Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
சிறுகதை

நேர்முகம்
உஷாதீபன்

மனசு பூராவும் ஊரிலிருந்தது. இப்படி எல்லோரையும் நட்ட நடுவில் விட்டுவிட்டு வந்து விட்டோமே என்று மனசாட்சி குத்தியது. நாளைய வேலை நிறுத்தத்தில் எல்லோரும் கலந்து கொள்ளும்போது, தான் மட்டும் இல்லாமல் போவோமே என்பதை நினைத்த போது வெட்கமாக இருந்தது.

“எங்கே சந்திரன் தோழர்?”

“சந்திரன் தோழரைக் காணலையே...?” நிச்சயம் அநேகமாக எல்லோரும் கேட்கக் கூடும். என்ன பதில் சொல்வார்கள்? இந்தப் பயணத்திற்கான பதிலைத்தானே சொல்லியாக வேண்டும்? அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா? இல்லை எதிர்ப்பார்களா?

“ஓ! அப்டியா?”

“சரி... சரி... விட்ருங்க... அது தவிர்க்க முடியாதது.....”

தோழர்கள் எல்லோருமே ஒருமித்து இப்படி ஆமோதிப்பது போல் நினைத்துக் கொண்டான் இவன். ஆனாலும் மனசு கிடந்து அடித்துக் கொள்கிறதே!

“அப்பா.. அப்பா...” கையைப் பிடித்து உசுப்பிய மகளின் பக்கம் திரும்பி.. “என்னம்மா....?” என்றான் மெல்ல. பேருந்தின் விளக்கு அணைக்கப்பட்டு மெல்லிய நீல நிற ஒளி மட்டும் வந்து கொண்டிருந்தது. ஊடவே உருளும் சக்கரங்களின் சீரான உரசல் ஓசை. அநேகமாக எல்லோருமே ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.

“தூங்குங்கப்பா.. முடிஞ்சவரைக்கும் தூங்கிக்குங்க.. இல்லன்னா நாளைக்குப் பகல் பூராவும் கௌன்சிலிங்கின்போது கஷ்டமாயிருக்கும்... வெயில் வேறே கொளுத்தும்.. கண்ணை அசத்தும்...”

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... சமாளிச்சிக்கலாம்...”. மகள் சாந்தியின் கைகளை ஆதரவாகத் தொட்டு இப்படிக் கூறினான் இவன்.

“அதுக்கில்லப்பா.. பகல் மூணு மணி பேட்ச்தான் என்னுது...... அது வரைக்கும் அங்கே கொட்டக் கொட்ட வெயில்ல காத்துக் கிடக்கணும்...”

மகளின் அக்கறையைக் கண்டு மனசுக்குள் சந்தோஷமாக இருந்தது இவனுக்கு. சும்மாவா ஒரு பெண் குழந்தை கட்டாயம் வேண்டும் என்று சொன்னார்கள்?

“ரொம்ப அசத்திச்சின்னா அங்கே மரத்தடி இருக்கும்ல.. படுத்து ஒரு தூக்கம் போட்டுட்டாப் போச்சு.. ஏன் கூடாதா?”

“கூடாதுன்னெல்லாம் இல்ல... இருக்கிற கூட்டத்துல எடம்தான் கிடைக்கணும்...”

சொல்லிவிட்டு மகளும் சிரிப்பதைப் பார்த்து ரசித்தான் இவன்.

“உன்னைக் கட்டாயம் இன்ஜினியரிங் படிக்க வைக்கிறேம்மா.. என்ன பாடுபட்டாலும் சரி..” என்று சொல்லியிருந்தான். சவாலாகவே ஏற்றுக் கொண்டு மார்க்கை அள்ளிக் கொண்டல்லவா வந்துவிட்டது. சந்தோஷம்தான். ஆனாலும், இப்பொழுது என்ன வந்தது இந்த மனசுக்கு? ஏதோ நெருடிக் கொண்டே இருக்கிறதே? மகளிடம் சொல்வதில் தவறில்லை என்றே தோன்றியது.

“என்னவோ தெரியலை.. மனசே சரியில்லம்மா...” என்றான்.

“எனக்குத் தெரியும்ப்பா.. உங்க மனசு பூராவும் நாளைக்கு நடக்கப் போற ஸ்டிரைக்குல இருக்கு.. கலந்துக்க முடியாமே இங்க இருக்கமேன்னு.. சரிதானே?”

“அதேதாம்மா.. அதே தான்... எல்லாரையும் விட்டிட்டு நான் மட்டும் இப்படி வந்திட்டனேன்று கிடந்து அடிச்சிக்கிதும்மா.....”

“இந்த கவுன்சிலிங் இந்தத் தேதி பார்த்து அமைஞ்சிருச்சேப்பா....! நான் என்ன செய்ய? இன்னும் கொஞ்சம் மார்க் குறைச்சலா எடுத்திருந்தேன்னா இன்னும் ரெண்டு நாள் தள்ளிப் போகும்.. என்னப்பா பண்றது?”

“டேய்... பார்த்தியா.. பார்த்தியா...! இதுக்காகப் போயி மார்க் குறைச்சலாவா எடுக்கிறது? அதான் லட்டு மாதிரி தூக்கிட்டு வந்திருக்கியே? நீ சொன்ன மாதிரி ரெண்டு நாள் தள்ளிப் போனாலும் சங்கடம் தாம்மா.. நான் வெளில இருக்கனோ இல்ல உள்ள போயிருப்பனோ?”

“ஏம்ப்பா அப்படிச் சொல்றீங்க?”

“என்னம்மா, உனக்கென்ன விபரம் தெரியாதா? டி.வி. ல நியூஸ் பார்க்கலியா? தெனம் தெனம் ஊழியர்களை அரெஸ்ட் பண்ணிட்டிருக்காங்கல்ல.. நேத்து ஜவஹர் மைதானத்துலேர்ந்து நடந்த பேரணியிலேயே நானும் அரெஸ்ட் ஆகியிருக்கணும்.. எல்லாரும் என்னைத் தடுத்துட்டாங்க.. முதல்ல போய் உங்க பொண்ணோட கவுன்சிலிங்கை முடிச்சிட்டு வாங்க... இதெல்லாம் நாங்க பார்த்துக்கிடுறோம்னு, பேரணி வ.வு.சி., பூங்கா நெருங்கிற போதே என்னைப் பிரிச்சு அனுப்பிட்டாங்க... எவ்வளவோ மன்றாடினேன். அதை என் பொண்டாட்டி பார்த்துப்பான்னு கூடச் சொல்லிப் பார்த்தேன்.... கேட்க மாட்டேன்னுட்டாங்க....”

“ஸாரிப்பா.. என்னாலதான் உங்களுக்கு இந்தச் சங்கடம்....?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லம்மா.... உங்க அம்மா கூட்டிட்டுப் போனாப் பத்தாதான்னு யோசிச்சேன்... அவ்வளவுதான்....”

“எனக்கு நீங்க இருந்தாத்தாம்ப்பா திருப்தியா இருக்கும்...” சொல்லிவிட்டு சாந்தி சட்டென்று இவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டபோது இவன் மனது கலங்கிப் போனது. தான் உணர்ந்திருப்பதைவிட, தன் தோழர்கள் இதை மிகச் சரியாகவே புரிந்து வைத்திருப்பதாக அந்த நிமிடத்தில் தோன்றியது இவனுக்கு.

“இங்க பாருங்க சந்திரன் தோழர்.. பொம்பளப்புள்ள அது.. நீங்க கூட்டிட்டுப் போயிட்டு வாங்க... அதான் சரி.. உங்க ஒய்ஃப் கூடல்லாம் சென்னைக்கு அனுப்பாதீங்க.. அனுப்பிட்டு என்னாச்சோ, ஏதாச்சோன்னு தவிச்சிட்டிருக்கிறதுக்கா? புறப்படுங்க... ஆக வேண்டிய மற்றதை நாங்க பார்த்துக்கிடுறோம்...”

கடைசியாக, செயலர் ராமமூர்த்தித் தோழர் இப்படிச் சொன்னபோது எல்லோராலும் அது ஆமோதிக்கப்பட்டதை இப்போது நினைவு கூர்ந்தான் இவன்.

மணி இரவு இரண்டரை. பேருந்தின் முன்னால் தொங்கவிட்டிருந்த பெரிய கடிகாரத்தின் ரேடியம் முட்கள் பளிச்சென்று நேரம் காண்பித்தது. இவன் செல்போனில் மணி அடித்தது. அதன் ஓசையை வைத்து ஏதோ செய்திதான் என்று எடுத்து அழுத்தினான்.

“மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் புதல்விக்கு நல்ல கல்லூரியாக அமைய வாழ்த்திடும் தோழர் நல்லுச்சாமி மற்றும் குடும்பத்தினர்.”

“பார்த்தீங்களாப்பா... ராத்திரிகூட உங்களையே நினைச்சிட்டிருக்காங்க..” சாந்தி இப்படிக் கூற மனசு தளுதளுத்தது இவனுக்கு.

“அம்மாதான் பாவம்ப்பா....” சாந்தியின் குரல் உடைந்து போனது கண்டு ஆதுரமாகத் தலையைத் தடவிக் கேட்டான் இவன்.

“ஏம்மா அப்படிச் சொல்றே...? தனியா விட்டிட்டு வந்திட்டமே.... அதனாலயா?”

“ஆமாம்ப்பா... அம்மா ஏற்கெனவே பயந்திட்டிருக்க....” சொல்லவந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டதைக் கண்டு மனதுக்குள் கேள்வி பிறந்தது இவனுக்கு.

சாந்தி நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டதைக் கண்டு இவன் கேட்டான்.

“என்னம்மா.. என்ன? சொல்லு சும்மா பயந்திட்டிருக்காங்களா? ஏன்..? ஏதாச்சும் பிரச்னையா நேத்து...? ஏன் என்கிட்டே சொல்லலே...? - மகளின் தோளை உலுக்கி மனசில் படபடப்போடு கேட்டான் இவன்.

“இல்லப்பா.. ஒண்ணும் இல்ல... எதையோ நினைச்சிட்டு என்னவோ உளர்றேன்... ஒண்ணுமில்லே, ஒண்ணுமில்லே...”

“பார்த்தியா... பார்த்தியா...? அம்மாவும் பொண்ணும் சேர்ந்து எங்கிட்டே மறைக்கிறீங்கல்ல...? - நெஞ்சு பரபரத்தது இவனுக்கு. என்னவோ நடந்திருக்கிறது. சொல்லப்படவில்லை.

“சொல்லும்மா... அப்பாட்ட மறைக்கலாமா? தயவு செய்து சொல்லு.. அப்பத்தான் உங்க அம்மாவுக்கு வேணுங்கிறதை நான் செய்ய முடியும்.. தேவையானதை போன்ல சொல்ல முடியும். நாளைக்கு ராத்திரி கழிஞ்சி நாளன்னிக்குக் காலைல தான் நாம திரும்ப ஊர்ல காலடி வைக்க முடியும்... அதனால் சொல்லு.. தைரியமாச் சொல்லு... போலீஸ் வந்தாங்களா வீட்டுக்கு..?”

அதிர்ந்து போனது சாந்தி, மிரண்டு போய் மடியிலிருந்து எழுந்து இவனையே உறுத்துப் பார்த்தது.

“அப்பா... அப்பா..” என்று இவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தது. சுற்று முற்றும் பார்த்தான். பலர் விழித்துக் கொண்டு இங்கே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“மெதுவா.. மெதுவா...” என்றான் காதுக்கருகே. மகளை அப்படியே ஆதரவாய் அணைத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் அழுது ஓயட்டும் என்று விட்டான். துக்கம் மனதை விட்டு இறங்கட்டும் என்று தோன்றியது. சற்றே ஆறுதலான பொழுதில் சாந்தி நிமிர்ந்தது.

“ஏம்ப்பா.. நீங்க ஸ்டிரைக் பண்ணுறீங்கன்னா அது அவுங்களுக்கும் சேர்த்துத் தானேப்பா.. அதை உணராம அவுங்க இப்படி நடந்துக்கலாமா?”

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாயிருந்தான் இவன்.

“அப்படித்தாம்மா சிலது... என்ன பண்றது? அவுங்க அங்கேயிருந்து இறங்கி வர முடியாது.... இறங்கி வர்றதில்லைன்னு வச்சிக்கியேன்... இறங்கி வரலை... அவ்வளவுதான்... ஆனாலும் அவுங்களுக்கும், அவுங்க நன்மைகளுக்கும் சேர்த்துத்தான் ஸ்டிரைக்... நாம அப்படித்தான் இருக்க முடியும்....”

“அப்போ அவுங்க கொஞ்சம் நாகரீகமா, ஆதரவா நடந்துக்கிலாமில்லையா...? மகளின் கேள்வியில் ஏதோ தொக்கி நிற்பதாகவே உணர்ந்தான் இவன். பொது நலன்களையும், வேலை நிறுத்தங்களையும், சங்கம் என்கிற அமைப்பின் அவசியத்தையும், பணியாளர்களின் கடமையினையும் ஆகிய பலவற்றைப் பற்றியும் தான் அவ்வப்போது வீட்டில் பேசியும், பகிர்ந்தும் கொண்டதானது ஏதோவொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே அந்த நேரத்தில் தோன்றியது இவனுக்கு. ஆனாலும் மகளின் வார்த்தைகளில் என்னவோ விபரீதம் கலந்திருப்பதை அறிய மனது உடனே துடித்தது.

“அது சரிம்மா.. ஏதோ சொல்ல வந்தியே.. அதை முழுசுமாச் சொல்லிடு.. தயவு செய்து...” என்றான்.

ஆவேசம் வந்தவள் போல் அப்போது சொன்னது சாந்தி.

“மரியாதையில்லாமப் பேசிட்டாங்கப்பா அம்மாவ... எங்கடி உன் புருஷன்...?ன்னு கேட்டுக்கிட்டே வீடு முழுக்க ரணகளப்படுத்திட்டாங்கப்பா... கொல்லைக் கதவை திறந்திட்டுப் போயி காம்பவுன்ட் சுவர்வழியா வெளியே பார்த்திட்டு, “நாங்க வர்றது தெரிஞ்சு சுவர் ஏறிக் குதிச்சு ஓடிப் போயிட்டானா...?”ன்னு கேட்டாங்கப்பா.. தடியால கதவைப் படார் படார்னு தட்டி ஓங்கி மிதிச்சாங்கப்பா... திரும்பவும் வரு வோம்... விடமாட்டோம்னு சொல்லிட்டுப் போனாங்க...?”

முறை வைத்து, ஒவ்வொரு பகுதித் தோழர்களாக ஒவ்வொரு நாளைக்கு வேலை நிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்திட வேண்டும் என்றும், பகுதி பகுதியாக அரெஸ்ட் ஆனால்போதும் என்று தீர்மானமியற்றியிருந்ததை நினைத்துக் கொண்டான் இவன். அதனடிப்படையிலேயே தான் இடம் மாறியிருந்தததும், அந்த இரவு விபரீத இரவாக முடிந்திருப்பதையும் எண்ணிக் குமுறினான். தான் எங்கிருக்கிறோம் என்பதை மனைவி பூர்ணிமாவுக்கு மட்டும் சொல்லியிருந்தை எப்படிப் பாதுகாத்திருக்கிறாள் அவள். சரி என்று ஒப்புக் கொண்டதும், வயதுக்கு வந்த பெண் பிள்ளையோடு வீட்டில் இம்மாதிரியான காலகட்டத்தில் தைரியமாய் தனித்திருப்பதுவும்கூட ஒரு வகையில் தன்னோடு கூடவுள்ள ஒத்துழைக்கும் மனப்பான்மையே என்பதை நினைத்தபோது மனதுக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது இவனுக்கு.

அடித்துக் கேட்டிருந்தால் கூட நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாள் பூர்ணிமா. அவளின் வரவு அப்படி!

“ஏங்க, எங்கப்பாவும் உங்கள விடத் தீவிரமா இருந்தவர்தானே மில்லுல...? உங்கள நல்லா விசாரிச்சுதானே என்னைக் கட்டி வச்சாரு.. அப்பறம் நா மட்டும் எப்படி மாறிடுவேன்? நீங்க தைரியமாப் போயிட்டு வாங்க... எங்க இருக்கீங்கன்னுகூடச் சொல்ல வேண்டாம்.. நான் சமாளிச்சிக்குவேன்...”

எவ்வளவு மன திடத்தோடு சொன்னாள்? மகளுக்கான இந்தப் பயணம் மட்டும் இன்று இல்லையென்றால் இந்நேரம் தோழர்களோடு சேர்ந்து கைதாகியிருப்போமே..? இவன்முறை வந்த நாளல்லவா அது? முதலில் திட்டமிட்டு, பின்னர் இந்தத் தேர்வுக்கான தகவல் வந்ததினால்தானே மாற்றம் ஏற்பட்டுப் போனது?

ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். மெல்லிய குளிர் காற்று முகத்தைத் தழுவிய போது இதமாக இருந்தது. மனது லேசுப் பட்டது.
அது ஏதோ ஒரு நடுத்தரமான ஊர் என்று தோன்றியது. ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்த கறுப்புப் போஸ்டர்கள் அங்கங்கே ஒட்டப்பட்டிருப்பது தெரிந்தது.

“ஒன்றுபடுவோம்.. போராடு வோம்...
போராடுவோம்.. வெற்றி பெறுவோம்....
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்...
இறுதி வெற்றி நமதே...!”

அந்த வாசகங்களை மனம் முணுமுணுத்துக் கொண்டபோது, அப்படியே முஷ்டியை உயர்த்தி ஓங்கிக் குரலெடுத்துக் கத்த வேண்டும் போலிருந்தது இவனுக்கு. தன்னை மறந்து எப்போது கண்ணயர்ந்தோம் என்றே தெரியாமல் உறங்கிப் போக சாந்தி மடியிலேயே அயர்ந்திருப்பதைக் கண்ணுற்றான்.

அந்தப் பல்கலைக் கழக வளாகத்தினுள் காத்துக் கிடந்த பொழுதுகளில் இவன் மனது பூராவும் ஏனோ ஊரிலேயே நிறைந்து வழிந்தது.

“நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கப்பா.. கூட வந்ததே போதும்... அதோ டிஸ்ப்ளே போர்டுல எல்லாமும் வந்திட்டிருக்கு... நம்ம ஊர் காலேஜ்லயும் இடம் இருக்கு... இன்னும் யாரும் எடுக்கலை.. நிச்சயம் என் பேட்ச் வர்றபோது நான் விரும்புற குரூப் கண்டிப்பாக் கிடைக்கும்.. நீங்க வெறுமே என்கூட வாங்க போதும்... மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கிடுறேன்.”

மகளின் ஆறுதலான வார்த்தைகளில், அவளின் தைரியத்தில், தெம்பாக அமர்ந்திருந்தான் சந்திரன். உயர்கல்வி என்பது எப்படியெல்லாம் மாறிவிட்டது? திடீரென்று ஒரு மூத்த தலைமுறையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, அவர்களது அனுபவத்துக்கு எட்டாத உயரத்துக்குப் போய்விட்டதுபோல் அல்லவா தோன்றுகிறது? கையில் அன்றைய தினசரியை விரித்திருந்தான் இவன். காலையிலிருந்து அதைத்தான் இண்டு இடுக்கு விடாமல் படித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறான்.

அந்தப் பத்திரிகையும், அதன் பாஷையும்...? செய்திகளை நாகரீகமாக, விஷயங்களை அதன் நியாயமான நோக்கில் எதிர் கொள்ளவே தெரியாதா இவர்களுக்கு? தனக்குப் பிடிக்காத விஷயங்களெல்லாம் கேவலமானது என்று பொருளா? அவற்றுக்கான செய்திகளை வெளியிடும்போது, அதில் ஒரு நாகரீகம் வேண்டாமா? மக்களும் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று இவர்களாகவே முடிவு செய்து கொண்டு... மேலும் கேவலப்படுத்துவது போல தலைப்பிடுவதும், விட்டேற்றியாக விமர்சிப்பதும்... இதில் நடுநிலை என்பது எங்கேயிருந்து வந்தது? ஏனிந்தப் பெயர் இப்படிப் பொதுவாய்ப், பொய்யாய்ப், பழங்கதையாய்ப் போனது?

ஆனாலும் வேறு வழியில்லை. தொலைதூர கிராமத்தில் ஏதோ வோர் மூலையில் நடந்த நிகழ்வைக் கூட விடுதலின்றிச் செய்தியாகச் சேகரித்துக் கொடுத்து விடுகிறார்களே? அந்த வகையில் பாராட்ட வேண்டுமோ இல்லையோ, வாங்கிப் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே?

குறிப்பாக வேலை நிறுத்தம் குறித்த செய்திகளை விலாவாரியாகக் கொடுத்திருப்பதற்கே பாராட்டத்தான் வேண்டும். எந்தெந்த மாவட்டத்தின் எந்நெந்தத் தோழர்கள் கைதாகியிருக்கிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தான் இவன். அடுத்தடுத்த நடவடிக்கைகளாக எப்படி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தாகவும் கூர்மையாகவும் அவதானித்தான். மகள் சாந்திக்கான முறை வந்து உள்ளே நுழைந்த போது மனதுக்கு மிகவும் படபடப்பாக உணர்ந்தான்.

“எப்படியோம்மா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சிச்சு.. உன் அதிர்ஷ்டமோ என்னவோ, உள்ளுர்லயே கிடைச்சிடுச்சு... போன வருஷம் இதே மார்க்குக்கு நம்ம ஊர் காலேஜ்ல இடம் இல்லைன்னு சொன்னாங்க. அந்த வகைல எனக்கு ரொம்ப சந்தோஷம்... திருப்தி... இந்த மாசக் கடைசில சேமநிதி லோன் போட்டு, அடுத்த மாசம் முதல் வாரத்துல உன்னோட காலேஜ் ஃபீஸைக் கட்டிடலாம்... கவலைப்படாதே. அதுக்கு நான் பொறுப்பு.. உன் ஒருத்தியப் படிக்க வைக்கலைன்னா அப்புறம் நான் இந்த வேலைக்கு வந்து, இத்தனை வருஷம் சர்வீஸ் போட்டு என்னதாம்மா புண்ணியம்...?”

“ரெண்டு நாளா ராத்திரி உனக்கு சரியாத் தூக்கம் இல்ல... பேசாமப் படுத்துத் தூங்கு. நல்லா ரெஸ்ட் எடு... இதோ வந்திடுறேன். நான் போய் நண்பர்கள்ட்ட செய்தியைப் பகிர்ந்துக்கிட்டு, என்ன ஏதுன்னு பேசிட்டு வந்திடுறேன்... இந்நேரம் நம்ம அவுட் போஸ்ட் ஆபீஸ் வளாகத்துலதான் எல்லாரும் கூடியிருப்பாங்க.. எல்லாரையும் முதல்ல போய்ப் பார்க்கணும் எனக்கு... அப்பத்தான் மனசு சரியாகும்....”

சொல்லிவிட்டுக் குளித்து உடை மாற்றிக் கொண்டு பரபரப்பாகப் புறப்பட்டான் இவன். போகும்போது கூடவே வாசல் வரை வந்து அவனை வழியனுப்ப நின்ற மனைவி பூர்ணிமா, தயக்கத்தோடு அவனிடம் அதை நீட்டினாள்.

வெகு நிதானத்தோடு வாங்கி அந்த முதல் நாள் மாலைத் தினசரியைப் பிரித்த அவனை அந்தச் செய்தி முகத்தில் அறைந்தாற்போல் எதிர்கொண்டது. நேற்றுப் பயணத்திலும், காலையில் ரயிலில் வந்து இறங்கிய போதும், ஏன் இதைக் கவனிக்க விட்டுப் போனது?

“ஒன்றரை லட்சம் ஊழியர்கள் பணியிலிருந்து டிஸ்மிஸ்...!!”

செய்தியைப் படித்ததும் மனசு இறுகிப்போனது. முகத்தில் எந்தவிதச் சலனமுமில்லாமல், அந்தப் பேப்பரை அப்படியே சுருட்டி எடுத்துக் கொண்டு “இரு வந்திடுறேன்...” என்று மட்டும் பொத்தாம் பொதுவாய்ச் சொல்லி விட்டுக் குழப்பத்துடனேயே புறப்பட்டான். விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டுச் சென்னை செல்லுங்கள் என்று சொன்ன தோழர்களிடம், அந்தக் கூற்றை மறுதலித்து வேலை நிறுத்தத்தில் இருப்பதாகவே இருக்கட்டும் என்று திடமாகச் சொல்லிவிட்டுச் சென்னை சென்றதும், அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்தச் செய்தி வந்திருப்பதும், நேற்றையப் போராட்டத்தில் முன்னிற்க முடியாமல் போனதே என்ற வருத்தத்தோடு, வேலை நீக்கப் பட்டியலில் தன் பெயரும் விடுபடாமல் சேர்ந்திருக்க வேண்டுமே என்ற தீராத ஆதங்கத்தோடு, மீளச் சந்தித்த தோழர்களை ஒருங்கிணைத்துக் கை கோர்த்துக் கொண்டு, அந்த நீண்ட நெடிய வளாகத்தின் பகுதி பகுதியாகக் கடந்து, பெரிய அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் மிக நீண்ட பணி நீக்கப் பட்டியலைக் குறிவைத்து வெகுவேகமாக நடையை எட்டிப் போட்டு முன்னேறிக் கொண்டிருந்தான் சந்திரன்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com