Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
டிசம்பர் 2008
உலகை உலுக்கும் உலோகம்
இரா.ஜோதிராம்


உலகில் அனேகம் பேரை பைத்தியமாக்கியது காதல் தான் என்பார்கள். ஆனால், நடைமுறையில் பார்த்தால் காதலைவிட தங்கம்தான் இன்றைக்கு ஏராளமானோரை பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி நமது நாட்டில் மட்டும் சுமார் 60 டன் தங்கம் விற்பனையாகி இருப்பதாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஏராளமான செய்திகள் சொல்லப்பட்டன. ஒரு கிராம் தங்கம் இன்றைய நிலையில் சுமார் ரூ.1,083 ஆகும். ஒரு டன் என்பது 1000 கிலோ ஆகும். அப்படியானால் 60 டன் தங்கத்திற்கு எத்தனை கிலோ? எவ்வளவு தொகை என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல, இன்னும் இரண்டு மாதங்களில் புத்தாண்டும், பொங்கல் திருநாளும் வரப்போகிறது. இந்தக்காலத்தில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் தங்கம் வாங்கலாம். வாழ்க்கை செல்வம் பெருகும் என்று சொல்லி சாதாரண மக்களை குழையடித்து தங்களின் கடை நோக்கி வரவைக்கிற ஏற்பாடு நடக்கும். இப்போது போல் அப்போதும் ஏராளமான டன் தங்கம் விற்பனை யாகும். விலையும் ஏறும். வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியடைய, இல்லாதவர்கள் இவற்றைப் பார்த்து ஏங்கி நிற்பது தொடரும்.

gold இந்தளவுக்கு மனிதருடைய வாழ்க்கையில் தங்கம் என்பது முக்கியமானதாகிவிட்டது. அதேசமயத்தில், மனிதருடைய வாழ்க்கையில் தங்கம் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையொட்டி நல்ல குணமுள்ளவனுக்கு தங்கத்தை உதாரணம் காண்பித்தாலும் அதை வாங்கி அனுபவிக்க முடியாதவன் இதை ‘மஞ்சள் பிசாசு’ என்று சொல்லக் கூடிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்ட கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் உண்டு. தங்கத்தின் மீது கூடுதலான பற்றும், பாசமும், அதை விதவிதமான முறையில் நகைகளாக செய்து உடம்பு முழுவதும் போட்டு அழகு பார்ப்பதும் நமது நாட்டில் சற்றுக் கூடுதல்தான். இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் பெரிய அளவுக்கு இல்லை என்றே கூறலாம்.

மனித நாகரிகம் தோன்றி வெகு காலத்திற்கு அப்பால்தான் மண்ணுக்குள் புதைந்து கிடந்த இந்தத் தங்கம் என்ற உலோகத்தை மனிதன் கண்டுபிடித்திருக்கிறான். இப்படி தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உலோகம் இன்றைக்கு மனிதனை விட அவன் வாழ்க்கையில் முந்தி நிற்கக்கூடிய ஒரு பொருளாகி, ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையை நிரூபித்து கொண்டிருக்கிறது. உலகத்தையே கட்டி ஆண்ட சக்கரவர்த்திகளின் அந்தஸ்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது அவன் தலையில் வைத்துக்கொள்ளும் தங்க கிரீடத்தைப் பொறுத்துத்தான். சக்கரவர்த்திகளுக்கே இதுதான் அளவுகோல் என்றால் சாமானியனைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?

சமீப சில வருடங்களாக அட்சய திரிதியை என்ற பெயரில், குறிப்பிட்ட அந்த நாட்களில் தங்கம் வாங்கியே தீர வேண்டும் என்ற வேகத்தை, வெறியை, பேராசையை பணம் இருப்பவர்களிடம் உண்டாக்கிவிட்டார்கள். இல்லாதவர்களிடம் ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். வசதி இருப்பவர்கள் வாங்கிப்போட்டு அழகு பார்க்க, இல்லாதவர்கள் அதனை எண்ணி ஏங்க - சமூகம் இரு வேறு கூறுகளாக எப்படி மாறுபடுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்கள்.

இதுமட்டுமா? ஒரு மனிதனின் நல்ல குணத்திற்கு தங்கம்தான் உதாரணம் காட்டப்படுகிறது. ஒரு மனுஷியின் அழகிற்கும் தங்கம்தான் உதாரணம் காட்டப்படுகிறது. இப்படி, எல்லாவற்றிற்கும் உதாரணம் காட்டும் அளவிற்கு தங்கத்திற்குச் சில சிறப்பான குணங்கள் உண்டு. எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் துரு பிடிக்காது, நிறம் மாறாது, எந்தளவுக்கும் வளைக்கலாம், நீட்டலாம். ஆனால், அதேசமயம் சுத்தமான தங்கத்தை வைத்து எதுவுமே செய்ய முடியாது. தங்கம் கூடுதலான நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒரு உலோகம். எனவே, செம்பு போன்ற உலோகங்களைச் சேர்த்துத்தான் நாம் விரும்புகின்ற விதத்தில் எதையும் செய்து அழகு பார்த்துக் கொள்ளலாம்.

மனிதனின் அந்தஸ்து மட்டுமல்ல, சாமிகளின் அந்தஸ்தும் தங்கத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஏராளமான பண வருவாய் உள்ள சாமிகளுக்கு தங்கக் கிரீடம் முதல் தங்க ஒட்டியாணங்கள் வரை செய்து கொண்டே இருக்கிறார்கள். அதற்கு மேலும் வருமானம் வந்தால் அந்தக் கோவிலின் கூரையையே தங்கத்தால் வேய்ந்துவிடுகிறார்கள். இதில் பரிதாபத்திற்குரியது நம்முடைய தெரு வோரத்துச் சாமிகள்தான். ஆடும், சேவலும், சில சில்லறைக் காசுகளுமே அதற்கு கிடைக்கும் காணிக்கை. இந்தச் சாமிகளுக்கு தங்கம் எட்டாத தூரம்!

இப்படி, வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு ஆதிக்கம் செலுத்தும் தங்கத்திற்கு முதலாளித்துவம் கொடுக்கும் கவுரவமே தனிதான். உலகின் எல்லா நாடுகளின் செல்வாக்கிற்கு அடிப்படையாக இருப்பது அவர்களுடைய வங்கிகளின் பாதாள அறையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்துத்தான். தங்கம் கூடுதலாக வெட்டியெடுக்கப்படுவது கறுப்பர்களின் நாடான தென்னாப்பிரிக்காவில். நூற்றுக்கு 75 சதமான தங்கம் இங்குதான் வெட்டி எடுக்கப்படுகிறது. ஆனால், விலை நிர்ணயம் செய்வதோ நியூயார்க்கிலும், லண்டனிலும் உள்ள வெள்ளைத்தோல் கொண்ட ஏகாதி பத்தியவாதிகள்.

“ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருவன் போட்டான் வெள்ளரிக்காய் காசுக்கு இரண்டு விற்கச்சொல்லி காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்” என்ற நம்ம ஊர் பாட்டு கேப்டவுனுக்கும், லண்டனுக்கும் பொருந்துகிறது, என்னே! நம் முன்னோர்களின் தீர்க்கதரிசனம். மாமேதை மார்க்ஸ் முதலாளித்துவத்தைப் பற்றிச் சொல்லும்போது மனிதர்களுக்குள் ரொக்கப் பட்டுவாடாவைத் தவிர, வேறு எந்த உறவையும் வைத்துக்கொள்ள விடாது என்றார். அந்த மேதையின் கூற்று நமது நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் உறவுமுறைகளைத் தங்கத்தின் மூலம் எடைபோட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லும் வைதீகர்கள் வீட்டு திருமணமே எத்தனை பவுன் நகைகள் என்பதிலும், அதை ஒட்டிய ரொக்கப்பணத்திலுமே இருக்கிறது என்பதை நாடும் அறியும்; நாமும் அறிவோம். விழியில்லாமல் ஒளியில்லை; உப்பில்லாமல் பண்டமில்லை என்பதைப் போல தங்கம் இல்லாத திருமணமில்லை என்பதே உண்மை. கடல் கடந்து சென்று பல்வேறு நாடுகளை கண்டுபிடித்த கொலம்பஸ் போன்றவர்களே தங்கத்தைத் தேடித் தான் இப்படிப் போனார்களே தவிர, நாட்டை தேடும் ஆவலில் இல்லை என்ற செய்தியும் சொல்லப்படுகிறது. பல நூறு டன் மண்ணைத் தோண்டி எடுத்தால்தான் சில நூறு கிராம் தங்கம் கிடைக்கும். இதற்காக அடிமைகள் என்ற பெயரில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் ஏராளம்.

நவீன கண்டுபிடிப்புகள் இல்லாத அந்தக் காலத்தில் அரசர்களும், பெருந்தனக்காரர்களும் தங்கத்தின் மீதுள்ள ஆசையால் ஆயிரமாயிரம் அடிமைகளை தங்க வேட்டை என்ற பெயரில் கொன்று குவித்திருக்கிறார்கள். இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் பல மாதங்களுக்கு வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் இருட்டுச் சுரங்கங்களிலேயே இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு கூறும் பீதி கலந்த உண்மையாகும். தங்கம் சாமிகளின் அந்தஸ்திற்கு மட்டுமல்ல, அவசியத்திற்கும் தேவைப்பட்டதாகவே இருந்திருக்கிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதா பிராட்டியை காணச்சென்ற அனுமனுக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கொடுத்தனுப்பிய தங்க மோதிரம்தான் இவன் நமது கணவனால் அனுப்பப்பட்டவன் என்ற அடையாளம் காண உதவியது. இல்லையெனில், சீதாபிராட்டி அனுமனைக் கூட தெரியாத ஆள் என்று விரட்டியிருக்கலாம். மகாபாரதத்தில் தர்மனும் துரியோதனனும் தங்க ஆபரணங்களைப் பணயம் வைக்காமலா சூதாடியிருப்பார்கள். பாஞ்சாலியையே பணயம் வைத்தவன் தங்கத்தை மட்டும் விட்டுவைத்திருப்பானா?

ஆண்டி முதல் அரசர் வரை அவரவர் வாழ்வுக்கேற்ப, வசதிக்கேற்ப தங்கம் ஒரு முக்கியமான இடத்தை உலக வாழ்க்கையில் பன்னெடுங்காலமாய் வகிக்கிறது. வாழ்வின் ஒருபகுதியாக சிறப்பான இந்த உலோகம் இருக்கலாம். ஆனால், இதுவே வாழ்வு என்றால், ஏழைகளின் கதி என்னாவது? யோசிக்க வேண்டிய விஷயம். முதலாளித்துவ நாடுகளுக்கும், சோஷலிச நாடு களுக்கும் தங்கத்தைப் பயன்படுத்துவதில் வேறுபட்ட நிலைகள் உண்டு. ஆயினும், தங்கத்தின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. தொலைக்காட்சிகளில் தொடர் பார்த்துச் சோகமானவர்களை விட தங்கத்தின் விலை நிர்ணயம் பார்த்துக் கலக்கமடைபவர்களே அதிகமுண்டு.

இன்றைய முதலாளித்துவவாதிகள் இந்தக் காட்டு மிராண்டித்தனத்தையே நகாசு வேலைகள் செய்து மக்களின் இதயங்களில் ஏக்கப் பெருமூச்சுவிடும் பொருளாக மாற்றி உலகம் முழுவதும் தங்களுடைய லாப வெறி கொண்ட கால்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார்கள். நரித்தந்திரமிக்க இவர்களுடைய மூளைக்கு முன்னால் ஏழைகளால் என்ன செய்துவிட முடியும்? ஏக்கப்பெருமூச்சும், இதயக்குமுறல் மட்டுமே அவர்களால் வெளிப்படுத்த முடியும். ஏழைகளுக்கான ஒரு அரசு அவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ற திட்டங்களை தீட்டினால் மட்டுமே ஏழைகளும் சற்றே இந்த தங்கத்தை தீண்டமுடியும். இல்லையெனில், அவர்களுக்கு இதுவொரு எட்டாக் கனியே! தங்கமே தங்கம் என்று தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பேர் வைத்துக் கொள்வதை தவிர புதிதாக அவர்களால் வேறு என்ன செய்துவிடமுடியும்?

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com