Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஜனவரி 2009
முற்போக்காளர் படைப்புகளுக்கே முதல் முக்கியத்துவம் தரும் நிலையை உருவாக்குவோம்!
அருணன்

சென்னையில் டிசம்பர் 18 முதல் 21 வரை நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாட்டில் அதன் மாநிலத் தலைவர் அருணன் ஆற்றிய உரை:

இந்தச் சிறப்பான மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ள அறிஞர் பெருமக்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, மாநாட்டுப் பிரதிநிதிகளே, கலை-இலக்கிய அன்பர்களே, ஊடக நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு முடிந்து போனது என்று ஒருவர் நூல் எழுதினார். அதாவது, தற்போது நிலவும் சமுதாய அமைப்பே மனிதகுலத்தின் உச்சகட்ட வளர்ச்சி என்பதாகக் கூறினார். சமுதாய மாற்றம் முடிந்து போனதாகவும், சமுதாய இயங்குதலுக்குச் சுபமங்களம் பாடப்பட்டுவிட்டதாகவும் ஓங்கி அறிவித்தார். ஆனால் என்னாயிற்று? 1930களுக்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியைத் தற்போது உலகம் சந்தித்துக் கொண்டேயிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் எல்லாம் கூறுகிறார்கள். மாற்று என்னவென்று அவர்களில் பலர் மார்க்சைத் தேடிப் படிக்கிறார்கள். இந்தப் பொருளாதார மந்த காலத்தில் மார்க்சின் நூல்களுக்கு மட்டும் நல்ல சந்தை இருக்கிறது. மாற்றம் தவிர மாறாதது ஏதுமில்லை என்கிற மகா வாக்கியமே விஞ்சி நிற்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பல கோடி வெடிகுண்டுகள் இருக்கலாம். ஆனால், அவை ஒரு ஜோடி செருப்புக்கு ஈடாகாது என்பதை ஒரு ஈராக் பத்திரிகையாளர் நிரூபித்துவிட்டார். அமெரிக்க அரசு செய்த ஒரு தவறுக்காக அதன் அதிபர் இருமுறை தலைகுனிய வேண்டி வந்தது கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். மனிதநேயம் உள்ள சமத்துவத்தை வேண்டுகிற அனைவரது உள்ளத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருக்கிறது.

அதிலும் எங்கு திரும்பினாலும் அசமத்துவமும், அதிருப்தியும் நிலவுகிற நமது நாட்டில் சமத்துவத்துக்கான ஏக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. கல்விக்கூடக் கடைச்சரக்காகிப் போனது. சரஸ்வதி தேவி மகாலெட்சுமியிடம் கைகட்டிச் சேவகம் செய்கிறாள். எங்கு நோக்கினும் பொருளாதார அராஜகம் தாண்டவமாடுகிறது. சகலத்தையும் திறந்து விடுவோம் என்றார்கள். கதவுகள் அகலத் திறந்தன. கணக்குப் பார்த்தால் வந்ததைவிடப் போனது அதிகம். மிஞ்சியது என்னவோ வேலை வெட்டும். பங்குச்சந்தை மிரட்டலும். தனியார் துறையில் யாருக்கு எப்போது வேலை போகும் என்று யாருக்கும் தெரியவில்லை. நிரந்தரப் பதட்டத்தில் தொழிலாளி வர்க்கமும், மத்திய தர வர்க்கத்தாரும் இருத்தப்பட்டிருக்கிறார்கள். வீரமிக்க விவசாயிகள் கூடத் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் மனிதர்கள் மத்தியில் மனஇறுக்கமும், மனோ வியாதியும் எவ்வளவு தூரம் அதிகரித்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தச் சூழலில் தம் சொந்த மக்கள் மீது அன்பு கொண்ட, அவர்களுக்காகப் பொருளாதாரத்தைக் கையாளுகிற அரசாங்கத்தையே தேசம் எதிர்பார்க்கும். "கஜானா நிரம்புவதைவிட மக்களின் வயிறு நிரம்புவது நல்லது. இதயம் வறண்டு போவதைவிட வெற்று மார்பு நல்லது" என்று பாடினான். 14ஆம் நூற்றாண்டு இஸ்லாமிய கவிஞன் ஒருவன். மார்பிலே ஆடம்பரமான ஆடை ஆபரணங்களை அணிய ஆசைப்படுவதைவிட ஏழைகளின் பால் தனது இதயத்தில் கருணை சுரக்க வேண்டும் என நினைக்கிற ராஜாவுக்காக அந்தக் கவிஞன் ஏங்கினான். விமான எரிபொருள் விலையைச் சட்டென்று குறைக்கிற அரசுக்கு பேருந்துக்கான டீசல் விலையைக் குறைக்க அப்படி உடனே மனம் வரவில்லை. ஒன்றுபட்ட உழைப்பாளி மக்களின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்க வேண்டியிருக்கிறது.

தாகூரும் -கபீரும்

இத்தகைய ஓங்கார நாதம் எழுந்துவிடக்கூடாது என்று உழைப்பாளர்களை திசை திருப்ப மதவெறி கிளப்பப்படுகிறது. கடவுளின் பெயரால் மக்களை விறகுக் கட்டைகளாய்ப் பிளக்கிறார்கள். இது இன்று நேற்றாய் நடக்கவில்லை. காலங்காலமாய் நடக்கிறது. இது கண்டு துடித்து ரத்தக்கண்ணீர் வடித்த கவிஞர்கள் அன்றும் உண்டு. "கபீரின் ஒரு நூறு கவிதைகள்" என்று அந்த 15ஆம் நூற்றாண்டு கவிஞானியின் படைப்புகளை 20ஆம் நூற்றாண்டு ரவீந்திரநாத் தாகூர் மொழி பெயர்த்தார். இந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்காகக் குரல் கொடுத்தவர் கபீர்.

"கடவுள் மசூதிக்குள் இருந்தால், பிறகு மற்ற இடங்கள் யாருக்குச் சொந்தம்? உனது யாத்திரையில் நீ தரிசித்த விக்ரகத்திற்குள் ராமன் இருந்தால், வேறு இடங்களில் நீ அறிவதற்கு யார் உள்ளார்? ஹரி கிழக்கே உள்ளார். அல்லா மேற்கே உள்ளார். உனது இதயத்திற்குள் எட்டிப்பார் அங்கே கரீம், ராம் இருவரையும் காண்பாய். உலகத்தின் அனைத்து ஆண்களும், பெண்களும் இறைவனது வாழும் வடிவங்கள். கபீர் அல்லாவின் குழந்தை, ராமின் குழந்தை. அவனே எனது குரு அவனே எனது பிர்" - இப்படிப் பாடியவர் கபீர்.

கபீருக்கு சீடர்களாக, பக்தர்களாக இந்துக்களும் இருந்தார்கள். முஸ்லிம்களும் இருந்தார்கள். பரந்த மனப்பான்மையின் மூலம் மக்களை ஒன்றுபடுத்த தனது கவிதா ஆற்றலைப் பயன்படுத்தினார். சோகம் என்னவென்றால் அதிலே அவரால் முழு வெற்றி பெற முடியவில்லை. அவரது மரணத்திற்கு பிறகு அவரது உடலை என்ன செய்வது என்பதில் பிரச்சனை எழுந்தது. அவரின் இந்து பக்தர்கள் எரிக்க வேண்டும் என்றார்கள். முஸ்லிம் பக்தர்கள் புதைக்க வேண்டும் என்றார்கள். அவரது உடலை மூடியிருந்த துணியை எடுத்துப் பார்த்தார்கள். அங்கே பூக்களின் குவியல் மட்டுமே இருந்தது. அதில் பாதியை எடுத்துக் கொண்ட இந்துக்கள் எரித்தார்கள். முஸ்லிம்கள் புதைத்தார்கள். பூக்களையும் விடவில்லை!

ஆம்! இந்தப் புண்ணிய பூமியில் பூக்களும் கருக்கப்பட்டன அல்லது புதைக்கப்பட்டன. மதங்களின் பெயரால் வெறி கிளப்பப்பட்டுவிட்டால் அதை அணைப்பது எவ்வளவு கடினம் என்பதைத்தான் வரலாறுபோதிக்கிறது. அதையும் கற்றுக் கொண்டு வரலாறு முன்னேறுகிறது. "ஒரு மனிதன் நிறைய நூல்களைப் படித்திருந்தாலும் எவன் பண்டிதன் ஆக மாட்டான். அன்பு எனும் இரண்டரை எழுத்துக்களை அவன் கற்றுக்கொண்டிருக்கிறானோ அவனே பண்டிதன்" என்று சொன்ன கபீர் இன்றும் நினைக்கப்படுகிறார், காலந்தோறும் கபீர்கள் பிறந்த வண்ணம் இருக்கிறார்கள்.

மதவெறியின் பக்கவிளைவாகவே பயங்கரவாதம் எழுகிறது. சமணர்களின் ரத்தத்தை ருசிபார்த்த கழுமரங்கள் இப்போதும் சிற்பங்களாக, ஓவியங்களாக, புராண எழுத்துக்களாக நின்று பழைய காலத்தை நினைவுபடுத்துகின்றன. நவீன காலத்திலோ வெடிகுண்டுகளாக, துப்பாக்கிகளாக வெடித்துச் சிதறுகின்றன. அன்று சமண பவுத்தப் பள்ளிகள் தகர்க்கப்பட்டன. இன்ற பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. மதவழிச் சிறுபான்மையோரின் நியாயமான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

பயங்கரவாதம் என்றால் இன்று ஒரு குறிப்பிட்ட மதத்திற்கே சொந்தம் என்று இட்டுக்கட்டப்பட்ட பொய்யுரையும் தகர்ந்து போனது. மாலேகாவ் குண்டுவெடிப்பில் இந்துத்துவ வாதிகள் ஈடுபட்டிருந்தது வெளிப்பட்டுவிட்டது. சந்நியாசிகளும், சந்நியாசினிகளும் கூட பயங்கரவாத உணர்வில் ஆட்பட்டிருக்கக்கூடும் என்பது நிச்சயமாகிப்போனது. பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை. வெறி மட்டுமே உண்டு. மக்கள் தெளிவுபட்டு வந்த வேளையில் அதைத் திசை திருப்பும் வகையில் மும்பையில் ஒரு கோரத் தாண்டவம் அந்நிய சக்திகளால் ஆடப்பட்டுவிட்டது. ஒரு வித பயங்கரவாதத்தை மூடிமறைக்க இன்னொரு வித பயங்கரவாதம் உதவி செய்கிறது. பெரிய கோடு போட்டு முன்னதைச் சின்னக்கோடாக்கப் பார்க்கிறது.

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்

தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வேளை இது. நமக்கு எதிரி குற்றம் புரியும் பயங்கரவாதிகள்தானே தவிர பக்கத்து நாட்டு மக்கள் அல்ல. இந்தப் பிராந்தியத்தில் யுத்தம் மூளுமேயானால் அதற்குள் புகுந்து ரத்தம் குடிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் முயலும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏற்கெனவே 1,2,3 ஒன், டூ, திரி ஒப்பந்தம் என்று இந்தியாவிற்கு ஒரு மூக்கணாங்கயிறு போட்டிருக்கிறார்கள். இன்னும் 4, 5 என்று அது அதிகரித்துவிடக்கூடாது. பயங்கரவாதத்தால் தானும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் பாகிஸ்தான் தானே முன் வந்து தனது மண்ணிலிருந்து புறப்படும் பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க வேண்டும்.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் சமாதானமும் வளர்ச்சியும் கோலோச்ச வேண்டுமே தவிர உள்நாட்டு யுத்தமும் வறுமையும் ஆட்சி செலுத்தக்கூடாது. ஆனால் இலங்கையிலிருந்து வரும் செய்திகள் நமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றன. உலகத்தின் ஒரு கண்ணீர்த்துளி போல அது வரைபடத்தில் இருக்கிறது. சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே மண்ணின் மைந்தர்கள். மொழிவழிச் சிறுபான்மையோர் என்கிற ஒரே காரணத்தால் தமிழர்களின் அரசியல் உரிமையும், தமிழின் வளர்ச்சி உரிமையும் வெட்டப்பட்டன. அங்கு நடக்கும் போரின் மூலகாரணம் இதுவே. இதை உணர்ந்து இலங்கை அரசானது தமிழர்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க முன்வர வேண்டும். இத்தகைய அரசியல் தீர்வை எட்டுவதற்கு உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இரு தரப்பாரும் இதற்கு உளப்பூர்வமாக இணங்க வேண்டும். இத்தகைய சூழலை ஏற்படுத்த பக்கத்து நாடு என்ற முறையிலும், இலங்கை நடப்புகள் தமிழ்நாட்டில் இயல்பாகவே எதிரொலிகளை எழுப்புகின்றன என்கிற காரணத்தாலும் இந்திய அரசு ராஜதந்திர ரீதியில் தனது செல்வாக்கை வலுவாகச் செலுத்த வேண்டும்.

இந்தப் பின்புலத்தில் தேசத்திற்கு ஒரு சிறந்த சித்தாந்த வழிகாட்டுதலைத் தர வேண்டிய எழுத்தாளர்கள் - கலைஞர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகள் பன்னாட்டு -உள்நாட்டு பெரு முதலாளித்துவ ஊடகங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். தங்களது சொந்த சித்தாந்தத்தை பொதுப்புத்தியாக மாற்றுகிற வேலையில் ஆளும் வர்க்கங்கள் விடாது ஈடுபடுகின்றன. இதை எதிர்த்த திமிறல்களும் நடக்கவே செய்கின்றன.

"செம்மலர்" என்கிற ஓர் இடதுசாரி ஊடகம் கலை இலக்கியத் துறையிலான தமிழகத் திமிறல்களுக்கும் மாற்றுச் சிந்தனைகளுக்கும் தனி மேடை போட்டுக் கொடுத்தது. அதிலே நடைபயின்ற எழுத்தாளர்கள் கூடித்தான் 1975இல் தமுஎசவைத் துவக்கினார்கள். அவர்களில் ஒருவன் என்ற முறையில் இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன் எங்களின் அன்றைய கனவுகள் எவ்வளவு தூரம் நிறைவேறியிருக்கின்றன என்று. நிகரக்கணக்குப்படி மகிழ்ச்சியடையவே நிறைய விஷயங்கள் உள்ளன.

அவசரநிலை ஆட்சி என்ற நேரடியான அடக்குமுறை தர்பார் நடந்த காலத்தில் எமது அமைப்பு பிறந்தது. பிறந்த உடனேயே எழுத்துரிமைக்காக எழுந்து நின்று போராட வேண்டிய நிலையில் இருந்தது. போராடியது. நேரடி அடக்குமுறை ஒழிந்தாலும் அவ்வப்போது மறைமுக ஒடுக்குமுறை தமிழகத்தில் நடக்கவே செய்தது. கருத்துப்படம் ஒன்றை வெளியிட்டதற்காக ஒரு வார ஏட்டின் ஆசிரியர் கைது செய்யப்பட்ட போதும், திரைப்படத்துறையை ஒடுக்க சூப்பர் தணிக்கை முறை வந்தபோதும் துணிவோடு எதிர்த்துக் குரல் கொடுத்தது தமுஎச.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம், உழைக்கும் மக்களின் சமதர்ம தாகம் என்கிற மூன்று அடிப்படை லட்சியங்களுடன் அன்று எமது அமைப்பு புறப்பட்டது. இன்றும் இவற்றின் தேவை நீடிப்பதை நினைக்க ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் , மறுபுறம் வருத்தமாகவும் உள்ளது. மகிழ்ச்சி எதனால் என்றால் தமுஎசவின் தீர்க்க தரிசனத்தை நினைத்து, வருத்தம் எதனால் என்றால் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இந்தக் குறிக்கோள்கள் நிறைவேறவில்லையே என்பதை நினைத்து. ஆனால் இலக்கை நோக்கியப் பயணத்தில் பல மைல்கல்களை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறோம் என்பதும் உண்மையாகும்.

யதார்த்தவாதம் எனும் கோட்பாடு

எழுத்தாளர்கள் - கலைஞர்களைப் பொறுத்தவரை இந்த லட்சியங்களைப் படைப்பில் எதிரொலிக்கும் ஆயுதமாக யதார்த்தவாதம் என்கிற இலக்கியக் கோட்பாட்டை தமுஎச வரித்துக் கொண்டது. யதார்த்தவாதம் என்றால் மொன்னையானது அல்ல. அதாவது இயந்திர கதியில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுப்பது அல்ல. அது உயிரோட்டம் மிக்கது. வாழ்வின் ஜீவகலையை படைப்பிலும் கொண்டு வருவது. அதன் அழகை, அவலத்தை, மகிழ்ச்சியை, நேயத்தை, கோபத்தை, வீரியத்தை என்று வாழ்வின் பன்முகங்களை வெளிப்படுத்துவது, முருகனுக்கு ஆறுமுகம் என்று கற்பித்தார்கள். வாழ்வுக்கோ ஓராயிரம் முகங்கள், இந்தப் பரந்துபட்டத் தன்மையை வெளிப்படுத்தும் போதே, வளர்ச்சியை நோக்கிய மனிதகுலத்தின் பயணம் என்கிற பொதுமையையும் சேர்த்து வெளிப்படுத்துவது.

இதற்கு வெளிப்படையான கதை சொல்லல் முதல் மாயா யதார்த்தவாதம் வரையிலான சகல பாணிகளையும் கைக்கொள்ளலாம். படைப்பைத் தொட்டால் உள்ளுக்குள் அதிர்வு ஏற்பட வேண்டும். அப்படியாக அது கூர்மையாக இருக்க வேண்டுமே தவிர மொன்மையாக அல்ல. இத்தகைய சரியான புரிதலோடுதான் தமுஎச யதார்த்த வாதத்தை தன்னகத்தே கொண்டிருந்தது. அதனால்தான் இதை எதிர்த்தும், கேலி செய்தும், புதுப்புது இசங்களை முன்வைத்தும் வெளியார் சிலர் சண்டமாருதம் செய்த போது சிறிதும் அசராமல் நின்றது. இன்றைக்கு என்ன நிலைமை? எதிர்ப்பாளர்கள் சிலரே யதார்த்தவாதத்தில்தான் சில உருப்படியான படைப்புகள் வந்திருக்கின்றன என்று ஒப்புக்கொள்கிற நிலை வந்திருக்கிறது.

மூன்று லட்சியங்கள் பற்றிக் குறிப்பிட்டேன். இந்தப்பொதுமையானது கால நீரோட்டத்தில் திட்டவட்டமான கூறுகளாக எழுந்த போது அவற்றை எளிதாக உள்வாங்க முடிந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பாக தமிழியம், தலித்தியம், பெண்ணியம் என்கிற தனித்துவமான போக்குகள் புறப்பட்டபோது தயக்கமின்றி அவற்றை ஏற்கிற பாங்கு தமுஎசவிடம் இருந்தது. இந்தச் சொல்லாடலைக் கொண்டு வெவ்வேறு தரப்பினர் வெவ்வேறு அர்த்தம் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாமறிவோம். நம்மைப் பொறுத்தவரை சமூக சீர்திருத்தம் என்கிற லட்சியத்தில் தமிழ் வளர்ச்சி, தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி, மாதர் விடுதலை என்பவை தவிர்க்க முடியாத கூறுகள் என்கிற தெளிவான கண்ணோட்டம் உண்டு. இதிலே நமது தனித்துவம் எதுவென்றால் இந்தக் கூறுகளை ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சமதர்ம தாகம் எனும் இதர லட்சியங்களோடு இணைத்துப் பார்ப்பது- இந்த இணைப்பே இரு உட்கூறுகளை மெய்யாக, முழுமையாக எட்ட உதவும் என்கிற புரிதோடு செயல்படுவது.

செம்மொழிக்காக...

தமிழைச்செம்மொழியாக அங்கீகரிக்கக்கோரி இதே சென்னையில் நடந்த சீரிய மாநாடும் டில்லியில் நாடாளுமன்றம் முன்பு நடந்த எழுச்சிமிகு பேரணியும் எனது நெஞ்சில் எழுகிறது. தமுஎச நடத்திய இத்தகைய இயக்கங்களால்தான் அந்த அங்கீகாரம் வந்தது என்று நாம் உரிமை கொண்டாடவில்லை. ஆனால் எமது இயக்கத்திற்கும் அதில் ஒரு முக்கியப் பங்கு உண்டு என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. காரணம் சிலர் தாங்களே முழு பாத்தியதை கொண்டாடுகிறார்கள். அப்படிக் கொண்டாடுகிறவர்கள் தமிழகத்தில் தமிழுக்குச் செய்ய வேண்டியதைச் செய்கிறார்களா என்றால் எதுவும் இல்லை. தமிழகத்தின் ஆட்சி மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டு அரை நூற்றாண்டுக் காலத்திற்கு மேலாகிவிட்டது. இப்போதும் ஆங்கிலத்தின் ஆதிக்கமே எங்கும் நிறை பொருளாக உள்ளது. தமிழக உயர்நீதிமன்றத்தில் இன்னும் தமிழ் வழக்கு மொழியாகவில்லை. ஆங்கிலம் என்பது கண்ணாடி. தாய்மொழிதான் கண்கள். அந்தக் கண்களை இழந்துவிட்டுக் கண்ணாடி மாட்டிப் பயனில்லை என்பதில் தமுஎச அன்று முதல் இன்று வரை உறுதியாக உள்ளது.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் பல ஆண்டுகளாகத் தேர்தல் நடக்கவில்லை அல்லது நடந்தாலும் தலித்துக்களால் பொறுப்பில் அமர்ந்து பணியாற்ற முடியவில்லை. அந்த ஊர்களுக்கே சென்று அந்த மக்களையே அணுகி தலித்துகளின் உரிமைகளுக்காகப் பரிந்து பேசிய அந்தக் காட்சி எனது மனக்கண்ணில் எழுகிறது. அப்படித் துணிவோடு சென்ற ஒரே எழுத்தாளர் அமைப்பு தமுஎச என்பதைப் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன். "சுவர் இருந்தால் சித்திரம் வரைய முடியாது" என்று உத்தப்புரம் சுவர் விவகாரத்தை கலை-இலக்கிய ரீதியாக தீவிரமாக மக்களிடம் கொண்டு சென்ற அமைப்பும் தமுஎசவே தலித் மக்களின் உரிமைகளுக்காக தலித்துக்கள் மற்றும் தலித் அல்லாதவரை ஒருங்கே திரட்டியதில்தான் எமது தனித்துவமான சாதனை இருக்கிறது.

தலித்துகளுக்காகத் தலித் அல்லாதவரிடம் பேசுகிற தார்மீக உரிமை எமக்கு உண்டு. ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கொண்டுவரப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ஆதிக்க சக்திகள் எதிர்த்தபோது, அந்த இடஒதுக்கீட்டை ஆதரித்து இயக்கம் நடத்திய அமைப்பு தமுஎச. தங்களின் உரிமைகளுக்காகப் போராடிய பிற்படுத்தப்பட்டோர், பிறரின் உரிமைகளை - தலித் மக்களின் உரிமைகளை - பறிக்கலாமா என்று கேட்கிற தார்மீக உரிமை எங்களுக்கு உண்டு.

அமைப்பு ரீதியிலானசெயல்பாடுகள்

எழுத்தாளர்கள் - கலைஞர்களுக்கு அமைப்பு தேவையில்லை. ஸ்தாபனம் வேண்டியதில்லை என்று சிலர் இப்போதும் கூறுகிறார்கள். அப்போதும் கூறினார்கள். ஆனால் தமுஎச என்று அமைப்பு ரீதியாக இயங்காதிருந்தால் இப்படி மக்களை நோக்கி, மக்களுக்காகச் சென்றிருக்க முடியுமா என்று நினைத்துப் பார்க்கிறேன். அதிலும் கலை இரவு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி சமுதாயப் பிரச்சனைகளை அலசியது மட்டுமல்லாது, நாட்டுப்புறக் கலைகளைப் பிரபலப்படுத்தியது மட்டுமல்லாது, எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வருகிறோமே, அது சாத்தியப்பட்டிருக்குமா?

1980களிலேயே மூன்றுநாள், ஐந்து நாள் என்று இலக்கிய முகாம் நடத்தினோம். இப்போது கூட நாவல் சந்திப்பு என்ற பெயரில் நாவலாசிரியர்களின் கலந்துரையாடலை நடத்தினோம். இவையெல்லாம் புதிய புதிய கவிஞர்களை, சிறுகதையாளர்களை, நாவலாசிரியர்களை உருவாக்குவதற்கான உந்து சத்தியாகத் திகழ்ந்தன. இலக்கிய விமர்சகனாக இருந்த நான் உள்ளிட்ட சிலர் நாவலாசிரியர்களாகப் பரிணமித்தோம் என்றால் எல்லாம் தமுஎச என்கிற அமைப்பு எங்களுக்குள் போட்ட அடியுரம். அந்த நன்றியை ஒரு நாளும் மறக்கமாட்டோம். இதற்கெல்லாம் உத்வேகம் தந்த எங்களின் ஸ்தாபகப் பொதுச் செயலாளர் கே.முத்தையா அவர்களை பிரியத்தோடு நினைத்துக் கொள்கிறோம்.

வெளிவட்டாரத்தார் சிலர் எம்மைக் குறிவைத்து ஏடுகளில் தாக்குகிறார்கள் - நாம் அமைப்பு ரீதியாக இயங்குவது கண்டு. ஆனால் அவர்களே ஒரு கோஷ்டியாகத்தான் இயங்குகிறார்கள். கோஷ்டி என்பதும் ஒரு ஸ்தாபனமே என்பதை - அதுவும் நெகெட்ட ஸ்தாபன முறையே என்பதை மறந்து போகிறார்கள். பத்திரிகை மூலம்தான் எம்மைத் தாக்குகிறார்கள். பத்திரிகை என்பதும் ஒரு ஸ்தாபனமே என்பதை மறந்து போகிறார்கள். படைப்பாளிக்கு அரசியல் கூடாது என்று ஒரு வகை அரசியல் பேசுகிறார்களே அதுபோலத்தான் இதுவும். இவர்களது தாக்குதலை எமது ஆடையில் பட்டதூசி எனத் தட்டிவிட்டு நாம் வேகநடை போடுகிறோம்.

தமுஎச தனது படைப்பாளிகளுக்கு குறைந்தபட்ச வழிகாட்டுதல்களையும், அதிகபட்ச சுதந்திரத்தையும் தருகிறது. குறைந்தபட்ச வழிகாட்டுதல் ஒரு பொது அமைப்பாகச் செயல்படுவதற்குத் தேவைப்படுகிறது. அதிகபட்ச சுதந்திரம் விதவிதமான முற்போக்குப் படைப்பாக்கத்திற்கு அவசியப்படுகிறது. இந்த இரண்டையும் இழுத்துப் பிடித்து ஓட்டுப்போடுகிற வேலை அல்ல. மாறாக இரண்டும் இயல்பாகக் கலக்கிற சங்கமமே நமது சங்கம். அந்தச்சங்கமம் நடந்திருக்கிறது என்பதை இதன் வெற்றிகரமான அமைப்புச் சார்ந்த செயல்களும், படைப்புச் சார்ந்த செயல்களும் உணர்த்தி நிற்கின்றன.

தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் பிறந்தநாளையொட்டி சங்க இலக்கியத்தை தமிழகத்தின் வீதிகளுக்குக் கொண்டு சென்றோம். தெருவெங்கும் தமிழ் முழக்கம் ஒலிக்கச் செய்தோம். நாட்டுபுறவியலுக்குள் புகுந்தோம். உள்ளூர் வரலாறுகளை எழுதத் துவங்கினோம். நாட்டார் இலக்கியங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தினோம். சமூக - அரசியல்- தத்துவ ஆய்வு நூல்களைப் படைத்தோம். கிராமியக் கலைஞர்களுக்கு வாரியம் அமைக்கக்கோரி சென்னையில் நடந்த பேரணியை எந்தக் கலை உள்ளத்தால் மறக்க முடியும்? அதே நேரத்தில் நவீன நாடகக் கலையைக் கைவிட்டு விடவில்லை. பேர் சொல்லும் புதிய நாடகங்கள் உருவாயின.

பெரிய திரையும் சின்னத்திரையும் பிற்போக்குச் சிந்தனைகளாலும், ஆபாசச் சித்தரிப்புகளாலும் கிழிபட்டுவிடக்கூடாது என்பதில் அக்கறை காட்டினோம். நல்ல திரைப்படங்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடினோம். பிறகு ஆண்டுதோறும் விருது கொடுத்தோம். மறைந்த இயக்குனர் கோமல் சுவாமிநாதன் நமக்கும் திரையுலகத்தாருக்கும் இடையே வலுவான பாலமாக இருந்தார். இன்று எத்தனையோ திரையுலகக் கலைஞர்கள் நம்மீது நேசம் கொண்டிருக்கிறார்கள். நமது எழுத்தாளர்களின் கதைகளை சினிமாக்கள் ஆக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தது. இன்று நமது பொதுச் செயலாளரின் சிறுகதை ஒன்று சிறந்த சினிமாவாக வெளிவந்திருக்கிறது.

குறும்பட முகாமும் - திரையிடல்களும்

அதே நேரத்தில் குறும்பட இயக்கத்தை ஒரு விரிந்த மக்கள் இயக்கமாக்க வேண்டும் என்பது நமது மற்றொரு குறிக்கோளாக உள்ளது. குறும்பட முகாமும், திரையிடல்களும் புதுவேகம் கண்டிருக்கின்றன. பரிசு வழங்கி உற்சாகப்படுத்தியிருக்கிறோம். ஒரு கையில் பேனாவையும் மறு கையில் கேமராவையும் நமது படைப்பாளிகள் ஏந்தியிருக்கிறார்கள். கடந்த மாநாட்டின் போது கேமிராக் கவிஞர் பாலுமகேந்திரா நமக்கு விடுத்த வேண்டுகோள் செயல்வடிவம் பெற்றிருக்கிறது. விரல்கள் ஐந்து அல்ல. பேனாவையும் கேமராவையும் சேர்த்து ஏழு ஆகிப்போனது.

இடையில் புத்தக வாசிப்பு குறைந்து போனதோ என்கிற சந்தேகம் வந்தது. ஆனால் அண்மைக்காலமாக புத்தகக் கண்காட்சிகள் ஊர்தோறும் நடப்பதைக் காணும்போதும், அங்கு வரும் இளைஞர்கள் தமிழ் இலக்கிய நூல்களை வாங்குவதை நோக்கும் போதும் அந்தச் சந்தேகம் மறைந்து போகிறது. "பாரதி புத்தகாலயம்" போன்ற வீரியமிக்க பதிப்பகங்களின் செயல்பாடுகள் எழுத்தாளர்களுக்குப் புதிய நம்பிக்கையைத் தந்துள்ளன.

தமிழக அரசும் நூல்களுக்கு ஆயிரம் பிரதிகள் வாங்குவது உற்சாகத்தைத் தருகிறது. செலாவணிச் சூழல் படைப்பாக்கத்திற்கு முக்கியம், கிடைத்துள்ள புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திட தமிழகத்தின் முற்போக்கு எழுத்தாளர்கள் முன்வர வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை படைப்பாக்கத்தில் விடாது இயங்கும் ஒரு எழுத்தாளர் பட்டாளத்தை, சமூக ஆய்வாளர் படையை உருவாக்கி விட்டதும், வளர்த்துவிட்டதும் தமுஎசவிற்குப் பெருமை சேர்த்த விஷயம். ஒரு நாற்பது பேர் சேர்ந்து உருவாக்கிய இந்த அமைப்பில் இன்றைக்கு ஆயிரக்கணக்கில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலை-இலக்கிய ஆர்வலர்கள் என்று சேர்ந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. 20 ஆம் நூற்றாண்டின் தமிழகக் கலை - இலக்கிய வரலாற்றை எழுதுகிறவர்கள் முற்போக்காளர்களின் படைப்புகளை ஒதுக்கிவிட்டு எழுத முடியாது. அப்படி எழுதுகிறவர் நேர்மையான வரலாற்றாளராக இருக்கமாட்டார். 21ஆம் நூற்றாண்டின் தமிழகக் கலை-இலக்கிய வரலாற்றை எழுதப் போகிறவர்கள் முற்போக்காளர்களின் படைப்புகளுக்கே முதல் முக்கியத்துவம் தரவேண்டியிருக்கும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும். அதுவே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

கம்பன் சொன்னபோல....

அது முற்போக்காளர்களால் முடியும். கவிதைக்கு கம்பன் கொடுத்த இலக்கணத்தை சகல இலக்கியத்திற்கும் பொருத்திப் பார்ப்பவர்கள் நாம். "சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்" என்றான் அவன். சான்றோர் எழுதும் அந்தக் கவியோ "புவியினுக்கும் அணியாய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி, அவி அகத்துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி..." என்று பல தன்மைகளோடு திகழும். புவிக்கு அழகு செய்வது மட்டுமல்லாது சிறந்த கருத்துக்களையும் கொண்டிருக்கும் என்றான். அறிவையும் தொடும், அகத்துறைகளையும் தாங்கி நிற்கும் என்றான். சமவெளி வாழ்வை மட்டுமல்ல மலைவாழ்வு, வனவாழ்வு உள்ளிட்ட ஐந்துவகை நில வாழ்வையும் சித்தரிக்கும் என்றான். இப்படி அனைத்து வகை மக்களையும் தனது படைப்பில் கொண்டுவரத் துடிப்பவன் முற்போக்காளன்.

அப்படிக் கொண்டுவரும்போது அதில் மகத்தான நேர்மை இருக்கும். உள்ளதை உள்ளபடிச் சொல்வதிலும், நல்லது உண்மையில் உள்ளது ஆக வேண்டும் எனத் துடிப்பதிலும் அது வெளிப்படும். "கோடான கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும்" எனும் அவ்வையின் சொற்களை நெஞ்சில் ஏந்தியிருப்பவர்கள் எமது படைப்பாளிகள். ஆகவே அது முற்போக்காளர்களால் முடியும்.

"என்னை நன்று இறைவன் படைத்தனன் தன்னை நன்றுகவி செய்யுமாறே" என்று பாடியவனும் மனிதனே. கடவுளை பாடவும் மனிதன் தேவைப்பட்டான். நமக்குப் பிரச்சனை இல்லை. நாம் மனிதர்களைப் பாடுகிறவர்கள். மனிதமே நமக்குப் பாடுபொருள். சகல கோணங்களிலும் மனிதத்தை நாம் தரிசிப்போம். "ரவி நுழைய முடியாத இடத்திலும் கவி நுழைவான்" எனும் சொலவடைக்கு ஏற்ப சகலத்திற்குள்ளும் நுழைந்து வருவோம். நமது லட்சியம் மனிதத்திற்கு அதன் உன்னதத்தை உணர்த்துவது.

கடந்த மாநாட்டிற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிட்டன. காலமகளைப் பொறுத்தவரை நாமும் தேவர்களே, இப்போது சற்றே நின்று திரும்பிப் பார்க்கிற வேளை. திரும்பிப் பார்க்கிறோம், முன்னேறிச் செல்வதற்காக, சிரசு மட்டும் சற்றே திரும்பிப் பார்க்கிறது, கால்கள் முன்னேறத் துடிக்கின்றன. திரும்பிப் பார்க்கிற பார்வையையும், உற்சாகமாக முன்னேறுகிற துடிப்பையும் ஒருங்கே எமக்குத் தந்திருப்பவை ஸ்தாபன ஒழுங்கும், லட்சியப்பிடிப்பும். இவற்றைக் கொண்டு கடந்த காலத்தின் வெற்றிகளையும் போதாமையையும் அலசுவோம். எதிர்காலத்திற்கான இலக்குகளை நிர்ணயிப்போம். இந்த மாநாடு இந்த வகையில் மகத்தான வெற்றி பெறும் எனும் நம்பிக்கையோடு எனது தலைமை உரையை முடிக்கிறேன். நன்றி, வணக்கம்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com