Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
டிசம்பர் 2008
யதார்த்தவாதம் பற்றி நா.வானமாமலை
எஸ்.தோதாத்ரி


பேரா. நா.வானமாலையின் அழகியல் பார்வை பற்றி எழுத வந்த ந.முத்துமோகன் பின் வருமாறு கூறுகிறார்: “நாட்டுப்புற அழகியல் மற்றும் அறவியலின் மிக அடர்த்தியான கூறுகளை நவீனத்துவ உன்னதங்களுக்கு எதிரே நிறுத்தியது. இலக்கிய அழகைத் தாண்டி பண்பாட்டின் மேல்/கீழ் தளங்கள் குறித்த விவாதங்களாக அது வளர்ந்தது. தமிழ்நாட்டுச் சூழலில் நவீனத்துவ/ யதார்த்தவாத விவாதங்களின் நடுவே பேராசிரியர் நா.வானமாமலை நாட்டுப்புறவியலாளராக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது”. (தொடரும் மார்க்சீய விவாதங்கள். ந. முத்துமோகன், பக்.39)

tothathry இந்த மேற்கோளில் யதார்த்தவாதம் பற்றிய தவறுதலான புரிதல் இருக்கிறது. இது தனியாக ஆராயப்பட வேண்டிய விஷயம். இங்கு நா.வா. பற்றி அவர் கூறியது சரிதானா என்று காண வேண்டியுள்ளது. பேரா. நா.வா. அவர்கள் நாட்டுப்புற அழகியலை முன்னிறுத்தி, யதார்த்த வாதத்தை எதிர்த்தாரா என்பதுதான் அந்தக் கேள்வி. பேராசிரியரைப் பற்றி இன்று ஒரு சித்திரம் உருவாகியுள்ளது. அவர் நாட்டுப்புறவியல் ஆய்வாளர் மட்டுமே என்ற சித்திரம் அது. இன்றைய இளம் தலைமுறையினர் அவ்வாறு தான் கருதுகின்றனர். அல்லது அவ்வாறு ஒருசிலரால் போதிக்கப்பட்டுள்ளனர். இது தவறு. பேரா. நா.வா. நாட்டுப்புறவியலுக்கு உயிர் கொடுத்தார் என்பது உண்மை. அது அவரது வாழ்வின் பிந்திய காலத்தில் முக்கியப் பணியாக இருந்தது என்பதும் உண்மை. ஆனால், அவரை இவ்வாறு சுருக்கிக் காண்பது சரியல்ல. பேரா. நா.வா.வின் ஆய்வு முறைபற்றி பேரா. ஆ. சிவசுப்பிரமணியம் எழுதுகிறார்:

“தமிழகத்தில் இப்புதிய விஞ்ஞான ஆய்வு முறையை அறிமுகப்படுத்தி, வழிகாட்டி, வெற்றி நடைபோடும் முதல்வரும் முன்னோடியும், பேரா.நா.வா. அவர்கள் ஆவார். இலக்கியம், வரலாறு, மானுடவியல், நாட்டுப் பாடல், விஞ்ஞானம் ஆகிய கல்வித் துறைகளைத் தனித் தனியே பிரித்து ஒன்றுடன் ஒன்றினைச் சம்பந்தப்படுத்தாது ஆய்வு செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால், பேராசிரியர் நா.வா.வின் ஆய்வு முறை இவை ஒவ்வொன்றையும் தனித்துப் பார்ப்பதில்லை. இவைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து கிடப்பவை. இவை அத்துணையையும் பிணைப்பது எது என்ற அடிப்படை அறிவைப் பெற முயலுகிறது. இத்தகைய அடிப்படை அறிவைத் தரக்கூடியது தான் பேரா. நா.வா. அவர்களின் ஆய்வு முறையாகும்” (23-24) (தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள்: பேரா. நா.வா. மணி விழா மலர்)

பேரா. நா.வா.வின் ஆய்விற்கு அடித்தளமாக உள்ளது. மார்க்சீய இயங்கியல் ஆகும். எனவே, அவரை ஒரு நாட்டுப்புறவியலாளர் என்று மட்டும் காட்டுவது சரியல்ல. அவர் யதார்த்தவாதத்தை எதிர்த்தவரும் அல்ல. யதார்த்தவாதம் பற்றி அவர் என்ன கூறியிருக்கிறார் என்று கண்டால் முத்துமோகன் அவர்கள் எந்த அளவிற்கு ஒரு தவறான சித்திரத்தைத் தருகிறார் என்று விளங்கும். முதலில் அவரது படிப்புகளில் அதிகம் இடம் பெற்றவர்கள் என்ற பட்டியலிட்டால் டால்ஸ்டாய், சார்லஸ் டிக்கன்ஸ், ஜான்கால்ஸ் வொர்த்தி, பெர்னாட் ஷா, ஹோவர்ட் பா°ட், அப்டன் சிங்கிளர் என்ற ஒரு பெரிய வரிசையே உண்டு. இது தமிழ் இலக்கியத்திலும் தொடரும். யதார்த்தவாதம் பற்றி அவர் தெளிவான கண்ணோட்டம் கொண்டவராகவே இருந்தார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் கொள்கை யதார்த்தவாதம் என்று கூறுவதில் அவருக்கு அபிப்பிராய வித்தியாசம் கிடையாது. யதார்த்தவாதம்பற்றி அவர் ஒரு தெளிவான ஞானம் பெற்றவராகவே இருந்தார். யதார்த்தவாதம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் உள்ளவராகவே அவர் இருந்தார்.

அவர் தயாரித்த கலை இலக்கியப் பெருமன்றக் கொள்கை அறிக்கையில் யதார்த்தவாதத்தை அதிகாரப்பூர்வமான கொள்கையாக அறிவித்துள்ளார். அவருடைய முக்கியமான நூலான “மார்க்சீய அழகியல்” என்பதில் யதார்த்தவாதம் என்பதற்கு விரிவான விளக்கம் உள்ளது. முதலில் அவர் மார்க்சீய அழகியல் என்பதனை லெனினது பிரதிபலித்தல் கொள்கை அடிப்படையில் விளக்குகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது இன்றைய பின் நவீனத்துவவாதிகளுக்கு ஒரு அலர்ஜியாகும்.

பிரதிபலித்தல் கொள்கையின் வழிநின்று அகம் - புறம் ஆகியவை இணைந்து உருவாக்குவதுதான் இலக்கியம் கலை என்பது இங்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் பின்னணியில் இலக்கியத்தை விளக்கும்பொழுது யதார்த்தவாதம் பற்றி அவர் விளக்குகிறார். யதார்த்தவாதம் என்பது சமூகத்தை அதன் முரண்பாடுகளை ஆழமாக ஆய்வு செய்வதும், அவற்றினைப் பிரதிபலிப்பதும் ஆகும். அவ்வாறு செய்யும் பொழுது கலைஞர்கள் சமூகத்தினை ஸ்தூலமான ஒன்றாகக் காண்கிறார்கள். மனிதர்களை வகைப்படுத்திச் சித்தரிக்கிறார்கள். இதனை பின்வரும் பகுதி காட்டுகிறது. நா.வா. அவர்கள் எழுதுகிறார்கள்:

“பொன்னீலனின் ‘கரிசல்’, இந்திரா பார்த்தசாரதியின் ‘சுதந்திர பூமி’, ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, அழகிரிசாமி சிறுகதைகளில் வரும்கதை மாந்தர்கள், லெனினுடைய “Concrete man in Concerete environment’ என்ற சூத்திரத்திற்கு உதாரணங்கள். உண்மையான கலைஞன் தனது படைப்பை வாழ்க்கையிலிருந்துதான் தொடங்குகிறான். தான் காணும் மக்களைத்தான், தன்னை ஆகர்ஷிக்கும் மக்களைத்தான் கலைப்படைப்பாக ஆக்குகிறான். புறவயமான, °தூல மான வரலாற்று ரீதியான நிலைமைகளில் வாழும் மக்களை, அவர்கள் வாழும் சமூகத்தின் வலயீநள ஆக அல்லது அவர்கள் வாழும் வரலாற்றுக் காலத் தின் வலயீநள ஆகக் கலைஞன் (Social Types or Historical types) படைக்கிறான்” (மார்க்சிய அழகியல் - பக்.26)

இது யதார்த்தவாதிகள் பேசும் சமூக ஆய்வு, வகைப்பாடான பாத்திரப்படைப்பு ஆகியவற்றை விளக்கும் முறையில் அமைந்த கூற்று ஆகும். இதனை மேலும் விரிவாக விளக்கும் பொழுது அவர் யதார்த்த வாதத்தின் வளர்ச்சியை மூன்றுகட்டமாகக் காண்கிறார். ஒன்று சுபாவ யதார்த்தவாதம். இது ஒரு கலைஞன் தன் சுற்றுப்புறத்தை இயல்பாகக் கண்டு அதனை ஆய்வு செய்வதாகும். இரண்டு விமர்சன யதார்த்தவாதம். இதில் ஆய்வு தொடர்கிறது. ஆனால் கடுமையான சமூக விமர்சனம் இடம்பெறுகிறது. மூன்றாவது சோஷலிச யதார்த்தவாதம். இதில் ஆய்வு உண்டு, விமர்சனம் உண்டு, உழைக்கும் வர்க்கச் சார்பு புதியதாக இடம்பெறுகிறது. வருங்காலம் பற்றிய சிந்தனையும் இடம்பெறுகிறது. இந்த விளக்கத்தை நெல்லை ஆய்வுக்குழு கூட்டம் ஒன்றில் காலஞ்சென்ற பேரா.ராவ் அவர்களுக்கு அளித்ததை நான் கேட்டிருக்கிறேன்.

இதன் தொடர்பாக அவர் சோஷலிச யதார்த்தவாதம் பற்றி அவரது “மார்க்சீய அழகியலில்” விரிவாகக் கூறுகிறார். முதலில் அது ஒருவரது ஆணைக்கு உட்பட்ட யதார்த்தவாதம் என்பதை மறுக்கிறார். அவர் கூறுகிறார்: “சோஷலிஸ்ட் ரியலிசம் ஒரு கலைப்படைப்பு முறை அல்ல என்றும், ஸ்டாலினால் கட்டளையிடப்பட்டு பரப்பப்படும் பிரச்சாரம்தான் என்றும் (அவர்) எழுதினார். பிறநாட்டுக்கலைஞர்கள் மீது சோவியத் நாட்டினர் ஆதிக்கம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கோட்பாடுகள்தாம் சோஷலிஸ்ட் ரியலிசம் என்றும் அவரைப் போன்ற எழுத்தாளர்களும் கூறுகின்றனர்.

உலக எழுத்தாளர்கள் அனைவர் மீதும் கட்டளை போட்டு நிறைவேற்றக்கூடிய திட்டம் சோஷலிஸ்ட் ரியலிசமாம்!.... சோஷலிச ரியலிச எழுத்தாளர்கள் அனைவரும் சோவியத் கட்டளையை எதிர்நோக்கி எழுதுகிறார்களாம்” (பக். 88) “மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோர்களது உலகக் கண்ணோட்டத்தின் செல்வாக்கிலும் மாக்சிம் கார்க்கியின் சோஷலிசப் படைப்பு முறையின் தாக்கத்திலும் இலக்கியம் படைத்தால் அது, ஸ்டாலின் கட்டளைப் படிப் படைப்பதாம் (பக்.89). இவ்வாறு மறுக்கும் அவர் சோஷலிச யதார்த்தவாதத்திற்குப் பல உதாரணங்கள் தருகிறார்.
சோஷலிச யதார்த்தவாதம் என்ன என்பதை விரிவாக விளக்குகிறார். அவர் கூறுகிறார்:

“சோஷலிஸ்டு ரியலிசம் வாழ்க்கையை அதன் புரட்சிகரமான மாறுதல் கதியில் சித்தரிக்கிறது. பழமை மீது புதுமை பெறும் வெற்றிகளைச் சுட்டிக்காட்டுகிறது. இவ்வெற்றிகள் கம்யூனிச சமுதாயமாக மலரும் என்று வருங்கால நிலைமையை, விஞ்ஞான முறையில் யூகம் செய்கிறது” (37).
“முதலாளித்துவ நாடுகளில் முரண்பட்ட வர்க்கங்கள் சமூக அரங்கில் செயல்படுகின்றன. இதில் எந்த வர்க்கத்தின் செயல் வருங்காலத்திற்கு முக்கியமானது, எந்தவர்க்கத்தின் செயல் வருங்காலத்திற்கு முக்கியமற்றது என்பதைக் கண்டு படைப்பாளி விளக்கவேண்டும். வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகளை இனம்காண வேண்டும். (பக். 36)

சோஷலிச யதார்த்தவாதம் இந்தக் கூறுகளைக் கொண்டுள்ளது என்று விளக்கிய பின்னர், அதில் அடங்கியுள்ள மூன்று மரபுகள் பற்றி மிக விரிவாகப் பேசுகிறார். இதில் முதலாவது உள்ளது உலக மரபு. ஒரு சோஷலிச யதார்த்தவாதி உலக இலக்கியம் அனைத்தையும் தன்வயப்படுத்திக்கொள்கிறான். மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோர் உலக இலக்கியத்தை எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்று கூறுகிறார். இதில் ஒரு சுவையான பகுதியும் உள்ளது. அவர் எழுதுகிறார்:

“இந்திய இலக்கியம் மார்க்சின் காலத்தில் ஐரோப்பிய மொழிகளில் அறிமுகமாகவில்லை. மாக்° முல்லர் மொழி பெயர்த்த பின்னரே சம்ஸ்கிருத நூல்களின் பொருளடக்கம் ஐரோப்பாவில் பரவிற்று. தமிழ் இலக்கியம் பற்றி மார்க்சும், எங்கல்சும் அறிந்திருக்க முடியாது. ஐரோப்பிய மொழி களில் எதிலும், சிலப்பதிகாரமோ, திருக்குறளோ, கம்ப ராமாயணமோ மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் நிச்சயம் மார்க்ஸ் அல்லது எங்கல்ஸ் அது பற்றிய ஒரு மார்க்சீய விமர்சனம் எழுதியிருப்பர்” (பக். 85)

உலக இலக்கிய மரபினை ஒரு சோஷலிச யதார்த்தவாதி எவ்வாறு உட்கிரகிக்கிறான் என்பதற்கு ஜீவாவை உதாரணம் காட்டுகிறார்: “இவை அனைத்தையும் ஜீவா அறிந்து உலக இலக்கிய மரபின் முற்போக்கான கூறுகளைக் கிரகித்துக் கொண்டார். ஒவ்வொரு காப்பியத்திலும் வரலாற்றுக்காலம், சமூக அமைப்பின் வர்க்க அமைப்புகள், அவற்றுள் செயல்படும் வர்க்கங்கள், அவ்வர்க்கங்களின் பிரதிநிதி களையும் அவர்களின் தன்மைகளையும் பிரதிபலிக்கிற கலைப் படிமங்கள் ஆகியவற்றை எல்லாம் அவர் நுணுகி ஆராய்திருந்தார். எல்லா வகையான இலக்கியப் போக்குகளின் தன்மைகளையும் உணர்ந்திருந்தார்” (பக்.86)

இரண்டாவதாக அவர் குறிப்பிடுவது தேசிய மரபு என்பது. இது அந்தந்த நாட்டின் இலக்கிய மரபினை சுவீகரித்துக் கொள்ளும் செயல் ஆகும். இதுபற்றி அவர் கூறுகிறார்: “ஒவ்வொரு நாட்டிலும் வரலாற்று நிலைமைகள், சமூக வர்க்கங்களின் வளர்ச்சியில் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் வளர்ச்சி எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. எந்த வளர்ச்சிக் கட்டத்தில், எந்த வர்க்க உறவு நிலையில் ஒரு நாடு இருக்கிறதோ அதற்கு தக்க இலக்கியம் தோன்றும். தேசிய இலக்கியம் சோஷலிச ரியலிசக் கொள்கைக்கு முரண்பட்டதன்று” (பக். 91)

அடுத்தபடியாக அவர் சுட்டிக்காட்டுவது சோஷலிச ரியலிச மரபு. சோவியத் இலக்கியத்தில் உள்ள சோஷலிச ரியலிசத்திற்கும், முதலாளித்துவ நாடுகளில் உள்ள சோஷலிச ரியலிசத்திற்கும் வேறுபாடு உள்ளது என்று அவர் கூறுகிறார். இவை இரண்டும் இணைந்ததுதான் சோஷலிச ரியலிச மரபு என்பது. இதற்கு பல சோவியத் நாவல்களை அவர் உதாரணம் காட்டி விளக்குகிறார்.இவை அனைத்தும் யதார்த்தவாதம் பற்றி அவர் கொண்டிருந்த பார்வையைத் தெளிவாகக் காட்டுகின்றன. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வில் அவர் அவருடைய வாழ்நாளின் பிந்திய காலகட்டம் முழுவதிலும் ஈடுபட்டார் என்பது உண்மை. அதனையும் கூட அவர் உழைக்கும் மக்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாகவேதான் கண்டார்.

ஒரு வகையில் அப்பாடல்கள் யாவும் சமூக உளவியலில் யதார்த்த வாதப்போக்கினைப் பிரதிபலிக்கும் பாடல்கள்தாம். எனவே, அவர் நாட்டார் வழக்காற்றியல் பக்கம் நின்றார் என்று கூறுவது சரியல்ல. அவரது பார்வை ஒட்டுமொத்தமானது என்று கூறுவதுதான் சரியானது ஆகும்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com