நெருக்கம்
சி.விநாயகமூர்த்தி
ஒரே காட்சியை
தூரமும் நெருக்கமும்
இருவேறு விதமாய்ப் படம்பிடிக்கும்
மழைச்சரம் தொங்கவிடும் கானல்
நெருங்க நெருங்க
கண்ணாம்பூச்சி காட்டி மறையும்.
நெருக்கம் என்பது
இருத்தலை மறைத்தலா?
தூரப் பார்வையில் நிலவு
பாட்டி சுட்ட தோசை.
நெருங்க நெருங்க
புதுவுலகம் விரியும்.
நெருக்கம் என்பது
விரிவின் வெளிப்பாடா?
பாலும் பனங்கள்;
பழுதையும் பாம்பு,
தூரப் பார்வையில்.
நெருங்க நெருங்க நிஜம்புரியும்
நெருக்கம் என்பது
உண்மை விளக்கமா?
நெருங்கினால் குளிரும்,
விலகினால் சுடும்,
புதுவகை நெருப்பைக் காதலென்று
வள்ளுவம் சொல்லும்
நெருக்கம் என்பது
முரண் தொடைச் செய்யுளா?
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|