Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஜனவரி 2009
நூல்மதிப்புரை
எஸ்.ஏ.பெருமாள்

1. கவிதாகுமாரின் அழுக்கான நெருக்கு

கவிதை என்பது விதைதான். வாசிப்பவனின் இதயத்தில் முளைக்க வேண்டும். அப்படி முளைக்கும் விதையே கவிதை. இத்தகைய கவிதைகள் இன்று அபூர்வமாகவே வருகின்றன. அதிலும் சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து வெளிவரும் கவிதைகள் மிகவும் குறைவு.

மதுரைக் கவிஞர் கவிதாகுமாரின் அழுக்கான நெருப்பு தொகுதி பற்றிஎரிகிறது. முந்தைய இரு தொகுப்புகளைவிட இந்தத் தொகுப்பில் கவித்துவமும் செய்நேர்த்தியும் மிளிருகிறது. சமகாலத்துச் சமூக அநீதிகளைச் சாடும் கவிதைகளே இத்தொகுப்பில் அதிகமாய் வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஈராக் முதல் உத்தப்புரம் வரை எழுதி தனது முற்போக்கு முத்திரையைப் பதித்துள்ளார். விசயங்களை வித்தியாசமான கோணத்தில் இவர் பார்ப்பதற்கு "ஆறு வித்தியாசங்கள்" கவிதை ஒரு உதாரணம்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு வல்லூரைப்போல நாடுகளை நரவேட்டையாடி வருகிறது. ஆப்கானிஸ்தான் முதல் ஈராக் வரை இந்தக் கொடூரத்தை நாம் காண்கிறோம்.

"பல தேசத்து மக்களின்

ரத்தத்தில் குளியலாடிவிட்டு

இன்னும் எப்படி அந்தமாளிகை

வெள்ளையாய் காட்சி தருகிறது" என்று

வெள்ளைமாளிகையைக் கேள்வி கேட்கிறார். மேலும், "கழுகுகளோடு கரம்கோர்த்துப் பழகியவர்களுக்கு புறாக்களின் அழகு புரியப்போவதில்லை" என்பதில் கவிதை கொஞ்சுகிறது.

இளவயது நினைவுகள் அழியாதவை. நாய்க்கடி பட்டுச் செருப்படி வாங்கியவன் குடித்துவிட்டுக் கிடப்பதும் செருப்படிபட்டாலும் புத்திவராது என்பதும் 'புத்தி'கவிதை சுத்தமாய் சொல்கிறது. சாக்குருவி, திசையெங்கும், நாரைகள் ஆகிய கவிதைகளும் அற்புதமான உருவகங்கள். அதில் வெண்மணிப் படுகொலையை வர்ணித்திருப்பது தீப்பற்றி எரிகிறது.

இந்தியாவில் பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் முதல் மணியடித்தது பாபர் மசூதி இடிப்புத்தான். அதைத் தொடர்ந்தே நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. இதில் மட்டும் இந்து, முஸ்லிம் வேறுபாடு இல்லை.

"காந்தி இதயத்தில் வாழ்ந்த

ராமனைக் கொன்றுவிட்டு

அயோத்தியில் எதற்கு அவனுக்கு

சமாதி கட்டத் துடிக்கிறீர்கள்?"

என்று கேட்பதில் காந்தியைச் சுட்டுக் கொன்றதும் அவர்கள்தான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அதேபோல், ஆலயத்துக்குள் தமிழும், தலித்தும் நுழையக்கூடாது என்போரை ஹைகூவில் கண்டனம் செய்துவிட்டு-

"எத்தனை படைவரினும்

எத்தனை முறைவரினும்

மறுபடி பிறப்பெடுப்போம்

மனுவைக் கொல்லும் வரை "

என்று முடிக்கிறார். கவிதை நூலை இவரது தந்தையார் அமரர் தோழர் பழனிச்சாமிக்கு அர்ப்பணித்திருப்பது பொருத்தமானது. அவர் அவசர நிலையின் போது என்னோடு சில மாதங்கள் தலைமறைவுப் பணியில் சக தோழராய் நின்றவர். வாசித்தே தீர வேண்டிய தொகுப்பு இது.

வெளியீடு :

காலம் வெளியீடு

25, மருதுபாண்டியர் 4வது தெரு,

கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி,

மதுரை - 625 002

விலை ரூ.40

2. மணிமாறனின் கதைகளும் கதையாடல்களும்

மனிதவாழ்வில் தொன்றுதொட்டுக் கதைகளே நிலைத்திருக்கின்றன. வாயால் சொல்ல, செவிகளால் கேட்டு பின்பு அனுபவித்த கதைகளை கண்கொண்ட காட்சியாகப் பார்த்து ரசித்தனர். கதை மாந்தர்களாய் மனிதர்களும் பொம்மைகளும் நடித்தனர். நாடகம், பாவைக் கூத்தில் துவங்கி திரைப்படங்களானது. அதன்பின் தொலைக்காட்சிகளும் வலைத்தளங்களும் வந்து மனித மனங்களைக் கலக்கி வருகின்றன. காலந்தோறும் பத்திரிகைகள் நிரந்தரமாய் கதைகளில் குடியிருக்கின்றன. கதையாடல் மூலம் கதைகளுக்கு உயிரூட்டுவதும் ஒரு மாபெரும் கலைதான். மணிமாறன் இந்நூலில் இதை மிகுந்த செய்நேர்த்தியுடன் வரைந்திருக்கிறார்.

வ.வே.சு அய்யர் துவங்கி ஆதவன் தீட்சண்யா வரை தமிழ்ச் சிறுகதையுலகின் ஜாம்பவான்கள் முதல் முற்போக்கு எழுத்தளார்கள் வரை அவர்களையும் அவரது சிறுகதைகளையும் இந்நூலில் வாசகர்களுக்கு தெளிந்த நடையில் அறிமுகம் செய்கிறார். கதையாடலோடு நிற்காமல் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியரான மணிமாறன் ஒரு கதாசிரியனுக்குரிய மேதைமையுடன் நம்மைக் கைப்பிடித்து நூல்முழுதும் அழைத்துச் செல்கிறார், சுகமான வாசிப்பு அனுபவம் நமக்குக் கிட்டுகிறது.

படைப்பாளியின் சிறந்த படைப்பு குறித்துக் கூறும்போது அவரது படைப்பில் கண்டுகொள்ளப்படாத கதைகுறித்தும், அதன் சிறப்பு குறித்தும் கூறியிருப்பது நமது அறியாமைக்குத் தெளிவூட்டுகிறது. பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் முனைவர் பட்டம் பெறுவதற்காக எழுதிய சிறுகதை ஆய்வுகளை நான் வாசித்திருக்கிறேன். அவை பெரும்பாலும் பட்டம் பெறும் நோக்கிலேயே இருக்கும். இந்நூல் தனிரகமானது. ரசமான கதைகளைத் தேர்வு செய்து சுகமான வாசிப்பில் நம்மை ஈடுபடச் செய்கிறது.

"எளிய வாசகன் என்ற முறையில் என் வாசிப்பனுபவத்தில் சிறப்பான கதைகள் என நான் கண்டடைந்தவற்றை எல்லோருக்கும் பொதுவாக இருக்கட்டுமே என முன் வைத்திருக்கிறேன்" என்று மணிமாறன் குறிப்பிட்டுள்ளார். மொழிநடையில் சாமானியமாய் கைவராத மந்திர நடை அவருக்குக் கைவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

வ.வே.சு. அய்யர், மாதவையா, பாரதி போன்ற தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளிலிருந்து கதையாடல் தொடங்குகிறது. புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் உள்ளிட்ட கதைகளின் உள்ளடக்கமும் அவரது சொற்சாட்டையின் சுழற்சியும் கூறப்பட்டுள்ளது. புதுமைப்பித்தனின் கதைகள் அறிவின் தர்க்கத்தில் இயங்கிக் கொண்டிருக்க கு.பா.ரா., ந.பிச்சமூர்த்தியும் உணர்வின் தளத்தில் இயங்கியதாய்க் குறிப்பிட்டுள்ளார். மௌனி குறித்து இதுவரை யாரும் கூறாத ஒரு கருத்தை "தத்துவக்குழப்பங்களும், ப்ராய்டைப் பிரதி எடுத்த பிதற்றல்களும் மெளினியின் கதைகளில் உண்டு" என்கிறார் கு.அழகிரிசாமியின் திரிபுரம், தி.ஜானகிராமனின் மோகமுள், ஜெயகாந்தனின் கதைகள், கி.ரா.வின் கரிசல் இலக்கியம், கிருஷ்ணன் நம்பியின் மேஜிகல் ரிசயலிசம், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன் ஆகியோரது கதைகள் பிரமாதமான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

முற்போக்கு எழுத்தாளர்களான கந்தர்வன், மேலாண்மை, தமிழ்செல்வன், வேல ராமமூர்த்தி, பா.செயப்பிரகாசம், மாதவராஜ், ஷாஜகான், தனுஷ்கோடி ராமசாமி போன்றோரின் கதைகளும் இதில் கருத்தாழமிக்க சொல்லாடல்களாக்கப்பட்டுள்ளன. பாமா, கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளும் கூறப்பட்டுள்ளன.

இந்த நூலையே மணிமாறன் இன்னும் பெரிதாய் விரித்து எழுதலாம். தமிழுலகிற்கு ஒரு சிறந்த, நவீன எழுத்தாளர் கிடைத்துள்ளார். சிறுகதைகளைப் புதிய கோணங்களில் வாசிக்கக் கற்றுக் கொள்வது காலத்தின் தேவை.

அதற்கு இந்நூல் பயன்படும்.

வெளியீடு : பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018.

விலை : ரூ.25

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com