Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஜனவரி 2009
கறவை


எஸ்.இலட்சுமணப் பெருமாள்

கஸ்தூரிபாய் விலாஸ் சாப்பாடு கிளப் உரிமை வந்தே மாதரம் நல்லையநாயக்கர் என்ற போர்டைப் பார்த்து இவர் விடுதலைப் போராட்ட தியாகி போலிருக்கு என்று எல்லோரையும் போல நீங்களும் நினைத்துவிடக் கூடாது. இந்த ஊரில் இப்பொழுது இருக்கிற மாதிரியான அநேக கட்சிகளெல்லாம் இல்லாத அந்த நேரத்தில் ஏகக் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோது பொதுக்கூட்டம் ஆரம்பிக்கும் முன்னாடியும் முடிஞ்ச பிறகும் வந்தே மாதம் சொல்கிறவர் இவர்தான். வேறு யாருக்கும் அந்த வாய்ப்பை இவர் தர விடறதில்லை. மற்ற ஆள்கள் பின் கோரஸ்தான் சொல்லணும்.

அப்படியாக வந்தே மாதரம் முழக்கத்தின் ஏக நாயகனாய் இருந்ததால் அந்த அடைமொழி அவருக்கு வாய்த்துப் போனதேயன்றி வேறில்லை. அதுபோக வந்தே மாதரம் சொல்லில் அவருக்கு பெரிய மயக்கம் ஒன்றும் கிடையாது. அது சொல்லும் போது மொத்தக் கூட்டமும் திரும்பச் சொல்றதனாலே ஏதோ அவர் பின்னாடி பெரும்படையே இருக்கிறதாய் நெனைப்பு.

இதே இடத்தில் முன்னாடி ஒரு ஆச்சியம்மாள் இட்லிக்கடை வைத்திருந்ததாகவும் அப்போது மாட்டு வண்டி வைத்து கடைகடைக்கு தண்ணி ஊத்திக் கொண்டிருந்த இளந்தாரி நல்லையா வயித்துப் பாட்டுக்காக விதவை ஆச்சியம்மாளை வைத்திருந்ததாகவும் இவரு வயசுப் பெரியவர்கள் இன்னும் சொல்லுவார்கள். பின்னாளில் ஆச்சியம்மாள் தான் ரொம்பவும் தவங்கிய காலத்தில் நல்லையாவின் சேவையை மெச்சி தானே ஒரு பெண் பார்த்து அவருக்கு கல்யாணம் பண்ணி வைத்ததாக அவரைப் பற்றியதான சித்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிற வேளையில் சமீபகாலமாக அவர் மனசிலிருந்த ஒரு ஆசை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

பல தடங்கல்களுக்குப் பின் அப்பொழுது நிகழ்ந்த சம்பவத்தாலே அவரது ஆசைக்கு முதல் வெற்றி கிட்டி கிட்டத்தட்ட அவரும் மகாத்மா, மனிதருள் மாணிக்கம், இரும்பு மனிதர் மாதிரியான அளவிற்கு உயர்ந்து போனதாய் ஓட்டலின் கல்லாப் பெட்டியின் முன்னே கால்களை ஆட்டிக் கொண்டு ரொம்ப பதவி சாய் வீற்றிருந்தார். சாப்பிட்ட பில்லுக்கு பணங்கொடுப்பவர்கள் ஒரு ரூபாய் ஐம்பது பைசா சில்லறை இல்லை என்று கைவிரிக்கும்போது வழக்கம்போல 'வள்’ளுன்னு விழுகாமல் 'பரவால்லே பரவால்லே நாளப்பின்னே வந்து ஞாபகமா கொடுங்க' என்று தாராளமாய் அன்றைக்கு நடந்து கொண்டார்.

பொக்கை வாய்க்கு மேலிருந்த நரைத்த மீசையை அடிக்கடி நீவி விட்டுக் கொண்டும், அணிந்திருந்த கதர் வேட்டி சட்டையில் தூசியை புறங்கையால் தட்டி விடுவதுமாக சந்தோச சாகரத்தில் மூழ்கித் திளைத்திருந்தார். ஓட்டல் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்த நேரம் போக கொஞ்சம் காத்தாடுகிற நேரம் -அதாவது காலை டிபன் முடிந்து மதிய சாப்பாட்டிற்கு தயாராகிற இடைப்பட்ட நேரத்தில் "காந்தி அரும்பாடுபட்டு வாங்கிக் கொடுத்த சுதந்திரம் இப்படி சீரழிஞ்சி சிந்தை குலைஞ்சி போச்சே" என்ற விசாரம் வந்து தொத்திக்கிடும். கல்லாவை விட்டு எழுந்து உடம்பை முறுக்கி 'வந்தே மாதரம்' என்ற முழக்கத்தோடு ஒரு கொட்டாவி விட்டு அலுப்போடு அலுப்பாய். இன்னைக்கிருக்கிற இளைய சமுதாயம் கெட்டுக்குட்டிச்சுவராப் போச்சு தேசம் நாசமாப்போச்சு. இதைத் தூக்கி நிறுத்தணும்னா நாம ஒவ்வொருத்தரும் எதோ ஒரு சீர்திருத்தம் நம்மாள முடிஞ்சதை பண்ணி ஆகணும்' என்று பிரசங்கிக்க ஆரம்பிச்சிருவார். கல்யாண பந்தியிலேயே பிள்ளையை வளக்க நெனைச்ச மாதிரி கல்லாப் பெட்டியைவிட்டு அசையாமலேயே சீர்திருத்தம் பண்ணுறதுதான் அவருள் எழுந்த விஸ்வரூப ஆசை.

அவரையொத்த வயசாளிகள் வசம் பேச்சுவார்த்தை வச்சுக்கிடமாட்டார். வயசுதான் ஆகுதேயொழிய ஒரு பயலும் பெரிய மனுசன் மாதிரி பேச மாட்டேன்கிறான் என்பது அவருடைய குற்றச்சாட்டு. பின்னென்ன மெனக்கிட்டு பழசை கிளறினா? "பேசுவாம் பேசுவாம் ஏன் சீர்திருத்தம் பேச மாட்டான். ஆச்சியம்மாளை ஆத்தின ஆத்து அவனை அப்படி பேச வக்கி. அந்த இளிச்ச வாச்சியும் போறேன் போறேன்னு இருப்புத் துட்டையும் கொடுத்து இப்படி மெயின்ல சரியான கடையையும் கொடுத்துட்டுப் போயிட்டா பின்னே பேசமாட்டாம் சீர்திருத்தம்?"

"கடைக்கு எதுத்தாப்புல சப்ரிஜிஸ்டர் ஆபீஸ். பின்னாடி டாஸ்மாக் கடை. எவரும் சுயபுத்தியோட சாப்புட வர்றதில்லே. இவன் வச்சதுதான் சாப்பாடு. சொன்னதுதான் பில்லு. பின்னே மகாத்மாவைப் பத்தி ஏன் பேசமாட்டான்? குடிச்சவன் எவனும் எங்கடைக்கு புரோட்டா சாப்புட வராதேன்னு சொல்லுமே பாப்பம். அதிலே தெரிஞ்சுபோகுமே ஒஞ்சீர்திருத்தம்".

இந்த எழவு பேச்சுகளுக்கு பயந்துதான் பேசாமல் கிடந்தார். என்ன வாயெடுக்க விடாமல் திண்டுக்கு முண்டு பேசினால்? அப்படி பேசும் பெரிசுகள் பெரும்பாலும் போய்ச் சேந்து போனாங்க. ஒவ்வொண்ணு அங்கொருத்தன் இங்கொருத்தன் நடமாட்டம் இல்லாம கிடக்கான். ஆனால், ஊருக்குள்ள நூத்துக்கு தொண்ணூறு இவருடைய வந்தே மாதரம் அடைமொழி வச்சி இவரை தேசிய பாரம்பரியம் கொண்டவராய்த்தான் நினைக்கிறார்கள். நேரு காலத்திலிருந்தே ரெண்டு குடும்பத்திற்கும் தபால் போக்குவரத்து உண்டும் என்ற வதந்தியும் உண்டு.

அப்படியான சேதி பரப்ப எப்படிக் கூடியாவது ஒரு அப்புராணியை பிடித்துப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். அவரு கொடுக்கற ஒரு கப் காபிக்காக அவர்களும் "ஒங்கள மாதிரி ரோசனையான மனுசர் மேலாவுள வரணும். தாயோளி அதிகாரத்தைக் கையிலயெடுத்து ஒவ்வொரு பயலையும் ஏன் எவடம்ன்னு சாரிக்காம தூக்கில போடணும். அதுக்கு நீங்கதான் பொருத்தமான ஆளு" என்று சொல்லும்போது அவருக்குப் பெருமைக்காலு தாங்க முடியாது. எது எப்படியிருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணுமேயொழிய கல்லாப்பெட்டியை விட்டு ஒரு இஞ்ச் நகரமாட்டார். அது கட்டுன பெண்டாட்டியா இருந்தாலுஞ்சரி; பெத்த பிள்ளைகளாயிருந்தாலுஞ்சரி கிட்டெ வரப்படாது; காசைத் தொடப்படாது. காந்தி மாதிரி நேரு மாதிரி பொதுச் சேவகம் பண்ணனும்னு பேச்சுத்தானேயொழிய கிளப்புக் கடை பொழப்பில் கறாராயிருப்பார்.

"இது கழுதை வெறும் வாய்தான் பேசுமேயொழிய சல்லிக்காசு பெறாது" என்ற நெனைப்போடு ஒரு கப் காபியை சாப்பிட்டு விட்டு ஆகா ஓகோவென்று அவரைப் பேசிப்போன எண்ணற்ற பேர்களில் இன்றைக்கு சிக்கியவர் பெருமாள்க் கோனார். காபியை சாப்பிட்ட உதட்டை நக்கியபடி அழுக்கு வேட்டியோடு மேல் துண்டு கூட இல்லாமல் கால்லாவிற்கு கீழே அண்ணாக்க பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். பிரசங்கம் நின்னபாடில்லை.

"எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான் ஒரு தடவை சுதந்திரப் போராட்டம் சம்பந்தமா விவாதிக்க காந்தியைப் பார்க்க வந்தார். எங்கே?.....?" இடையில் சாப்பிட்டு வந்தவரிடம் பில்லுக்கு பணம் வாங்கி மீதிச் சில்லறையை கொடுத்துவிட்டு தொடர்ந்தார்.

"எங்கே... எங்கேன்னா.... இது .... பிர்லா மாளிகைக்கு."

-பேச்சு பேச்சானாலும் உட்கார்ந்து சாப்பிடும் ஆள்களையும் சர்வர்களையும் உள்ளே வேலையாட்களின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டும் பேச்சை இழுத்து இழுத்து தொடர்ந்தார்.

"யாரு வந்தாகன்னு சொன்னேன்?"

"நா என்னத்தக் கண்டேன் எனக்கு இதான் சோலி மயிரா பேரு வாயில நுழையிற மாதிரியா சொன்னீரு" என்று நினைத்த பெருமாள் கோனார் காபியை ஏண்டா சாப்பிட்டோம்ன்னு மூஞ்சியை அழாத குறையா வச்சிருந்தார்.

நல்லைய நாயக்கர் இவரிடம் தலையை ஆட்டி ஆட்டி 'யாரு யாரு' என்று கேட்டபடி இருந்தார். பேரைச் சொல்லாம மனுசர் விடமாட்டார் போலுக்கே என்று அப்படியொரு பேரையே அதுவரை கேட்டறியாத பெருமாள்கோனார். மூக்கிலே விரலை வைத்தபடி யோசிக்ககிறமாதிரி' ஞூம்... ஞாபகம் வர மாட்டேங்குதே... ம்... இவரு..." என்று தெரிந்த மாதிரி ஆரம்பிக்க நல்லையநாயக்கர் 'கான் அப்துல் கபார்கான்' என்றதும் "ஆங்" என்று ஞாபகம் வந்த மாதிரி தலையை ஆட்டி இசை சேர்ந்தார்.

பெருமாள்க்கோனார் பால்மாடுகள் வைத்திருக்கும் பெரிய பெரிய வீடுகளில் போய் இரண்டு வேளையும் பால் கறந்து கொடுத்துவிட்டு அதிலே கிடைக்கிற வரும்படியைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். எப்பவும் போல அன்றைக்கும் காலையில் மூன்று மணிக்குப் போனவர் ஆறு மணிக்கெல்லாம் கறவையை முடித்துவிட்டு ரோட்டு வழியாய் 'சிவனே' என்றுதான் போய்க் கொண்டிருந்தார். சனியன் கணக்கா 'வந்தே மாதரம்' என்கிற சத்தங்கேட்டு திரும்பிப் பார்த்ததுதான் தப்பு மணி பத்து சொச்சமாச்சு விடுற பாட்டைக் காணோம்.

பெருமாள்க்கோனாரின் முகக்குறியிலே அவரது விடுதலை வேட்கையை அவதானித்த நல்லைய நாயக்கர் அவர் தப்பிவிடாதபடிக்கு "சரி சரி பொதுவா இன்னைக்கிருக்கிற நிலைமையைப் பத்தி ஒம்ம அபிப்ராயம் என்ன?" என்று பேச்சின் தரத்தை கொஞ்சம் இறக்கினார். வெட்டியா அது சூத்தை இது சூத்தை என்று ஏன் பேச்சை வளப்பானேன் என்று நினைத்த கோனாரும் எழுந்திருச்சு வேட்டியை இழுத்து கட்டுன மட்டுல 'மொதலாளிக்கு தெரியாததா எங்கூட்டாளிக்கு தெரியப்போகுது' என்று அந்த சாக்கில் கிளம்பாலானர்.

"சொல்றதைக் கேளுமய்யா அதாவது...." என்று பேச்சால் கிட்டி போட்ட முதலாளி "வருங்கால சமுதாயம் தற்சார்புல பலமான பொருளாதார பலத்தோட இருக்கணும்னு காந்தி விடுதலை வாங்கிக் கொடுத்தார்" என்று வளைத்து பிடித்துக் கொண்டிருக்கும்போதுதான் சர்வர் ஒரு ஆறு வயசுப் பையனை இழுத்துக் கொண்டு வந்தான்.

"முதலாளி இந்தப் பய மூணு இட்லி சாப்புட்டான். பில் கொடுத்தா துட்டு இல்லே வீட்டை விட்டு கோவிச்சிட்டு வந்தேட்டேன்கிறான்" என்று விட்டு விட்டுப்போனான்.

"ஏண்டா எவ்வளவு தைரியமிருந்தா இந்த வயசுல துணிச்சலா துட்டு இல்லாம சாப்பிட உக்காருவே" என்று பையனின் ரெண்டு கைகளையும், பின்புறமாய் கட்டிய முதலாளி "யோவ் கோனாரே பார்த்தீரா இளைய சந்ததிகள் எப்படி கெட்டுப்போச்சுன்னு. விடப்படாதுயா இவனை இப்படியே விட்டுட்டோமுன்னா இவன்தான் தீவிரவாதியாகிறான். பிற்காலத்துல சமூக விரோதியாகி குண்டும் வைப்பானுக ராஸ்கோல்ஸ்."

கோனாருக்கு பயலைப் பார்க்க ரொம்ப பரிதாபமாய் இருந்தது. "ஆமாமா ஆஸ்பத்திரி வில்லை போல இளைச்சி போயிருக்கிற இந்த மூணு இட்லியை சாப்புட்டவன் ஓடோடி குண்டு வெப்பான்" என்று மனசுல நெனைத்த கோனாரை "என்னய்யா யோசனை? வாருமய்யா இவனை போலீஸ்ல ஒப்படைச்சிருவோம் பாவம் பாக்கக் கூடாது' என்று கல்லாவை விட்டு எழுந்து அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது என்று பையனை இழுத்துக் கொண்டு போனார்.

ரோட்டை தாண்டியதும் சப் ரிஜிஸ்டர் ஆபீஸையொட்டி போலீஸ் ஸ்டேசன். 'வந்தே மாதரம்' என்ற சத்தத்தைக் கேட்டு எழுதிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஏறிட்டுப் பார்த்தார்.

"ஐயா நமஸ்காரம். அடியேன் எதுத்தாப்புலத்தான் ஓட்டல் வச்சிருக்கேன். நான் கடந்த நாற்பது வருசமா காந்தி சேவா தள தொண்டனாயிருக்கேன். (அப்படியொரு அமைப்பை மனசுக்குள்ளே வச்சிருக்கார்) இந்தப் பையன் பாருங்க வயசு எவ்வளவு காணும்? சாப்பிட்டுட்டு நெஞ்சை நிமித்தி துட்டு இல்லேங்கிறான். இப்பவே இப்படி பண்றவன் வருங்காலத்துல சட்டவிரோத சமூக விரோத....

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்".........................."

அந்த மட்டுல நிறுத்துமய்யா பேச்சை! என்பது மாதிரி எழுதிக் கொண்டிருந்த பேனாக் கையை அவர் முகத்துக்கு நேரே நீட்டி ஆட்டிய இன்ஸ்பெக்டர் சிறுவனைப் பார்த்து 'அங்கே போய் உட்காருடா" என்று உள்ளே கைகாட்டி அடுத்த ஜோரில் இந்த ரெண்டு பேரையும் பார்த்து 'நல்லது' என்று சொல்லியவாறு வெளியேறச் சொல்லி கையை வாசல் பக்கமாய் நீட்டினார்.

வாயை ரெண்டு முறை மென்று விழுங்கிய நல்லைய நாயக்கர் அடுத்தாற்போல் எதுவும் பேச வழியில்லாமல் இந்த வந்தேமாதரம் சவுண்டுக்கு எவ்வளவு நாள் சர்வீஸு. கொஞ்சங்கூட தாட்சண்யம் காட்டலையே இந்த மனுசன் என்று நினைத்தவாறு பெருமாள்க் கோனாரை முன்னால தள்ளி அதிகாரியைப் பார்த்து இறங்கு சுதியில் வ..ந்...தே...மா...த...ர..ம் என்று தொண்டை பிசிறடிக்க அரைக் கும்பிடு போட்டுக் கொண்டே போனார்.

"நல்லா வேணும் கிழவனுக்கு என்னைக் கேட்டா லத்தியாலெ ரெண்டு குடுப்பு குடுத்திருக்கணும்" என்ற பெருமாள் கோனாரின் எண்ணத்தை புரிந்து கொண்ட மாதிரி நல்லைய நாயக்கர், "அட அவங்க அப்படித் தானய்யா இருப்பாங்க. மகாத்மாவே அந்தக் காலத்துல போலீஸ்காரங்களை வாங்குற சம்பளத்துக்கு வஞ்சனையில்லாம வெள்ளைக்காரனுக்கு விசுவாசமா சொந்த தாய்பிள்ளையா இருந்தாலும் சரி தொளிச்சியெடுக்கணும்னு கறாராச் சொல்லிருக்காரு" என்று பெருமாள் கோனாரிடம் தன் கித்தாப்பு விடாமல் பேசினார்.

ஸ்டேசனிலிருந்து வந்து கல்லாவில் உட்கார்ந்ததும் அவர் கம்பீரம் கூடிப்போச்சு. 'இப்படித்தான்யா மொதல்ல தனிமனிதனை திருத்தணும். பிறகு சமூகத்தை திருத்தணும். அடுத்து நாட்டைத் திருத்தணும். பிறகு உலகத்தை திருத்தணும் என்று பேச்சு பேச்சாய் பேசி பெருமாள்க்கோனாரை பிடித்த முதலைப் பிடி இன்னும் இறுகியது.

கடைச் சிப்பந்திகள் எல்லாரையும் வேணுங்கிற பலகாரம் சாப்பிடுங்கப்பா என்றார். ஏற்கெனவே அவர் இன்றைக்கு கிளுகிளுப்பாய் இருப்பதைப் பார்த்து சந்தேகத்தோடு இருந்த வேலையாட்கள் இந்த வார்த்தையைக் கேட்டு முடிவு செய்துவிட்டார்கள். ஓனருக்கு எதோ லூசு மாதிரி ஆகிப்போச்சு!

முதல் நாள் மீந்து போன சோறை தண்ணி ஊற்றி வைத்த பழசுதான் மறுநாள் காலையில் சுட வச்ச சாம்பாரோடு எல்லாருக்கும் சாப்பாடு. சோறு மிச்சமாகவில்லையென்றால் இட்லி சாம்பார் கிடைக்கும். எண்ணெயில் பட்ட வடை, பூரி,தோசை, புரோட்டா ஆகிய பலகாரங்கள் யாரும் சாப்பிடக் கூடாது என்பது கம்பெனியின் கறாரான சட்டம்.

மதியம் சாதம், ரசம், மோர், ஊறுகாய், அவ்வளவுதான். பொரியல், அப்பளம், மட்டன், ஆம்லேட் எல்லாம் தீபாவளி அன்று லீவு போடாமல் இருந்தால் சாப்பிடலாம். இந்த உத்தரவை இதுவரைக்கும் யாரும் மீறினது இல்லை.

ஒவ்வொரு நாள் மீதம் விழுந்து விட்டால் சாப்பிடச் சொல்லி வந்தே மாதரம் கெஞ்சத்தான் செய்வார். நம்பி அந்த அயிட்டங்களை சாப்பிட்டானோ சம்பளம் வாங்கின மாதிரிதான். ஆகவே அவர் போட்ட உத்தரவு அமுலாவதில் பெரிய தேக்கங்கண்டிருந்தது.

நல்லைய நாயக்கர் அன்றைக்கு எத்தனை பேர்கிட்டெதான் தான் செய்த அந்த அசாசாய சூரத்தன சீர்திருத்தத்தை சொல்லி பெருமை கொழிப்பாரோ ஒரு வழியாய் அவரது வந்தே மாதரம் ஆந்த நேரம்பார்த்து பெருமாள்க்கோனார் பராக்கு பார்க்கிற சாடையில் சுவரோரமாகவே பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு கொஞ்சங்கொஞ்சமாய் வெளியேறி ரோட்டுக்கு வந்துவிட்டார்.

அவ்வளவுதான் நாலுகால் பாய்ச்சலில் எட்டுக்களை எடுத்துப்போட்டார். இனிம்மேல் பிறந்தாம் பிறப்புக்கு இந்த திசைக் கிடைக்கே வரப்படாது. தொலைஞ்சது சனியன் என்று தப்பித்த வேளையில் எதிர்த்தாற்போல அவரை கைதட்டி கூப்பிடும் சத்தங்கேட்டு திரும்பிப் பார்த்தார். ஸ்டேசனுக்கு வெளியே ரெண்டு போலீசாரோடு இன்ஸ்பெக்டர் நின்று கொண்டிருந்தார்.

"வாருமய்யா" என்று போலீஸ்காரர்கள் கையை ஆட்டி கூப்பிட இன்ஸ்பெக்டர் விறைத்த மட்டில் புறங்கையை கட்டியவாறு இவரைப் பார்த்தபடி நின்றிருந்தார். "இதென்ன கூத்து" என்று மொணகிய பெருமாள்க்கோனார் ரெண்டு பக்கமும் போக்குவரத்தை பார்த்தபடி ரோட்டை கிராஸ் பண்ணிப்போய் இன்ஸ்பெக்டரிடம் கைகட்டி நின்றார்.

"எங்கேய்யா உன் முதலாளி?"

"யாரு கடைக்காரரா கடையில இருக்காரு ஐயா"

"அவம்பாட்டுல பையனை விட்டுட்டு மயிர் போச்சுன்னு போயிட்டான். அவனுக்கு மதியச் சாப்பாடு அவன் அப்பனா வந்து கொடுப்பான்? .... ம்... போயி சாப்பாடு கொண்டு வரச் சொல்லி நான் சொன்னேன்னு உடனே வரச் சொல்லும். நாட்டை சீர்திருத்தம் பண்றதுன்னா என்ன சும்மான்னு நெனைச்சிட்டு திரியுறானா கிழவன்? பெருமாள்க்கோனாருக்கு பெரிய சங்கட்டமாப்போச்சு. இதென்னடா துன்பம் இந்த இழவு பஞ்சாயத்துல கடைசியா நாம வீட்டுக்குப் போக முடியலையே. அந்த மண்ணெளிப் பாம்புக்கு தப்பி மலைப்பாம்பு வாயில சிக்கிக்கிட்டமே சே! பெரிய சீரழிவா இருக்கே என்று நினைத்து.

இந்தா போய் தாக்கல் சொல்லி உடனே கொண்டு வரச் சொல்லிர்றேன் துரை" என்று கும்பிடு போட்டுவிட்டு ஓட்டலுக்கு திரும்பவும் நடையைக் கட்டினார்.

"சோறு கொஞ்சம் கணிசமாவே வேணுமின்னு சொல்லும். கூட இன்னும் ரெண்டு மூணு கைதியிருக்கான்" என்றார் பக்கத்திலிருந்த போலீஸு.

மதியச் சாப்பாடு வியாபாரத்தில் மும்முரமாயிருந்தார் நல்லைய நாயக்கர். வியாபாரத்தோடு வியாபாரமாய் பக்கத்திலிருந்த ஒரு பெரியவரிடம் "பையனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைப்பாங்க. என் மூலமா பின்னாலே அவன் வாழ்க்கையில ஒரு திருப்புமுனை ஏற்படும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

"முதலாளி ஸ்டேசன்ல கொண்டு போய் விட்டமே அந்தப் பையனுக்கு மத்தியான சாப்பாடு கொண்டு வரணுமாம் இன்ஸ்பெக்டர் சத்தம் போடுறாரு"

"எது.. எது.. சாப்பாடா?"

கொஞ்ச நேரம் பில் வாங்குவதை நிறுத்தி பெருமாள்க்கோனாரை முறைத்துப் பார்த்து "என்னய்யா சொல்றீரு" என்று எரிச்சலோடு மீண்டும் தொழில் மும்முரமானார்.

"கூட ரெண்டு மூணு டிக்கட்டுக்கு சேத்து கணிசமா கொண்டு வர சொல்லியிருக்காரு"

"அது சரி. ஙேஹே... இதுலே அதுவேறயா... ஒருத்தன் துட்டு இல்லாம சாப்புட்டான்னு கொண்டு போய் ஸ்டேசன்ல விட்டா இன்னும் அவனுக்கு மதிய விருந்து வேறயா, நாடு மயிர்களை புடுங்குன மாதிரி உருப்பட்டுரும். ஒரு போலீஸ் அதிகாரி இப்படியிருந்தா பிறகு எவன்யா பொதுச்சோலி சீர்திருத்தம்னு இறங்குவான்?"

"அதெல்லாம் நான் சொல்லத்தான் செய்தேன். அவரு ஒரேயடியா ஒம் முதலாளி சீர்திருத்தத்துலெ கழுதையை விட்டுக் கிடாவு. சொன்னதைச் செய்யுடா சிரிக்கிபிள்ளே" அப்படீன்னு ஆளுயர கம்பைத் தூக்கிட்டு அடிக்க ஓடியாராரு என்று எரிச்சலில் கோனார் கொழவினார்.

"அதான்யா மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கும்போது...."

"அப்பொ முடியாதுன்னுட்டார்ன்னு சொல்லிர்றேன்." பெருமாள்கோனார் வேகமாய் கிளம்பினார். அப்படிச் சொல்லிவிட்டு அந்த வாக்கில் வீட்டுக்கு ஓடிப்போய் விடலாம் என்று அவரின் அவசரம். நல்லைய நாயக்கர் பதறி ஓடிவந்து அவரை மறித்தார். "நில்லுமய்யா ஓய்! நீரு போற போக்கைப் பாத்தா என்னைக் கொண்டுபோய் ஸ்டேசன்ல உட்கார வச்சிருவீரு போலுக்கோ. சரியய்யா ஒம்ம இஷ்டம் போல நீரே வேணுங்கிறதை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாரும் புண்ணியத்துக்கு."

"சேச்சே.. சே.... ஒரு மடக்கு காபித்தண்ணிய வாயில ஊத்தப்போயி எவ்வளவு இக்கல்ல தலையக் கொடுத்துட்டோமே..."

தலைச்சுமையாய்க் கொண்டு போய் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு வந்து ஓட்டலின் முன் வேப்ப மரத்தடியில் நின்றார். இவ்வளவு நேரத்திற்குப் பிறகு வீடு போயி திரும்பவும் எப்படி சாயுந்தேறக் கறவைக்குப் போறது என்ற யோசனையிலிருந்தார்.

தேவையில்லாத கை நட்டம் ஆனதினாலே நல்லைய நாயக்கர், கோனாரைத் திரும்பியே பார்க்கவில்லை. இவ்வளவுக்கும் என்னமோ அவருதான் காரணம் என்கிற மாதிரி அவரைப் பார்க்கவே எரிச்சல் பட்டுப் போயிருந்தார்.

அவரோ வந்தே மாதரம் தன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டாரா என்று வெளியிலிருந்து மாறி மாறிப் பார்த்தமட்டில் இருந்தார். ஏன் பார்க்கிறார் என்று அவருக்குத் தெரியாமலா இருக்கும். இன்னும் இவன் குறை வேறயா என்று முகத்தை உள்பக்கமாகவே வைத்துக் கொண்டார். பெருமாள் கோனாருக்கு இந்தப்பசியெல்லாம் ஒண்ணும் பெரிசு கிடையாது. அவருக்குச் சிறிசிலிருந்தே பழகிப் போனதுதான். நேரமாய்க் கொண்டிருந்தது. நிழலோட்டமாய் உட்கார்ந்திருந்த இடத்திலும் வெயில் பரவியது. சரி பொழுது மேற்கே சாய்ஞ்சிருச்சி போயி சாயுந்தறக் கறவையை முடிச்சிட்டு வீட்டுக்குப் போக வேண்டியதான் என்று நினைத்தவாறு மேற்குப் பக்கம் பொழுதைப் பார்த்ததுதான் தாம்சம்.

இன்ஸ்பெக்டர் ஸ்டேசனிலிருந்து வெள்ளை டவலால் வீசி வருமாறு கூப்பிட்டார். ஐயையே இதுவும் தொறட்டுதான். இன்னும் விட்டபாடியில்லையோ! சே....சே! பெருமாள்கோனார் ரோட்டை கிராஸ் செய்யும்போது அப்பொ மாதிரி அவ்வளவா போக்குவரத்து இல்லை. மணி மூணுக்கு மேலே இருக்கும். எல்லாம் சாப்பிட்டு அப்படியப்படி அசர்ற நேரம். யாரு அசந்து என்ன செய்ய, இன்ஸ்பெக்டர் அசரலையே.

"என்னங்குறான் ஒம் முதலாளி!"

நாலு விரலுக்குள் பெருவிரலை மடக்கிக் காட்டி 'இம்புட்டு சோறு போட்டா ஆகிப் போச்சா! பயலை ஊருக்கு அனுப்ப வேண்டாமா... யோவ்... காதுல விழுகுதா? பெருமாள் கோனார் தலையைச் சொறிந்து கொண்டு நின்றார். அந்நேரம் பார்த்து கடைக்கு முன்னால் கோனார் இல்லாததால் அவர் போய் விட்டாராக்கும். இத்தோடு முடிந்தது தொல்லை என்று வெளியே லாந்திய நல்லைய நாயக்கர் அப்பாடா இத்தோட பிரச்சனை முடிஞ்சது என்ற நெனைப்பில் உள்ளே திரும்பிய பொழுது தற்செயலாய் ஸ்டேசனை கவனித்தார்.

"யோவ் அந்தா நிக்கிறான்யா கடைக்காரன். கூப்பிடுய்யா கூப்பிடுய்யா" இன்ஸ்பெக்டர் அவசரப்படுத்த கோனாருக்கு வீசிக் கூப்பிட துண்டு இல்லாததால் வெறுங்கையை வீசி "முதலாளியோவ் முதலாளியோவ்" என்று கூப்பிட்டவாறு ஓடினார்.

நல்லைய நாயக்கர் சத்தத்தைக் கேட்டு நெஞ்சுபடபடக்க காது கேளாத மாதிரி எங்கோ பார்த்தமட்டில் கடைக்குள் ஓடினார். கோனாரும் விடவில்லை. 'முனியாண்டி வங்கணம் வைக்க முனிசிபாலிட்டி தெண்டம் கட்டுன மாதிரி' சம்மந்தா சம்மந்தமில்லாம நம்மளை போட்டு சீவனை வாங்குறாங்களே என்று ஆத்திரத்தில் நல்லைய நாயக்கரிடம் போய் இவர் இன்ஸ்பெக்டர் மாதிரி பேச ஆரம்பித்தார்.

"நாலு சோத்து பருக்கைய போட்டா சரியாப்போச்சா. அந்தப் பையனை ஊருக்கு அனுப்பி வைக்கணும் செய்யணுமின்னு நெனைப்பில்லையா" நல்லைய நாயக்கர் அப்படியே விருள் தட்டிப்போய் நின்றார். ஒண்ணும் சொல்ல தோணாமல் 'ஙே'... என்றார்.

"என்ன ஓ...." என்று கோனார் வலிப்பம் காட்டினார்.

"யோவ் கோனாரே! ஓகோ அப்படியா சரி சரி; இன்ஸ்பெக்டர் சொன்னாரா இல்லே பூராம் ஒம்ம வேலையா.. அதான்யா காந்தி அன்னக்கி சொன்னது இப்பொ சரியா நடக்குது...."

"அப்பொ சரி உங்க சௌகரியம் எனக்கு மாடு கன்னு சோலின்னு அப்படியப்படி கிடக்கு. உங்க பாடு அவங்கபாடு எனக்குத் தேவை?" விறுவிறுவென வெளியேறிய கோனாரை தொடர்ந்து விரட்டிப் போய், நில்லுமுய்யா நில்லுமுய்யா என்று ஸ்டேசனுக்கு அவருக்கு முன்னாடி ஓடி அவரை இன்ஸ்பெக்டரிடத்தில் பேச விடாமல் நின்று கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு வெறும் நமஸ்காரம் மட்டும்தான் பண்ணினார். எதுக்கு வம்பு வந்தே மாதரம் என்று சவுண்டு கொடுக்க, இவனுக்கு இன்னும் அகம்பாவம் குறையலேன்னு இருக்கிற ஆளை எண்ணி தலைக்கு அஞ்சு அஞ்சு புரோட்டா பார்சல் கொண்டு வாணுட்டா! வந்தே மாதரத்தைப் பார்த்து "என்ன!" என்று இன்ஸ்பெக்டர் தலையை ஒணான் மாதிரி ஆட்டுனார்.

"ஐயா சொன்னா சரிதான்." பொலுவாயைத் திறந்து பொய்யாய்ச் சிரித்தார். இன்ஸ்பெக்டர் உள்ளே திரும்பி "அந்தப் பையனை வரச் சொல்லுங்க ஏட்டையா" என்றதும் பையன் கைகளைக் கட்டியவாறு வந்து நின்றான்.

"எந்த ஊர்ரா உனக்கு?"

"சிறுக்குளம்"

இன்ஸ்பெக்டர் நல்லையநாயக்கரைப் பார்த்து, "கேட்டுக்கிட்டீரா கூட ஒரு ஆளை அனுப்பி பஸ் சார்ஜ் கொடுத்து பத்திரமா அவன் வீட்டுல கொண்டு போய் சேக்கணும்...ம்....."

"ஐயா பஸ் சார்ஜ் கொடுத்து பஸ்ஸுல பத்திரமா ஏத்தி விட்டுறச் சொல்லிர்றேன். ஊர்லருந்து வந்த பயலுக்கு திரும்பி போகவா தெரியாது"

"அந்த வேலை மயிரே வேண்டாம். அவன் பாட்டுல பழையபடி எங்கேயாவது இடைவழியில் இறங்கிடுவான். ஏதாவது ஒண்ணுன்னா எவன் பதில் சொல்றது. உம்மைக்கேட்டா ஸ்டேசன்ல விட்டேன்னு வாக்குமூலம் கொடுப்பீரு. இப்பொ மூலை மூலைக்கி பெரிய பெரிய பாலங்கள் கட்டுறான். எவனுங்கொண்டு போயி பயலை நரபலி கொடுத்துட்டான்னா?நானில்லே ஜவாப்தாரி ஆகணும். அதனால ஒம்ம கடையில உள்ள ஒரு ஆளை அனுப்பி இல்லேன்னா நீரே கூட போயி விட்டுட்டு வீட்டு நபர் கிட்டே எழுதி வாங்கி வந்து எங்கிட்டெ காட்டணும்" நல்லைய நாயக்கர் இன்ஸ்பெக்டர் தலைக்கு மேலிருந்த காந்தி படத்தை பார்த்த மட்டுல இருந்தார்.

"என்னய்யா சொல்றது விளங்குதா?"

"ஹ்ர்ம்ம்... என்று செருமிய வந்தே மாதரம் நல்லைய நாயக்கர்!" அதாவது இளவயதிலேயே ஒழுக்கம், வாய்மை, பெரியாரைக் கீழ்படிதல் இதுபத்தியெல்லாம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி...."

"அப்பொ சரி ஒண்ணும் செய்யும்வே. லாட்ஜுல ஒரு ரூம் போட்டு பையனுக்கு இந்த உபதேசம் பண்ணிக்கிட்டிரும். நான் ஒரு வாரம் லீவுல போறேன். வந்து பேசிக்கிடலாம்."

"இல்லேய்யா இல்லே இல்லே இந்தாபோயி ஆளை அனுப்புறேன். பையனை இப்பொ அனுப்பி வச்சிரலாம்."

வந்தே மாதரம் இன்ஸ்பெக்டரை நமஸ்காரம் பண்ணிக் கொண்டு வேகமாய் கிளம்பினார். அவர் போவதை பெருமாள்க்கோனாரிடம் நாடியால் வெட்டிக்காட்டிய இன்ஸ்பெக்டர், "அன்னைக்கொருநா இவங்கடையில சுக்காவருவல் வாங்கிட்டு வரச் சொன்னேன். இம்புட்டுக்காணு சால்னா ஊத்திக் கொடுத்துப்புட்டு இருபத்தஞ்சு ரூபா வாங்கிப் புட்டான். எப்படா வந்து வாய்ப்பான்னு இருந்தேன். மகனே இப்பொ வந்து சிக்கீட்டியில்லே விடிஞ்சு போச்சா உனக்கு இப்பொதானே ஆரம்பிச்சிருக்கேன் இன்னும் பாரு வேடிக்கையை" என்று நாக்கை துருத்தினார்.கோனாருக்கு கறவை ஞாபகமாகவே இருந்தது.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com