Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
டிசம்பர் 2008
வேண்டும் மதம் கடந்த இசை-தமிழிசை ஆய்வறிஞர் நா.மம்மது
சந்திப்பு : சோழ.நாகராஜன்


ஆங்கில மொழி இலக்கியத்திற்கு வெறும் 500 ஆண்டுகால வரலாறுதான் உண்டு. இந்தக் குறுகிய கால வரலாறுடைய ஆங்கில மொழியில் இசை பற்றியான பேரகராதி, அகராதி, கலைக்களஞ்சியம், கம்பானியன் ஆகியவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வந்துவிட்டன.ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடைய தமிழ்மொழியின் இசைத்துறைக்குத் தமிழில் ஒரு அகராதி இல்லை.

na_mammathu அறிவியல் பட்டதாரியான மம்மதுவின் இசை குறித்தான ஆர்வமும் அறிவும் சுயமானவை. வி.ப.கா. சுந்தரத்தின் மாணவர். தமிழிசையின் நெடிய வரலாறைப் பேசுவதற்கு மிஞ்சியிருக்கிற ஆய்வாளர்கள் ஓரிருவருள் இவரும் ஒருவர். நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது மதுரையில் வசிக்கும் இவரின் குடும்பத்தில் அனைவரும் இசையில் பெருவிருப்பமுள்ளவர்கள்.

இசைத்துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? இதில் ஆர்வம் தோன்றிய அந்த நாள் நினைவுகளைக் கொஞ்சம் எங்கள் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்....

நான் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன். குற்றாலம் அருகில் இடைகால் என்ற சிற்றூர் உள்ளது. அதனருகில் உள்ள பைம்பொழி எங்கள் ஊர். அங்கு நான் சிறுவனாக இருந்த பொழுது சின்னச் சின்னக் கோயில்களில் கொடைவிழாக்கள் நடக்கும். அந்த வயதில் எங்களுக்கு எந்தவிதமான வித்தியாசமும் தோன்றாது. அந்த விழாக்களிளெல்லாம் நண்பர்களோடு கலந்து கொள்வோம். எங்கள் பகுதியில் மூன்று, நான்கு அக்ரகாரங்கள் இருந்தன. அப்போதெல்லாம் அங்கே ஒரு திருமணம் என்றால் ஏழு நாட்கள் நடக்கும். ஏழு நாட் களிலும் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு கச்சேரி நடக்கும். இந்தக் கச்சேரி களிலும் நாங்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்வோம். ஆக, இசை என்பதை நாங்கள் தேடிப் போக வேண்டிய நிலை இல்லை. எங்கள் கிராமத்தில் தாலாட்டிலிருந்து ஒப்பாரி வரையிலும், நலுங்குப்பாட்டு, கும்மிப்பாட்டு என்று சகல விதமான இசைச்சூழல்களிலும் நாங்கள் இணைந்தே வளர்ந்தோம். எல்லா வகையான மக்களோடும், எல்லா வகையான இசை களோடும் எனக்கு இயல்பான அறிமுகம் ஏற்பட்டது.

உங்கள் குடும்பப்பின்னணி இதற்கெல்லாம் இசைவாய் இருந்ததா?

எங்கள் அப்பா, தாத்தா எல்லோரும் நாடகத்துறையைச் சார்ந்தவர்கள். நல்லவசதி நிறைந்த குடும்பம். மின்சார இணைப்பு முதன்முதலில் வந்தபோது எங்கள் ஊரிலேயே மொத்தம் மூன்று வீடுகளுக்குத்தான் தரப் பட்டதாம். அதில் எங்கள் வீடும் ஒன்று. அப்பா நல்ல செல்வாக்கு மிக்கவராக இருந்தார். தாத்தா ஒரு நாடக நடிகர். எங்கள் அப்பாவை அதில் ஈடுபடுத்தவிரும்பாத தாத்தா அவரை ரங்கூனுக்கு அனுப்பிவிட்டார். அங்கே போன எங்கள் அப்பாவோ அங்கு ‘குலேபகாவலி’ நாடகம் போட்டிருக்கிறார். தாத்தா ‘நீ ரங்கூனில் இருந்தது போதும், தமிழ்நாட்டுக்கு வந்துவிடு’ என்று சொல்லிவிட்டாராம். நாடகம், பாட்டு, கூத்து ஒன்று நம் குடும்பம் நிறைய பணவிரயம் செய்துவிட்டது. எனவே நீ வணிகத்தையும், விவசாயத்தையும் கவனித்துக் கொண்டிரு என்று சொல்லிவிட்டார்.

அப்பா மிகச்சிறந்த வணிகராக இருந்தார். நல்ல வேளாண்மைக்காரராகவும் விளங்கினார். அதோடு மட்டுமல்லாமல், நல்ல சித்த வைத்தியர். அவர் பாட்டுப்பாடுவதையும் விட்டுவிட முடியவில்லை. அதைக்கேட்க நிறையப்பேர் வந்துகொண்டேயிருப்பார்கள். என்னையும் அப்பா கட்டுப்பாட்டோடு வளர்த்தார். கலை ஈடுபாடுகளுக்கு அப்பா தடைவிதித்திருந்தார். ஆனால், இயல்பாக எனக்கு ஆர்வம் இருந்தது. கல்லூரிக்குப் போனது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருந்தது. நெல்லையில் வானமாமலை, பழனரசு, லூர்து போன்ற மிகச்சிறந்த பேராசிரியர்கள் பழக்கம் கிடைத்தது. படித்தது கணிதம்தான். சி.சு.மணி., தொ.பரமசிவம் இவர்களெல்லாம் எனது கல்லூரிக்கால நண்பர்களாகக் கிடைத்தனர்.

சைவ சித்தாந்தத்தில் மிகப்பெரிய அறிஞரான சி.சு.மணியுடன் பேசிக்கொண்டிருந்த போது இசை குறித்துப் பேசினேன். இசை அறிவை இன்னும் கூர்மைப்படுத்திக் கொள்ள லாமே என்று யோசனை கூறினார். அதைத் தொடர்ந்துதான் ஆள்வார் பாசுரங்கள், தேவாரத்திலிருக்கும் இசை, சங்ககாலத்திலிருந்து தொன்றுதொட்டு பாரம் பரியமாக வரக்கூடிய இசை தொடர்பான, நாடகம் தொடர்பானவற்றையெல்லாம் அவர் எனக்குச் சொல்வார். அதிலிருந்து இசைத்தமிழ் நூல்களாகப் படிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு கூத்து, பாட்டு போன்ற துறைகளிலிருப் போர் பலரும் நண்பர்களாகக் கிடைத்தனர்.

நெடுஞ்சாலைத்துறையில் கண்காணிப் பாளர் பணி. இருந்தாலும் இசைத்துறையிலும் அறிவை வளர்த்துக் கொண்டே வந்தேன். நண்பர் தொ.பரமசிவம் எனது இசை குறித்த பார்வையைப் பொது மேடைகளில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கூறினார். நண்பர் ராஜா முகமதுவின் அறிமுகம் கிடைத்தபோது தமிழ்நாடு முழுக்க நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கினோம்.

அண்மையில் அமெரிக்கா சென்றுவந்த அனுபவம் எப்படி இருந்தது?

அமெரிக்காவில் ‘ஃபெட்னா’ அமைப்பி லிருந்து அழைத்திருந்தார்கள். ஃபுளோரிடா மாநிலத்தில் ஓர்லண்டோ எனுமிடத்தில் நான்குநாள் கருத்தரங்கம். அமெரிக்காவில் 40 தமிழ்ச்சங்கங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்த ஒரு அமைப்புதான் ஃபெட்னா. இது வடஅமெரிக்கத் தமிழர்களின் கூட்டமைப்பு. இரண்டு மாதங்கள், 15 தமிழ்ச் சங்கங்கள் எங்கள் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இது உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது.
]
இசைத்தமிழ் குறித்த உங்கள் எழுத்துப் பதிவுகள் பற்றிச் சொல்லுங்கள்....

இதுவரையில் இரண்டு நூல்கள் வெளி வந்துள்ளன. பல பத்திரிகைகளில் எனது கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அடுத்து ஒரு நூல் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளும் நிறைய செய்திருக்கிறேன்.

இசைத்துறையில் உங்களது பணிகள் எத்தகையன என்று சொல்லுங்களேன்...

ஆங்கில மொழி இலக்கியம் என்பதற்கு வெறும் 500 ஆண்டுகால வரலாறுதான் உண்டு. ஆனால், இந்தக் குறுகிய கால வரலாறுடைய ஆங்கில மொழியில் இசை பற்றியான பேரகராதி, அகராதி, கலைக்களஞ்சியம், கம்பானி யன் ஆகியவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வந்துவிட்டன. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடைய தமிழ்மொழி யின் இசைத்துறைக்குத் தமிழில் ஒரு அகராதி இல்லை. பேராசிரியர் சாம்பமூர்த்தி தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால், அவர் அதனை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதையும் எழுதி முடிப்பதற்குள் அவர் காலமாகிவிட்டார். அதிலும், அவருடைய காலகட்டத்தில் இசைத் துறையில் வடமொழிச் சொற்களும், தெலுங்குச் சொற்களும் தான் நிறைய இருந்தன. அவர் அந்தச் சொற்களையே பயன்படுத்தியிருக்கிறார்.

அது அவருடைய தவறு அல்ல. இப்போது அந்தச் சொற்களுக்கு மூலமான தமிழ்ச்சொற்கள் என்னென்ன என்பதை நம்முடைய இலக்கியங் களிலிருந்து எடுத்து விளக்கி அவற்றைப் பதிவு செய்து வைக்கிற பணியில் நான் ஈடுபட்டிருக் கிறேன். ஒரு இரண்டாயிரம் சொற்களை எடுத்து முதலில் ஒரு அகராதியைக் கொண்டு வரலாம் என்று துவங்கினால், தோண்டத் தோண்ட போய்க்கொண்டே இருக்கிறது. இப்போது 5000 சொற்களுக்கு மேல் எடுத்திருக்கிறேன். இவை யாவும் தனித்தமிழ்ச் சொற்கள்.

உங்கள் அனுபவத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு தாருங்கள்...

தேவாரம் என்று சொல்கிறோம் இல் லையா? அதில் வரும் வாரம் என்பது என்ன என்று ஒரு தேடல் முயற்சியைச் செய்தேன். அது மாலை என்று நம்மவர்கள் சொல்லிவிட்டார்கள். தெய்வத்துக்குப் பாக்களால் சூட்டும் மாலை - பாமாலை, அதுதான் தேவாரம் என்றனர். அதுவும் ஒருவகையான பொருள்தான். ஆனால், உண்மையான பொருள் என்னவென்று எங்கள் ஆசிரியர் வி.ப.கா.சுந்தரம் அவர்கள்தான் முதன்முதலில் விடைசொன்னார். வாரம் என்பது இசைப்பாடல். ஒன்றாம் காலத்திலும், இரண்டாம் காலத்திலும் பாடப்படுவது. தீட்சிதர் கிருதியெல்லாம் மத்திமகால சாகித்யம் என்று சொல்கிறோம் அல்லவா? இவையெல்லாம் இரண்டாம் காலத்தில் பாடப்படுவன.

தியாக ராஜர் கீர்த்தனைகளும் இரண்டாம் காலத்தில் பாடப்படுவன. இந்துஸ்தானி இசையெல்லாம் ஒன்றாம் காலத்தில் பாடப்படுவன. தேவாரப் பாடல்களும் அப்படித்தான் ஒன்றாம் காலத்தில் முதலில் பாடி, பிறகு இரண்டாம் காலத்தில் பாடுவது. இந்த இசைமுறை என்பது நமது பண்டைய இசைமுறை. இதற்கு எங்கே மூலம் இருக்கிறது என்றால், சிலப்பதிகாரத்திலே இருக்கிறது.

‘வாரம் இரண்டும் வரிசையில் பாட’
‘வாரம் பாடும் கூரிய மடந்தை’

என்றெல்லாம் வருகின்றன. இன்னும் நாம் ஆழ்ந்து போவோமாயின் தொல்காப்பியத்திலேயே இந்த வாரம் என்பது இருக்கிறது. இலக்கண நூலாக இருந்தாலுமே தொல் காப்பியத்தில் 60க்கும் மேற்பட்ட இசைப் பதிவுகள் இருக்கின்றன. தொல்காப்பியர் ஒரு நூலுக்கு சுருக்கநூல் எப்படி எழுத வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஒரு பெரிய நூலை எல்லோருமே படித்துவிட முடியாது. எனவே, அதற்கு ஒரு சுருக்க நூல் அவசிய மாகிறது. அதனை எப்படி எழுத வேண்டும் என்று தொல்காப்பியர் இலக்கணம் வகுக்கிறார். முதனூல் ஆசிரியரின் கருத்தை விட்டுவிடக் கூடாது என்கிறார். அவர் சொல்லாததைச் சொல்லக்கூடாது என்கிறார். இதற்கு எதை உதாரணம் காட்டுகிறார் என்றால் வாரம் பாடுவதைக் காட்டுகிறார். ஒன்றாம் காலத்தில் பாடுவதையே இரண்டாம் காலத்தில் பாடுகிற போது எதையும் விட்டுவிடக்கூடாது, புதிதாகவும் எதையும் சேர்க்கக்கூடாது.

‘முதல் வழியாயினும் யாப்பினும் சிதையும்
வல்லோன் புணரா வாரம் போன்றே’
- என்கிறார்.

வாரம் என்கிற சொல்லை எடுத்துக் கொண்டு நாம் விளக்குகிறோம் இல்லையா? வாரம் என்றால் என்ன? இந்தச் சொல் எப்படி வந்தது? வாரம் எப்படிப் பாடினார்கள்? இப்போது இது இருக்கிறதா? என்பனவற்றுக் கெல்லாம் விளக்கம் தருவதாக ஒரு அகராதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இதன் இரண்டாவது பகுதி என்பது பண்களஞ்சியம். நம்முடைய இசையின் முக்கிய அம்சம் என்னவென்றால், பண்ணிசை. பண்களின் - ராகங்களின் பெருக்கம் நம் இசையில் இருக்கும்.

ஆனால், மேற்கத்திய இசையில் ஒரேயொரு ராகத்தை வைத்தே வெவ்வேறு மெட்டுக்களை உருவாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் இந்தளவுக்குப் பண் பெருக்கம் கிடையாது. இந்தப் பண்களைப் பற்றியெல்லாம் தமிழ் இலக்கியங்களில் என்னென்ன செய்திகளைச் சொல்லியிருக்கிறார்கள்? பழைய பண்கள் என்பனவும் இன்றைய ராகங்களும் ஒன்றா? இதனைக் குறித்து எனது இரண்டாவது அகராதி இருக்கும். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு பண்ணையும் பாடவைத்து, அதனுடைய சுரங்கள் என்ன? அதனுடைய சஞ்சாரம் என்ன? அதனுடைய எடுப்பு என்ன? என்பதை ஒவ்வொரு பண்ணுக்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கி, அதனை வீடியோவாகத் தயார் செய்கிறோம். ஒரு மிகப்பெரிய பணி இது.

தற்போது நாம் பயன்படுத்த ஜனரஞ்சகமாக 50 பண்கள் இருக்கின்றன. இவை இன்றைய கச்சேரிகளில், சினிமாவில் அதிகமாகப் பயன்படும் பண்கள். தியாகராஜர் போன்ற முன்னோர்கள், நம்முடைய தமிழிசை மும்மூர்த்திகள் இவர் களெல்லாரும் சுமார் 200 பண்களைக் கையாண்டிருக்கிறார்கள். இவற்றோடு அபூர்வ ராகங்கள் என்பார்களே அவற்றையும் கணக் கிட்டால் 300 பண்கள் நம்மிடம் இருக்கின்றன. இவை வெவ்வேறு சுவைகளோடு, வெவ்வேறு இனிமையோடு இருக்கக்கூடியவை. இவற்றை யெல்லாம் பதிவு செய்ய வேண்டுமென்று திட்டமிட்டுப் பணியாற்றிக் கொண்டிருக் கிறோம்.

இதற்கடுத்து இசைக்கருவிகளின் களஞ்சியம் என்றொரு நூல். இதற்குமொரு திட்டம் வைத்திருக்கிறேன். நமது இசைக்கருவிகளை அறிமுகம் செய்து, அதனை சற்று மீட்டிக்காட்டும் ஒரு இணையதளத்தையும் உருவாக்க எண்ணமிருக்கிறது. ‘பிருகத்தேசி’ என்று ஒரு பெரிய நூல் வடமொழியில் இருக்கிறது. அதில் நமது நாட்டின் வட்டாரம் சார்ந்த கலை, இசை குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. இப்போதும் நமது கலைகள், கலைக்கருவிகள் வட்டாரம் சார்ந்தவைகளாகத்தான் இருக் கின்றன. கொஞ்சம் முயன்று அவற்றையெல்லாம் பதிவு செய்யலாம் என்று திட்டமிட்டுப் பணி யாற்றிக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் தான் இப்போதைய எனது பணிகள்.

இசை என்றால் என்ன என்று சொல்ல முடியுமா?

இசை என்ற சொல்லே இசைவிப்பது என்ற பொருளில்தான் சொல்லப்படுகிறது. அதாவது இசைவிப்பது இசை. எதன் மூலமாக இசைவிப்பது? ஒரு பாடலைக் கேட்கிறபோது நன்றாக இருக்கிறது என்று சொல்கிறோம். அதில் என்ன நன்றாக இருக்கிறது? ஒன்று அதனுடைய சந்தம் நன்றாக இருக்க வேண்டும். பாடலின் பொருள் நன்றாக இருக்க வேண்டும். அதில் அமைந்த தாளம் நன்றாக இருக்க வேண்டும். அதிலிருக்கக்கூடிய ராகம்- மெட்டு நன்றாக இருக்க வேண்டும். இதில் ஏதோ ஒரு வகையில் நம்மை அது ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. காவடிச் சிந்து இருக்கிறது. கிராமத்தில் காவடி ஆட்டம் என்பார்கள். அங்கே பாடலோடு ஆடல் இணைகிறது. உழைப்பு இணைகிறது. ஆடலுக்குத் தாளம் தேவையாக இருக்கிறது. தாளத்துக்கு சந்தம் வந்துவிடுகிறது.

கர்னாடக இசை என்ற பெயருக்கு என்ன பொருள்?

கர்னாடகம் என்பது தொன்மையான என்ற பொருளில்தான் வந்தது.
“எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே!”

என்று டி.ஆர்.மகாலிங்கம் பாடுவார். கலை வாழும் தென்னாடு என்பது மிகவும் பொருளுடையது. கண்ணதாசனின் வரிகள் அவை. நமது கலைகளை ஆய்வு செய்கிற பொழுது தமிழ் நாட்டை மட்டும் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்தால் முழுமையான ஆய்வாக அது இருக்காது. சிலப்பதிகாரத்தைத் தமிழ் மண்ணில் மட்டும் வைத்து ஆய்வு செய்தால் அது முழுமை ஆகாது.

சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற் றாண்டைச் சேர்ந்தது. அதற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆயிரம் வருடங்கள் கடந்து உரை எழுதியிருக்கிறார். எவ்வளவு விஷயங்கள் மாறி யிருக்கும்? அவருக்குப் பலவும் தெரியாது. சில சொற்களே மாறியிருக்கும். காலமாற்றத்தில் ஒரே சொல்லுக்குப் பொருள் மாறியிருக்கும் அல்லது அந்தச் சொல்லே மறைந்திருக்கும். அந்த உரை எழுதிய காலத்துக்கு இன்னு மொரு ஆயிரம் வருடம் கடந்து இன்று நாம் வாழுகிறோம். எனவே, அதை விளங்கிக் கொள்வதில் நமக்கு மிகவும் சிரமம் இருக்கிறது.

இதற்கு நாம் தமிழகத்திற்குள்ளேயே இருந்தால் எந்தப் பயனும் இல்லை. கேரளத்தில், ஆந்திரத்தில், கர்நாடகத்தில் எல்லாம் நமது ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். கிணற்றுத் தவளை யாகக் குறுகிய எல்லைக்குள் இருந்து கொண்டு நாம் ஒன்றும் செய்துவிடமுடியாது. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்று வருகிறது. சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் வரும் வேலன் வெறியாட்டுச் செய்தியை நாம் இங்கேயே இருந்து கொண்டு ஆய்வு செய்ய இயலாது. இன்றும் கேரளத்தில் நடைமுறையில் இது இருக்கிறது. கொச்சி பக்கம் வேலன் என்ற ஒரு சாதியே இருக்கிறது. அந்தப் பெண்களுக்கு வேலத்தி என்று பெயர். எனவே, வேலன் வெறியாட்டை ஆய்வு செய்ய கேரளத்துக்குப் போக வேண்டும். இன்றும் அங்கு அது நிகழ் கலையாக இருக்கிறது. களம் அமைத்தல் என்கிற வழக்கம் அங்கே இன்றைக்கும் இருக்கிறது. நம்மிடையே வழக் கொழிந்த பலகலை வடிவங்கள் இன்னும் அங்கே இருக்கின்றன.

‘நங்கையர் கூத்து’ என்று ஒரு கலை கேரளத்தில் இருக்கிறது. அதனை மார்க்கி சதி என்ற பெண் ஆடியதை நாங்கள் பார்த்தோம். சதி என்ற சொல் எப்படி வந்தது? அதன் மூலத்தை எங்கே தேடுவது? சதி என்பது சதிர் எனும் சொல்லிலிருந்து வந்தது. சதி என்றால் நமக்குப் பெண் என்ற ஒரு பொருள் தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், சொற் கட்டுக்கு ஆடுவது, சதிராடுவது இவற்றைக் கேரளத்தில்தான் இன்று நாம் பார்க்க முடியும்.

உற்சவ மூர்த்தியை ஊர்வலமாக எடுத்து வருகிறபோது நாதசுரத்தில் மல்லாரி வாசிப்பார்கள். இந்த மல்லாரி கேட்கிறபோது மிகவும் கம்பீரமான உணர்வு ஏற்படும். இந்த மல்லாரி எனும் சொல் தமிழில் எப்படி வந்தது என்று நிறைய பேர் ஆய்வுகள் செய்தார்கள், கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால், ஆந்திர நாட்டார் வழக்காற்றியல் என்று ஒரு நூல் இருக்கிறது. அதனை செந்தீ நடராசன் மொழி பெயர்த்திருக்கிறார். பாடுதல், ஒலியெழுப்புதல் என்பதற்கு ‘ஆரி’ என்று ஒரு சொல் இருக்கிறது என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் சொல்லி லிருந்துதான், ‘ஆரிரரோ, ஆராரோ!’ என்ற தாலாட்டு பிறந்தது.

மயில் நீட்டிக் கூவுதல்தான் அகவுதல் என்பது. இந்த மயில் அகவுதலும் ஆரியும் சேர்ந்து - மயில் ஆரி - மல்லாரி ஆனது. மல்லாரி என்ப தற்கு நீங்கள் ஆந்திராவுக்குப் போய் ஆய்வு செய்ய வேண்டும். அதனுடைய மூலம் அங்கேயிருக்கிறது. எனவே, நம் கலையென்பது தென்னாடு முழுவதும் வேர்களைக் கொண்டது என்பதை உணர்ந்தால் கர்னாடக இசை என்பதும் நமது தமிழிசைதான் என விளங்கும்.

கர்னாடக இசையும் தமிழிசையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை போலப் பேசப்படுகிறதே?

நாம் என்னதான் நுனிநாக்கு ஆங்கிலம் பேசினாலும் நமது உணர்வுகளை முழுமையாக நம்முடைய தாய்மொழியில்தான் வெளியிட முடியும். எனவே, தியாகராஜர் தனது தாய் மொழியான தெலுங்குமொழியில் தனது கீர்த்தனை களை எழுதினார். அவருடையது பக்தி இசை. இராமன் மீது கொண்டபற்று. அந்த இசை யென்பது உணர்வு தொடர்பான ஒன்று. உணர்வு தொடர்பானதைத் தன்னுடைய தாய்மொழியில்தான் ஒருவர் சிறந்த முறையில் வெளியிட முடியும். அவர் தமிழ் தெரியாதவர் அல்லர். தன்னுடைய தாய்மொழியான தெலுங்கில் தியாகராஜர் பாடியது பெரிய தவறு அல்ல. ஆனால், அவருடைய பாடலில் இருக்கும் இசை தமிழிசை. அவர் வாழ்ந்தது காவிரிக் கரையில் தான். அவர் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி எங்கும் போனதே இல்லை. இந்த வட்டாரத்தில்தான் அவர் இசையைப் பயின்றிருக்கிறார், வேறெங்கும் அல்ல. அவர் கையாண்டது தமிழிசைதான்.

அவரது சாகித்தியம் - பாடல் தெலுங்கு மொழியில் இருந்தது. அதேபோல முத்துசாமி தீட்சிதராகட்டும், சியாமா சாஸ்திரியாகட்டும் அவர்களும் தமிழிசைக்குப் பங்களிப்புச் செய்தவர்கள்தான். எனவே இவை முரணானவை என எண்ணுவது சரியல்ல.

அப்படியென்றால் அது ஏன் தமிழிசை என்று வழங்கப்படாமல் ‘கர்னாடக இசை’ என்று வேறொன்றாகக் காண்பிக்கப்பட்டது?

ஐயா, அது இசை அரசியல். பல்லவர் காலம் -கி.பி. 7ஆம் நூற்றாண்டு, பிற்காலச் சோழர் காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டு - இவர்களது காலங்களில் வடமொழியாக்கம் என்பது மிகுந்த அளவில் நடந்திருக்கிறது. கோவிலில் தெய்வத்தை வணங்கும் மொழியாக வடமொழி ஆக்கப்பட்டது. தெலுங்கர் ஆட்சி பரவியதால் கல்வி - கலைகளில் தெலுங்கு, வடமொழி ஆதிக்கம் வந்துவிட்டது. தெலுங்கு மன்னர் களைத் தெலுங்கு மொழியில் பாடினால்தான் பணம் கொடுப்பான். மொகலாய மன்னர்கள் ஆட்சிக்கு வந்த இடங்களில் இந்துஸ்தானி இசையில் பாட வேண்டும். ஆதரிக்க, மானியங்கள் பெற போன்ற தேவைகளால் தமிழ் இரண்டாம் தர மொழியாக ஆகி, தமிழிசை இரண்டாம் தர இசையாகவும் ஆக்கப்பட்டது. தெலுங்கு மொழிக்கும், வடமொழிக்கும் உயர்வு கிட்டியது. மன்னர்களுக்கு மக்களை ஒரு போதையில் வைத்துக் கொள்ள மதம், கோயில் எல்லாம் பயன்பட்டன. தேவைப்பட்டன. மிகவும் சிரமப் பட்டு நமது மூல இசைப்பெயர்களை, வடிவங்களை நமது பழைய இலக்கியங்களிலிருந்து இப்போது கண்டுபிடித்து வருகிறோம்.

கர்னாடகம் என்பது பழைமையான என்று பொருள் தரக்கூடியது. சாணக்கிய வம்சத்தில் சேமேச மன்னன் என்பவன் இசையில் பெரிய விற்பன்னனாக இருந்தான். அவன் எழுதிய நூல் ‘சேமேச உல்லாசம்’. இதில்தான் முதன் முதலில் வடபகுதியை இந்துஸ்தானம் என்றும் தென் நாட்டைக் கர்னாடகம் என்றும் குறிப்பிடுகிறான். எனவேதான் இந்துஸ்தானி இசை என்றும், கர்னாடக இசை என்றும் ஆனது. ஆகவே, கர்னாடக இசை என்பது தமிழிசைதான். கர்னாடகம் என்று குறிப்பிடப்பட்ட தென்ன கத்தில் வழங்கியதால் அது கர்னாடக இசை ஆனது.

ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்காக மிகப்பெரிய தொண்டாற்றியவர். அவர் பற்றிச் சொல்லுங்களேன்...

முதன்முதலில் சிலப்பதிகாரத்தை ஆய்வு செய்து அதிலிருக்கும் இசை குறித்த நுட்பமான செய்திகளையெல்லாம் முதன்முதலில் வெளியே கொண்டு வந்தவர் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசையின் சுருதி முறைகளைப் பற்றியெல் லாம் ஆய்வு செய்திருக்கிறார். பொருந்து சுரங்கள், பொருந்தா சுரங்கள் பற்றியெல்லாம் ஆய்வு பண்ணி முதன்முதலில் சொன்னவர் ஆபிரகாம் பண்டிதர்தான். ஒருகாலத்தில் அரங்கேற்றக் காதை, வேனில் காதையெல்லாம் பாடமாக இருக்கும். அதிலே இசைப்பகுதிகள் நீங்கலாக என்று அடைப் புக்குறியிட்டுச் சொல்லியிருப்பார்கள். இன்றைக் கும் அரங்கேற்றக் காதை புதிராகவே உள்ளது. நிறைய விஷயங்கள் நமக்குத் தெரியவில்லை. அவற்றையெல்லாம் ஓரளவுக்கு நமக்கும் தெரியப் படுத்தியவர் அவர்தான்.

தமிழிசை பற்றிய அடிப்படையான ஒரு நூல் - முதன் முதலில் எழுதப்பட்ட நூல் கருணாமிர்த சாகரம். இது 1340 பக்கங்களைக் கொண்ட ஒரு அற்புதமான நூல். சாதாரணமானவர்கள் இதனை எளிதில் படித்துவிட முடியாது. இன்று வரையில் இதற்கு ஈடான ஒரு நூல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

செவ்வியல் இசையை எல்லோரும் விரும்புவது போல அதனை மக்கள் சொத்தாக்க முடியாதா?

எந்த ஒன்றுமே நாம் புரிந்து கொள்வதற்கும் அணுகுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதிகமான மக்கள் அதனி டத்தில் வருவார்கள். செவ்வியல் இசை என்பது ஒரு இலக்கணத் தன்மையுடைய இசை. சில இலக்கணங்கள் தெரிந்தால்தான் அதனை நாம் ரசிக்க முடியும். ராக ஆலாபனையின்போது அதன் ராகத்தை அறியாமல் நம்மால் அந்த ஆலாபனையை ரசிக்க முடியாது. அதுபோல பரதநாட்டியத்தை நாம் நன்றாக ரசிக்க அதன் முத்திரைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். வெகுஜனங்களை இந்த இலக்கண வரம்புக்குள் கொண்டுவருவது சிரமமான விஷயம்.

என்ன செய்யலாம் என்று கேட்டால், இசையை அதன் தன்மையிலிருந்து கொஞ்சம் மென்மைப்படுத்திக் கொண்டுவர வேண்டும். தமிழ் சினிமா இசையின் ஆரம்பகாலம் ஜி.ராம நாதன் காலம். அப்போது யார் நடிக்க வந்தார்கள்? யாருக்குப் பாட்டு நன்றாகப் பாட வருமோ அவர்கள் நடிக்க வந்தார்கள். பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே.டி. தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், எம்.எஸ்.சுப்பு லட்சுமி, கே.பி.சுந்தராம்பாள் இவர்களெல்லாம் வந்தார்கள். இவர்களெல்லாரும் கர்னாடக இசைக்குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இவர்களின் பாடல்களில் ராகங்கள் துருத்திக் கொண்டிருக்கும். ஒரு கால கட்டத்தில் இது மக்களுக்குப் புளிக்க ஆரம்பித்தது.

அப்போதுதான் எம்.எஸ்.விஸ்வநாதன் வருகிறார். ராகம் வெளித்தெரியாமல் பாடல்கள் பிறக்கின்றன. மெல்லிசை மன்னர் என்று கொண்டாடுகின்றனர் மக்கள். எத்தனையோ பெரும் புலவர்கள் மத்தியிலும் ஏன் பாரதி நிலைத்த புகழுடன் நிற்கிறான்? அதுதான் மக்களுக்கு அருகில் செல்கிற எளிமை. கர்னாடக இசைக் கச்சேரிகளிலும் அண்மைக் காலத்தில் சில மாற்றங்கள் வருகின்றன. காவடிச் சிந்து என்பது நாட்டுப்புற இசை தான். ஆனால் செவ்வியல் அதனை எடுத்துக் கொள்கிறது. காரணம், அதிகமான மக்கள் அதை ரசிப்பார்கள் என்பதால். அதோடு, பத்து பாடல்களை ஆலாபனை சமாச்சாரங்களுக்கு ஒதுக் கினாலும், ஒரு ஐந்து பாடல்களாவது எளிமையானவையாக இருக்க வேண்டும்.

அதைச் சாதாரண மக்கள் ரசிப்பதற்கேற்ப இசைப்படுத்தித் தரலாம். சிலர் இப்படிச் செய்கின்றனர். மேலும், இசையை இறுக்கமான இலக்கணக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது அதை ஒரு சிலர் மட்டுமே சொந்தம் கொண்டாடச் செய்து கொண்ட ஏற்பாடுதான். இந்தப்போக்கே அதன் அழிவையும் கொண்டு வந்துவிடும். நமது சிலம்பாட்டம் முதலான நிறையக் கலைகள் இதுபோல அழிந்திருக்கின்றன. இசை கற்பிக்கும் முறைகளிலும் மாற்றம் வர வேண்டும். குறுகிய காலப்பயிற்சி மற்றும் நீண்ட காலப்பயிற்சி என்று வகைப்படுத்த வேண்டும்.

என்னிடம் வந்த ஒரு நண்பர் நான் பிராமண இசை ஆசிரியரிடம் கற்கமாட்டேன் என்றார். நான் அது தவறு என்று சொல்லி அனுப்பி வைத்தேன். பிறகு அந்த பிராமண ஆசிரியரிடமே பயின்ற அவர் இன்று நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார். ஒரு கிறிஸ்தவர், தான் இசை கற்க விரும்புவதாகவும், ஆனால் நிறைய இந்துக் கடவுள்களைப் போற்றுகிற பாடல்கள் இருப்பதால் அவை இல்லாத பொதுவான பாடல்களைக் கற்றுத்தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித் தார்.

அதேபோல இஸ்லாமிய மத நம்பிக்கையில் இறைவனுக்கு இணை வைப்பது தவறு என்று இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சமூக சூழலில் நம் இசையை மதச்சார்பற்றதாக வளர்த்தெடுக்க வேண்டிய அவசியமிருக்கிறது. நமது இசை யிலிருந்து பக்தி ரசத்தைப் பிரிக்க முடியாது என்று சொல்வதும்கூட அதன் வளர்ச்சியைத் தடுக்கும். மற்ற சமயத்தவரை உள்ளே வர அனுமதிக்காத மனோபாவத்தின் வெளிப் பாடுதான் இது. எனவே, நமது இசை பரவலாக மக்களிடம் செல்ல இப்படி எல்லாவழிகளிலும் அதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். மதங்கடந்த ஒரு பொதுவான, எளிமையுடன் கூடிய இசைதான் வாழும் இசையாகவும், வளரும் இசையாகவும் விளங்க முடியும்.

“அப்பாடா... ஒரு உசுர காப்பாத்துனான் அந்திரியாஸ். அவன் மட்டும் இல்லேண்ணா முத்தப்பன் செத்திருப்பான்” எல்லாரும் ஓடிப்போய் அந்திரியாசின் தோளில் சுயநினைவில்லாமல் கிடந்த முத்தப்பனைத் தூக்கினார்கள். அந்திரியாஸ் இடுப்பில் கட்டியிருந்த கம்பாவை அவுத்திட்டு வடக்கே பாத்து நடந்தான்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com