Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஜனவரி 2009
நூல் மதிப்புரை

மேலாண்மை பொன்னுச்சாமி
அருணன் எழுதிய ‘காலந்தோறும் பிராமணியம்’

உலக நாடுகள் எங்கும் காண முடியாததொரு சாபக்கேடாக இந்தியாவில் சாதீயம் நிலவுகிறது. ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறைகளும், கலவரங்களும், அடிமைத்தனங்களும் நிறைந்த சாதீயத்தில், மனித நீதிக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. மனித நீதிக்கு இடமில்லாத இந்தச் சாதீய நோய் நேற்றைய விளைவா? அல்ல. இதற்கு நீண்டநெடிய முன் வரலாறு உண்டு. நூல்பிடித்துப் போய்ப் பார்த்தால், வேதகால நாகரிகத்துக்கும் அப்பால் போய்விடுகிறது. கி.மு. 800க்கும் அப்பால் கடந்து செல்கிறது.

அருணன் அவர்களின் சமீபத்திய படைப்பாக வந்திருக்கிற 'காலந்தோறும் பிராமணியம்' என்ற இந்நூல், கி.மு. காலத்துக்கும் கடந்து பயணப்பட்டு, ஆழமும், நுட்பமுமாக ஆய்வைத் துவக்குகிறது. 'தமிழரின் தத்துவமரபு' என்ற அவரது மிகச்சிறந்த ஆய்வுநூலை வாசித்து முடித்த பிரமிப்பிலிருந்து மீள்வதற்குள், இந்தப்புதிய நூல் நம்மைத் திணறடிக்கிறது.

கால மாற்றத்தில் எத்தனை பெரிய கோலமாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் சாதீயமும், வர்ணாசிரமும், பிராமணியமும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள செய்கிற தந்திரங்களும், யுக்திகளும், இதயமற்ற முயற்சிகளும் கொடூரமானவையாக இருக்கின்றன. நிலப்பிரபுக்கள், செல்வந்த வணிகர்கள், அரசகுலம் போன்ற ஆளும்வர்க்கத்துக்கு அடிமைப்பட்டு காலம்பூராவிலும் பெரும்பான்மையான சூத்திரர்களும், பஞ்சமர்களும் உழைத்துச் சாவதற்கு ஒப்புக்கொள்ள வைக்கிற தத்துவாயுதத்தை - வர்ணாசிரமத்தை - பிராமணியம் நன்றாகவே பிரயோகித்திருக்கிறது.

இறைநம்பிக்கை எனும் தேவபலத்தில் ராஜசபைக்குத் தேவையான வேர்வைப் பெருக்கு முழுவதும் தாமே முன் வந்து ஒப்புக் கொடுக்கிற சூத்திரர்களையும் பஞ்சமர்களை ஆட்டுவிக்கிற பிராமணியம், அவ்வப்போது சத்திரியர்களையும் பதம் பார்க்கிறது. சத்திரிய ராஜாவை விடவும்... யாகம் வளர்த்து, பசுவும் பொன்னும் வாங்குகிற பிராமணர்களும் புரோகிதர்களும் சமூக அடுக்கில் உயர்ந்தவர்கள் என்ற தம்மிடத்தை தக்க வைத்துக் கொள்கிறது. 'பரமஹத்தி தோஷம்' என்ற தண்டனைப் பிரிவைக் காட்டியே அரசர்களின் குடுமியைப் பிடித்தாட்டுகிற பிராமணிய தந்திரம்.

வேதகாலத்து நிகழ்வுகளிலிருந்து துவங்குகிற ஆய்வு, வேதாஸ்திரங்களின் காலத்துக்கும் பயணப்பட்டு... புராண இதிகாச காலத்துக்குள் இறங்கி வந்து... சமண - பௌத்த மதங்களைக் கொடூரமாக கொன்றுகுவித்த 'அன்பே சிவ' பயங்கரவாதத்தின் சமூக, தத்துவ, பொருளியல் வேர்களையும் பரிசீலித்து... குப்தர் 'காலத்து ராஜ்ய ஆக்ரமிப்பு காலத்திலும், தம்மைக் காத்துக் கொள்வதற்காக நரித்தன தந்திரங்களும், யத்தனிப்புகளும் எவ்வாறு இருந்தன என்று ஆய்ந்து... சோழர்காலம், இஸ்லாமிய படையெடுப்புக் காலம் வரைக்கும் நீண்டு பயணப்படுகிறது.

சண்டாளர்கள் எனப்படுகிற பஞ்சமர்களையும், சூத்திரர்களையும், பெண்களையும் ஒடுக்குவதில்- ஒதுக்குவதில் - தீண்டத் தகாத தூரத்துக்குத் தள்ளுவதில் பிராமணியம் காட்டிவந்த முனைப்புகளும் வெற்றிகளும் பதிவாகின்றன. ஆலயங்கள் பெயரிலும் ஆண்டவன் பெயரிலும் யாகங்கள் நடத்துவதன் பெயரிலும் நிலங்களை - கிராமங்களை - பசுக்களை - பொற்காசுகளை அடிமைகளை தானமாகப் பெற்று ஆண்டனுபவித்த பிராமணியத்தின் சகலகாலத்து தந்திரங்களையும் தத்துவ மாய்மாலங்களையும் பதிவு செய்கிறது, ஆய்வு.

சொல்லிமாளாத ஆச்சரியம் நிகழ்கிறது, நூலை வாசிக்கிற அனுபவத்தில், பெண்ணுக்கும், பஞ்சமனுக்கும், சூத்திரனுக்கும், சில சமயங்களில் சத்திரியனுக்கும் எதிராக தத்துவ பானங்களை ஏவுகிற பிராமணியம், சாதீயத்தையும், யாகத்தையும், வர்ணாசிரமச் சமூகக் கட்டமைப்பையும் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மூர்க்கமான தந்திரோ பாயங்களை கூச்சநாச்சமில்லாமல் - ஈரமில்லாமல் பிரயோகிக்கிறது.

வேதகாலம், சாஸ்திரகாலம், இதிகாச காலம், குப்தர்காலம், சோழர்காலம் என்று நீண்டு தொடர்கிற ஆய்வில் ஏகப்பட்ட தரவுகளையும், ஆதாரங்களையும், இலக்கியச் சாட்சியங்களையும், செப்பேட்டு சான்றாதாரங்களையும் அழுத்தமாக முன் வைத்து, அதன் வழியில் விமர்சனத்தை முன் வைப்பதால்... ஆய்வு முடிவு குறித்த ஒரு நம்பகத்தன்மை ஏற்படுகின்றது.

ஆய்வாளரின் ஆதார பலமான சத்தியம், சாதீயத்துக்கு எதிரான தர்மாவேசத் துடிப்பு நூலின் ஒவ்வொரு எழுத்திலும் உயிர்த்துடிப்புடனும், அறிவார்ந்த நுட்பத்துடனும் வெளிப்படுகிறது. இந்த நூலை வாசிக்கிற போது 'வால்கா முதல் கங்கை வரை' என்ற ராகுலசாங்க்ரு த்யாயரின் சரித்திரத் தத்துவ நூல் அடிக்கடி மனசுக்குள் வந்து போகிறது.

அரசர்களின் வழியே அது பயணப்படுகிறது என்றால், இந்த நூலின் ஆய்வு, அரசர்களின் அறிவாயுதமாக நின்று, மக்களை மிரட்டி, அச்சுறுத்தி அடிமைப்படுத்திய வர்ணாசிரமபிராமணியத்தின் வழியே பயணப்படுகிறது. எல்லாக் காலத்திலும் பெரும்பான்மை உழைப்பாளி மக்களான சூத்திரர்களை - பஞ்சமர்களை - பெண்குலத்தை அடக்கி ஒடுக்கி கட்டுப்படுத்திய பிராமணியத்தை வரலாறு சில முறை தண்டிக்கிறது.

களப்பிரர்களின் பிரவேசம், இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பு, பிரிட்டிஷ் நாட்டின் பிரவேசிப்பு... இதெல்லாம் பிராமணியத்தைத் தனிமைப்படுத்தி பழிவாங்கிய வரலாற்றின் காலங்கள். சூத்திரர்கள், பஞ்சமர்கள், பெண்குலம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் கூட்டம் வரலாற்றில் தனிமைப்பட்ட பிராமணியம் கண்டு பரிவுகாட்டாமல்பாராமுகமாக - ஏளனமாக நகைத்தது என்பதையும் பதிவு செய்கிறார்.

இந்த நூல்... தமிழ் மண்ணில் காலூன்றி மார்க்ஸீய ஒளியில் இயங்கியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் சமூகத்துக்குள் ஊடுருவிப் பணியாற்றுகிற சகல ஊழியருக்கும் அறிவார்ந்த இலக்கிய ஆயுதமாகத் திகழும். சகல தமிழன் நெஞ்சிலும் குடியேற வேண்டிய நூல். ஆய்வு நூலுக்குரிய சலுப்பூட்டுகிற மொழிநடையில் இல்லாமல், படைப்புமொழிக்குரிய சுவையுடனும் அழகுடனும் அமைந்திருப்பது, வாசிப்பவரை வசீகரிக்கும்.

வர்க்கமும் சாதீயமும் கலந்துகிடக்கிற இந்தியச் சமூகம் பற்றிய இந்த ஆய்வு நூலில் பிராமணியவாதம் குறித்த ஆய்வும், விவாதமும் கூடுதல் அழுத்தம் பெற்றிருக்கிறது. ஆய்வுப்பொருளின் தேவை அதுவாக இருப்பதால் அது இயல்பாகவும் இருக்கிறது. வர்க்க நோக்கிலான சமூக வெளிச்சத்துளிகள் ஆங்காங்கே உரிய இடத்தில் ஒளிர்கின்றன.

வெளியீடு :

வசந்தம் வெளியீட்டகம்
69/24-ஏ, அனுமார்கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை - 625 001
விலை : ரூ.150


ஜீவகாருண்யனின் 'நதியின் மடியில்'

சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத்தொகுப்புகள், நாவல் என்று பன்முகப்பட்ட படைப்பாற்றல் திறன்மிக்க ப.ஜீவகாருண்யன் 'நதியின் மடியில்' என்ற நாவலில் முற்றிலும் புதிய தோற்றம் காட்டுகிறார். மேய்ச்சல் சமூகத்தைச்சேர்ந்த இளைஞர் இருவர் நகர நாகரிகம் சென்று பார்க்கின்றனர். வேட்டைக்குணம் கொண்ட இவர்களின் பார்வையில் முற்றிலும் வித்தியாசப்பட்ட சமூகமாகத் தோன்றுகிற நகரத்தில் வர்க்க ஏற்றத்தாழ்வுகளின் ஆரம்பம் தென்படுகிறது.

நகரவாழ்வின் அமைதி.... குதிரையில் பாய்ந்து புயலென வந்து சூறையாடுகிற ஆரிய வெள்ளையர்களால் அமைதி கெட்டழிகிறது. நகரக்கருப்பு மனிதர்களிடையே வெள்ளயின மனிதர்களின் அத்துமீறலான இனக்கலப்பு நிகழ்கிறது. வரலாற்று நிகழ்வின் இந்த மூன்று கட்ட சமுதாய அமைப்பின் வித்தியாசங்களும், மாறுதல்களும் நாவல் வடிவில் உணர்த்தப்படுகின்றன. இதை சரித்திர நாவல், சமூகநாவல் என்று வகைப்படுத்துவதில் சிரமமிருக்கிறது.

இயங்கியல் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் உலகசமுதாய வரலாற்று முன்நகர்வுகளையும், அதில் மூன்று வகைப்பட்ட சமுதாய அடுக்குகளையும் நாவல்பேச முனைவது முற்றிலும் புத்தம்புதிய முயற்சி. நமிசி என்கிற இளைஞனையும் குரா என்கிற நாயையும், பூபிகன் என்கிற முதியவரையும் மறக்க இயலாத சித்திரங்களாக நம்முன் பதித்துவிட்டது, நாவல்.

நகர நாகரிகத்தைச் சித்தரிக்கிற போது நாவலின் ஓட்டம் தடைப்பட்டு விவரணைகளின் முற்றுகையில் சற்றே அயர்ச்சி தட்டுகிறது. ஆரியர்கள் குதிரைகளில் வந்து அச்சுறுத்துவதும், நகர நாகரிகமாக காளை இருப்பதும் ஆசிரியரின் வரலாற்று நோக்கின் ஆழத்தையும் நுட்பத்தையும் உணர்த்துகிறது. நாவலாக்க முடியாத ஒரு பெரிய விஷயத்தை நாவலாக்கத் துணிந்து முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.

புதுவகையான முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிற இந்த நாவலை வாசிக்கிற அனுபவத்தை எல்லோரும் பெறலாம்.

வெளியீடு :

அருள் புத்தக நிலையம்,
12, வாணியர் வீதி,
குறிஞ்சிப்பாடி - 607302
கடலூர் மாவட்டம்
விலை : ரூ.86.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com