Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
துபாய் நினைவுகள்! - மனிதர்களைவிட மாடிகள் அதிகமோ?

அருணன்

அண்மையில் துபாயில் ஒருவாரம் தங்கவேண்டி வந்தது. எனக்கு இதுதான் முதல் வெளிநாட்டு அனுபவம். ஆனால் வெளிநாடு போலவே இல்லை. தங்கியிருந்த விடுதியின் காவலாளியும், அறைச்சிறுவனும் தமிழ் பேசினார்கள். சரவணபவன், ஆர்யாஸ், அஞ்சப்பர் என்ற நம்மூர் ஹோட்டல்கள் வரிசையாக இருந்தன. இங்கே கூட அப்படி சுவையான இட்லி கிடைக்காது, அங்கே ஆர்யாசில் கிடைத்தது. என்னடா, இதயம் பேசுகிறது மணியன் போலப் பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம். தொலைதூரத்தில் இருக்கும்போதுதான் வயிற்றைக் கெடுக்காத இட்லியின் அருமை தெரிகிறது.

அந்த ஊரில் எனக்கு ஆச்சரியமாக இருந்த விஷயம் தீப்பெட்டி அடுக்குபோல நீளநீளமான கட்டடங்கள் அல்ல, அவை எல்லாமே புத்தம் புதிதாக இருந்த பொலிவு. பிறகுதான் தெரிந்தது எல்லாமே பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்குள் எழுந்தவையாம். பழைய கட்டடங்கள் எங்கே? 25 வருடங்களுக்கு மேலானவற்றை இடிக்கச் சொல்லி நகராட்சி உத்தரவு போட்டு விடுமாம். இடித்துவிட்டு அங்கேயே புதிது கட்ட வேண்டும். அதற்குக் கடன் கொடுப்பார்களாம்.

மயன் வேலை என்பார்களே, அப்படி இருந்தது. அத்தனை மாடி கட்டடங்களை சில மாதங்களில் கட்டி முடிக்கிற தொழில் நுட்பம் இருந்தது. ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு, அதாவது உயரத்திற்கு ஒரு கட்டடம் எழுந்துநிற்கிறது. எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிறது. உலகத்திலேயே உயர்ந்த கட்டடம் அதுதானாம்.

எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம் எல்லாம், இத்தனை மாடிக் கட்டடங்களில் வாழ்கிற அளவுக்கு ஆட்கள் இருக்கிறார்களா என்பதுதான். மனிதர்களைவிட மாடிகள் அதிகமோ என்றுபட்டது. விசாரித்ததில் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் சில மாடிகள் காலியாகத்தான் இருக்கின்றன என்றார்கள். அப்படியும் இத்தனை மாடிகளுக்கான தேவை என்ன? அப்படி என்ன தொழில் வளர்ச்சி? விசாரித்தேன். ஆச்சரியம் அதிகமானது.

நாமெல்லாம் எதிர்பார்ப்பது போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. அங்கே முக்கியமான தொழில்கள் கடல் வாணிபம், சுற்றுலாத்துறை, இந்த இரண்டையும் வைத்துத்தான் இவ்வளவு பெரிய பட்டணத்தைக் கட்டியிருக்கிறார்கள்.

எனக்குப் பெருமூச்சு வந்தது. தமிழ்நாட்டில் இந்த இரண்டும் இருக்கின்றன. சென்னையில் மட்டுமல்ல தூத்துக்குடியிலும் பெரிய துறைமுகம், சுற்றுலாப் பிரியர்களுக்கு வரலாற்றுப் புகழ்மிக்க, ரசிக்கத்தக்க எத்தனையோ இடங்கள். கூடவே வேறுசில தொழில்களும். அப்படியும் நாம் ஏன் இன்னும் வளரவில்லை?

துபாய் ஷேக்குகளோ வெறும் கடலையும், பாலைவனத்தையும் வைத்துக் கொண்டு பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள். அந்த ஊர் மக்கள் தொகை குறைவுதான். அதனால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோரை வரவழைத்து வேலை வாங்குகிறார்கள். தாங்கள் வளம் கொழிக்கிறார்கள். பிறருக்கும் வேலை கொடுக்கிறார்கள். ஷேக்குகள் பற்றி மிக மோசமாக சித்தரிக்கிற சில சினிமாக்கள் எனக்கு நினைவில் வந்தன. அந்தச் சினிமாக்காரர்கள் நம்மை எல்லாம் பேக்குகள் ஆக்கிவிட்டார்கள். நேரில் பார்த்தாலோ நிலைமை வேறுவிதமாக இருக்கிறது.

எனக்குக்கூட, அங்கே பெண்களுக்கு போதிய உரிமை இருக்காது எனும் எண்ணம் இருந்தது. ஆனால், விமான நிலையம் முதல் தபாலாபீஸ் வரை எங்கும் பெண்கள் வேலை பார்த்தார்கள். அந்தக் கருப்பு அங்கிதான் உறுத்தியது. முகத்துக்கு திரை கிடையாது. கல்லூரிகளில் ஆண்களுக்கு ஒரு நேரம், பெண்களுக்கு ஒரு நேரம் என்று வகுப்புகள் நடக்கின்றன.

அகல அகலமான தெருக்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கார்கள் பறக்கின்றன அல்லது நகர்கின்றன. அவ்வளவு கார்கள் இயங்கினாலும் சத்தம் இல்லை, ஒலிப்பான் அலறுவதில்லை. அதுவொரு வினோதமான சூழல். அவ்வளவு இயந்திரங்களின் இயக்கத்திற்கு மத்தியிலும் மவுனம்! உடல் ரீதியாகப் பரபரப்பாக இயங்கினாலும் மன ரீதியாக அமைதிகாக்கிற ஒரு ஞானியைப் போன்ற நிலை!

இதற்கு முக்கிய காரணம் கறாரான சாலை விதிகள், மீறுகிறவர்களைக் காட்டிக் கொடுக்கும் கேமராக்கள், வீடு அல்லது அலுவலகம் தேடி வரும் விதி மீறியவர்களுக்குகான தண்டச்சீட்டு! இதையெல்லாம் விட கார் ஓட்டுநர்களின் மிகப்பெரிய கவலை நிப்பாட்ட இடம் தேடி அலைவது! கடைகளுக்கு பஸ்சிலோ, அல்லது நடந்தோ போவது உத்தமம்! காரில் போனால் அதுவே பெரிய சுமையாகிவிடும்! கார் பெருத்ததால் பார் சிறுத்துவிட்டது அங்கே!

எனக்கு மிகவும் பிடித்திருந்த விஷயம் எங்கும் மதுக்கடைகள் இல்லாதது. அதை வாங்க, குடிக்க தனி அனுமதி பெற வேண்டுமாம். ஒரு வேளை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அந்த வசதி இருக்கக்கூடும். துபாயில் ஏழு நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் உண்டு. ஆனால், நம்மூர் போல வீதி தோறும் பிராந்தி கடைகள் இல்லை.

பொது இடங்களில் சிகரெட் பிடிக்கிறவர்களும் இல்லை. நான் அங்கே இருக்கும் போதுதான் கடுமையானதொரு மசோதா தயாராகிக் கொண்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பவருக்கும், பொது இடங்களில் அதை பிடிப்பவர்களுக்கும் சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் திர்கம் (ஒரு திர்கம் ரூ.13.50) தண்டமும் உண்டு என்றது அது. சிகரெட் பிடித்து ஒருவர் உடலைக் கெடுத்துக் கொள்வது தவறு. அதனினும் தவறு அதைப் பொது இடங்களில் பிடித்து பிறருக்கு வியாதியைத் தருவது. இது விஷயத்தில் துபாய் உள்ளிட்ட ஏழு சிறு எமிரேட்டுகளை (மாநிலங்களை) கொண்ட சமஷ்டி அரசு தீவிரமாக இருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்டுகள் எனப்பட்ட அந்த நாட்டில் துபாய், ஜார்ஜா, அபுதாபி எனும் பிரபலமான மாநிலங்களோடு வேறு நாலு மாநிலங்களும் உள்ளன. ஒரு மாநிலம் என்றால் அனேகமாக ஒரு பெருநகரம், அவ்வளவே. ஆனால், ஒவ்வொன்றும் சுயாட்சி பெற்றுள்ளது. அபுதாபியைத் தலைநகராகக் கொண்டு ஒரு சமஷ்டி அரசும் உண்டு. அபுதாபி அரசியல் தலைநகரம் என்றால், துபாய் வர்த்தகத் தலைநகரம் என்று பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். "உங்களது டில்லியும், மும்பையும் போல" என்கிறார்கள். ஆனால் மொத்த தேசமே அப்படிச் சில நகரங்களோடும், அவற்றின் புறப்பகுதிகளோடும் முடிந்து போகிறது.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்கிற நமது நாட்டு முழக்கம் அங்கே மெய்யாலும் நடைமுறையில் உள்ளது போலும். நான் அங்கேயிருந்தபோது "கல்ஃப் நியூஸ்" என்கிற பத்திரிகையில் இந்தச் செய்தி வந்தது. அதாவது, இத்தாலியின் நாடாளுமன்றம் சபாநாயகர் வந்திருந்தார். வந்தவர் கூறியிருந்தார். "ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் கூட்டாடசி முறையின் வெற்றிகரமான அனுபவத்திலிருந்து இத்தாலி படிப்பினைகள் பெறவேண்டியுள்ளது. ஐரோப்பா இன்னும் இந்த வெற்றியைச் சரியாக அறிந்திருக்கவில்லை" ஐரோப்பாவுக்கு இன்னும் தெரியாத சில வெற்றிகள் ஆசியாவில் இருக்கத்தான் செய்கின்றன.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து, பிறகு போனால் போகட்டும் என்று அதுவாகவே போர் நிறுத்தம் செய்திருந்த வேளை அது. துபாயின் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இஸ்ரேலின் அந்த வெறித்தனத்தைக் கடுமையாகச் சாடின. குவைத்தில் அப்போது அரபு நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றது. அவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என்ற போதிலும், எண்ணெய்விலை வீழ்ச்சியினால் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் காசாவின் புனரமைப்புக்கு நிதி உதவி அளிக்க ஒப்புக்கொண்டனர்.

துபாய் பத்திரிகைகளில் பொதுவாக அமெரிக்க எதிர்ப்பு இருந்தது. 'கலீஜ் டைம்ஸ்' என்கிற ஏடு இஸ்ரேலின் மிரட்டலுக்கு எப்படி அமெரிக்கா வளைந்து கொடுக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டியது. அது கூறியது- "அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரைஸ் தான் ஒப்புக்கொண்டிருந்த சமாதான ஒப்பந்தத்தின் மீது (ஐ.நாவில்) நடைபெற்ற வாக்கெடுப்பில் இஸ்ரேலியப் பிரதமரின் வற்புறுத்தலால் கலந்துகொள்ளவில்லை. இஸ்ரேல் எந்த அளவுக்கு ஆளுகை செலுத்துகிறது என்பதையும், மத்திய கிழக்கில் அமெரிக்காவால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது".

புதிய ஜனாதிபதி ஒபாமா பற்றி தமிழகத்தில் பலருக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. "வெள்ளை மாளிகையில் கருப்பு நிலா" என்றெல்லாம் கவிதை பாடுகிறார்கள். ஆனால், துபாய் பத்திரிகைகளில் அப்படியெல்லாம் இல்லை. இதே பத்திரிகை "ஒபாமாவுக்கு பிதுரார்ஜிதமாகக் கிடைத்திருப்பது நெருக்கடிகளின் உலகமே. இதில் அவர் வெல்லக்கூடும் அல்லது வீழக்கூடும்" என்றே மிகுந்த எச்சரிக்கையோடு எழுதியது.

அங்கேயிருக்கும் போதுதான், அடாவடித்தனம் பண்ணும் இஸ்ரேலை எதிர்க்க அமெரிக்க யூதர்களின் கம்பெனியாகிய கோகோ-கோலாவுடன் எவ்விதத் தொடர்பையும் தன் நாட்டு குடிபானக் கம்பெனிகள் கொண்டிருக்கக்கூடாது என்று ஈரானிய அரசு முடிவு செய்திருந்ததை அறிந்தேன். இஸ்ரேலுடன் தொடர்புடைய எந்தக் கம்பெனிப் பொருளையும் புறக்கணிப்பது என்று அந்த அரசு முடிவு செய்திருக்கிறது. மீறுகிற தன் நாட்டுக் கம்பெனிகளுக்கு அது விளக்கம் கேட்ட செய்தி பத்திரிகைகளில் வந்திருந்தது. கோகோகோலா, பெப்சி கோலாவைப் புறக்கணிப்பது என்று தமுஎச எடுத்துள்ள முடிவுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. ஈரானிய அரசின் முடிவு என்னைப் புளகாங்கிதப்படுத்தியது. அதுபோல இந்திய அரசும் முடிவு செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கம் வந்தது.

அரபு நாடுகள் பற்றிப்பேசினால் அங்கு நிலவும் தண்டனை முறைகள் பற்றிப் பெரிதாக அடிபடுகிறது. இது விஷயமாக இரண்டு செய்திகள் படித்தேன். முதல் செய்தி ஈரான் பற்றியது. அங்கே ஒரு பெண்மணி கணவனை கொலை செய்யத்துணைபோனதற்காக எட்டு ஆண்டு சிறைத் தண்டனையும், கள்ள உறவு கொண்டிருந்ததற்காக கல்லால் அடித்து கொல்லப்படும் தண்டனையும் பெற்றிருந்தார். ஆனால், அந்தக் கொடூரமான மரண தண்டனையை ரத்து செய்து அதை 100 கசையடி தண்டனையாக அந்த நாட்டுத் தலைமை நீதிபதி மாற்றியிருந்தார். ஆக, கொடூரமான தண்டனைகளைக் கைவிடும் போக்கு அரபுநாடுகளில் தற்போது உருவாகி வருகிறது.

இரண்டாவது செய்தி 'ஃபட்வா' எனப்படும் மத உத்தரவுகள் பிறப்பிப்பது பற்றியது. இதுதொடர்பாக இஸ்லாம் மத அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் சர்வதேச மாநாடு அப்போது மக்கா நகரில் துவங்கியிருந்தது. அதில் சவுதி அரேபியாவின் அரசர் அப்துல்லா பேசிய பேச்சு இது- "மத உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கும் உங்கள் முயற்சியை நான் ஆதரிக்கிறேன். காரணம், தீவிரவாதிகள் மற்றும் வெறுப்புணர்ச்சி கொண்டவர்கள் விடுக்கும் ஃபட்வாக்கள் முஸ்லிம் இளைஞர்களின் மனங்களை, நம்பிக்கையை மற்றும் நடத்தையைக் கெடுத்து விடுகின்றன" மதப்பழமைவாதத்தில் ஊறிய நாடு எனப்படும் சவுதி அரேபிய அரசருடைய இந்தப்பேச்சு எவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியது.

ஆக, அரபு நாடுகளிலும் மாற்றங்கள் நிகழுகின்றன. 'மாற்றம் ஒன்றே மாறாத விதி' என்பது அங்கும் செயல்படுகிறது. அதிலும் உலகப் பொருளாதார நெருக்கடி விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த வேளையில் அது இயல்பானதும்க் கூட. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்து தனது பொருளாதாரத்தைக் கொண்டு போன எந்த நாடும் தற்போதைய நெருக்கடியிலிருந்து தப்பவில்லை. 'தி நேஷனல்' என்றொரு பத்திரிகை, அதன் 'பிசினஸ்' எனும் அனுபந்தத்தில் தலைப்புச் செய்தியே 'அரபு நாடுகளுக்கு 2.5 டிரில்லியன் டாலர் பாதிப்பு' என்பதுதான் அதுவும் கடந்த நான்கே மாதங்களில் இந்த நட்டம். சொன்னவர் யார் என்றால் குவைத்தின் வெளியுறவு அமைச்சர். 'இந்தப் பகுதியின் வளர்ச்சித் திட்டங்களில் 60 சதவீதமானவை ரத்து செய்யப்பட்டுவிட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டுவிட்டன' என்பது அடுத்து அவர் தரும் செய்தி. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சுமையை இதரநாடுகளின் தோளில் இறக்கி வைக்கவே முயலும் என்பது அரபு நாடுகளது அனுபவத்திலிருந்தும் தெளிவாகிறது.

இந்தப் பொருளாதார நெருக்கடி அரபு நாடுகளின் அரசியல் -சமூக வாழ்விலும் விரைவில் பிரதிபலித்தால் ஆச்சரியம் இல்லை. துபாயில் எல்லாம் கட்டுப்பாட்டுடன் இயங்குகின்றன. எங்கும் அமைதி நிலவுகிறது, எதிலும் சுத்தம் கோலோச்சுகிறது. ஆனால் நடப்பது என்னவோ பரம்பரை மன்னராட்சி தான். எமிரேட்டுகள் என்பதைக் "குடியரசுகள்' என்று மொழி பெயர்க்கிறார்கள். மன்னராட்சி எப்படிக் குடியரசாகும்? மன்னராட்சியின் சாதக பாதகங்கள் தெளிவாகத் தெரிகின்றன. உத்தரவுகள் கறாராக அமலாவது சாதக அம்சம் என்றால், அந்த உத்தரவுகள் சாதாரண மக்களை பாதிக்கும் என்றால் அதுவே பாதக அம்சமாகிப் போய்விடும்.

இதற்கும் இரண்டு உதாரணங்களைக் கண்டேன். முதலாவது வாடகைக் கட்டுப்பாடு சம்பந்தமானது. அங்கு ஆண்டுதோறும் வாடகை ஒப்பந்தம் புதிதாகப் போடப்படுகிறது. துபாய் அரசரின் ஆணை என்னவென்றால், 2009க்கான ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு வாடகையை உயர்த்த வேண்டாம் என்பது. ஒருசில விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவான ஆணை இதுவே. கட்டடம் கட்டுவதும், வாடகைக்கு விடுவதுமே அங்கு பெரும் தொழில். நெருக்கடி காரணமாக வாடகையை உயர்த்தி விடக்கூடாது என்கிற அரசரின் கவலை இதில் வெளிப்பட்டது அந்த அளவுக்கு சரியே.

இன்னொரு செய்தி அந்த நாட்டின் சிக்கலான பகுதியைக் காட்டியது. "கலீஜீ டைம்ஸ்" பத்திரிகையின் எட்டுப் பத்தி தலைப்புச் செய்தி ஒன்று- "பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனையை ரத்து செய்யும் மசோதா சிறைத்தண்டனையை ரத்து செய்யும் மசோதா நிறைவேறியது". அப்படியெனில் இதற்கு முன்புவரை சிறைத்தண்டனை இருந்திருக்கிறது. இந்தத் தண்டனை போனதே தவிர மற்ற தண்டனைகள் தொடர்கின்றன. பத்திரிகையை மூடுவது உள்ளிட்ட 50 லட்சம் திர்கம் வரை தண்டம் விதிப்பது உள்ளிட்ட தண்டனைகள் இந்த மசோதாவிலும் இருந்தன. என்ன குற்றத்திற்காக இந்தத் தண்டனை என்பதுதான் முக்கியம். 'அனுமதி தரப்பட்ட ஊடகம் மற்றும் நாட்டின் வெளியீடுகள் வாயிலாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்கள், பட்டத்து இளவரசர்கள் மற்றும் துணை ஆட்சியாளர்களைத் தாக்கும் எவருக்கும் இந்தத் தண்டனை' என்கிறது. அதே பத்திரிகை இயல்பாகவே பத்திரிகை ஆசிரியர்கள் இந்த மசோதாவை விரும்பவில்லை என்பதையும் அந்த ஏடு பதிவு செய்துள்ளது.

உயர்ந்த கட்டடங்கள் + சுத்தமான கடற்கரைகள்+நவீன கார்கள் = துபாய் என்பதுதான் எளிய வாய்ப்பாடு. அதிலும் எல்லாம் பளிச்சென்று இருந்தன. பழமையை சுவாசிக்க வேண்டும் என்றால் ஊருக்குள் ஒரே இடம் அருங்காட்சியகம். அந்தக் காலத்து மண்கோட்டை வடிவில் அந்தக் கட்டடத்தின் வளாகம் இருந்தது. வாசலிலேயே அந்தக் காலத்து சிறிய கப்பல் இருந்தது. கடல் சார்ந்த வாழ்வுதான். அரபு நாட்டுக்குதிரைகளை ஏற்றிக்கொண்டு பாண்டிய நாட்டுக்கு அவர்கள் வந்தது நினைவுக்கு வந்தது. திருவிளையாடல் புராணத்தில் அந்தக் காட்சி வரும். வியாபாரியிடம் குதிரை வாங்க மன்னன் கொடுத்த பணத்தைத்தான் மந்திரி மாணிக்கவாசகர் கோயில் கட்டச் செலவு செய்திடுவார். பிறகு நரியைப் பரியாக்கிய கதை. பாண்டிய நாட்டானாகிய நான், அரபு நாட்டில் அந்தப் பழைய கதையினைக் கூட அழைத்துக் கொண்டு அருங்காட்சியகத்தைச் சுற்றி வந்தேன்.

அந்த பூமிக்கு ஐயாயிரம் ஆண்டுப் பழமை இருந்தது. அதை உணர்த்தும் மட்பாண்டங்கள் இருந்தன. இரண்டு எலும்புக்கூடுகள் ஒன்றையொன்று கட்டிப்பிடித்தபடி இருந்தன. இறந்த கணவன் - மனைவியைச் சேர்த்துப் புதைத்திருக்கிறார்கள். காதலுக்கு கால அடவு செய்ய முடியாது என்று பட்டது.

இன்றைய நவநாகரிக வாழ்வுக்கு முன்னாடி துபாயின் வாழ்வு எப்படி இருந்தது என்பதைத் தத்ரூபமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் முத்துக்குளித்தது அதைக் கரையில் கடைவிரித்தது, அவர்களின் இரும்புப் பட்டறை, நெசவு வேலை என்று மனிதச் சிலைகளுடன் தனித்தனி வேலைப்பாடாக அமைத்திருக்கிறார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குள் நுழைந்து விடுகிறோம். ரொம்பப் புதுவாழ்வு வாழ்கிறவர்களுக்கு பழையதன் மீதுள்ள பிரியம் இந்த அருமையான காட்சியகத்தின் மூலம் வெளிப்பட்டது.

துபாயின் கலை - இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது எனக் கேட்கத் தோன்றும். அந்த ஏழு நாட்களில் அதையெல்லாம் அவதானிக்க முடியவில்லை. ஆனால், 'கலீஜ் டைம்ஸ்' மற்றும் 'கல்ஃப் நியூஸ்' பத்திரிகைகளின் அனுபந்தங்களிலிருந்து சிலவற்றை அறிய முடிந்தது.

கலிஜல் என்பவர் ஒரு புகைப்படக் கண்காட்சியை நடத்தியிருந்தார். அதில் சிறப்பு என்னவென்றால் அந்த ஐநூறு புகைப்படங்களும் இந்திய நடனமணிகளுடையவை. கதக், குச்சிப்பிடி, மோகினியாட்டம், ஒடிசி, பரதம் என்று எல்லாம் நம்மூர் ஆட்டங்கள். ஏன் இந்தத் தொகுப்பு என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவையானது. அது - "நான் பார்த்த பல கண்காட்சிகளில் பெண்கள் அரைகுறை உடையிலோ அல்லது நிர்வாணமாகவோ இருந்தார்கள். நான் விஷயத்தைத் தலைகீழாகக் காட்ட முடிவெடுத்தேன். அதாவது, அதிகபட்ச உடையில் இருந்த பெண்களின் புகைப்படங்கள்" இஸ்லாமிய மரபுக்கு ஏற்ற சிந்தனைதான்

அல் அகமது செயிட் அஸ்பர் என்கிற கவிஞர் - கலைஞரின் பேட்டி வந்திருந்தது. இவரது புனைப்பெயர் அடோனிஸ். இவர் சிரியா - லெபனான் பரம்பரையைச் சேர்ந்தவர். இவருடைய உத்தி புதுமையானது என்றுபடுகிறது. ஆனால், புரிகிறதா என்று பாருங்கள் - "பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அராபிய ஓவியர்களின் நட்புறவால் எனக்கு கொலாஜ் அறிமுகமானது. கவிதை மற்றும் கலை எனும் சட்டகத்தில் எமது உரையாடல் இருந்தது. ரஹிமாவில் அந்த உரையாடல் பொதிந்திருந்தது. கொலாஜ் மூலம் கவிதையானது தனது உருவத்தை வடிவமைத்துக் கொள்ள விருப்ப பூர்வமாக அனுமதிக்கிறது. கொலாஜ் என்பது கவிதையின் வெறும் நீட்சியே - வடிவங்கள் மற்றும் ரகசியம் நோக்கிய பயணம். ரஹிமா என்பது கவிதையின் உணர்வுப்பூர்வமான பகுதி காரணம் அது வடிவங்களுடன் உரையாடுகிறது" வார்த்தைகளுக்கும் கோடுகளுக்கும் இடையே பாவம் கட்டுகிறவர் போலும். அவரது படைப்புகளைப் படிக்காமல் அல்லது பார்க்காமல் ஒரு முடிவுக்கு வர முடியாது. எப்படியோ பல வகையான கலை - இலக்கியச் சிந்தனைகள் அந்த இஸ்லாமிய பூமியிலும் வலம் வருவது நிச்சயமானது.

யதேச்சையாகக் கண்ணில் பட்ட ஒரு பெட்டிச் செய்தியுடன் இந்தக் கட்டுரையை முடிக்கலாம். 'தி நேஷனல்' பத்திரிகையில் இது வந்திருந்தது -

"கடவுள் இல்லை விளம்பரத்தைச் செய்ய நினைத்த இத்தாலிய நாத்திகவாதிகளின் முயற்சி பலிக்கவில்லை. காரணம், பழமைவாத அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புத்தான். அந்த விளம்பரம்: 'கடவுள் இல்லை என்பது கெட்ட செய்தி. அவர் தேவை இல்லை என்பது நல்ல செய்தி'. ஜெனோவாவின் பேருந்துகளில் இதைச் செய்யவிருந்தார்கள். பார்சிலோனோ, லண்டன் மற்றும் வாஷிங்டன் நாத்திகவாதிகள் ஏற்கெனவே மாநகரப் பேருந்துகளில் 'கடவுள் இல்லை' விளம்பரத்தைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்"

அட! இஸ்லாமிய நாடு ஒன்றிலும் நாத்திகப் பிரச்சாரம் பற்றிய செய்தி ஒன்றைப் படிக்க முடிந்தது! உலகின் எந்தப் பகுதியும் அப்படி ஒன்றும் மடிசஞ்சியாக இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com