகச் சொன்னார். அவள் மெதுவாக நடந்து சென்று அங்கிருந்த பெஞ்சில் படுத்துக் கொண்டாள்.

நான் ஆஸ்பத்திரியின் முற்றத்திலிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தேன். மரங்கள் நிறைந்திருந்தது. பறவைகளின் அந்தி நேர சத்தம். பறவைகள் தங்காத மரங்களேதும் இங்கில்லை. வயித்திலிருந்த போது நாலைந்து முறை அரூபமாக அவனை ஸ்கேனில் பார்த்திருக்கிறேன். சின்னதான படமும் அங்க அவயங்களின் அளவும் குறியீடும் அதில் நிறைந்திருந்தது.

"எலும்பு வளர்ச்சி குறைவாத்தான் இருக்கு" - ஸ்கேன் சென்டர் டாக்டர் சொன்னார். தெருவில் விளையாடும் உற்சாகமான குழந்தைகளைப் பார்க்கும் போது இவனும் வந்து வந்து விளையாடிச் செல்வதாகத் தோன்றும். அது கனவு போல இல்லை.

அவள் தனித்து இருந்தாள். வலி மட்டும் துணையிருந்தது. வலியே நம்பிக்கையையும் தந்தது. மணல் கொட்டிக்கிடந்த முன் வெளியும் நீண்ட வராந்தாவும் யாருமற்று மௌன சாட்சியாய் கவனித்து வந்தது.

கொஞ்சநேரத்தில் நர்ஸ் வந்து சொன்னார். "குழந்தை பொறந்துட்டு பையன்". நான் போன போது குட்டியான குழந்தைக்கு பக்கத்தில் அவள் படுத்திருந்தாள். ஊரிலிருந்து அம்மாவும் அப்பாவும் கிளம்பி வந்தார்கள்.

அவன் பிறக்கும் போது ஒன்னே முக்கால் கிலோதான் இருந்தான். அவன் ரெண்டாவது பிள்ளை. முதல் பிள்ளைக்கு நிவேதிதா என பெயரெல்லாம் வைத்துவிட்டேன். அவள் இறந்தே பிறந்தாள்.

இடுப்பு வலி வந்து ராத்திரி நேரத்தில் ஆட்டோவைது பெறகு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்த போது நிவேதிதா இறந்திருந்தாள். அந்த நடுநிசி நேரத்தில் காமநாயக்கன்பட்டி மாதா கோயில் வாசலில் நின்றிருந்தேன். இருட்டில் கிடந்த விளக்கு வெளிச்சத்தில் ராத்திரி முழுக்க சுற்றிக் கொண்டிருந்தேன். குழந்தையோடு அவள் ரொம்பவும் அன்பாகத்தான் பாவப்பட்டவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். மார்பில் இருந்த குழந்தையை மாதா தவற விட்டுவிட்டாள் விடிகாலையில்தான் எனக்கு செய்தி கிடைத்தது.

நான் போய்ச் சேருவதற்குள் சின்னதாய் இருந்த காலிமனையில் புதைத்திருந்தார்கள். நிவேதிதா என நானும் அவளும் சேர்ந்தே பெயர் எழுதி வைத்திருந்தோம். நிவேதிதாவிற்கு நான் கடிதமொன்றும் எழுதி டைரியினுள் பத்திரப்படுத்தியிருந்தேன். வாசிக்க இல்லை.

என் மனைவியின்அழுகை பக்கத்திலிருந்த ஆண்டாள் கோயில் பிரகாரமெல்லாம் எதிரொலித்தது. நான் அவளை மடியில் கிடத்தி கண்ணீரைத் துடைத்த போதும் அது வற்றாமல் வடிந்து கொண்டிருந்தது. அவள் ஆஸ்பத்திரியில் இருந்த நாட்களெல்லாம் ஆண்டாள் கோவில் பிரகாரத்தில் தான் கழிந்தது.

கௌதம் ரெண்டாவது பிள்ளை ராத்திரி பத்து மணிக்கெல்லாம் அவன் தூங்கி விடுவான். சில சமயம் லேட்டாகும். நான் வீட்டிற்கு போகும் வரை முழித்திருந்தால் என்னுடனே கதைபேசி விழித்திருப்பான்.

"நேரமாச்சு. சீக்கிரம் தூங்குல" என்றதும்

"ராத்திரி பேய் வருமோ" என்பான்

"யாருல சொன்னா?"

"நாராயணன்தா சொன்னா. அவனுக்கு நெறைய விசயம் தெரியு" என்பான்.

நான் ஊரில் இல்லையென்றாலும் அம்மாவோடு பொழுதைக் கழித்து நேரத்தோடு தூங்கிவிடுவான். வீடு திரும்பியதும் அவளிடம் கேட்பேன். "என்னைய எப்பாயாச்சு கேட்டானா" என்று, பதிலேதும் இருக்காது. கார்ட்டூன் அவனது சந்தோஷத்திற்குரிய உலகமாகத்தான் இருந்தது. காலையில் எழுந்தவுடன் அம்மாவின் மடியிலிருந்தபடியே கார்ட்டூனில்தான் கண்முழிப்பான்.

பல்லு தேய்ப்பதும் குளிப்பதும் சாப்பிடுவதும் எலியைத் துரத்தும் டாம் ஜெர்ரியின் இடைவெளியில்தான். ஸ்கூல் முடிந்து வந்ததும் மீண்டும் குட்டிச் சேரில் உட்கார்ந்து சுவரில் ரெண்டு காலையும் தூக்கி வைத்தபடி டோராவின் பயணம்.

சில நாட்கள் அந்தோணியின் வீட்டு முற்றத்தில் விளையாட்டு நடக்கும். கைக்குள் அடங்கி விடும் சின்ன கார். திருநெல்வேலியில் கிளம்பி மதுரை திருச்சி ஊர் சுற்றித் திரும்பும். டயர் உடைந்த கார்கள் வீடு முழுக்க இறைந்து கிடக்கிறது.

அவனின் கண்ணில் படுவது விதவிதமான கார்கள்தான். புல்டோசர், அடுக்குமாடி, சிவப்பு விளக்கு, ரிமோட் கண்ட்ரோல், ஏரோப்ளேன் எல்லா கார்களும் வாங்க வேண்டுமென்று கண்கள் கேட்கும். ராட்சஷ ராட்டினத்தைவிட கார்கள் மீதே குறியாய் இருப்பான். டேபிளின்ஓரத்தில் எதையும் வைத்துவிடக்கூடாது, அங்கு சீப்புக் கார் ஒன்று சீறிப்பாய்ந்து செல்லும்.

தூர இடைவெளிகளில் தடங்கள் யாருக்காகவோ காத்துக் கிடக்கின்றன. ஸ்ரீரெங்கபெருமாளாய் சாலை வசதியாகத்தான் படுத்துக் கிடக்கிறது. கரையேறும் அலை போல மனம் பயண வெளியில் லயித்துக் கிடக்கிறது.

சரத், வினோதினி பக்கத்து வீட்டுப் பிள்ளைகளெல்லாம் சேர்ந்து தொட்டுப்பிடிச்சி விளையாட ஆரம்பித்தால்நேரம் போவது தெரியாமல் தூக்கமின்றி விளையாட்டிலிருப்பான். கூப்பிடப்போன இவளும் அந்தோணியின் அம்மாவிடம் கதை பேச ஆரம்பித்து விடுவாள்.

லீவு நாளன்று டிவி முன்னால் பலியாய் கெடக்கும் இவனைப் பார்த்து இவனது அம்மா கத்துவாள், "அந்தோணி கூப்பிடுதா வெளையாடப்போல".

மாடி வீட்டிலிருந்து கீழிறங்கி தெருவைக் கடந்து எதிர் வீட்டுக்கு போகிற வரை மனசு கிடந்து அடிக்கும்.

ஊரை விட்டு வந்தது சுத்தமாக எனக்கு பிடித்ததில்லை. எவர் நடந்த போதிலும் ஊரில் மட்டும் எனது பாதச்சுவடுகள் அழியாதபடி அப்படியே இருக்கிறது. மழலையாய் பதித்த சுவடும், பால்ய சுவடும் இருட்டு வழியில் எனக்கு எப்போதும் வழிகாட்டி ப்ரியமாய்ச் சிரித்து நிற்கிறது.

ஊரில் தெருவே கும்மாளமாய் இருக்கும். பத்து இருபது பேர் எப்போதும் ஏதாவது வெளையாடிக் கொண்டே இருப்பார்கள். தெரு எப்படி மாறியிருந்தாலும், புதிது புதிதாய் ஒருவெளையாட்டை கண்டுபிடித்திருப்பார்கள். தெருப் புழுதியில் படிக்கட்டு வைத்த கல்கார் பாதைகளைசெதுக்கியபடி ஓடும். ஊரும் வழியும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. வழி வழியாகத்தான் ஊர் தெரிகிறது.

கல்கார்கள் ஒரு ஸ்டாப்பில் ஒன்னுபோலவே நிற்கும். ஒன்னுபோலவே கிளம்பும். செல்லாங்குச்சி, கோலிக்காய் என நேரமின்றி பம்பரமாய் வெளயாட்டு மும்முரமாய் நடக்கும். மேலெல்லாம் புழுதியோடு இவன் வெளையாடிக் கெடப்பான். அவனது அம்மா எப்போது கூப்பிட்டாலும் எங்கோ தூரத் தொலைவில் தேடுவதுபோலத்தான் இருக்கும். ஆனால், அவன் பக்கத்திலேயே வெளையாடிக் கொண்டிருப்பான். அவனுக்கான அந்த உலகத்தில் குழந்தைகளின் குரல் மட்டும்தான் பதிவாகும்.

தும்மல் போட்டவுடன் அனிச்சையாக அவனைப் பார்த்துவிடுவது வழக்கம். சளி பிடித்து காய்ச்சல் வந்தால் ஒரு வாரம் மருந்து மாத்திரை ஆஸ்பத்திரி என துட்டு சிட்டாய் பறக்கும்.நாலு நாளில் அவன் துவண்டு விடுவான். சளியை நொந்து அதன் இருப்பிடம் தேடும் எண்ணம் வரும். மூச்சுக்குழாய், உணவுக் குழாய் ரெண்டாய் பிரிந்து தூசி படிந்த நுரையீரல், குடல்கள், மலத்துவாரம், பள்ளியில் கண்ட மனித வரைபடம் அரைக்கிறுக்காய் வந்து போகும். எங்கு போயிருந்தாலும் ராத்திரியோடு ராத்திரியாய் வீடு வந்து அவனருகே உட்கார்த்தால் தான் மனம் அமைதியடையும்.

அவன் மூன்று வயது வரை பேசவில்லை.

"குலதெய்வத்துக்கு சொன்னமாதிரி நீங்க முடியெடுக்காம இருந்தா எப்பிடி"

ஓயாமல் அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். மூன்றரை வயதில் அவன் பேசினான்.

ஆறு வருசம் கழித்து இன்னொரு குழந்தை வேண்டுமென்று அவளுக்கும் எண்ணம் வந்தது. போதுமே என்றுதான் எப்போதும் எனக்குபட்டது. அவளுக்கும் எனக்கும் சண்டை வரும் போதெல்லாம் சொல்லுவாள், "பிள்ள பொறந்த நாளைக்கி ஒரு ட்ரெஸ் எடுத்துக் கொடுக்க முடியல. வசதி இல்லன்னுதான இன்னொரு குழந்தை வேண்டாம்னு இருக்கீக."

அப்படியாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். காலிமனையிலிருந்து நிவேதிதாவின் மெல்லிய சிரிப்பொலியும் இருக்கக் கூடும். எலும்பு குறைந்த ஸ்கேனாகவும் இருக்கும். ரத்தச்சோகையும் இருக்கலாம். எதுவும் எழுதப்படாத டைரியின் பக்கங்களைக் கேட்டால் ஒரு வேளை தெரியும்.

ரெண்டு மூன்று நாளாக குசுகுசுவென்று பேச ஆரம்பித்தாள். அவளுக்கு நாள் தள்ளிப் போயிருந்தது. பிரசவத்திற்கு பிறகு இப்படி தள்ளிப்போகும். அது மாதிரி தான் இதுவும் எனச் சொல்ல முடியவில்லை.

"நெறைய புள்ள பெத்தாதான் சொல்ல முடியுமோ" என்று நான் கேட்டேன். "இல்ல தள்ளிப்போனா வலி இருக்காதே. இப்ப உனக்கு எப்பிடி இருக்கு. பசி இருக்கா" என்ற படி கேள்வி கேட்டுக் கொண்டேஇருந்தேன்.

"வயித்துவலி இருக்கு, லேசா தலைவலியும் இருக்கு" எனக் குழப்பினாள்.

ராத்திரியில புவிமுழுசும் அமைதியாக கிடந்தபோது அவளிடம் சொன்னேன், "இன்னொரு புள்ள இருந்தா நல்லதுதா, அவனுக்கு சரி, நமக்கு சரி". அவள் தூங்கிய மாதிரி படுத்துக்கிடந்தாள். மறுநாள் காலையில் கண்விழித்தபோத அவன் டி.வி. பார்த்து கொண்டிருந்த சத்தம் கேட்டது.

தலையில் துண்டைக் கட்டியவாறு"குளிச்சிட்ட" என்று ஒரு வார்த்தையை உதிர்த்தபடி எந்த பாவனையும் காட்டாமல் அவள் அடுப்படிக்குள் நுழைந்தாள். விட்டத்தை பார்த்தபடி படுத்துக்கிடந்தேன். பென்சிலால் அவன் கிழித்த சுவர்க்கோடுகள் என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.

மௌன வெளியில் காலம் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தது. வண்ணம் கலைந்து வெண்நிற வானின் வெளிச்சம் ஊடுருவி உள்விழுந்தது. இடம் பெயர்ந்து பறவைகள் பயணிக்கத் துவங்கின. வீடு முழுக்க குழந்தைகளின் படங்களை ஒட்டிவைக்க வேண்டுமென்று நினைத்தேன்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com