Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
டிசம்பர் 2008
நூல் மதிப்புரை
கவிஞாயிறு - தாராபாரதி கவிதைகள்


tharabarathi “வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்றுவரும்”

என்ற நம்பிக்கைக் கவிதையால் நாடறியப்பட்ட கவிஞாயிறு தாராபாரதியின் மொத்தக் கவிதைகள் முழுமையையும் வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி, தொகுத்து வெளியிட்டிருக்கிறார் ‘இலக்கிய வீதி’ இனியவன்.

“உயிரே! மெய்யே!
உயிர்மெய்யாய் இருப்பவளே!
தமிழே, உனக்கு
உயிர் - மெய்யாய் இருக்கிறதா?”

என்று மொழி குறித்த சோகத்தைக் கூட அழகாக வெளிப்படுத்துகிறார்.

“குழந்தையின் நாக்கிலில்லை
கோயில்மணி நாக்கிலில்லை
அழகுதமிழ் தீர்ப்பிலில்லை
அலுவலகக் கோப்பிலில்லை” என்று வேதனைப்படுகிறது.

“தமிழறியும் பெருமாளும்
தமிழ்க் கடவுள் முருகனும்
அமுதத் தமிழ் கேட்டால்
ஆசி தர மறுப்பாரா?”

ஆலயத்திலும் இல்லாமல் போன தமிழ் பற்றி, அழுத்தமாகக் கேள்வியை எழுப்புகிறார். தமிழின் அழகு, தமிழின் தொன்மை, தமிழின் பெருமை பற்றியெல்லாம் புதுமைமிக்க மரபுத் தமிழில் எழுதுகிறார். ஆயினும் ,ஆங்கில மொழியில் கற்பதையோ... அறிவியல் மொழியாக- கணினி மொழியாக தமிழ் பரிணமிக்க வேண்டிய அவசியத்தையோ மறுக்காத ஓர் அறிவியல் அணுகுமுறை தென்படுகிறது.

தந்தையர் நாடு குறித்த கவிதைகளில் ஒருமைப்பாடு அழுத்தமாக உணர்த்தப்படுகிறது. மராட்டியத்தில் கலவரம், குஜராத்தில் கலவரம், வட இந்தியாவில் கலவரம், கர்நாடகத் தில் கலவரம் என்று இந்திய தேச ஒருமைப்பாடே சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாகியிருக்கிற சமுதாயச் சூழலில், இவரது கவிதைக்குரலில் ஒருமைப்பாடு தேசப்பற்று மிக்கதாக இருக்கிறது.

“கன்னிக்குமரியின்
கூந்தலுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்
கம்பனின் அமுதக்
கவிதைகளுக்கு
கங்கை அலைகள் இசையமைக்க...
காளிதாசனின்
தேனிசைப் பாடல்கள்
காவிரிக் கரையில் எதிரொலிக்க....”

ஒருமைப்பாட்டை வெறும் கருத்தாக முன்வைக்காமல், கற்பனைநயமும், மொழியழகும், காவியச் செறிவுமிக்க அழகுக் கவிதையாக முன்வைக்கிறார். தாராபாரதியின் கவிதைகளில்... எளிமையும், இலக்கியமும் நவீனத்துவமும், புதுக் கவிதைக்குரிய செறிவும், சொற்புதுமைத் தெறிப்பும் கைகோர்த்திருக்கிற புதுமையை உணர முடிகிறது.

வாசிக்கிறபோது ஏற்படுகிற இனிய அனுபவம், முற்றிலும் புதுமையாய் இருக்கிறது. கவிஞர் தமிழ் ஒளி, வா.செ.குழந்தைசாமி, தணிகைச் செல்வன், நவகவி போன்ற கவிஞர்களின் கவிதைகளில் காணப்படுகிற மரபும், புதுமையும் கலந்த இனிய சங்கமப் பேரழகு, கவிஞாயிறு தாராபாரதியின் கவிதைகளிலும் ததும்புகிறது. இது ஒரு வித்தியாசமான சங்கமம். இந்த சங்கமப் புதுமையே ஒரு தனி அழகியலாக மலர்கிறது. தனிச் சுவை தருகிறது.

ஏறக்குறைய நானூறு பக்கங்கள் கொண்ட பெரிய தொகுப்பாக இருந்தபோதிலும், முழுமையாக வாசிக்க இயலுகிற அளவுக்கு, சுவையும்,அழகும், புதுமையும் கவிதைகளில் பொங்குகிறது. கவிதை வாசிக்கிற அனுபவத்தின்போது, கவிஞரின் கடலளவிலான சொல்வளம், நம்முன் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அமரர் கவிஞாயிறு தாராபாரதியின் கருத்துகளும், சிந்தனைகளும், ஏழை எளிய பாட்டாளி மக்களின் நலன் சார்ந்தே இயங்குவது போற்றுதலுக்குரியது. இலக்கிய வீதி இனியவன் அவர்கள் கவிதை நூலை அழகாக அச்சிட்டு, கச்சிதமான ஓவியத்திறத்துடன் வெளியிட்டிருப்பதைத் தனியாக பாராட்டலாம்.

வெளியீடு :இலக்கியவீதி, று-149, பூங்கா சாலை, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 600 101. விலை ரூ. 250
- மேலாண்மை பொன்னுச்சாமி

ஸ்ரீதர கணேசனின் ‘மீசை’ சிறுகதைத் தொகுப்பு

நாவலாசிரியராக ஏற்கெனவே தமிழில் அறியப்பட்ட முற்போக்கு இலக்கியவாதியான ஸ்ரீதர கணேசன் “மீசை” தொகுப்பின் மூலம் சிறுகதைப் படைப்பாளியாகவும் வெளிப்பட்டிருக்கிறார். வறுமையும், கணக்குப் பாடமும் வாட்டி வதைத்து அச்சுறுத்த... சினிமா போSடருக்கு பசை ஒட்டும் குழந்தைத் தொழிலாளியாகிற மூக்கன், (முதற்சிறுகதை) நம் மனசைப் பிசைகிறான்.

பாத்திரக் கடையில் வேலை பார்க்கிற சிறுவனின் பூனை ரோம மீசை, கடை முதலாளியின் ஜாதீயக் கண்ணை உறுத்துகிறது. ‘மீசையை மழித்தால்தான் வேலை’ என்ற உத்தரவு. சித்தாள் வேலைக்குப் போகிற சிறுவனின் போர்க்குணம். உயர்சாதியினரின் கோயிலுக்குள் நுழைய முடியாத தலித் சிறுவன். மனம் கொதிக்கிறான். நேர்த்திக் கடனாக கிடாய் ஒப்படைக்க வந்தவன். கழுத்துக் கயிறை வேண்டு மென்றே நழுவவிட்டு, கோயிலுக்குள் ஓடிய கிடாயைப் பிடிக்க ஓடுகிற அவனது சாமர்த்தியம்.

டீக்கடைக்காரனின் வளர்ப்புக் கிளியை தட்டிப் பறிக்கிற இன்°பெக்டரை பழி தீர்த்து தண்டிக்கிற டீக் கடைக்காரனின் மகள். இயல்பான யதார்த்தமான திருப்பம். அம்மாவின் புருஷன்கள் சிறுகதை ரொம்ப வித்தி யாசமான அனுபவம். மகளின் பதிலடி அதிர்ச்சி தருகிறது. நாயக்கரின் காமவெறிக்கு தலித் பெண் தருகிற தண்டனை நியாயமானது. ‘ரசிகனைத்தேடி’ வித்தியாச மான சிறுகதை. அடித் தட்டுமக்களில் முளைக்கிற கலைஞனின் இசையாற்றல்.

இத்தொகுப்பிலுள்ள முப்பத்தாறு சிறுகதைகளும், அடித்தட்டு மக்களின் வறுமையையும், அவலத்தையும், மனித நேயத்தையும், ரோஷமிக்க போர்க்குணத்தையும், சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கிற சாதீய ஆதிக்கத் தையும், தலித் மக்களின் எழுச்சியையும் உணர்த்துகின்றன. சிக்கலற்ற, பகட்டற்ற, எளிமையான மொழிநடையும், வட்டாரச் சொற்களும், கதைகளுக்குக் கூடுதல் நம்பகத் தன்மையைத் தருகின்றன. நாவலாசிரியராக வென்றவர், சொற்செறிவுமிக்க நடை தேவைப்படுகிற சிறுகதையிலும் வெல்வது ஆச்சரியமான ஆரோக்கியம். ஸ்ரீதரகணேசன், எளிய மக்களின் வாழ்வைப் பேசுகிற சிறுகதைப் படைப்பாளியாக உயர்கிறார்.

வெளியீடு: “பாலம்” இ/7, பாரத் அடுக்ககம்,ஆர்.வி. நகர், அண்ணாநகர் கிழக்கு, சென்னை - 600 102. விலை: ரூ. 100
- அன்னபாக்கியன்

ஒபாமா (வாழ்க்கை வரலாறு)

செ.ச.செந்தில்நாதன்

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப் பட்டுள்ள ‘பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு, அரசியல் நிலைப்பாடுகள், இவற்றுடன் அவர் எழுதிய நூலிலிருந்து உலக அரசியல் குறித்த கட்டுரையின் சில பகுதிகள்’ என்று இந்நூல் பற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக ஒரு கறுப்பு இனத்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது அமெரிக்க வரலா ற்றில் குறிப்பிடத்தக்க ஒரு புதிய மாற்றம்தான்.

ஏகாதிபத்தியம், பிறநாட்டின் மீது ஆக்கிரமிப்பு யுத்தம், பிற நாட்டின் இறையாண்மையிலும் சுதந்திரத்திலும் கைவைப்பது, உலகப் போலீஸ்காரனாக நடந்து கொள்வது - இவையெல்லாம் அமெரிக்க அரசின் கொள்கைகளாக - செயல்களாகத் தொடர்பவை. ‘மாற்றங்கள்’ வருமென்று ஒபாமா உறுதியளித் துள்ளார். அவை எத்தகைய மாற்றங்கள், எந்த அளவு மாற்றங்கள் என்பதை அடுத்து பார்ப்போம்.

வெளியீடு : ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 600 024. விலை : ரூ. 60
- தி.வ.

கு.சின்னப்ப பாரதியின் இலக்கியப் பணிகள் குறித்த அகில இந்தியக் கருத்தரங்க மலர்

தமிழ்நாட்டின் ஓர் இடதுசாரி இலக்கிய கர்த்தா நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் படைப்புகள் குறித்த அகில இந்திய கருத்தரங்கம் அண்மையில் இரண்டு தினங்கள் நாமக்கல்லில் நடைபெற்றதையொட்டி அன்று விழா மலராக வெளியிடப்பட்ட ஓர் இலக்கிய மலர் இது. சின்னப்ப பாரதியின் இலக்கியப் படைப்புகள், படைப்புப் பணிகள் பற்றிய பல பிரபல அறிஞர்களின், எழுத்தாளர்களின், திறனாய்வாளர்களின், பத்திரிகையாளர்களின் மேற்குவங்க ஜனநாயக எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கப் பொதுச் செயலாளரின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இம்மலரில் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாடு, கர்நாடகம், மேற்குவங்கம், டெல்லி, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த படைப்பாளர்கள் பலர் இம்மலரில் பங்கேற் றுள்ளனர். கு.சி.பா.வின் நாவல்களைப் பாராட்டி மார்க்சி°ட் பெருந்தகை இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் எழுதிய “On Chinnappa Bharathi’s Novels” என்கிற கட்டுரையும் இந்த மலரில் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்க நாவலாசிரியர் பெர்ல் எஸ். பக்ஸ் எழுதிய “நல்ல நிலம்” என்கிற சீன விவசாயி பற்றிய நாவலும் கு.சி.பா. வின் ‘தாகம்’ நாவலும், புகழ்வாய்ந்த பஞ்சாபி எழுத்தாளர் யஷ்பால் நாவல்களும் கு.சி.பா.வின் நாவல்களும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ள கட்டுரைகள் மிக நுட்பமான ஆய்வுத்தன்மையனவாக உள்ளன. கு.சி.பா. வின் நாவல்களில் வெளிப்படும் மிக உயர்ந்த இலக்கியக் கோட்பாடாகிய சோசலிச யதார்த்தவாதம், அவரின் நாவல்களுக்குள்ளி லிருந்து எடுத்து மிகச் சிறப்பாய் விளக்கப் பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் சார்பு இலக்கியமாகிய கு.சி.பா.வின் படைப்புகள் இவ்வாறு பல கோணங்களிலிருந்தும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
- தி.வ

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com