Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
டிசம்பர் 2008
பெண்மை என்றொரு கற்பிதம்

பண்படுத்தும் குடிசைத் தொழில்
ச.தமிழ்ச்செல்வன்

கல்விச்சாலைகளை அடுத்து நாம் குடும்பம் என்னும் மிக முக்கியமான பண்பாட்டுத் தொழிற்சாலையைப் பார்க்கலாம். கல்விச்சாலைகள், மதங்கள், மீடியா போன்றவையெல்லாம் அளவில் பெரிய பண்பாட்டு நிறுவனங்கள் போலத் தோற்றம் தருபவை. குடும்பம் அவ்விதமாகப் பார்த்தால் அளவில் சிறியதுதான். ஆனால் பண்படுத்தும் பணியை மிக நுட்பமாக குடிசைத் தொழிலாகச் செய்கிற இடம் குடும்பம். குடும்பம் என்பதை (socializing unit) குழந்தைகளை சமூக வயப்படுத்தும் மையம் என்பார்கள். நாம் வாழும் சமூகத்துக்கேற்ற மனிதர்களாக மனுஷிகளாக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் இடமாகவே குடும்பங்கள் இருப்பதால்தான் என்ன விதமான ஆட்சி மாற்றங்கள் ஆட்சிமுறை மாற்றங்கள் நிகழ்ந்த போதும் குடும்பங்கள் தொடர்ந்து அப்படியே நீடிக்க ஆளும் வர்க்கத்தாரால் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

lady குடும்பத்தின் மைய அச்சாக இருப்பது பெண் என்கிற உணர்வு அழுத்தமாக நம்மிடம் உள்ளது. ஒரு வீடு என்கிற கட்டிடம் குடும்பமாக மாறுவது அந்த வீட்டில் பெண்/பெண்கள் இருக்கும்போது தான் என்பார்கள். ஆகவே வர்க்க பேதமுள்ள- சாதி பேதமுள்ள - இச்சமூகத்திற்கு ஏற்ற சாதி மற்றும் வர்க்க மனிதர்களாக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பை பெண்களின் தலையில் ஏற்றி வைத்திருக்கிறது சமூகம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப் பொறுப்பைப் பெண் பிசகாமல் நிறைவேற்றி வருகிறாள். அதனால்தான் ஆம்பளை கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்திட்டாலும் கண்டு கொள்ளாமல் விடுகிற சமூகம் பெண் விஷயத்தில் எந்த சலுகையும் கொடுப்பதில்லை.

தர்மங்கள், நியாயங்கள், சரி-தப்புகள், நீதி-நேர்மைகள் என எல்லாவற்றையும் அவள்தான் கட்டிக் காத்து, வரும் தலைமுறைக்கும் எடுத்துச்சொல்ல வேண்டியவளாக, எடுத்துச்செல்ல வேண்டியவளாக இருக்கிறாள். எதையும் மீற முடியாதவளாக மீறக் கூடாதவளாக பெண் கட்டமைக்கப்படுகிறாள். அதற்காகத்தான் இந்தப்பெண்மை, தாய்மை என்கிற எல்லா இழவுகளும் அவள் தலையில் ஏற்றப்பட்டுள்ளன ஆண்களின் தலையிலும்தான்.

இந்த இடத்தில், மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ என்கிற சிறுகதையை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். திருமணமாகிப் புகுந்த வீட்டுக்கு வரும் ஒரு மருமகளைப்பற்றிய கதை இது. அந்த வீட்டில் எல்லாம் மாமியார் வச்ச சட்டம்தான். இன்னைக்கு அரைப்படி அரிசி பொங்கணுமா கால்படி வடிச்சா போதுமா என்பது உட்பட மாமியாரிடம் கேட்டுத் தான் செய்ய வேண்டும். புருசனோடு பேசுவது கூட மாமியார் அனுமதியோடுதான். மருமகளின் ஒவ்வொரு அசைவும் மாமியார் விருப்பப்படிதான். ஆரம்பத்தில் மருமகள் மனசில் என்ன இது கொடுமையா இருக்கே என்று தோன்றினாலும் நாள் ஆக ஆக இதுதானே நம்ம வீட்டு வழக்கம் என்று ஆகி விட்டது.

அந்த சமயம் உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தல் வந்தது. பல சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பூனைச்சின்னத்துக்கும் கிளிச்சின்னத்துக்கும்தான் சரியான போட்டி. மருமகள் தன்னுடைய ஓட்டு யாருக்கு என்று மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்த போது மாமியார் வந்து “என்ன யோசனை பலமா இருக்கு உன்னுடைய ஓட்டு கிளிச்சின்னத்துக்குத் தான் ஒண்ணும் யோசிக்க வேண்டாம்” என்று சொல்லி விட்டாள். மாமியார் அப்படிச்சொன்னா மறுகணமே மருமகள் தன்னுடைய ஓட்டு பூனைக்குத்தான் என்று அழுத்தமாக முடிவு செய்து விட்டாள். ரகசிய வாக்குத்தானே. யாருக்குப் போட்டோம் என்று மாமியாருக்குத் தெரியவா போகிறது என்று தைரியமாக முடிவு எடுத்தாள்.

இடையிடையே மாமியார் உன் ஓட்டு யாருக்குடீ என்று கேட்கும்போதெல்லாம் ‘நீங்க சொன்னபடி கிளிக்குத்தான் அத்தே’ என்று சிரிப்போடு பதிலும் சொல்லி விட்டாள். கடைசியில் தேர்தல் நாளும் வந்தது. காலையிலேயே மருமகள் ஓட்டுப் போடக் கிளம்பி விட்டாள். மாமியார் ‘கிளிச்சின்னம் ’என்று ஒரு உறுமலோடு மருமகளை அனுப்பி வைத்தாள். ஒருநாளும் இல்லாத உற்சாகமும் மகிழ்ச்சியும் மருமகளின் நடையில் துள்ளியது. வாழ்க்கையில் முதல் முறையாக மாமியாருக்கு எதிராக வாக்களிக்கப்போகிறோம் என்கிற சந்தோசம் அது. சுட்டு விரலில் மையிட்டு வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு மறைவிடத்துக்குப் போனாள்.

வாக்குச் சீட்டில் ஒவ்வொரு சின்னமாகப் பார்த்துக்கொண்டே வந்தாள். கிளிச்சின்னத்தின் மீது பார்வை பதிந்ததும் கிளி சிறகடித்தது. கிளிச்சின்னம் என்கிற மாமியாரின் உறுமல் பின்புறமிருந்து கேட்டது. கிளியைத்தாண்டி அவள் கை கீழே நகரவில்லை.அப்படியே தலை சுற்றுவது போலிருந்தது. கீழே பூனைச்சின்னம் இருப்பதை மயக்க நிலையில்தான் கவனித்தாள். அவளை அறியாமலேயே கை அதுபாட்டுக்கு கிளிச்சின்னத்தில் முத்திரையைப் பதித்து விட்டது. வாக்குச்சீட்டை உள்ளே போட்டு விட்டு வெளியே அவசரமாக ஓடிவந்துவிட்டாள். இதுதான் அக்கதையின் சுருக்கம்.

பெண்களின் மனநிலையை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் சிந்தனை மற்றும் பண்பாட்டு மேலாதிக்கத்துக்குத் தன்னையறியாமலேயே கட்டுண்டு கிடக்கும். பாட்டாளி வர்க்கத்தின் மனநிலைக்கும் இக்கதை பொருந்தும். அவள் நினைத்தாலும் அவளால் மீற முடியாத தளைகளுக்குள் பெண் காலம் காலமாகக் கட்டப்பட்டிருக்கிறாள். பக்தி, குடும்பநலன், வீட்டுக்கு ஆகாது,பிள்ளைகளுக்கு நல்லது, அவருக்கு நல்லது என்கிற வளையத்துக்குள் வசமாக சிக்க வைக்கப்பட்டிருக்கிறது பெண் மனம். மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே வீட்டினில் எம்மிடங்காட்ட வந்தார் என்று பாரதி சொன்னது போல பெண் வசக்கப்படுகிறாள் குடும்பத்தில்.அவள் வசங்கும் காலம் என்று ஒரு குறிப்பிட்ட பருவத்தை மட்டும் சொல்லி விட முடியவில்லை. பிறந்ததிலிருந்து சாகும் வரை அவள் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெற்ற மக்கள் வீட்டிலும் என வசக்கத்தான் படுகிறாள். சகல ‘தர்மங்’களையும் நம்பிக்கைகளையும் சுமக்க வசக்கப்படுகிறாள்.

ஆனால் அதே சமயம் குடும்பம் எந்த மாற்றத்துக்கும் ஆளாகாமல் அப்படியே தொடர்வதாகச் சொல்ல முடியாது. சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் குடும்பத்துக்குள் தொடர்கிற பண்பாட்டு அசைவுகள் மீதும் தாக்கம் செலுத்தி வந்துள்ளன. கணவன் இறந்தால் அவனோடு மனைவியும் எரிந்து சாம்பலாகிற பண்பாடு இந்தியக் குடும்பங்களில் -குறிப்பாக வட மாநிலங்களில் - இருந்து வந்தது. அதற்கு எதிரான சமய மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் பல போராட்டங்கள் நடத்தின.ராஜாராம் மோகன் ராய் போன்றவர்களின் முன்முயற்சியால் பிரிட்டிஷ் அரசு பெண்களைக் கொலை செய்யும் இந்து சமயச் சடங்கைத் தடை செய்து சட்டம் பிறப்பித்தது. அச்சட்டம் குடும்ப வழக்காக மாறியிருந்த அச்சமய வழக்கை நடைமுறை யிலிருந்து அழித்தது. அதையும் மீறி இன்றைக்கும் சதியைக் கொண்டாடும் இந்துத்வ மனநிலையை - மீண்டும் நம்மை அந்தக்காலத்துக்கு அழைத்துச் செல்ல முயலும் சக்திகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழ்ப்பண்பாட்டில் சதி கிடையாது. ஆனால் உடன்கட்டை ஏறும் பழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததற்கான இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டு ஆதாரங்களும் நாட்டார் தெய்வ மரபுகளும் இருக்கின்றன. சதி என்பது நிர்ப்பந்தத்தால் மதச் சடங்காக நிறைவேற்றப்பட்டது. அப்பெண் மறுத்தாலும் தூக்கி நெருப்பில் போட்டு விடுவார்கள். ஆனால் உடன்கட்டை அப்படியல்ல. கைம்மை வாழ்க்கையின் கொடுமையை விடக் கணவனோடு சாவது மேல் என்கிற சமூக நிர்ப்பந்தம் இருந்ததால் பெண்கள் தாமே சென்று கணவன் உடலோடு உடன்கட்டை ஏறினர். அந்த அளவுக்கு ஒரு சிறு வேறுபாடு. அது தலைக்கற்பு என்று போற்றும் மனநிலையும் இருந்துள்ளது.

பூதப்பாண்டியன் மறைவை ஒட்டி அவனது தேவி உடன்கட்டை ஏறப்போனது பற்றி அதைத் தடுக்க முயன்ற சான்றோர் பற்றி தேவி பெருங்கோப்பெண்டு பாடுவதுபோல அமைந்த பல்சான்றீரே பல்சான்றீரே என்கிற புறப்பாடல் பேசுகிறது. பரவலாக தமிழகத்தில் காணப்படும் தீப்பாஞ்ச அம்மன், தீப்பாஞ்ச மாலை கோவில்களெல்லாம் இப்படி உடன்கட்டை ஏறிய பெண்களின் நினைவைப் போற்றும் அடையாளங்கள்தாம். ராமேஸ்வரம் பக்கம் அக்கா மடம், தங்கச்சி மடம் இரண்டு ஊர்களுமே உடன்கட்டை ஏறிய இரு சகோதரிகளின் நினைவைப் பேசுபவை தானே. ஆகவே கணவர் இறந்தால் தானும் சாகணும் என்கிற சிந்தனை இந்தியக் குடும்பத்துக்குள் இயல்பான ஒன்றாக இருந்து வந்தது சட்டத்தின் மூலமும் இயக்கங்களின் மூலம் துடைக்கப்பட்டது.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com