Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
டிசம்பர் 2008
தீண்டாமை - சாதி ஒடுக்குமுறை ஒழிப்புப் போராட்டங்கள் இந்தியாவெங்கும் எதிரொலிக்கட்டும்
பி.சம்பத்


சாதிய பாரபட்சம் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட இயக்கம்’ (K.V.P.S) எனும் ஆந்திர மாநில அமைப்பின் 10 ஆவது ஆண்டு விழாச் சிறப்பு மாநாடு ஆந்திராவில் ஐதராபாத்தில் அக்டோபர் 16 அன்று சுந்தரய்யா விஞ்ஞான பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி.சம்பத், ஆந்திர அமைப்பின் அழைப்பினை ஏற்று மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். சம்பத்தின் ஆங்கில உரையை எஸ்.வெங்கடேஸ்வரலு தெலுங்கில் மொழி பெயர்த்தார்.

K.V.P.S அமைப்பின் ஆந்திர மாநிலப் பொதுச் செயலாளர் ஜான்வெஸ்லி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் இவ்வமைப்பின் துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளருமான பி.வி.ராகவுலு நிறைவுரையாற்றினார். மாநிலம் முழுவது மிருந்து 800க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் பி.சம்பத் ஆற்றிய உரை:

sampath ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் நிலப்போராட்டங்களிலிருந்தும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களிலிருந்தும் நாங்கள் மிகுந்த உத்வேகம் பெற்றுள்ளோம். ஆந்திர மாநில சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிரான போராட்ட அனுபவங்களும் நீங்கள் அதற்கெனவே உருவாக்கியுள்ள அமைப்பும் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை மற்றும் அனுபவங்களே தமிழ்நாட்டில் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி” என்ற அமைப்பு உருவாக அடிப்படையாக அமைந்தன.

சாதியம் என்பது இந்திய உபகண்டத்தின் தனித்துவமான சமூகப் பிரச்சனையாகும். தொழில் அடிப்படையில் சாதி என்ற முறையில் இந்திய உற்பத்தி முறையுடனும் சுரண்டலுடனும் பின்னிப்பிணைந்து உருவாக்கப்பட்டிருப்பது இந்தச்சாதி அமைப்பாகும். துவக்கத்தில் வர்க்கமே சாதியாக இருந்து படிப்படியாக மாற்றங்களால் இன்று சாதிக்குள் வர்க்கங்களும், வர்க்கத்தில் சாதிகளுமான பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. நாட்டின் இறையாண்மையைக் காக்க மக்களை ஒன்றுபடுத்துவது என்றாலும் சமூக மாற்றத்திற்காக உழைக்கும் மக்களை ஒன்று திரட்டுவது என்றாலும் சாதி ஒடுக்குமுறை ஒரு பெரும் தடையாக உள்ளது என்பதை அனுபவபூர்வமாகப் பார்க்க முடிகிறது.

இந்திய சாதி அமைப்பு படி வரிசை போன்றது. ஒவ்வொரு சாதிக்குப் பின்னாலும் மேல் சாதிகளும், கீழ்ச்சாதிகளும் உள்ளன. எனவே, ஒரு சாதி மேல் சாதிகளை எதிர்த்துப் போராடுகிறபோதே கீழ்ச்சாதிகளை அடக்கிப் பெருமை கொள்ளவும் செய்கிறது. இத்தகைய பெருமை கொள்ளும் வாய்ப்பு ஒவ்வொரு சாதிக்கும் இருக்கும்போது அத்தகைய பெருமை கொள்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லாத சாதிகளாக தலித் சாதிகள் உள்ளன. வர்ணாசிரம சாதி அமைப்பிற்கு வெளியே தான் பஞ்சமர்களான தலித்துகள் வைக்கப்பட்டுள்ளனர். சாதி அமைப்பிற்கு வெளியே மட்டுமல்ல தலித்துகள் ஊருக்கும் வெளியே தான் சேரிகளில் வாழ வேண்டிய நிலை இன்றளவும் உள்ளது. ஆம். சாதி அமைப்பில் மொத்த கொடுமைகளையும் சுமப்பவர்களாக தலித்துகள் உள்ளனர்.

தீண்டாமை என்பது, சாதி அமைப்பு இவர்களுக்குக் கொடுத்துள்ள கொடூரமான தண்டனையாகும். தலித்துகளில் 95 சதவீதம் பேர் நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளிகள் என்ற முறையில் தீண்டாமையை ஒழிப்பது ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் கடமையாகவும் உள்ளது. பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் மிக கணிசமானவர்கள் உழைப்பாளிகள் உள்ளனர். இதர சாதிகளிலும் கூட உழைப்பாளிகள் உள்ளனர். எனவே, உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை நிலைநாட்ட தீண்டாமை ஒழிப்பு முன் தேவையாகவும், முன்னுரிமைக் கடமையாகவும் உள்ளது. கூடவே சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் இணைத்து நடத்தி சாதி அமைப்பைத் தகர்ப்பதன் மூலமே மக்கள் ஒற்றுமை, உழைக்கும் வர்க்க ஒற்றுமை போன்ற கடமைகளை நிலைநிறுத்த முடியும்.

தீண்டாமை வடிவங்களும், போராட்டங்களும்

இந்தியாவின் பல மாநிலங்களிலும் தீண்டாமை பல வடிவங்களில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகள் மூலம் 22 மாவட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தீண்டாமை வடிவங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளோம். தேநீர் கடைகளில், பொதுப்பாதைகளை பயன்படுத்துவதில், ஆலய வழிபாட்டில், சலவையகங்களில், சலூன்களில், கிராமப் பொதுச் சொத்தைப் பங்கிடுவதில், ரேசன் கடைகளில், தபால்கள் வழங்குவதில், அரசு அலுவலகம் அமைப்பதில், பள்ளிக் கூடங்களில், பொது மயானத்தில், தனி மயானத்திற்கான பாதையில், அரசு நிர்வாக அணுகுமுறையில், காவல்துறை செயல்பாட்டில் என 163க்கும் மேற்பட்ட தீண்டாமை வடிவங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இன்னும் கண்டறியப்படாத ஏராளமான தீண்டாமை வடிவங்கள் இருக்கக் கூடும்.

இவற்றை ஆய்வு செய்வதன் மூலமே கண்டறிய முடியும். தலித் மக்கள் மட்டுமல்ல அவர்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளும் அமுக்கப்பட்டுள்ளன. தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு குற்ற உணர்வு இல்லை. இதை அனுபவிக்கும் தலித்துகளோ நீண்ட நெடுங்காலமாக இதுவே வாழ்க்கையாக இருப்பதால் உணர்வுகள் மரத்துப்போய் உள்ளனர். சமீபகாலமாக தலித்துகளிடையே எழுச்சி ஏற்பட்டு வருவது வரவேற்கத்தக்க மாற்றமாகும். சமீபத்தில் உத்தப்புரம் என்ற மதுரை மாவட்டக் கிராமத்தில் தலித்துக்கள் பொதுப்பாதைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் தீண்டாமைச் சுவர் இருப்பதை கண்டறிந்தோம். ஒரு கிராமத்தில் தலித்துக்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது என்ற கொடுமையும் நிலவுகிறது.

ஆய்வில் கண்டறிந்த தீண்டாமை வடிவங்களை அரசின் கவனத்திற்கும், பத்திரிகை, டி.வி. மூலம் மக்களின் கவனத்திற்கும் கொண்டு சென்று களையுமாறு வற்புறுத்தி னோம். அரசு நிர்வாகம் தலையிடாத நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில கிராமங்களைத் தேர்வு செய்து தீண்டாமை ஒழிப்பு நேரடி போராட்டங்களில் இறங்கினோம். தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளில் 267 நேரடி நடவடிக்கைகள் மேற்கொண்டோம். சில கிராமங்களில் தீண்டாமையை முற்றிலும் ஒழிக்க முடிந்தது. பல கிராமங் களில் தற்காலிக வெற்றி கிடைத்தது. அங்கெல்லாம் நிரந்தர வெற்றிக்கு தொடர் கவனம் செலுத்தி வருகிறோம். பல போராட்டங்களில் தலித் அமைப்புகளுடன் இணைந்து அல்லது ஏக காலத்தில் நேரடி நடவடிக்கை களில் ஈடுபட்டு உள்ளோம்.

திராவிட இயக்கம் சாதிக்காததை....

தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. பெரியார் பாதையில் நடைபோடுவதாகக் கூறிக் கொள்ளும் இக்கட்சிகள் தீண்டாமையை ஒழிக்க உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மாறாக, பல சந்தர்ப்பங்களில் சாதி ஒடுக்குமுறைச் சக்திகளுடன் இதன் தலைவர்களும் அணிகளும் இணைந்து நிற்கின்றனர். இத்தகு சூழலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்பட 4 ஊராட்சிகளில் தேர்தல் நடத்த வைத்து தலித்துகளைத் தலைவர்களாக செயல்பட வைத்தது, பல ஆலயங்களில் தலித்துகள் நுழைவதை உத்தரவாதப்படுத்தியது. பல தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறையை ஒழித்தது, பல சலூன்களில் தலித்துகளுக்கு முடிவெட்ட வைத்தது. பல கிராமங்களில் மயான உரிமையை உத்தரவாதப்படுத்தியது, தனி மயானத்திற்குப் பாதை பெற்றுக்கொடுத்தது, பல பொதுப்பாதைகளில் தலித்துகளை நுழைய வைத்தது போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளோம்.

தமிழ்நாடு சமூக சீர்திருத்த போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பை முன்னுரிமைக் கடமையாக நிறைவேற்றி வருகிறோம். சமீபத்தில் நமது தலையீட்டால் உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைக்கப்பட்டதும், தலித்துகளுக்கு ஊருக்குள் நுழைய ஒரு பொதுப்பாதை உருவாக்கி தரப்பட்டதும் தமிழ்நாட்டில் - ஏன் இந்திய நாடு முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கமாக அமைந்தது.

அருந்ததியர் போராட்டம்

தமிழ்நாட்டில் அருந்ததியர் என்ற பிரிவினர் ஆந்திராவில் உள்ள மாதிகா பிரிவினரைப் போல தலித்துகளிலும் தலித்துகளாக உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் இவர்கள் 5 சதம் வரை இருந்த போதிலும் கல்வி - வேலைவாய்ப்பில் இவர்களுக்கு 1 சதம் கூட கிடைக்கவில்லை.
இவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க சென்னை கோட்டை நோக்கி 20 ஆயிரம் பேர் பேரணி, மறியல் உள்பட பல கட்ட போராட்டங்களை நடத்தியதால் தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்க ஏற்றுக் கொண்டு ஒருநபர் கமிஷன் அமைத்துள்ளது. இதன் முடிவை அமலாக்கவும் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மிக கணிசமான அருந்ததியர் அமைப்புகள் நம்முடன் இணைந்து நின்று போராடின. தமிழ்நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டமாக இது அமைந்தது.

எதிர்கொண்ட தாக்குதல்கள் - வன்கொடுமைகள்

இவ்வாறு தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்புக்காகவும், தலித்துகளின் உரிமைக்காகவும் நாம் நடத்திய போராட்டங்களும் அதனால் கிடைத்த வெற்றிகளும், அரைகுறை வெற்றிகளும் தலித்துகள் மத்தியில் நமது மரியாதையையும் பிடிப்பையும் பெரிதும் உயர்த்தியுள்ளன. எனினும், தீண்டாமை ஒழிப்பு என்ற மிகப் பெரிய கடமையில் மிகச்சிறிய பங்கையே நிறைவேற்றியுள்ளோம். இப்போராட்டங்களின்போது சாதிய சக்திகளின் கடும் எதிர்ப் பையும் தாக்குதலையும் சந்திக்க வேண்டியிருந்தது. அரசு நிர்வாகம், காவல்துறை பெரும்பாலும் ஆதிக்க சக்திகளுக்கே துணை நின்றது. சில கிராமங்களில் உரிமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்த தலித்துகள் மீது ஆதிக்க சக்திகளும், அரசு நிர்வாகமும் வன்கொடுமைகளை ஏவிவிட்டனர்.
திண்ணியம் கிராமத்தில் ஒரு தலித் மலம் தின்ன வைக்கப்பட்டார். உயர் சாதி வாலிபரை காதலித்த காரணத்தால் ஒரு தலித் பெண் மீது மலத்தை கரைத்து ஊற்றினார்கள்.

உத்தப்புரம் கிராமத்தில் நமது முயற்சிகளால் அரசு உருவாக்கிக் கொடுத்த பொதுப்பாதையில் வரும் தலித்துகளின் மகிழ்ச்சிகரமான குடும்ப விழா ஊர்வலங்கள் தாக்குதலுக்குள்ளாகி வேதனை தரும் சோக நிகழ்வுகளாக மாறின. இக்கிராமத்தில் தலித் பெண்கள் தாக்கப்பட்டதோடு தலித்துக்களின் உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டன. இக்கிராமத்தில் 540 பேர் மீது காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்தது. பல சமயங்களில் நமது தோழர்கள் தாக்கப்பட்டனர். பொய் வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. எனினும் இத்தாக்குதல்களும் வன்கொடுமைகளும் தலித் எழுச்சியையோ, நமது முன்னேற்றகரமான தலையீடு களையோ தடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அனுபவங்களும் பலவீனங்களும்

1950ம் ஆண்டு அரசியல் சட்டத்தை அறிமுகப்படுத்தி அரசியல் நிர்ணய சபையில் உரையாற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக பிரகடனம் செய்தார். பின் தனது இறுதி நாட்களில் அவ்வாறு சொன்னதற்காக தன்னைத் தானே நொந்து கொண்டார். அரசு நிர்வாகமும் சட்டமும் மட்டுமே தீண்டாமையை ஒழித்து விடாது. அதற்கு தலித் மக்களின் எழுச்சிமிக்க ஒற்றுமையும் ஜனநாயக சக்திகளின் இணைந்த செயல்பாடும் தேவை என சரியாகவே வலியுறுத்தினார். இந்தியாவில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் தீண்டாமையை ஒழிக்க முடியாமைக்கு நிலம் உள்பட வர்க்க பிரச்சனைகளையும் இணைத்து கையில் எடுக்காதது முக்கியமான காரணமாகும்.

அதே போலவே நமது வர்க்க- வெகுஜன அமைப்புகள் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒடுக்குமுறை ஒழிப்பு போன்ற சமூக பிரச்சனைகளுக்கு போதிய முக்கியத்துவம் தராத பலவீனம் இருந்துள்ளது. இத்தகைய இரு பலவீனங்களையும் களைந்து சாதி ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை இணைந்து நடத்துவதன் மூலமே மாற்றத்தையும் முன் னேற்றத்தையும் காண முடியும். தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய ஒரு விரிந்து பரந்த மேடையாகச் செயல்பட்டு வருகிறது. 45 வர்க்க- வெகுஜன அமைப்புகளும் மாநிலம் தழுவிய 15 தலித் -மனித உரிமை அமைப்புகளும், மாவட்ட அளவில் 40க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகளும் இதில் இணைந்துள்ளன. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட வர்க்க-வெகுஜன அமைப்புகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியுடன் இணைந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களில் 29 மாவட்டங்களில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ஓராண்டுக் காலத்திற்கு முன்புதான். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் பல ஆண்டுகளாகவே தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது இப்போராட்டங்களின் திருப்பு முனையாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் எதிரொலிக்கட்டும்!

இடதுசாரி இயக்கங்கள் வலுவாக உள்ள மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் வன்கொடுமைகள் மிகக் குறைவு. சாதிய மோதல்கள் அநேகமாக இல்லை. அதற்கு வெளியே ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. இப்போராட்டங்களை வருங்காலத்தில் மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வோம். இதன் தாக்கம் இந்திய நாடு முழுவதும் எதிரொலிக்கட்டும். இதன் மூலம் தீண்டாமை ஒழிப்பு - சாதி ஒடுக்குமுறை ஒழிப்புப் போர் ஒரு அகில இந்திய இயக்கமாக மாறட்டும்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com