Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
பெண்மை என்றொரு கற்பிதம்...(7)

உரிமை மீறலே பெருமிதமாக...

அழைப்பு விடுக்க
வேண்டிய பார்வை
அடங்கி அடங்கியே
சமிக்ஞை மறந்து போச்சு
அழைக்கும்போது
இணங்கி இணங்கியே
காமமும் காதலும் மரத்துப்போச்சு”

-உஷா சுப்பிரமணியன்

20ம் நூற்றாண்டை பெண்கள் பேசத் துவங்கிய நூற்றாண்டாகக் குறிப்பிடுவர் வரலாறு ஆய்வாளர்கள். அவர்கள் பேச்சு ஆண் மனதை குற்ற உணர்வு கொள்ளச் செய்கிறது. தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாகியுள்ளேன் என்று போர்ப்பிரகடனம் செய்து அவர்கள் வருகிறார்கள்.

பார்த்தல், கேட்டல்
ருசித்தல், மணத்தல்
உணர்தல் இவற்றுடன்
பகுத்தறிதல் என்பனவும்
எமக்குண்டு

-என்று சுல்பிகா பாடும்போது எனக்கு இன்குலாபின் “மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னைப்போல அவனைப் போல எட்டுச்சாணு உசரமுள்ள மனுசங்கடா” -என்கிற தலித் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஆணுக்காகவே- ஆணின் துணைக்கிரகமாகவே வாழ நிர்பந்திக்கப்பட்டவள் பெண். ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்குரிய என்ப’ -என்றும் இப்பண்புகள் தலைவிக்கு மட்டுமல்ல தோழி, செவிலித்தாய், நாற்றாய் ஆகியோருக்கும் பொருந்தும் என்பதாக ‘உயிரும் நாணும் மடனும் என்றிவை செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய’ -என்றும் தொல்காப்பியம் வற்புறுத்துகிறது. விவசாயி படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவது போல ஒரு காட்சி.

“இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள
இங்கிலீசு படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே”
- என்ற வரிகளோடு வரும்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காலம் காலமாகத் தொடர்ந்து ஆண்சமூகம் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறது. இயல்பாக அவர்களை நாம் வாழவிடவில்லை. இன்று எவையெல்லாம் பெண்களுக்குப் பிடித்தவை என்று சொல்லப்படுகின்றனவோ அவையெல்லாம் உண்மையிலேயே அவர்களுக்குப் பிடித்தவையா - அவர்களுக்குப் பிடித்தவை இவைதான் என்று காலம் காலமாக ஆண்களால் சொல்லப்பட்டு வந்ததால் பிடிக்கிறதா என்று இப்போது நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தோட்டமும் உன்னதல்ல
நிலமும் உன்னதல்ல
பண்படுத்திப் பசளை
இட்டவள் - நீ

காயும் உன்னதல்ல
கனியும் உன்னதல்ல
காவல் நின்று
கண்விழித்தவள் - நீ

கூலியும் உன்னதல்ல
கொடுப்பனவும் உன்னதல்ல
கொளுத்தும் வெயிலில்
களைத்து நின்றவள் - நீ

மலரும் உன்னதல்ல
மணமும் உன்னதல்ல
மடிதாங்கிக் கொடி
வளர்த்தவள் - நீ

-‘மாற வேண்டும் நீ’ கவிதையில் விஜயலெட்சுமி.

பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்தபிறகு பசலை படர்ந்து கை வளையெல்லாம் கழன்று விழ, தலைவி படும் துயரம் பற்றி ஏராளமான பாட்டுக்கள் நம் கைவசம் உண்டு. இன்றும் ஆண்கள் வெளியே ‘பிழைக்க’ப் போகிறார்கள். துபாய்க்கும் சவுதிக்கும் போய்விடுகிற ஏரளாமான இஸ்லாமிய இளைஞர்களின் மனைவிமார்கள் இங்கே அப்படித் தனித்துக்கிடக்கும் துயரத்தை மீரான் மைதீனின் படைப்புகளில் நாம் காண்கிறோம். பெரும்பாலான பெண்கள் ரத்தத்தில் ஹியூமோகுளோபின் குறைவால் அவதிப்படுகிறார்கள் என்பது சர்வே எதுவும் எடுக்காமலேயே நம்மால் சொல்ல முடியும் உண்மையாகும். அதற்கு முக்கியமான காரணம் என்ன என்று பார்த்தால் தனிமைதான். அவர் இல்லாதபோது நமக்குன்னு என்னத்தைப் பொங்கி என்னத்தைத் திங்க என்கிற சலிப்பில் ஏதோ இருக்கிற பழையதைக் கொஞ்சம் சாப்பிட்டுச் சாப்பிட்டு இப்படி ஆகி விடுகிறார்கள்.

சங்க காலத்தில் பசலை படர்ந்த பெண்களெல்லாம் இப்படி ஹியூமோகுளோபின் குறைவினால் அவதிப்பட்டிருக்கக்கூடும். தூக்கம் கெட்டுப்போன அப்பெண்களை செவ்வரி ஓடிய கண்கள் என்றும் ‘அனீமிக்காக’ இருந்ததை பச்சை நரம்போடிய கைகள் என்றும் ஆண்கள் பாட்டெழுதிப் பரவசப்படுத்தி அப்படியே இருத்திவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மெடிக்கல் செக்அப் செய்ய வேண்டிய பிரச்சனையை குஷியாகப் பாட்டெழுதிக் கொண்டு போன கொடுமையை நாம் என்னவென்பது?

அதேபோல அவர் இல்லாதபோது தன்னைப் பராமரித்துக் கொள்ளவும் அழகுபடுத்திக் கொள்ளவும்கூட அவளுக்கு உரிமை இருந்ததில்லை. அதாவது தன் உடலைக் கொண்டாடும் உரிமை அவளுக்கிருந்ததில்லை. தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையும் அவளுக்குக் கிடையாது. புதிய மண்பானையில் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீர் வெளிப்புறத்தில் திவலைகளாகத் தெரிவதுபோல அவளது உடல்மொழியால் தான் அவள் தன் காதலையோ காமத்தையோ வெளிப்படுத்த முடியும்.

‘தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங்காலைக் கிழத்திக்கில்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்நீர் போலும் உணர்விற்றென்ப’
-(தொல்காப்பியம்)

ஆண்டாள்தான் தமிழில் முதன்முதலாகத் தன் காமத்தை வெளிப்படையாகப் பேசியவள் என்பார்கள்.

‘அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்தெழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன்’

திருமாலுக்கே தன் உடல் சொந்தம் என்று அவள் பாடியதால்தான் அவளை விட்டு வைத்தார்கள் போலும். இவையெல்லாம் தன் பண்பாட்டின் பெருமைக்குரிய விடயங்களாகக் காலம் காலமாக நாம் பேசி வந்திருக்கிறோம். உண்மையில் இவை கடுமையான மனித உரிமை மறுப்புப் பிரச்சனைகளாகும். மனித உரிமைகள் பற்றிய தன்னுணர்வு இல்லாத பழங்காலத்தில் இவை பாடு பொருட்களாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அவை கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவை. மனிதரின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் ஆகிய மூன்றும் பெண்களைப் பொறுத்தவரை ஆணாதிக்க சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டவையாகவே காலம்காலமாக இருந்து வருகின்றன.

நாம் ஏற்கெனவே பெண் உடை தொடர்பாகச் சில கருத்துக்களைப் பார்த்தோம். அவள் எப்படி உடுத்த வேண்டும் என்று சொல்வதே அராஜகம். ஆனால் அவளே வெறும் அலங்காரம்தான் என்கிற எல்லை வரை நாம் சென்றிருக்கிறோம். கொலுசு, மிஞ்சி, துகில், மெட்டி, ஒட்டியாணம், சங்கிலி சரப்புளி என ஆண்கள் தயாரிக்கும் ஆபரணங்களோடு தொடர்புடைய ஒன்றாகப் பெண்ணை, பெண் உடலை நாம் ஆக்கி வைத்திருக்கிறோம்.

பெண் உடம்பின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் எவ்விதமாக வர்ணிக்கவேண்டும் எவற்றை உவமையாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதுகிற அளவுக்கு கேடுகெட்ட பண்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம். இதுபற்றி பேராசிரியர் அ.செல்வராசு ‘உற்று நோக்கலும் இலக்கண உருவாக்கமும்’ என்கிற கட்டுரையில் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

பெண்ணின் மார்பகம் பற்றி (கொங்கைகள்) உவமைப்படுத்தத்தக்கன என இலக்கணம் கூறும் வெண்பா இது.

‘பாங்கரும்பு சூது கிண்ணம் பைங்குரும்பு செப்புமுடி
கோங்கரும்பு தாளங்குமிழி சிமிழ்-பூங்கமலம்
பம்பரம் வெற்பிளநீர் பந்து சகோரங் கலசம்
கும்பருப்பி யானை குடம்’

உண்மையில் இது பெருமைக்குரியதா? நம் இலக்கிய மரபு - பாரம்பரியம் - புடலங்காய் என்று கொண்டாடுவதா? ஈவ் டீசிங்கில் இச்செய்யுளைத் தூக்கி உள்ளே போடுவதா?
(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com