Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
டிசம்பர் 2008
திரும்புதல்
மேலாண்மை பொன்னுசாமி


சன்னாசிக்குள் ஜில்லென்று குளிர்ச்சியான நீர் பீய்ச்சியடிக்கிற மாதிரியொரு மனப்பரவசம். சொந்த ஊர் மண்ணுக்குள் பாதம் பதிய நடக்கப்போகிறோம் என்ற நினைப்பே நெஞ்சுக்குள் சந்தோஷ நதியாக பிரவாகம் எடுக்கிறது. திருப்பூரிலிருந்து புறப்படுகிற சிவகாசி பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறான். அஜீத் நடித்த படம் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது. சன்னாசிக்கு டிரைவர் சீட்டுக்குப்பின்னால் மூன்றாவது சீட்டில் ஜன்னலோரம் இடம். ‘அட்டகாசம்’ படம். ரெட்டை அஜீத். தாதாவாக ஒருத்தர். அம்மாபிள்ளையாக ஒருத்தர்.

படத்தில் மனசு லயிக்கவில்லை. நினைவு பூராவிலும் சொந்தக் கிராமத்தின் கூரைவீடுகள். வேலிக் காடுகள். மயில் கூட்டப்பேயிரைச்சல். மஞ்சணத்தி மரங்களில் வெண்புள்ளி நிறைந்த குயில்கள். இவன் மேய்த்த ஆடுகள் வனச்சுவாசம். ஆடு மேய்த்த காடுகள். கதுவாலி முட்டைகளை பச்சை பச்சையாக உடைத்துக் குடித்த ருசிகள். குருவி சுட்டுத்தின்ற கருகல்வாசம். கடலை விளைந்த காடுகளில் காலாலேயே எத்தி எத்தி... கடலைச் செடியின் வேர் கண்டு, செம்மண்ணில் முகம் காட்டிய வெண்முத்துகளான பச்சைக் கடலைகளை பறித்து, உடைத்துத்தின்ற பால்ருசி. பழைய வாழ்வின் வாசங்கள். பால்ய காலத்துப் பரவசங்கள். நினைவலமாரிகளில் மூச்சுமுட்டிக்கிடந்த பழைய பழைய எண்ணங்கள், சம்பவங்கள். கிராமத்து நெடி. ஆட்டுமூத்திரவாசம்.

சொந்த ஊர் மண் என்பது, சூட்சுமமான உணர்வு. உயிரின் மையத்தில் கால்பதித்து வேரடித்திருக்கிற உற்சாக நினைவுகள். கிளர்ச்சியூட்டுகிற உயிரின் சிலிர்ப்புகள். அந்தமண். பிறந்து விழுந்த மண். முட்டிதேய தேய தவழ்ந்து தவழ்ந்து உரிந்து தொலி இணுக்குகள் விழுந்த மண். சிறு பாதங்களால் எற்றி எற்றி எழுப்பிய புழுதிக்குள்ளிருந்த கல்லில் மோதி கட்டைவிரல் நகம் பெயர்ந்து, சிந்திய ரத்தம் கலந்த மண். சதையும் ரத்தமும், உயிரும் மணச்சுவாசமும் குறைந்த மண். மனச்சுபாவத்தை வடிவமைத்த மண்.

தெருப்புழுதியை எற்றி விளையாடிய சந்தோஷம் போலவே, கட்டைவிரல் நகம் பெயர்த்த வலிகளும் தான்.... கிராமம். அடிமனசை அரிவாளாக வெட்டிய அவமானங்கள். அம்மணப்படுத்தி தெருப்புழுதியில் உருட்டின மாதிரியான இழிவுகள். ஏளனங்கள். அவமதிப்புகள். பெருமூச்சுடன் வெளியே பார்க்கிறான், சன்னாசி. கண்டக்டர் ‘டிக்கட்... டிக்கட்... டிக்கட்’ என்கிற சத்தம், இடைவிடாமல் தொடர்கிற விசில் இரைச்சலாக நீள்கிறது. நின்று வருகிறவர்கள் நெருக்கடிக்குள்ளாகி மூச்சுத்திணறுகிற சத்தம்.

சதையை பிய்த்துக் கொண்டு ஊடுருவுவதைப் போல, அந்தக் கூட்டத்துக்குள் டிக்கட் போட்டு, இன்வாய்ஸ் எழுதுகிற கண்டக்டரின் சிரமத்தவிப்பின் சிடுசிடுப்பு. ‘இறக்கம் இருக்கா?’ என்று வினவுகிற டிரைவரின் ஹாரன்சத்தம். ‘ரைட் ரைட் போகலாம்’ என்கிற மொழியில்லாத விசிலின் ரெட்டை ஊதல். ஊர் இப்ப எப்படி இருக்கும்? ஏளனமாகப் பார்க்குமா? “வந்துட்டான், களவாணிப்பய” என்று காறித்துப்புகிற மாதிரி பார்க்குமா? பழைய கோபத்தை பத்திரப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்குமா? முறைத்து மறைத்து விறைக்குமா? அவனுள் பரவுகிற பதற்ற அலைகள். அவற்றைப் போக்கடிக்கிற மாதிரியான மாற்று நினைவுகள்.

கடந்து ஓடிப் போயிருக்கிற பத்து வருஷங்கள். நூற்றிருபதுக்கும் மேற்பட்ட மாதங்கள். புதுத் தலைமுறையே தலையெடுத்திருக்கும். இவனை இன்னார் என்றறியாத இளவட்டப்பட்டாளம் மீசை அரும்பியிருக்கும். வெறித்து வெறித்துப் பார்க்கும். முக ஜாடை அடையாளத்தை வைத்து இவன்தான் யூகிக்க முடியும்.

“யார்ரா நீ?... முகச்சாடையை வைச்சுப் பாத்தா முருகேசன் மகன் மாதிரி தோணுது. யார்ரா உங்கப்பன்?”

“முருகேசன்தான். நீங்க?”

“உங்கப்பனும் நானும் ஆடுமேய்ச்சுக்கிட்டு ஒண்ணாவே திரிஞ்சோம். இப்ப நா திருப்பூர்லே இருக்கேன்”

“என்னவாக இருக்கீக?”

“வழியத்து வகையத்து... பொழைக்க திசையத்து ஓடுன நாய், கலெக்டராகவா ஆகியிருக்கும்? கொத்தனாரா இருக்கேன்.” சலிப்பும் வலியுமான குரல் மெலிவு. இப்படித்தான் ஊர்க்காரர்களோடு உறவாட வேண்டியிருக்குமோ? பார்த்த கணத்தில் பழகிக் கலக்க முடியாமல், எண்ணெயில் தண்ணீராக அந்நியப்பட்டே மிதக்க வேண்டியிருக்குமோ...? ஒட்டாமல் உரசாமல் உரையாட வேண்டியிருக்குமோ? இன்னும் “பழையதை” ஞாபகம் வைத்திருந்து வெறுப்பும் ஏளனமுமாக பார்க்கிற பெரியாட்களும் இருப்பார்களோ? ‘களவாணிப்பய’ என்று கடுப்பும் வெறுப்புமாக பார்ப்பார்களோ?

அவனுள் ஊசலாடுகிற நினைவுகள். அங்கிட்டும் இங்கிட்டுமாக இவனைப் போட்டு இழுத்தடித்து அலைக்கழிக்கிற எண்ணங்கள். நல்லரோடு. தடங் கலற்று பாய்கிற பஸ். பஸ்ஸின் வேகத்தில் உற்பத்தியாகிற காற்றின் குளிர்மை. ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறான். சின்னச்சின்ன ரோட்டோரத்து ஊர்கள். நிறைய புது வீடுகள். குடிசைகள் உட்பட எல்லா வீடுகளிலும் கலர் டிவி ஓடிக்கொண்டிருக்கிறது. எந்நேரமும் டி.வி.களில் தொடர்கள். அழுகையும் கண்ணீருமாய். வெறுப்பும் திமிருமாய் பெண்கள், நல்லவர்களும், வில்லிகளும் பெண்கள்தாம். சினிமாக்கள், சினிமாக்களின் துண்டுகள், பாட்டுகள், ஆட்டங்கள்.

இவன் குடியிருக்கிற கீற்றுக்கொட்டகையில்கூட சிறியதாக ஒரு கலர் டி.வி. இருக்கிறது. சோறு தண்ணீர் இல்லாமல்கூட வாழ்ந்து விடலாம் போலிருக்கிறது. டி.வி. இல்லாமல் ஒரு நிமிஷம்கூட மூச்சு விட முடியாது. முந்தியெல்லாம் டி.வி.யும் கிடையாது. ஓர் இழவும் கிடையாது, டிரான்ஸி°டர்தான். டி.எம்.எ° பாடுவார். சினிமா வேணும்னா டாக்கீ°லே போய் பாக்கணும். அப்பவெல்லாம் திருவேங்கடத்தில் டாக்கீஸ் உண்டு. ஆலங்குளத்திலும் உண்டு.

ஆடு மேய்க்கிறவர்களால் முதல்காட்சிக்கெல்லாம் போக முடியுமா? அதுவும் ரெண்டாவது ஷோதான். காடு கரைகள், ஓடைக்காடு, தரிசுக்காடு என்று ஆடுகளை மேய்த்துவிட்டு, கருங்கல் கிடங்குத் தண்ணீரில் ‘போட்டெடுத்து’விட்டு... பட்டிக்குள் அடிக்கும்போது பொழுது அடைந்து, கருகருவென்று மயங்கிவிடும். இருள் ராட்சஸம் பெருஞ்சிறகுகளை விரித்து மூடும். ஆடுகளின் சிநேகிதமான கதறல்கள் துரத்தும். அப்புறம்தான்... கொழை ஒடிக்க ஓடணும்.

முருகேசனும் சன்னாசியும்தான் இதில் இணைபிரியாத கூட்டாளி. முருகேசன் பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு, படல்கதவை சாத்திவிட்டு சன்னாசியிடம்தான் ஒரே ஓட்டமாய் ஓடி வருவான்.

“கொழைக்குப் போகணும்லே?”

“ம்...”

“எங்குட்டுப் போக...?”

“ரெங்கையா நாயக்கரு புஞ்சையிலே அகத்திக்கொழை கைபடாத ரோசா மாதிரி கெடக்கு. போய்... கை வைச்சிருவமா?”

“ஆள் பாத்துட்டாகன்னா? அடிபிச்சியெடுத்து, மப்பைக்கழட்டிருவாகளே...”

“நம்ம திங்குறதுக்கா? வாயில்லாச் சீவனுக்கு வவுத்துப் பாட்டுக்குத்தானே?”

“அதுக்காக? களவாங்கவுடுவாகளா?”

“இதெல்லாம் களவுல்லேடா. வவுத்துப்பாட்டுக்கு எடுக்குறதெல்லாம் களவுல்லே. சேத்து வைச்சிருந்து வட்டிக்கு வுடுறதுக்காக எடுக்குறதுதான், களவு”

“இப்பப் போகவா?”

“இன்னும் கொஞ்சம் இருட்டட்டும், போவம்”

போய்... பூனை பம்மிப்போகிற மாதிரி காட்டுப் பக்கம் ஒதுங்கி, பொழிக்குள் இறங்கி... ‘மடக், மடக்’கென்று கொப்பு கொப்பாக ஒடித்து... ஆமணக்கு கொழையையும் ஒடித்து கயிறு போட்டு கட்டி... தலைப்பாரமாக சுமந்து கொண்டு வந்து... பட்டிக்குள் அடைபட்டுக்கிடக்கிற குட்டிகளுக்குக் கட்டினர். கொழை கண்ட மகிழ்வில் அதுகள் போடுகிற கூப்பாடு. மகிழ்ச்சியான கதறல். குதியாளம்.

அப்புறம்தான்... சாமி நாயக்கர் கிணற்றில் போய் குதித்தனர். குதித்த குதியில் தண்ணீரே திடுக்கென பயந்துவிட்டது. சளார்ரென்று சுவரில் தெறித்த தண்ணீர். சுவர்ப்பொந்தில் அடைந்திருந்த பனங் காடை, இருளைக் கிழிக்கிற மாதிரி கத்திக் கொண்டு பறந்தடித்து ஓடுகிறது. உயிர்ப்பயம். இவர்கள் குளிப்பு, இராக்குளிப்புதான். இனிதான் வயிற்றுப்பாடு. சோற்றைச் சாப்பிட்டு முடித்து, ஈரக்கையை துடைக்க சான்னாசியிடம் வந்துவிடுவான் முருகேசன்.

“இன்னிக்கு சினிமாவுக்குப்போனா... என்ன?’

“சினிமாவுக்கா...” போனா நல்லதுதான். என்ன சினிமா.... எங்க நடக்குது?”

“ஆலங்குளத்துலே ‘தாயைக் காத்த தனயன்’ எம்ஜிஆர் குடுத்தது”

“சிலம்புச் சண்டை அதுலே தானே? எம்.ஜி.ஆர் மின்னல் மாதிரி கம்பைச் சுழற்று வாரே?”

“அதே படம்தான்”

“அப்ப... கட்டாயம் போயாகணும்” காசு பணத்துக்கு, செலவுக்கு திகைப்பதேயில்லை,

“ஊருக்குத் தெக்கே முத்தையா நாடாரு புஞ்சையிலே பருத்தி வெடிச்சு கெடந்துச்சு, ஜில்லுன்னு...”

“சரி... பெறப்புடு”

துண்டை தலைப்பாகையாக கட்டிக் கொண்டனர். வேட்டித் தூசியை தட்டி உதறிவிட்டு இவர்கள் கிளம்புகிறபோது, பனங்காட்டு மயில்கள் கூட்டாக கூவிற்று, பயத்தில். ஒவ்வொரு ரவ்வாக முத்தையா நாடார் புஞ்சைக்குள் இறங்கிவிட்டனர். ஆட்டுக்காரர்களுக்கு பாதங்களிலும் கண் உண்டு. முள், பாம்பு, கிடங்கு, கட்டைகளுக்கெல்லாம் விலகிப்போய் விடுகிற இருட்டனுபவம். இருட்டே தொழில். இருட்டே பிழைப்பு. கொழை களவு செய்யாதவன் ஆடுமேய்க்க முடியுமா? ராத்திரி, இருட்டு, பேய், பாம்பு என்று பயந்தால் நடக்குமா?

பருத்தியை உருவி உருவி... மடியில் போட்டனர். பூப்பஞ்சாக... குருவிக்குஞ்சாக மிருதுவாக இருந்தது. கப்பென்று மடிகனத்தது. ஊருக்குள் நுழைகிறபோது... ஊர் அடங்கி விட்டது. காடுகரைகளில் பாடுபட்டு ஜீவனை வடித்தவர்கள்... நாளையும் பாடுபட்டு உயிரைத் தர வேண்டியவர்கள். உறங்கி உயிர்சேமித்தால்தான் மறுநாள் உழைக்க முடியும். உறங்குகிற ஊர். ஒன்று இரண்டு கிழடு கட்டைகள், நோயாளிகள் தவிர எல்லோரும் உறங்கிவிட்டனர். அந்நேரமும் உறங்காமல் கடைவைத்திருப்பவர் சுப்புக்காளை நாடார். களவு சாமான்கள் வாங்குவதற்காகவே சாமக்காட்டில் கடைதிறந்து வைத்திருப்பார். அவரிடம் பருத்தியைப் போட்டு, காராச்சேவும், அவித்த சீனிக்கிழங்கும் துட்டும் வாங்கிக் கொண்டாகி விட்டது.

ராசமணித் தேவர் சைக்கிள்கள் வாடகைக்கு விடுகிறவர், பகல்பூராவும் சைக்கிள்களை அக்கு அக்காக பிரித்தெடுத்து, எண்ணெயில் அலசி மாட்டி... சைக்கிள் ரிப்பேர்தான் தொழில். வாடகைச் சைக்கிள்கள் இரவில் சுவரில் சாய்த்துக் கிடக்கும். ஐந்து சைக்கிள்களையும் ஒரே செயினால் கோர்த்து பூட்டு ஒன்று தொங்கும். கிராமத்தில் களவு போகாது என்ற முரட்டு நம்பிக்கை. “சைக்கிள் கழுதையை நாயா தூக்கிட்டுப் போகப்போகுது?” என்ற நம்பிக்கையில் ஊறிய தைர்யம்.

அந்தப் பூட்டை கள்ளச்சாவி போட்டு திறந்து, ஒரு சைக்கிளை மட்டும் எடுக்கிற சன்னாசி. கேரியல் வைத்த சைக்கிள், ‘காற்று இருக்கிறதா?’ டயர்களை நசுக்கிப் பார்த்தான். பிரேக் வேலை செய்கிறதா? செயின் சிக்கல்ல பண்ணுதா? பெடல் சுழல்கிறதா? செக்கப் முடிந்து சைக்கிளை நகர்த்துகிற சன்னாசி. கிளிப்பை தட்டி, °டாண்ட்டை எடுத்து, பெடலில் கால் வைத்த வேகத்தில் காற்றாய் பறக்கிற சைக்கிள். வண்டிப்பாதைத் தடம். காட்டுவழி. கண்ணைக் கட்டின மாதிரி மையிருட்டு. கிடங்குமேடான நொடிப்புகள் கொண்ட பாதை. எல்லாம்... பழகிப்போன நரகம், தடங்கலற்ற பயணம்.

சன்னாசிக்கு பெடலை அழுத்தி அழுத்தி மிதிக்க மிதிக்க வியர்த்துக் கொட்டுகிறது. ‘தஸ்ஸு, புஸ்ஸ்’ஸென்று இரைக்கிறது.

“ஏலேய்... கேரியல்லேபிரேதம் கணக்கா உக்காந்துருக்கே?”

“தேர்லே போற மாதிரி... ஆடி அசைஞ்சு போறது சொகமா இருக்கு”

“எனக்கு உசுரு போவுதுடா... செத்த நாயி”

“நா என்ன செய்ய?”

“நீயும் பெடல்லே காலை வைச்சு மிதி”

எம்.ஜி.ஆரின் புன்னகையின் வசீகரம். திரு விழாக்கூட்டத்தில் வெற்றிலை முதுகில் சுண்ணாம்பு தடவிக் கொண்டே கண்ணடிக்கிற °டைல். நளினமாக நாணப்புன்னகையில் அரைமுகம் மறைத்து, அரைக் கண் மலர்த்துகிற கன்னடத்துக்கிளி. உள்ளுக்குள் ஓடுகிற சினிமா, உயிருக்கு வலிமை தருகிறது. சைக்கிளை மிதிக்கிற பலம் தருகிறது. சுற்றிக்கிடக்கிற இருட்டு. இராக்குருவியின் வீறிடல். மேகமில்லா ஆகாயத்தில் விதைத்த சோளப் பொரியாக நட்சத்திரங்கள். கரிசல் காட்டு வேலி. விளார்களின் முள் உரசல்கள்.

முக்கி முக்கி சைக்கிள் மிதித்தாலும், தொலை யாத தொலைவாக, சினிமாக் கொட்டகையின் பச்சை லைட். அந்தப் பரபரப்பிலும் சன்னாசி மனசுக்குள் ஆட்டு நினைப்பு. கொம்பு முளைத்த காயடிக்காத கிடாய் சும்மா கிடக்குமா? ஆடுகளை படுத்து அசைபோட விடாமல்... காமக்கனைப்பாக கனைத்து பாடாய் படுத்துமா? களேபரப்படுத்துமா? கம்மாப்பட்டியை தாண்டி, தண்ணீரில்லாத கண்மாயுக்குள் நீள்கிற ஒற்றையடிப் பாதையில் குறுக்கு வழியாக ஓடி...

சினிமா பார்த்து.... கம்புச்சண்டைக்கு விசிலடித்து, குத்துச்சண்டைக்கு கூப்பாடு போட்டு... முறுக்கு வாங்கி நொறுக்கித்தின்று... டீ குடித்துவிட்டு சைக்கிள் ஏறுகிற போது- உயிர் வடிந்து போனது மாதிரியான உடல் சோர்வு. சதையெல்லாம் கவ்விப்பிடிக்கிற வலி. குறுக்கெலும்பெல்லாம் குடைச்சலெடுக்கிற ரணம். மனசுமுழுக்க அயர்ச்சி. ‘எங்கனடாவுழுந்து ஒறங்கலாம்’ என்று கிடந்து தவிக்கிற திரேக அசதி. மனச்சோர்வு.

எங்கோ கதறுகிற கிடையாடுகளின் அலறல் சத்தம், சன்னாசி உயிருக்கு சூடு தருகிறது. சுரணை பெற்ற மனபலத்தில்... ‘ஆடுகளுக்கு கொழை கட்டணுமே’ என்ற தவிப்பில் வலுப்பெறுகிற நரம்பு களின் புடைப்பு. ஈர்க்கிற வாழ்க்கையின் அழைப்பு. சைக்கிள் இருட்டை ஊடுருவிக் கொண்டு பாய்ந்தது. இருவர் சேர்ந்து போடுகிற பெடல். தொடையின் வலியை சகித்துக் கொள்கிற மனசு. ஆற்றின் பாறை இடுக்குகள். வேலி மர அடர்த்தி, பனைமரத்தின் காய்ந்த ஒலைகளின் சலசலப்பு. உயிர்ப்பயத்தில் கதறி வீறிடுகிற மயில்கள். ஊர்வந்துவிட்டது.

“ஏலேய் முருகேசா....”

“என்ன...”

“நீ இங்கன எறங்கி வீட்டுக்குப்போ”

“ம்....நீ?”

“சைக்கிளை அங்கன சொவர்லே சாத்தி வைச்சுட்டு, நா வூட்டுக்குப்போறேன்”

“வாடகை குடுக்க துட்டு இருக்கா?”

“இருக்கு. ராசமணி யண்ணாச்சிகிட்டே விடிஞ்சபெறகு தந்துருதேன்”

பெடலிலிருந்த பாதங்களை எடுத்து விலகிய கணத்திலேயே குதித்து இறங்கிக் கொண்ட முருகேசன். சைக்கிளிலேயே நடுத்தெருவுக்குள் போய் சைக்கிள் சரிந்துகிடந்த இடத்திலேயே சுவரில் சாத்தி வைத்து விட்டு... படுத்து கிடந்த நாயொன்று தலைநிமிர்ந்து உறுமியது. காலடிச்சத்தத்தில் சிநேகிதமறிந்து மௌனமாகியது. வியர்த்துக் கொட்டுகிற உடம்பு. ‘தொப்பு, தொப்பென்று நனைந்து கிடக்கிற பனியனும், கைலியும். முறுக்கிப்பிழிகிற உடம்பு ரணம். துவண்டு சரிகிற உயிரின் அயர்ச்சி. நெஞ்சுக்கூடு இளைக்கிறது. விம்மி விம்மி விடைக்கிறது. சாமத்துக்கும் மேலாகிவிட்டது. தேய்பிறை நிலா தலைகாட்டியது. வைகறைப்பொழுதின் அரும்புநிலை. வீடுநோக்கி நடந்தான். துவண்டு தளர்ந்த நடை,

“யார்றா, அது?” முத்தையா நாடார் திண்ணையில் படுத்திருந்தவர், தலைதூக்கி வருகிறார்.

“நாந்தான்...” உலர்ந்த தொண்டைக்குள் தடுமாறி தவிக்கிற குரல்.

“நாந்தான்னா? எவண்டா இம்புட்டு நேரத்துலே?”

“சன்னாசி... ஆட்டுக்காரன்....”

“நீயா...? அப்பச்சரி...” சாந்தமாகிற சமாதான மடைகிற பெரியவர்.

தள்ளி நடக்கிறான். அப்பத்தான் - அந்த விபரீதம். தலைகீழாக உலகமே புரண்ட மாதிரியோர் அதிர்வு. நம்பவே முடியாத விகாரக் காரியம். அந்தப் பெரிய காரை வீட்டுத் தொழுவத்தில்... அரிக்கேன் லைட்டின் வெளிச்சத்தில்... ஆத்திர அவசரமான திரேகப் பிணைப்பு. உன்மத்தமான உயிர்க்கலப்பு. உணர்ச்சிப் பெரும் பிரவகிப்பில் அடித்துச் செல்லப்படுகிற பிராணிப்பிறவிகள். இவனது காலடி அரவம். அரும்புகிற வைகறைப் பொழுதில் எதிர்பாராத மனிதச் செருமல். அலைய குலைய பதறிப்போய், அரையும் குறையு மாக வேட்டியை அள்ளிக்கொண்டு தெறித்தோடுகிற அந்தக் கறுத்தமனிதன்.

மங்கலான வெளிச்சத்தில் பிடிபடுகிற உருவம். பக்கத்து ஊர்க்காரன். அடப்பாவி, நீயா? சைக்கிளைச் சாத்திய சுவர்பக்கமாக ஓடுகிற அந்த முரட்டு மூர்க்க கறுத்த உருவம். தொழுவத்தின் இன்னொரு வாசல் வழியாக அரைகுறையாக துணிகளை அள்ளிக்கொண்டு ஓடுகிற அந்த மகராசி. புண்ணியவதி. இந்த வீட்டுப் பெண்ணா? ஊரே கையெடுத்து கும்பிடுகிற ஒழுக்கமான இந்தப்பெண்ணா, இப்படி? கல்யாணமாகி ஒன்பது வருஷமாகியும் பிள்ளையில்லாதவள். ‘மலடி மலடி’ என்று உற்றமும் சுற்றமும் குற்றம் சொல்லப்படுகிறவள். வார்த்தைக் கத்திகளால் அடிக்கடி குத்துப்படுகிறவள். குத்திக் குதறப்பட்டா லும் அழுக முடியாது.

‘யார் மலடு’ என்று பரிசோதனையில்லை. சோதிக்கச் சொல்லும்படி கூறுவதற்கு இடம் தராத உயர்குடும்ப கௌரவம். அதற்காக இப்படியா? அயலூர்க்காரனுடனா? ஐயய்யோ... ஒரே சாட்சி. இவன். இவனது மனசாட்சியின் துடிப்பு. மனிதநேய மனக்குழைவு, இந்தப் பெண்ணைக் காட்டிக் கொடுத்து விட்டால்... குத்துப்பட்டு குத்துப்பட்டு உயிர்கதறுகிற இந்த ஜீவனின் ஒரு பிறழ்வை... ஒரு குற்றத்தை- அம்பலப்படுத்தினால்.... நாண்டுக்கிட்டு உசுரைக் கொன்று கொள்ளுமோ!

ஐயய்யோ... கௌரவமும் ஒழுக்கமும் உயர் பண்புமான ஒரு பெண்ணின் சாவுக்கு தான் காரணமாவதா? சன்னாசிக்குள் பெரும் குழப்பம். மனத்தவிப்பு, அங்கிட்டும் இங்கிட்டுமாக இழுத்து அலைக்கழிக்கப்படுகிற மனவதை. நினைவு வதை. மறுநாள் பகல்முழுக்க அக்கரைப்பட்டி காட்டில் ஆடுகளை மேய்த்துவிட்டு, கருங்கல் கிடங்குத் தண்ணீரில் இறக்கி நீந்தவிட்டு.... வீடு பத்திக்கொண்டு வரும்போது, இருட்டிவிட்டது.

“ஊர்க்கூட்டம் இன்னிக்குப் போடுறாக, ஒனக்குத் தெரியுமா?” படலை இழுத்துச் சாத்துகிற போது பக்கத்துவீட்டு மாரிச்சாமிதான் தாக்கல் சொன்னான்.

“தெரியாதே.... போட்டா போடட்டும். எனக்கென்ன?”

“கூட்டமே ஒனக்காகத்தான் கூடுது. ஒன்னைக் கூப்பிட்டு விசாரிக்கத்தான்” சன்னாசிக்குள் பதற்ற அலைகள். ஈரக்குலை நடுங்கி அதிர்கிறது. உயிரின் ஆணிவேரின் அடி நுனிவரை பரவிப்படர்கிற அச்ச அதிர்வு. வெலவெலத்துப்போன மனசோடு பதற்றமாகக் கேட்கிற சன்னாசி.

“என்னத்துக்கு?”

“ராசமணியண்ணாச்சியோட சைக்கிளைக் காணோமாம். நீதான் களவாண்டுட்டீயாம். “நீதான்”னு °ட்ராங்கா சாட்சி சொல்றாரு முத்தையா நாடாரு...”

அந்த அயலூர்க்காரன் தப்பித்தோடுகிற பதற்றத்தில் சுவரில் சாய்த்திருந்த சைக்கிளைப் பயன்படுத்தி விட்டானோ...? இவனுக்குள் அடிவயிற்றில் பயப்புரட்டல். “ஐயய்யோ... வந்து சேந்துச்சே நாசக்காடு” என்று புலம்பித்தவிக்கிற சன்னாசி. ஊர்க்கூட்டத்தில் நிறுத்துவார்கள். மேல்துண்டை கட்கத்தில் வைத்து ‘ஊரை வணங்கி’ தலைதாழ்ந்து நிற்கணும். ஆள் ஆளுக்கு திட்டுவார்கள். வைது பேசுவார்கள். சீற்றமும் ஆத்திரமுமாய் காறித்துப்புவார்கள்.

‘ரெண்டாயிரம் அபராதம்’ என்பார்கள். சபையை வணங்கி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடணும். கும்பிடக் கும்பிட குறைந்து வருகிற அபராதம், ஐநூறு ரூபாயில் வந்து நின்று கொள்ளும்.... “கட்டுடா... தொகையை....” என்று கூப்பாடு போடுவார்கள். நினைவில் ஓடுகிற ஊர்ப்பழக்கம். வழமுறை, அம்மணமாக்கி தெருப்புழுதியில் புரட்டியெடுக்கிற மாதிரியான அவமானம். நினைத்தாலே உயிர்பதறுகிறது. நடுங்கியதிர்கிற உணர்வுகள்.

நரியைக்கண்ட பயத்தில் கத்துவதைப் போல ஆடுகள் கதறுகிற பரிதாபம். வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டான். சந்தர்ப்பம் சாட்சியம் கச்சிதமாக வலை பின்னியிருக்கிறது. “நாந்தான் சன்னாசி. ஆட்டுக் காரன்” என்று தான் சொன்னவுடன் தலை சாய்ந்த முத்தையா நாடார். அவர் சாட்சி இவனை வகையாக சிக்க வைத்து விடும். அவமானப்பட்டு சீரழியணும். அசிங்கப்பட்டு நிற்கணும். ஒண்ணுக்குமத்த தெருநாய்கூட காறித்துப் பும். வாங்கிக்கிட்டு தலைகுனியணும்.

“அய்யா... ராசா.... ராசா... அய்யா” நாவிதனின் குரல்.

“என்னப்பா?”

“ஊரு கூடுது. உங்கமேலே பிராது. ஊர்ப் பெரியாளுக உங்களை கையோட கூட்டிட்டு வரச்சொன்னாக...” இவனுக்குள் நடுக்க அதிர்வுகள். அச்சக்குளிர்வு.

“நீ போ... நா வாரேன்....”

“கைப்புடியா கூப்புட்டு வரச்சொல்லி எனக்கு உத்தரவு”

“நீ போப்பா... நா எங்கயும் ஓடிறமாட்டேன். பின்னாலேயே வந்து சேருதேன்” பயத்தில் நனைந்த குரல். பதற்றத்தை வெளிக் காட்டாமல், கெத்துவிடாமல் பேச முயன்ற பாச்சா பலிக்கவில்லை என்பதை சன்னாசி உணர்கிறான். இப்ப என்ன செய்ய?

“களவாணி நாந்தான்” என்று சொல்லி அசிங்கப்படுவதா? அவமானப்பட்டு, மானம் கிழிந்துகிடக்கவா? அல்லது உண்மையைச் சொல்லிவிடுவதா? ஒரு குலவிளக்கின் சுடரை அணைத்துவிடுவதா? மான முள்ள குடும்பப்பெண்ணை ஊர்சிரிக்க இழிவு படுத்துவதா? அம்பலப்படுத்தி... ஒரு நல்ல உயிர் சாவதற்கு தான் காரணமாவதா? சன்னாசிக்குள் அலைக்கழிவு. மனத்தடுமாற்றம் உணர்வுத் தத்தளிப்பு. சுயநலமா... மனிதநேயமா...?

அந்த முன்னிரவின் இருளில் சந்துகளில் புகுந்து, ஊரைக்கடந்து ஓட்டமெடுத்தான். எங்கே, எதற்கு, எத்திசையில் என்று கேள்விகளால் சூழப்பட்ட குழப்பத்திலும் கால்போன போக்கில்... திசைகளற்றுப் பயணப்பட்ட சன்னாசியின் கால்கள் நின்று திகைத்த இடம் திருப்பூர். கட்டிடக் கட்டுமானத்தில் சித்தாளாக சாந்துச்சட்டிதூக்கி, செங்கல் சுமக்கத் துவங்கி... கரண்டிபிடிக்கிற கொத்த னாராக அனுபவப்பட்டு... இப்போது இவன் கைக்குள் பத்து கொத்தனார்களும், முப்பது சித்தாள்களுமாய்....

சிவகாசியில் வந்திறங்கினான், சன்னாசி. பத்தாண்டில் மாற்றம் தெரிகிறது. சிவகாசி பஸ் ஸ்டாண்டே விரிவாகி இருக்கிறது. சிமெண்டுத் தளமாகியிருக்கிறது. நிறைய கடைகள் பெருகியிருக்கின்றன. தனது கிராமம் இருக்கும் திசையை நோக்க... மனசுக்குள் பரவசத் ததும்பல். இன்னும் ஒரு டவுண் ப°தான். ஊரின் தெரு மண்ணில் கால் பதிக்கலாம். உயிரும், ரத்தமும், உணர்வும் சிந்திக்கலந்த அந்தத் தாய்மடியில் முகம் புதைத்துவிடலாம்.

சிவகாசி ஊருக்குள் ஒரு ரவுண்டு சுற்றினான். எல்லாமே புதுமையாக இருந்தது. புதிய உணர்வின் இனிமைப்பூரிப்பு. மனசுக்கே றெக்கை முளைத்த மாதிரியோர் மனப்பிரவாகம். குழந்தையின் மனசைப்போல குதூகலிக்கிற சன்னாசி. கும்மியடிக்கிற மனக்கும்மாளம். உயிரைப் பிணைக்கிற உணர்வுச் சூட்சுமம். உள்ளூர்மண். பிறந்த மண். தவழ்ந்த மண். தத்தித்தத்தி நடந்த மண். எச்சில்வடித்த மண். ஊருக்குப்போணும். முருகேசனைத் தேடணும். பத்துவருஷத்துக்கு முந்தி நடந்ததை விளக்கிச் சொல்லணும். “நா களவாணியில்லே” என்று முருகேசனிடம் மட்டுமாவது சொல்லணும்.

அந்தப்புண்ணியவதி... தன்னைப் பார்த்தால் அந்தப் பெண்ணின் மானச்சுடர் நடுங்கியதிரும். அந்தப் பெண் குற்ற உணர்ச்சியால் தடுமாறி தத்தளிக்கும். தனது மான மரியாதை பறிபோய்விடுமோ என்று கலங்கித் தவிக்கும். தன் முகத்தை கண்களை பார்க்க முடியாமல் அந்தக் குல மானமனசு பதறித் தவிக்குமே.... அந்தப் பெண்ணின் மனத்தவிப்பை நினைக்க நினைக்க பரிதாபமாக இருக்கிறது. பாவமாக இருக் கிறது. ‘ஐயோ’ என்று ஈரம் கசிகிறது. சன்னாசிக்குள் புதிய தத்தளிப்பு.

இப்ப ஊர்போகணுமா? அந்தப் பெண்ணின் வாழ்வில் நடுக்க அதிர்வு ஏற்படுத்தணுமா? நெகிழ்ந்து குழைகிற கருணை மனசுக்குள் புதிய நினைப்பின் மின்னல். வேண்டாம்... பிறந்த ஊர் மண்ணை மிதிக்கிற சந்தோஷம் வேண்டாம். ஒரு பெண்ணின் மான மனசை அதிர வைக்கிற பாவமும் வேண்டாம்... சன்னாசி, மதுரை பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விட்டான், திருப்பூருக்கே திரும்புவதற்கு.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com