Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
டிசம்பர் 2008
நிதிச்சந்தை எனும் நிழலின் நெருக்கடியும் நிஜப் பொருளாதாரத்தின் நிலைகுலைவும்
எழிலன்


அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த நேரம். வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பாக நாட்டு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை இது: “நமது ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் அபாயத்தில் இருக்கிறது”.

lass “காங்கிரஸ் (அமெரிக்க நாடாளுமன்றம்) பாரதூரமான பொருளாதாரத் தகர்வைத் தவிர்க்க உடனே செயல்பட்டாக வேண்டும். இல்லையேல் அமெரிக்கா ஒரு நிதித்துறை பீதியை எதிர்கொள்ளும். மேலும் பல வங்கிகள் - உங்கள் உள்ளூர் வங்கிகள் உட்பட - நொடித்துப் போகும்.” இன்றைய அதிபர் அபாயச் சங்கை எடுத்தூதி, அடுத்த அதிபர் யாரென்று முடிவு செய்யக் களத்தில் எதிர்நின்ற வேட்பாளர்கள் பாரக் ஒபாமாவும், மெக்கெயினும் அவசர அவசரமாகப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மெக்கெயின், ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சி வேட்பாளர்; ஒபாமா ஜனநாயகக் கட்சி வேட்பாளர். இருவருமே தேர்தல் பிரச்சாரத்தை இடைநிறுத்திவிட்டு, வாஷிங்டன் விரைந்தனர். அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிலை குலைந்து கீழே விழுவதைத் தடுப்பதற்காக 70000 கோடி டாலர் தொகையை மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுத்து ‘மீட்பு நிதி உதவி’யாக வழங்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் நிரகாரித்ததுதான் அதிபர் புஷ்ஷின் அபாய அறிவிப்புக்குக் காரணம்.

உலக நாயகன் என்ற உன்னத நிலையில், பூமண்டலத்தில் உள்ள நாடுகள் அனைத்தையும் நாட்டாமை செய்து வந்துள்ள ஏகாதிபத்தியப் பெருமிதத்தை இழக்க முடியுமா என்ன? எனவே ஒபாமாவும், மெக்கெயினும் அமெரிக்க நாடாளு மன்றத்தின் இன்னோர் அவையான செனட்டின் உறுப்பினர்கள் என்ற முறையில் அவரவர் கட்சியினருக்கு வேண்டு கோள் விடுக்க, அதிபர் புஷ் விரும்பிய மசோதா, சில சிறிய திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க கருவூலச் செயலாளர் (நம்ம ஊர் நிதியமைச்சருக்கு ஒப்பான பதவி வகிப்பவர்) ஹென்றி பால்சன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். 70000 கோடி டாலரை திவால் நிலையை எட்டிவிட்ட தனியார் நிதி நிறுவனங்களுக்குப் பிரித்தளித்து நெருக்கடியைச் சமாளிக்க அவருக்கு வழி பிறந்தது. ‘இந்த ‘மீட்பு நிதிஉதவி’ யைப் பற்றி நாடாளுமன்றமே கூட கேள்வி கேட்கக் கூடாது; கண்காணிப்புக்கு உட்படுத்தக் கூடாது’ என்ற முக்கிய சரத்து மாற்றப்பட்டதில் பால்சனுக்கு சங்கடம்தான். இருந்தாலும் என்ன செய்வது? வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டார். கூடவே, நிதிநிறுவனங்களில் பணத்தைச் சேமித்து வைத்திருப்போருக்கு 2 லட்சம் டாலர் வரை பணம் திருப்பிக் கிடைக்க அமெரிக்க அரசாங்கம் உத்தரவாதம் தரும் என்பதும் அறிவிக்கப்பட்டது.

‘பியர் ஸ்டேர்ன்ஸ்’ என்ற நிதி நிறுவனத்திற்கு அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 2900 கோடி டாலர் கடனாகக் கொடுத்து உதவ, அந்நிறுவனத்தை ஜே.பி. மார்கன் சேஸ் என்ற மற்றொரு நிதி நிறுவனம் 120 கோடி டாலர் கொடுத்து வாங்கிக் கொண்டது. இது கடந்த மார்ச் 2008இல்.

ரியல் எ°டேட் வியாபாரம் செழிக்க வேண்டுமென்பதற்காக அமெரிக்க அரசாங்கத்தின் முன்முயற்சியில் துவங்கப்பட்ட வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் இரண்டு - (1) ஃபென்னி மே (2) ஃப்ரெட்டி மேக் இவை இரண்டுமாக 5 லட்சம் டாலர் பெறுமான அடமானக் கடன்களை வழங்கியிருந்தன. இவையும் நொடித்துப்போக, 2008 செப்டம்பரில் இவை தேசியமயமாக்கப்பட்டன.

மெரில் லின்ச் என்ற முதலீட்டு வங்கியை 5000 கோடி டாலருக்கு பேங்க் ஆஃப் அமெரிக்கா வாங்கிக் கொண்டதால், அந்த வங்கி சரிவிலிருந்து காப்பாற்றப்பட்டது. 2008 ஜூன் மாதம் முடிய ஓராண்டில் மட்டும் இந்த வங்கி 1920 கோடி டாலர் நஷ்டத்தைச் சந்தித்தது.

மெரில் லின்ச்சிற்கு ஏற்பட்ட இந்த கதியைப் பார்த்தப் பின்னர், அமெரிக்காவின் மற்ற இரண்டு முதலீட்டு வங்கிகளான கோல்டன் சாக்ஸ், மோர்கன் °டான்லி என்ற இரண்டையும் சாதாரண வணிக வங்கிகளாகச் செயல்பட ஃபெடரல் ரிசர்வ் உத்தரவிட்டது.

லேமன் பிரதர்ஸ் என்ற மற்றொரு மெகா முதலீட்டு வங்கி 6130 கோடி டாலர் கடன்கள் நிலுவையாக நின்ற நிலையில் திவாலாகி மஞ்சள் காகித மனு தாக்கல் செய்துவிட்டது.

ஏஐஜி (அமெரிக்கன் இன்டர்நேஷனல் குரூப்) என்ற இன்ஷ்யூரன்சு நிறுவனத்திற்கு ஃபெடரல் ரிசர்வ் 2008 செப்டம்பரில் 8500 கோடி டாலர் அவசரக் கடனாக அனுமதி அளித்தது. இதன் வழியாக அமெரிக்க அரசாங்கம் ஏஐஜியின் சுமார் 80 சதவிகிதம் பங்குகளைப் பெற்றது. இதில் 7030 கோடி டாலரை உடனடியாக எடுத்துக் கொண்ட ஏஐஜி மேலும் 3780 கோடி டாலர் கடன் அனுமதிக்காக ஃபெடரல் ரிசர்வை அணுகுவோம் என்று அறிவித்தது. (இந்த ஏஐஜி தான் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் சேர்ந்து, 26 சதவிகித அன்னிய முதலீட்டுடன் தனியார் இன்ஷ்யூரன்சு நிறுவனத்தைத் துவங்கி நடத்தி வருகிறது).

வாஷிங்டன் மியூசுவல் என்கிற வங்கி 2008 செப்டம்பரில் ‘திவால்’ என்று அறிவிக்க நேரிட்டது. அமெரிக்காவின் ‘சிக்கன கண்காணிப்பு அலுவலகம்’ இந்த வங்கியை கையகப்படுத்தி, இதை ஜே.பி. மார்கன் சேஸ் நிறுவனத்தோடு இணைத்தது. இவற்றோடு, இண்டிமேக் பேங்க் கார்ப் என்ற ஒரு வங்கியும் இழுத்து மூடப்பட்டது.

மேலே குறிப்பிட்டவை எல்லாம் அமெரிக்காவின் மெகா நிதி நிறுவனங்கள். வட்டார அளவில் இயங்கி வந்த சுமார் 100 சிறிய வங்கிகள் சத்தமில்லாமல் மூடப்பட்டு, அவற்றில் பணம் போட்டிருந்த வாடிக்கையாளர்களின் சேமிப்புகள் யாவும் காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இவையெல்லாம் 70000 கோடி டாலர் ‘மீட்பு நிதி உதவி’க்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நடந்தேறிய படலங்கள். ஆனால் நிதி நிறுவனங்கள் நொந்து, நொடித்து, திவால் நிலைமையை நோக்கி நகருவது இன்றும் தொடர்கதையாகி இருக்கிறது அமெரிக்காவில்!

அமெரிக்காவின் நிதிச் சந்தையில் நேரிட்டுள்ள இந்த நெருக்கடி - நிதிப் பேரழிவு சுனாமி-யின் மூலம்தான் என்ன? தரமற்ற அடமானங்களுக்கு எதிராகக் கடன் வழங்குகிற (Sub Prime Mortgage) நடைமுறையை அமெரிக்க வீட்டுவசதி நிதி நிறுவனங்களும், வங்கிகளும் கடைப்பிடித்ததுதான் இந்த நிதிச்சந்தை நெருக்கடியின் ‘ரிஷி மூலம்’! இந்த வகைக் கடன்களை Ninja Loans (நோஞ்சான் கடன்கள்) என்று வழங்குவதுண்டு. No Income, No Job, No Asset. எந்தவித வருமானமோ, வேலையோ, சொத்தோ இல்லாத நபர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள்தான் இந்த நோஞ்சான் கடன்கள்.

அமெரிக்காவில் எந்தவொரு நபரும் (உள்நாட்டவர் ஆயினும் சரி, வெளிநாட்டவர் ஆயினும் சரி, மாணவர்களே ஆயினும் சரி) சமூகப் பாதுகாப்பு எண் பெறாமல் எந்த வேலையிலும் சேர முடியாது - பகுதிநேர வேலை உட்பட. ஆனால் இந்த நோஞ்சான் கடன்கள் சமூகப் பாதுகாப்பு எண்ணே பெற்றிராத - வெளிநாடு களிலிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்த - நபர்களுக்கும் வழங்கப்பட்டன.

lass அமெரிக்காவில் பகாசுரக் கம்பெனிகள் ரியல் எSடேட் வியாபாரத்தில் முனைப்போடு இறங்கியபோது, அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன. இவற்றை நிதி நிறுவனக் கடன் பெற்று வாங்கியவர்கள் அடமானமாக வைத்தபோது இருந்த விலைமதிப்பு, ரியல் எ°டேட் வியாபாரத்தில் மந்தநிலை காரணமாக செங்குத்தாக வீழ்ச்சியடைந்தது. இந்த வீட்டுவசதிக் கடன்களை ‘விற்பனை’ செய்யத் தரகர்கள் நியமிக்கப்பட்டார்கள்; வாங்கப்படும் வீடு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பரிசோதிக்க ‘உத்தரவாத மளிப்பவர்கள்’ என்று சில நிறுவனங்கள் நியமிக்கப் பட்டன.

இந்த நடைமுறையால் 30 லட்சம் முதல் 1 கோடி டாலருக்கு மேலாகக் கடன்பெறுவது நொடிக்கணக்கில் சாத்தியமானது. முதல் 2 ஆண்டுகளுக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும்; பின்னர் கடன் தவணையைத் திரும்பச் செலுத்தத் துவங்கும்போது, அன்றைய சந்தை நிலவரப்படி வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் என்றெல்லாம் இந்த வீட்டு வசதி அடமானக் கடன்கள் அதிரடி விற்பனை செய்யப்பட்டன. ரியல் எஸ்டேட் கம்பெனிகள் கொழுத்த லாபம் ஈட்டின; கட்டுமானத் தொழிலோடு சம்பந்தப்பட்ட சிமென்ட், °டீல் உள்ளிட்ட கம்பெனிகளின் வியாபாரமும், லாபமும் உச்சத்தை எட்டின. கடன் வாங்கியவர்கள், அமெரிக்க வங்கிகள் தாராளமாக வழங்கிய ‘கடன் அட்டைகள்’ மூலமாக சிலகாலம் வரை வட்டியையும், தவணைத் தொகையையும் செலுத்தினர். பின்னர் எல்லாமே தரைதட்டிய கப்பலாக மீட்க முடியாமல் சிக்குண்டன.

கடன் வழங்கிய நிறுவனங்கள் தவணை தவறிய வாடிக்கையாளர்களின் வீடுகளைப் பறிமுதல் செய்தன; அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் வீதியில் தள்ளப் பட்டனர். நிதி நிறுவனங்களின் கையில் லட்சக்கணக்கில் வீடுகள் / குடியிருப்புகள் வந்தன. அவற்றை மறு விற்பனை செய்தால், கொடுத்த கடனில் ஒரு சிறு பகுதியைக்கூடத் திரும்ப எடுக்க முடியாத இக்கட்டில் அந்த நிறுவனங்கள் சிக்கிக் கொண்டன. இப்போது கடன் வழங்கிய நிறுவனங்களின் கையில் அடமானமாக வைக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான வீடுகள்! விற்பதற்கு வழியில்லாமல் திகைத்து நிற்கும் நிறுவனங்கள். கடனுக்காகக் கட்டி அழுத பெருந்தொகைகள் வீணாகப்போக, வீடிழந்து வீதியில் நிற்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் பெருகி வருகிறது.

இதுதான் அமெரிக்க நிதிச் சந்தையைப் பேயாகப் பிடித்து உலுக்கும் தரந்தாழ்ந்த அடமானக் கடன்களின் சோகக்கதை! இது நெருக்கடியின் ஒரு பக்கம்தான். மறுபக்கம், இந்த வகையிலான கடன்களை, அவற்றுக்கான அடமானச் சொத்துக்களோடு பிணைத்துப் பத்திரங்களாக்கி வெளியிட்டு, கூடுதல் வட்டியோ, இலாப ஈவுத்தொகையோ கிடைக்கும் என்ற நைப்பாசையில் அவற்றில் சேமிப்பை முதலீடு செய்த அமெரிக்கக் குடும்பங்கள் ஏராளம். இதில் கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் தப்பித்துக் கொண்டு, கடன் நிலுவையால் எழும் நஷ்டத்தைப் பத்திரங்களை வாங்கியவர்கள் தலையில் கட்டி விட்டன.

இவையாவும், தாராளமயத் தத்துவத்தின் விளைவாக நிதி நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளையெல்லாம் தளர்த்தி விட்டதன் மோசமான பரிமாணங்கள். கட்ட விழ்த்துவிட்ட நிதிச் சந்தை தனது இலாப வேட்கை சூதாட்டத்திற்காகப் புதிய புதிய நிதிக் கருவிகளைக் கண்டுபிடித்து உலவவிட்டன. யாருடைய பணம் எங்கே போய் சிக்கி நிற்கிறது என்று எந்த அரசாங்க அமைப்பாலும் கண்டுபிடிக்க முடியாது புதைந்து கிடக்கின்றது.

இந்த நெருக்கடி அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கடுந்தாக்குதலுக்கு உள்ளாக்கிவிட்டது.

அமெரிக்க நாட்டின் உள்நாட்டுக் கடன் 10 லட்சம் கோடி டாலரைத் தாண்டி எகிறுகிறது.

அமெரிக்க டாலரின் மேலாண்மை சரிந்து விழுந்து கிடக்கிறது.

அமெரிக்க நாட்டின் பங்குச் சந்தை அதல பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது.

அமெரிக்காவின் பொருளாதாரம் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது.

சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு 1 லட்சம் கோடி டாலர் பற்றாக்குறை.

உள்நாட்டு பட்ஜெட் பற்றாக்குறையும் 1 லட்சம் கோடி டாலரை எட்டும்.

இந்த ஆண்டு இதுவரை 2,40,000 பேருக்கு வேலையிழப்பு; இது ஆண்டு முடிவில் 10 லட்சத்தைத் தாண்டும்.

வேலையில்லாதோர் சதவிகிதம் 6.5 என்றாகி 14 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட ஓய்வூதிய சேமிப்புகளில் 2 லட்சம் கோடி டாலர் இழப்பு. நெருக்கடி இன்னும் முடிந்தபாடில்லை என்பதால், இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

உலகமயப் பொருளாதாரம் அனைத்து நாடுகளின் நிதிச் சந்தைகளைப் பின்னிப் பிணைத்து விட்டதன் காரணமாக, அமெரிக்காவின் நிதிச் சந்தை நெருக்கடி உலகம் முழுவதிலும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது. வளர்ச்சியடைந்த முதலாளித்தவ நாடுகள் பலவற்றை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் நெருக்கடிக்கு உள்ளாகி நிற்கிறது. இந்தியாவும் இதன் பாதிப்புகளிலிருந்து தப்பவில்லை. இந்தியாவின் பங்குச் சந்தையில் 60 சதவிகிதத்திற்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்திய ஆட்சியாளர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க ரிசர்வ் வங்கி, பல்வேறு வழிகளில் 2,60,000 கோடி ரூபாயைப் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இந்திய நாட்டு முதலாளிகளும், தங்களின் அமெரிக்க நாட்டுச் சொந்தங்களைப் பின்பற்றி, ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப முற்பட்டுள்ளனர். அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் ஆதாரமாகக் கொண்டுச் செயல்பட்டு வந்துள்ள இந்தியாவின் கணினி, மென்பொருள் சேவைத் துறைகள் பலத்த அடி வாங்கியுள்ளன. மன்மோகன் சிங் ஆட்சி ஒரு பக்கம் ஜி -7, ஜி-20 என்று உயர்மட்டக் கூட்டங்களில் கலந்துகொண்டு, அமெரிக்க நெருக்கடியின் சுமைகளை எப்படிக் கூட்டாகத் தாங்கிச் சுமப்பது என்று ஆலோசித்து வருகிறது; மறுபக்கம் உள்நாட்டுத் தொழில் முதலாளிகளை அழைத்துப் பேசி, அவர்கள் கோரும் சலுகைகளை அள்ளிக்குவிக்க வழிவகை கண்டு வருகிறது. ஆனால் நாட்டின் உழைப் பாளிகளோ, சாதாரண மக்களோ படும் அவதிகளைக் களைய வழி என்ன என்பதைச் சிந்திக்கக் கூட மறுத்து வருகிறது.

முதலாளித்துவம் மீண்டும் மீண்டும் நெருக்கடி களைச் சந்திக்கும்; ஒரு நெருக்கடியைத் தாண்டி சமாளித்து நின்றால், அடுத்த நெருக்கடியைச் சந்திக்கத் தயாராக வேண்டியிருக்கும்; ஆனால் நெருக்கடியின் சுமைகளைத் தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் ஏற்றி விட்டுத் தான் மீட்சியடைய வழி தேடும். இதுவே மூலதனத்தின் செயல்முறை. எனவே, இந்திய நாட்டுத் தொழிலாளி வர்க்கம் வேலையிழப்பையும், தொழிலாளர் உரிமை பறிப்பையும் எதிர்நிற்க - ஒன்றுபட்டுப் போராடத் தயாராக வேண்டும்!

சர்வதேசத் தொழிலளார் அமைப்பின் தலைமைச் செயலாளரான ஜான் சோமாவியா கூறியுள்ளது இங்கு நினைவில் நிறுத்தற்பாலது. வால் ஸ்ட்ரீட் என்பது நியூயார்க்கில் அமெரிக்காவின் பகாசுர நிதி நிறுவனங்களின் தலைமையகங்கள் இயங்கும் வீதி. அதைக் குறிப்பிட்டு சோமாவியா சொன்னார்: “இது வால்ஸ்ட்ரீட்டை மட்டும் கவ்வியுள்ள நெருக் கடியல்ல; இது ஒவ்வொரு தெருவையும் பாதிக்கும் நெருக்கடி.”
அவர் மேலும் கூறினார்:

“தரந்தாழ்ந்த அடமானக் கடன்களால் உருவாகி யுள்ள இந்த நெருக்கடியைத் தரந்தாழ்ந்த கொள்கைகளை வைத்து எதிர்கொள்ள முடியாது”. நிழல் பொருளாதாரமான நிதிச்சந்தையின் நெருக் கடியில் விவசாயமும், தொழிலும் சார்ந்த நிஜப் பொருளாதாரம் நிலைகுலையும் ஆபத்து சூழ்ந்துள்ளது. நிதிச் சந்தையை மீட்பது என்பதையும் தாண்டி, நிஜப் பொருளாதாரத்தையும், மக்களையும் காப்பாற்றுவது எப்படி என்று சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய நேரம் இது!

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com