Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஜனவரி 2009
பாக்தாத்தின் சங்கொலிகள்
எஸ்.ஏ.பெருமாள்

பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அண்மையில் வெளிவந்துள்ள நாவல் "பாக்தாத்தின் சங்கொலிகள்”. ஈராக்கை அமெரிக்கா படையெடுத்துக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கெதிராக இளைஞர்களும் தற்கொலைப் படைகளும் நடத்தும் போர் பற்றிய நாவல் இது. லட்சக்கணக்கான பிரதிநிதிகள் விற்பனையாகியுள்ளது.

இந்த நாவலை எழுதியது யாஸ்மினா கத்ரா என்பவர். பார்த்தால் பெண் பெயர் போலத்தோன்றும். உண்மையில் அவரது பெயர் முகமது மவ்லெஸ்ஸிஹவுல். இவரது வேறு நான்கு நாவல்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. 1. கடவுளின் பெயரால், 2. ஓநாய் கனவுகள், 3. காபூலின் தூக்கணாங்குருவிகள், 4. தாக்குதல் ஆகிய நான்கு நாவல்களில் காபூலின் தூக்கணாங்குருவி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் பாரிசில் வாழ்கிறார், யாஸ்மினா என்ற பெண் புனைப் பெயரைத் தனக்குச் சூட்டியுள்ளார். பாக்தாத்தின் சங்கொலிகள் என்ற இந்த நாவல் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பயணிக்கிறது.

பாக்தாத் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் யாசின் அமெரிக்க விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் மூடப்பட்டு தனது பாலைவன கிராமத்திற்குத் திரும்புகிறான். அதற்குள் ஈராக் முழுவதும் அமெரிக்கப் படைகளின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டன. அவனது கிராமத்தில் நிகழ்ந்த மூன்று சம்பவங்கள் அவனை அடியோடு மாற்றிவிட்டது. அமெரிக்கப் படைகள் அவனது கிராம மக்கள் மிகவும் நேசித்த ஒரு பைத்தியத்தைக் கொன்றுவிட்டன. அடுத்து ஒரு அமெரிக்க விமானம் அங்கு ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டின் மீது குண்டுகளை வீசியது. கடைசியாக ஒரு நாள் இரவு அமெரிக்கச் சிப்பாய்கள் அவனது வீட்டுக்கு வந்தனர். அவனது குடும்பமே பீதியில் ஆழ்ந்து கிடந்தது. அவனது அப்பாவை குடும்பத்தாரின் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தினர்.

இதனால் அமெரிக்கர்களைப் பழிவாங்கும் வஞ்சத்தோடு அந்த இளைஞன் கிராமத்தை விட்டு வெளியேறி பாக்தாத் நோக்கிப் புறப்படுகிறான். பாக்தாத் நகரம் அமெரிக்கர்களின் குண்டுவீச்சால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு ஒரு தீவிரவாதக் குழுவில் அவன் சேருகிறான். அவர்களோடு இணைந்து அமெரிக்கர்களுக்கெதிரான தாக்குதல்களில் பங்கேற்கிறான். அமெரிக்கர்கள் மற்றும்பிரிட்டிஷ் காரர்களுக்கெதிராக அவன் சிந்தனை முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பல போர்களுக்குப் பிறகு அவன் பெய்ரூட்டுக்கு அனுப்பப்பட்டான். அங்கிருந்து லண்டன் சென்று ரகசியத் தாக்குதல் நடத்துவது அவர்களது திட்டம்.

பழிவாங்குவது குறித்து அவனது சிந்தனையில் அப்பாவி மக்களைக்கொன்று பழிவாங்குவது சரியா என்ற நீதிவிசாரணை நடக்கிறது. சாமானிய மக்கள் மீது வன்முறையினை ஏவுவது எந்த அளவுக்குச் சரியானது என்பது குறித்து மறுசிந்தனை வருகிறது. கடைசியாக அவன் விமானத்தில் ஏறும்போது இந்தச் சிந்தனைகளோடு சொல்கிறான்.

பயங்கரவாதிகள் எப்படி உருவாகிறார்கள், எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்பதை நாவல் தெரிவிக்கிறது. ஈராக்கைப் பற்றிப் புரிந்து கொள்ள இந்நாவல் பெரிதும் உதவுகிறது. வித்தியாசமான நடையில் எழுதப்பட்டுள்ளது.

கிழவன் சொன்னான்:

"நமது தவறுகளையெல்லாம் சதாமின் தோள்களின் மீது இறக்கி வைக்க முயலுவதை என்னால் அனுமதிக்க முடியாது. அவன் ஒரு அசுரன்தான். அவன் நம்மிடமிருந்தே வந்தான். நமது ரத்தம்தான் அவனுள் ஓடுகிறது. அவன் நம்முடைய அசுரன், அவனுடைய முழுமையைப் பாருங்கள். ஈராக்கை உலக அரங்கில் தனது வரலாற்றுப் பெருமைகளோடு நிலைபெறச் செய்தவன். அவனை எதிர்ப்பவர்கள் யார்? உலகின் மறுமூலையிலிருந்து வந்த வெறியர்கள், மிருகங்கள். அவர்கள் நம்மீது குண்டுகளை வீசி பெண்களை விதவைகளாக்கி, குழந்தைகளை அனாதைகளாக்கியவர்கள். நமது நாட்டையே பூமியின் நரகமாக்கிவிட்டார்கள்.

இஸ்ஸாம் இதை மறுத்து "சதாம் உசேன்தான் நமது நாட்டையே கல்லறையாக்கினான்" என்கிறான்.

கிழவன் அதை மறுத்து "நமது பயமே காரணம். சதாம் தவறுகளைச் செய்த காலத்திலேயே நாம் ஒன்றுபட்டு அதை எதிர்த்து தைரியமாய்ப் போராடியிருக்க வேண்டும். பயந்து பேசாமல் இருந்தோம். அவன் அசுரனாகிவிட்டான். நீ சதாமின் கொடுங்கோன்மையிலிருந்து அமெரிக்கர்கள் நம்மை விடுவித்ததாய் கருதுவதை நிறுத்திக் கொள், முட்டாளே" என்றான். போர் நடைபெறும்போது முரண்பட்ட முறையில் விவாதித்துக் கொண்டிருக்கக்கூடாது என்ற முறையில் கிழவன் உபதேசம் செய்வது சிறந்த பதிவாகும்.

"அமெரிக்கர்களிடம் கிறிஸ்தவ ஒழுக்கமெல்லாம் துளியும் கிடையாது. அவர்கள் வியாபாரிகள்; நாம் பண்டங்கள்; அவர்கள் நம்மைக் கொள்ளையடித்து வியாபாரம் செய்ய வந்திருக்கிறார்கள். நேற்று உணவுக்காக எண்ணெய் என்று இருந்தது; இன்று எண்ணெய்க்காக சதாம் என்கிறார்கள்" என்று யாசின் கூறுகிறான்.

துரோகியைப் பற்றிக் கூறும்போது -

"உமர் ஒரு நடமாடும் நோய். கொடூரமான வார்த்தைகள் அவன் வாய் முழுவதும் -

மக்கள் அவனை பிளேக் நோய் போலப் பார்த்தனர்" என்று உருவகப்படுத்துகிறான்

ஒரு பழமொழி-

"உன் அண்டைவீட்டார் அலறியடித்து ஓடிவரும்போது நீ கதவை மூடினால் அவர்கள் உன்வீட்டு ஜன்னல் வழியே உள்ளே வந்துவிடுவார்கள்" என்கிறது.

அமெரிக்கர்கள் தங்கள் ஹாலிவுட் படக்காட்சிகளைப் போலவே குண்டுகளை வீசித் தகர்க்கிறார்கள். தீயிட்டும் கொளுத்துகிறார்கள். உண்மை என்னவென்றால் ஆட்டு மந்தைகளுக்குள்ளே பாயும் கழுதைப் புலிகள்(ழலுநுசூஹளு) போலப் பாய்கிறார்கள். அவர்கள் குழந்தைகளைக் கூடக் கொடூரமாய்ச் சுட்டுக் கொல்கிறார்கள். முதியவர்களை துப்பாக்கி சுட்டுப்பழகும் அட்டைக் குறியைப் போல குறி பார்த்துச் சுட்டுத்தள்ளுகிறார்கள்.

எங்கள் போராட்டத்தை உலகம் விழிதூக்கிப் பார்க்கிறது. நாங்கள் ஈராக்கியர்கள். எங்களுக்குப் பதினோர் ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு உண்டு. மனிதர்களுக்கே கனவு காண்பதற்குக் கற்றுக்கொடுத்தவர்கள் நாங்கள்தான்" என்று கம்பீரமாய்ப் பேசுகிறான் யாசினின் நண்பன்.

தாய் தந்தையரைக் கடைசிக் காலத்தில் கந்தல்துணிகளைப்போல் கருதும் ஜென்மங்கள், அவர்களைப் பசியோடு அலையவிடுபவர்கள், நாகரீகமாகப் பெற்றோர்களை முதியோர் இல்ல நரகத்தில் உழலவிடுபவர்கள், பிச்சைக்காரர்களாய்த் தெருவிலேயே அவர்களை அலையவிடுகிறவர்கள் இவர்களெல்லாம்கண்டனத்துக்குரியவர்கள், மனித மிருகங்கள் என்று ஒரு காட்சியில் வர்ணிக்கப்படுகிறது.

அமெரிக்கர்களுக்கு நமது கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், கனவுகள், பிரார்த்தனைகள் புரியாது. அந்த மாடு மேய்த்தவர்களுக்கு மெசபடோமியாவைத் தெரியுமா? எழில் மிகுந்த ஈராக்கை அழிக்கிறோம் என்பது அந்தக் குரங்குகளுக்குத் தெரியுமா? அவர்களுக்கு நமது பாபெஸ்கோபுரம் தெரியுமா? பாபிலோனின் தொங்கும் தோட்டங்கள் தெரியுமா? ஹாரூன் அல்ரஷீதும் ஆயிரத்து ஓர் இரவுகளும் தெரியுமா? அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் எமது வரலாறு படிக்காத மூடர்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கள் பெட்ரோலிய வளம் மட்டும்தான். எங்கள் கடைசிச்சொட்டுப் பெட்ரோலியத்தையும், ரத்தத்தையும் உறிஞ்சவே அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், ரத்தக்காட்டேரிகள். பணமும் லாபமுமே அவர்களது குறிக்கோள்.

எங்கள் தெருக்கள் மகத்தான சாட்சியங்களாய் நிற்கப் போகின்றன. அமெரிக்கர்களுக்கும் எங்களுக்கும் நடக்கப்போகும் துவந்தப் போரைக் காணப்போகின்றன. பாபிலோனுக்கும் - டிஸ்னிலேண்டுக்கும், பாஸல் கோபுரத்திற்கும் - எம்பயர் ஸ்டேட் பில்டிங்குக்கும், தொங்கும் தோட்டத்திற்கும் -கோல்டன் கேட் பிரிட்ஜுக்கும், சிந்துபாத்துக்கும் - டெர்மினேட்டருக்கும் நடக்கும் யுத்தத்தை உலகம் பார்க்கப்போகிறது.

"நீ சண்டை போடும் போது உனது நாட்டுக்காகச் சண்டை போடு; உலகத்தையே எதிர்க்காதே. எப்போதும் நேராக இரு.. தவறைச் சரி என்று நினைக்காதே. யாரையாவது கொல்ல வேண்டும் என்பதற்காகக் கொல்லாதே. குருட்டுத்தனமாகச் சுடாதே. அப்பாவி மக்கள்தான் சாகிறார்கள். அயோக்கியர்கள் தப்பிவிடுகிறார்கள்" என்று யாசின் அறிவுறுத்தப்படுகிறான். மேலும் "ஐந்து கண்டங்களிலும் உள்ள மக்கள் வரலாறு காணாத முறையில் நமக்கு ஆதரவாக ஆர்ப்பரிக்கிறார்கள், மறந்துவிடாதே" என்கிறான் உமர்.

பாலைவன கிராமங்கள் பற்றி எரிகின்றன. உலகின் மாபெரும் கலைப்பொக்கிஷமான மியூசியம் சூறையாடப்பட்டுவிட்டது. மனிதகுலத்தின் தொன்மையான பெருமைகளின் அடையாளங்களை அழித்தனர். இது அம்மக்களின் ரத்தத்தில் அழுத்தமாய்ப் பதிந்துவிட்டது. ஈராக்கியர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புதிய வரலாற்றைத் தங்கள் ரத்தத்தால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தகம் வாசிக்க வாசிக்க ஓட்டமாய் ஓடுகிறது.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com