Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
இந்திய மண்வாசனையை சுவாதித்த ஓர் இஸ்லாமியக் கலைஞர்

தே. இலட்சுமணன்

புகழ்பெற்ற ஓவியர் எம்.எப். உசேன் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுகிறார், அவமானப்படுத்தப்படுகிறார்.

டெல்லியில் உள்ள அசோகா ஆர்ட் காலரியில் 2008, ஆக°ட் 22 முதல் 25 வரை “ஓவிய உச்ச கண்காட்சி” நடந்தது. பல ஓவியர்களின் படைப்புகள் பார்வையாளர்களுக்கு விழி விருந்தாக இருந்தன. ஆயிரக்கணக்கான ஓவிய ஆர்வலர்களும், விமர்சர்களும், பத்திரிகையாளர்களும் குவிந்தார்கள். காட்சியில் பல அற்புத ஓவியங்களும், அற்ப ஓவியங்களும்கூட வைக்கப்பட்டதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள், அதேபோல் அறிமுகமான, அறிமுகமில்லாத ஓவியர்களின் படைப்புகள்கூட வைக்கப்பட்டி ருந்தனவாம். எப்படியிருப்பினும் ஓவியங்கள் நல்ல விலை போயினவாம். ஓவியங்கள் “ரூ. 10 கோடி வரை விற்பனையாகி யுள்ளன. ஆனாலும் பல ஓவியர்கள் - இந்திய ஓவியர்கள், பங்கு பெற்ற அந்த காட்சியில் உலக அளவில் புகழ் பெற்ற எம்.எப். உசேனின் படைப்புகள் காணோம். ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்த முக்கிய°தர்களுக்கு அச்சம் மேலிட்டது. பிரபலமான உசேனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டால் இந்துத்துவா வெறியர்கள் கலகம் நடத்தி கண்காட்சியைப் போர்க்களமாக்கி விடுவார்கள் என்ற அச்சமாம்.

ஆனாலும் டெல்லியில் உள்ள என்.ஜி.ஓ. அமைப்பைச் சேர்நத் ஒருவர் எம்.எப். உசேனின் சில ஓவியங்களை, கண்காட்சி நடக்கும் பிரக்தி மைதானத்திலிருந்து சற்று தொலை தூரத்தில், தன்னுடைய அலுவலகத்தில் காட்சிகளாக வைத்துள்ளார். ஆனால் இந்துத்துவ வெறிக் கும்பலுக்கு இது ஒரு பெரும் பாவமாகப் பட்டது.

ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பு அங்கு சென்று வேட்டையாடியது, ஓவியங்களைக் கிழித்துத் தள்ளியது, அதோடு உசேனை மிகக் கேவலமான ஆபாசமான, வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு குறிப்பையும் அங்கு வீசி எறிந்துவிட்டுச் சென்றது. இந்த அராஜக கும்பலை யார் தண்டிப்பது? குற்றப் பத்திரிகையை யார் தயாரிப்பது? யார் கைது செய்ய முன்வருவது? இந்த அடியாட்கள் ஏக சுதந்திரம் பெற்றவர்கள்.

அதையடுத்து இன்னொரு துயர சம்பவம், வெட்கப்பட வேண்டிய சம்பவம் நடந்தது.

பூனாவில் சர்வதேச சினிமா விழா பெரும் விளம்பரத்தோடு துவக்கப்பட்டது; உலக அளவில் புகழ்பெற்ற வெளிநாட்டு படங்களெல்லாம் காட்டப்பட்டன. பல குறும்படங்களும் காட்டப் பட்டன. அந்த சினிமா விழாவில் எம்.எப். உசேன் தயாரித்த “ஓவியரின் பார்வை மூலம்” என்ற குறும் படம் ஒன்றும் காட்ட ஏற்பாடாகியிருந்தது. ஆனால் இந்துத்துவ அராஜக கும்பலின் தலையீட்டால் இந்தப்படம் காட்டப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தக் கட்டுரை எழுதுகிற வரையில் படம் காட்டப் படவில்லை. இந்தக் குறும்படம் ஜெர்மனியில் நடந்த சினிமா பட விழாவில் கோல்டன் பேர் “ழுடிடனநn க்ஷநயச” பரிசு பெற்றது. உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோவுடன் உசேனை ஒத்திட்டுப் பேசுவார்கள். இந்தியாவின் பிக்காசோ இவர்தான் என்பார்கள்.

இந்துத்துவா வெறியர்களுக்கு யாராய் இருந் தால் என்ன? இந்து ஜனஜக்ருதி சமிதி என்னும் அமைப்புதான் இவரின் குறும்படத்தைக் காட்ட ஆட்சேபணை தெரிவித்தது. இந்த அமைப்புதான் ஏற்கனவே தானே நகரில் உள்ள நாடக தியேட்டருக்கு (“காட்கரி ரங்கயதன்”) வெடி வைத்தக் கும்பல். அந்தத் தியேட்டரில் மகாபாரதத்தை விமர்சிக்கும் நாடகம் ஒன்று அரங்கேற்றம் செய்யப்பட இருந்தது. அதை எதிர்த்துதான் இந்தக் கும்பல் அங்கு குண்டு வைத்தது.

அதிகாரிகளும், அரசும் அமைதி காக்க வேண்டி உசேன் தயாரித்த குறும்படத்தை காட்டக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள். இந்தப் படம் காட்டக் கூடாது என்று மும்பையிலும் ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆனால் புகழ் பெற்ற மலையாள இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் “எப்படி யிருந்தாலும் இந்தப் படம் காட்டப்பட வேண்டும். இந்தப் படம் யார் ஒருவராலும் ஆட்சேபணை செய்யப்பட்டால், அது அவர்களுடைய சொந்த அபிப்பிராயம், வியாக்கியானம், இதுபோன்ற அரசியல்களால் கலைஞர்கள் துயருக்கு ஆளாக்கப் படக் கூடாது” என்றார்.

இராஜ°தான் மாநிலத்தின் பெருமைகளை விளக்கும் படம் தான் இது. இதைக் காட்டுவதால் யாருக்கும் ‘காயம்’ ஏற்படப் போவதில்லை.

கோவா முதலமைச்சர் திகம்பர் காமத் சொன்ன சொற்கள்தான் சுடு சொல்லாக இருந்தது.

உசேனின் படம் பார்வைக்கு வந்ததையோ, காட்ட மறுக்கப்பட்டதையோ தனக்கு ஏதும் தெரியாது என்று மறுத்துவிட்டார். எனக்கு இதுபற்றி ஏதும் விவரம் தெரியாது. அந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. அந்தப் படம் காட்டப்பட எங்கு முடிவாகியது, யார் அனுமதித்தது என்றும் எனக்குத் தெரியாது என்று மறுத்துவிட்டார். இந்தக் கலைஞர் மீது ஏன் இப்படிப்பட்ட துவேஷம், இந்து பெண் கடவுள்களை ஆபாசமாகச் சித்திரத்தில் சித்தரித்து விட்டார் என உசேன் மீது கண்டனக் குரல்கள் மட்டுமல்ல, அவர் வீடு அடித்து சூறையாடப் பட்டது. கொல்லவும் முயற்சி நடந்தது. அவர் மீது பல மாநிலங்களிலிருந்து வழக்குகள் தொடுக்கப் பட்டன. பல நீதிமன்றங்களின் படிக்கட்டுகளை ஏற வேண்டியதாயிற்று, திணறிப் போனர். ஏறக் குறைய 1250 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இப்போது பட விழா நடக்கும் கோவாவில் மட்டும் 900 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தாங்களாகவே உருவாக்கிக் கொண்டு, தன்னிச்சையாக நடக்கும் இந்து பெர்சனல் லா போர்ட் (ழiனேர ஞநசளடியேட டுயற க்ஷடியசன) என்ற அமைப்பு (லக்னோவில் செயல்படுகிறது) உசேன் தலையைக் கொண்டு வந்தால் ரூ. 51 கோடியும், கண்களைத் தோண்டி வந்தால் ரூ. 11 லட்சமும், கைகளை வெட்டி வந்தால் ஒரு கிலோ தங்கமும் தருவதாக அறிவித்துள்ளது. அம்ரோ வங்கி தன்னுடைய பிளாட்டினம் கிரெடிட் கார்டில் உசேனின் சித்திரம் ஒன்றை வியாபார விளம்பரத்துக்காகப் போட் டிருந்தது. அதை இப்போது பயந்து நீக்கிவிட்டது. அதைவிட கொடுமை இந்திய அரசு உசேனுக்கு இந்தியாவின் உச்சபட்ச கௌரவமான பாரத ரத்னா விருது வழங்க யோசித்தபோது, இந்து அடிப்படை வாதிகள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

அகமதாபாத்தில் செயல்படும் என்.டி.டி.வி. (தொலைக்காட்சி) மக்களிடம் உசேனுக்கு பாரத ரத்னா விருது தரலாமா என்று அபிப்பிரயாம் பெற எ°.எம்.எ°. மூலம் தகவல் கேட்டிருந்தது. இது இந்துத்துவாவாதிகளுக்கு இடியாகவிழுந்து விட்டது போல் ஆகிவிட்டது. உடனே 20 குண்டர்கள் அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தில் ஹாக்கி விளையாட்டு கட்டைகளுடன் நுழைந்து பொருள் களை அடித்து நொறுக்கி விட்டார்கள், இரண்டு ஊழியர்களை நையப்புடைத்தார்கள். நாம் ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக் கிறோமா என்ற ஐயம் எழுகிறது.

ஏற்கனவே அவர் 1985ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ கௌரவ விருது வாங்கினார். மீண்டும் 1991ல் பத்ம பூஷன் விருது பெற்றார். 1986ல் மாநிலங்களவையில் உறுப்பினராக ஆனார். மேலும் பெருமை சாவோ பவுலா பையனில் (ளுயடி ஞயரடடி க்ஷநைnnயைட) விழாவிற்கு பாப்லோ பிகாசோவுடன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும் கேரள அரசு இவருக்கு ராஜா ரவி வர்மா பரிசு கொடுக்க முயற்சித்தபோது, இதற்குக் கடுமையான ஆட்சேபனைகளும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. கேரள அரசுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் அந்த கௌரவ பட்டத்தை அவருக்கு வழங்கவில்லை.

எம்.எப். உசேன் வால்மீகி ராமாயணத்தையும், துளசிதா° ராமாயணத்தையும் தெளிவாகப் படித்துத் தேறியவர். கீதையை விரும்பிப் படித்தவர், உபநிஷத்துக்களைப் படித்து உள்வாங்கியவர்.

ஒருமுறை 1968 ஆம் ஆண்டு ராம்மனோகர் லோகியா, ராமாயணக் காவியத்தை சித்திர வடிவங்களில் வரைந்து தன்திறமையைக் காட்ட வேண்டினார். அந்த வேண்டுகோளை ஏற்று ஏழு ஆண்டுகள் செலவு செய்து ராமாயணத்தை விளக்கும் 150 சித்திரங்களைப் படைத்தார். இவர் விநாயகர் உருவத்தை வரைவது உண்டு. அப்படி நூற்றுக் கணக்கான சித்திரங்களை பல மாடல்களில் வரைந்து தள்ளினார். இவர் ஒரு பெரிய கேன்வாசில் சித்திரம் வரையும் வேலைகளைத் துவங்குவதற்கு முன்பாக ஒரு விநாயகர் உருவத்தை வரைந்து விட்டுத்தான் பிறகு பெரும் வரைவுப் பணியைத் துவக்குவார்.

இவரிடம் சில இ°லாமியர்கள், ஏன் நீங்கள் இ°லாமிய தத்துவத்தை விளக்கும் வகையில் சித்திரங்கள் வரையக் கூடாது என்ற கேட்ட போது உங்களுக்கு இந்துக்களுக்கு உள்ளது போல் சகிப்புத் தன்மை கிடையாது, ஒரு எழுத்து வடிவத்தில் தவறு வந்து விட்டாலும், அந்தச் சித்திரத்தைக் கிழித்து எறிந்து விடுவீர்கள் என்று பதில் சொன்னார். அவர் அப்படி சொன்னது சரியே! இந்து மக்களின் சகிப்புத் தன்மையை உள்ளபடியே விவரித்தார். பின் யார் இவர் மீது பாய்வது? விரல்விட்டு எண்ணக் கூடிய சில மத அடிப்படை வெறியர்கள், இந்து மதத் தினையே சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் - தவறாகப் புரிந்து கொண்டவர்கள் செய்யும் அராஜகம் இது. அரசியல் லாபத்துக்காக நடத்தும் ரௌடித்தனம் இது.

இந்து மதம், புராணத்தில் பரிசுத்தத்திற்கு மறு பெயர் நிர்வாணம் என்று சொல்லுகிறது, புனிதம் என்று சொல்லுகிறது. கோயில்களில் உள்ள சிலைகள், தெய்வங்களின் கதைகள், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், மகா பாரதம் - இவைகள் நிர்வாணம் என்பதை தெய்வ வடிவில்தான் பார்க்கின்றன. இதையெல்லாம் புரிந்த உசேன், படித்த உசேன், உள்வாங்கிய உசேன் இந்து பெண் தெய்வங்களை அந்த நோக்கில்தான், ஒரு ஓவியர் என்ற உணர்வோடு தொழில் நெறியில் நின்று வரைந்தார்! இந்தியக் கலாச்சாரத்தை வெகுவாக உணர்த்தவர், ரசித்தவர், மதித்தவர். ஒன்றரை வயதிலேயே இவர் ‘தாயை இழந்து’ விட்டார். சிறுவயதில் இவர் ராம லீலா நாடகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தவர், மன ஆறுதல் கொண்டவர். சிறுவனாக இருந்தபோது அதிகமாக தாயற்ற பிள்ளையாய் பல பயங்கரக் கனவுகளைக் கண்டு அலறுவது உண்டு! ஆனால் ராமலீலா இவருக்கு சுகபலத்தைக் கொடுத்தது என்கிறார்.

“ராஜாஜி, கம்பராமாயணம் ஒரு கற்பனை என்றாலும் அது வாழ்க்கையின் நிஜங்களைச் சொல்லுகிறது என்றார். அது உண்மை, நான் இப்படிப்பட்ட ஆன்மீக நூல்களைப் படித்துத்தான் மன பலம் பெற்றேன், என் ஓவியப் பணி வளர் வதற்கும் இது உதவியது” என்கிறார். அவர் இந்திய நாட்டில் வாழ்ந்து ,இந்திய நாட்டு பண்பாடுகளை சுவாசித்தவர். இதற்கு ஓர் அரிய வியக்கும் நிகழ்ச்சிகயைக் குறிப்பிடலாம்.

இவர் தன் மகள் ரயீசாவுக்குத் திருமணம் நடத்தியபோது இவர் திருமண அழைப்பிதழ் அச்சிட்டது இ°லாமியர் பலரை அதிரவைத்து விட்டது. சிவன் தொடையில் பார்வதி அமர்ந் திருப்பது போலவும், சிவனுடைய ஒரு கை பார்வதி யின் மார்பின் மேல் உள்ளது போலவும் வரைந்து அச்சிட்டார். உலகில் எந்த இ°லாமியருக்காவது தன் மகளின் திருமண அழைப்பிதழில் இப்படிப் பட்ட சித்திரத்தை துணிவோடு அச்சிட முடியுமா? இவரோ உலகம் பூராவும் உள்ள தன் நண்பர் களுக்கும், இ°லாமிய உறவினர்களுக்கும் அந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தார். இவரின் உணர்வில், இரத்தத்தில் இந்தியப் பண்பாடு எவ்வளவு ஊறிக் கிடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இவரைத்தான் இந்துத்துவ வெறியர்கள் சொல்ல முடியாத அழுகிய வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறார்கள். மகள் ரயீசாவும் எந்தத் திருமண சா°திர சடங்குகளும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள், அதையும் ஏற்றுக் கொண்டார் உசேன்.

மிக மிக உயர்ந்து விட்ட ஓவியர், சிகரத்தைத் தொட்டு விட்ட ஓவியர், உலக நாடுகளிலெல்லாம் இவரின் ஓவியங்கள் மிக உயர்ந்த விலைக்கு விற்கப்படுகின்றன; இவர் விலையை எவ்வளவு உயர்த்தினாலும் வாங்கத் தயாராய் இருக்கிறார்கள். இவருடைய ஓவியம் - ஒரு கேன்வா° ஓவியம் 20 லட்சம் டாலருக்கு விற்பனையானது. ஐரோப்பா விலும், அமெரிக்காவிலும் இவருடைய ஓவியங் களுக்கு இன்னமும் வரவேற்புதான். பத்தாயிரத் திற்கும் மேலான ஓவியங்களைத் தீட்டிவிட்டார். 92 வயதை எட்டிவிட்ட இவர் இன்னமும் வரைந்து கொண்டே இருக்கிறார். இந்தியாவுக்கு இவர் பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளார்.

அப்படிப்பட்டவரைத்தான் ஜாமினில் வர முடியாத தண்டனையைப் பிறப்பித்து இவரை சிறைவைக்க ஹரித்துவார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இவருடைய சொத்துக்களை எல்லாம் “அட்டாச்மெண்ட்” செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. யாரோ சில இந்து வெறியர்கள் தொடுத்த வழக்கால் வந்த விளைவு. ஆனால் உச்சநீதிமன்றம் இதற்குத் தடை விதித்து விட்டது.

ஆனாலும் இவரை தாக்குவதற்கான முயற்சி கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவருடைய ஓவியக் கண்காட்சிகளை சீர்குலைக்கும் துயரங்களும் தொடர்கின்றன.

லண்டனில் “ஆசியா ஹவு°” என்ற அரங்கில் அவருடைய ஓவியக் கண்காட்சி நடந்தபோது அங்கு வாழும் சில இந்து வெறியர்கள் அந்த ஓவியக் கண்காட்சியை சீர்குலைத்தார்கள். அமெரிக்காவில் மகாபாரதம் காட்சிகள் (பியாபாடி எ°ஸெக்° மியூசியம்) சீர்குலைக்கப்பட்டன. டெல்லியில் சென்ற ஆண்டும் ஓவியக்காட்சி சீர்குலைக்கப் பட்டது.

கிட்டதட்ட ஒரு நூற்றாண்டு (92 வயது) ஓவியக் கலைஞர், எண்பது ஆண்டுகளாக ஓயாது வரைந்து கொண்டிருக்கும் வல்லவர் இப்போது துபாயில் குடியேறிவிட்டார். லண்டனுக்கும், துபாயிக்கும் பறந்து கொண்டிருக்கிறார்.

இவரின் மன நிலையை எப்படி அளப்பது? புகழேணியில் இருந்தாலும், புழுதிவாரி இரைக்கப் படுகிறதே, இதை இவர் எப்படி ஜீரணிக்கிறார்?

“நான் இந்தியாவை அதிகமாகவே நேசிக் கிறேன். சகஜமாக பழகுவது, வேற்றுமையில் ஒற்றுமை காணுவது என்பதான இந்திய நாட்டில் வாழ்ந்த நான் மனிதாபிமானத்தை மதிக்கிறேன். இந்தவித அற்புதம் உலகில் வேறு எங்கும் பார்க்க இயலாது. இப்போது நடக்கின்ற சில அசம்பா விதங்கள் ஒரு நாட்டின் சரித்திரத்தின் வரலாற்றில் நடக்கும் விளைவுகள். என்னைப் பொறுத்த மட்டிலும் இந்தியா மனித வாழ்க்கையை நேசிக்கிற நாடு, கொண்டாடுகிற நாடு” என்றார்.

“எனக்கு எதிராக செயல்படும் சிலரை நான் சபிக்க விரும்பவில்லை. ஒரு குடும்பத்தில் சில குழந் தைகள் முரட்டுத்தனமாக நடக்கும், பொருள்களை உடைத்துப்போடும் அதற்காக அந்தக் குழந்தையை வெளியே வீசி எறிய முடியுமா?” என்கிறார்.

“என்னுடைய கலையைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், அதைப் பார்க்கவும் முடியாதவர்கள் தான் இந்த ரகளைகளை செய்கிறார்கள். தவறாகச் சொல்லிக் கொடுக்கப்பகிறார்கள்.”

“நான் ஒரு கட்டத்தில் மன்னிப்புக் கூட கேட்டுக் கொண்டேன். என் ஓவியத்தை தவறாக தீட்டி விட்டேன் என்பதால் அல்ல; சிலர் மனம் புண்படு கிறது என்றால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக் கிறேன் என்றேன். நான் எழுதிய அந்த ஓவியங்களை இன்னமும் நேசிக்கிறேன்” என்கிறார்.

என் விருப்பம் இந்தியா ஓவியக் கலையில் இன்னமும் முன்னேற வேண்டும் என்பதுதான். இதை அவர் சொல்லுவதற்கு ஒரு காரணம் உண்டு!

“நம் ஓவியக் கலை மாணவர்கள் இப்போதும் உடல்வாகுவைக் கற்க கிரீ° நாட்டுக் கலையைத் தான் படிக்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமியைப் பற்றி ஓவியக் கலைக் கல்லூரியில் எந்தக் குறிப்பும் இல்லை. அவர் உயர்பீட ஓவியர். கல்லூரி மாணவர் கள் ஷேக்°பியர், கீட்° பற்றி படிக்கிறார்களே தவிர நம் இந்தியக் காவியங்கள் பற்றியோ காளிதா° பற்றியோ கற்க வாய்ப்பே இல்லை” என்கிறார்.

ஒருமுறை இந்து பனாரா° பல்கலைக் கழகத்தில் இவரையும், சுப்பு லட்சுமியையும், ஆர்.ஜே.டி. டாடாவையும், மதர் தெரசாவையும் கவுரவிக்க அழைத்தார்களாம். பல்கலைக் கழகத்தில் கவுரவித்தபோது சிகப்பு குல்லாயும், கவுனையும் அணியக் கொடுத்தார்களாம், (ஆங்கில மரபு போல்) ஒரு இந்து பல்கலைக் கழகத்தில், பாரதீய சம°கிருத பாதுகாப்பாளர்களைக் கொண்ட அரங்கிலேயே இக்காட்சி நிறைவேறியது. என்ன செய்வது? என்று கேட்கிறார்.

இவர் மீது போடப்பட்ட ஆயிரத்துக்கும் மேற் பட்ட வழக்குகள் டெல்லி நீதிமன்றத்துக்கு ஒட்டு மொத்தமாக திருப்பிட ஏற்பாடாகி விட்டது! இவர் மத்திய சர்க்காரை விமர்சிக்கிறார். முதுகெலும் பில்லா சர்க்கார் என்கிறார்.

பெரிய பாராளுமன்றம், பெரிய ராணுவ முப் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீ°, மத்திய பாதுகாப்புப் படை, உளவுத் துறை, இத்யாதிகள் உண்டு. ஆனால் ஓவியருக்கு, 92 வயதை எட்டி விட்ட ஓர் உலகம் போற்றும் ஓவியருக்கு இந்தியாவில் இருக்க பாதுகாப்பு கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, கண்டு கொள்ளவே இல்லை.

நீதிமன்றத்திலாவது நீதி கிடைக்குமா? ஆபாசம் பற்றி இரண்டு மூன்று வழக்குகளில் உச்சநீதிமன்றம் அற்புதமாகத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

ரஞ்சித் டி உதேசிக்கும், மகாராஷ்டிரா அரசுக் கும் (1965) அஜாய் கோ°வாருக்கும் மத்திய அரசுக்கும், (2005) சமரேஷ்போசாக்வுக்கும் அமர் மித்ரா என்பவருக்கும் (1985) இடையில் நடந்த வழக்குகள் பற்றிதான் உச்சநீதிமன்றம் வரலாறு பொருந்திய தீர்ப்பு வழங்கியுள்ளது.

“பால்வகை உறுப்புகள், நிர்வாணங்கள் போன்றவை கலையில் காட்சியளிக்கின்றபோது அவைகளை ஆபாசமாகக் கருதிவிட முடியாது. அவைகளை ஆபாசத்துக்கு ஈடாகவும் இழிவாகவும் கருத இயலாது.

“பார்ப்பவர்களை கீழான உணர்வுக்கோ, நடத்தைச் சீர்கெடுவதற்கோ அல்லது காம உணர்வைத் தூண்டுவதற்கோ கெட்ட அவாவைத் துரிதப்படுத்துவதற்கோ ஏதோ ஒரு வகையில் உள்நோக்கோடு உருவகப்படுத்தும் காட்சிகள்தான் ஆபாசமாகக் கருதப்படும்.”

“அதிக உணர்ச்சி வயப்படும் ஒரு நபரின் தராதரத்தை வைத்து அது ஆபாசமா, இல்லையா என்ற முடிவுக்கு நீதிமன்றம் வர முடியாது” என தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்தப்படி பார்த்தால் ஓவிய உலகின் உயர்ந்த மனிதன் எம்.எப். உசேன் நீதிமன்றம் சென்றால் அவருக்கு நியாயம் கிடைக்கலாம். ஆனால் அவர் சொல்லுவது; “நான் என் நிலையை யாருக்கும் விளக்கவும் மாட்டேன், யார் மீதும் புகார் செய்யவும் மாட்டேன், யாராவது பொதுநலன் கருதி வழக்குத் தொடுத்தால் சரி” என்கிறார்.

ஓவியக் கலையின் வரலாற்று வித்தகர் ஆல்கா பாண்டே, உசேனைப் பற்றி சொன்ன சொல் லோவியம் -

ஓர் உயர்ந்த மனிதர் உசேன். அவருடைய கை வண்ணம், ஓவியக் கலையில் அவரின் ஆளுமை, சுயமாகக் கற்றுத் தேர்ந்த அவரின் அருந்திறன் - இவை ஒப்பிட முடியாதவை. சிற்றின்பம் என்பதைப் பொறுத்தமட்டில் எப்போதுமே இது நம் தத்துவத்தின் கலை, கலாச்சாரத்தின் ஒரு பகுதி யாகும். உசேன் இந்திய மண்ணில் தான் வாழ்ந்தார், இங்குதான் சுவாசித்தார். ஆகவே அவருடைய கலை, அதனுடைய உற்பத்திதான். அன்னாருக்கு எதிரான ஆட்சேபணை, எதிர்ப்பு என்பது அவமான கரமானது” என்கிறார். அவருடைய உழைப்பினால் உருவான படைப்புகள் அனைத்தும் இந்திய ஆன்மாவின் அடையாளங்கள். 

ஆதாரம்: தி இந்து நாளிதழ், உசேன்இன்டர்நெட், டெகல்கா இதழ்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com