Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
மொழிபெயர்ப்புச் சிறுகதை

காற்றும் வெளிச்சமும் நுழையாத இடம்
இந்தி மூலம்: ஹரியஸ் ராய் / மலையாளத்தில்: வி.டி.கிருஷ்ணன் நம்பியார் / தமிழில் : எல்.பி.சாமி

அதிக உயரமில்லாத சிறுவன் கதவைத் திறந்தான். கைகள் இரண்டையும் குவித்து வணங்கியவாறு, “ராம்! ராம்! சார் உள்ளே வாங்க” என்று வரவேற்றான். அவனது நடத்தை சௌகானுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் பல நகரங்களுக்கும் போய் வந்திருக்கிறான். ஆனால் இப்படி யாரும் வரவேற்றது கிடையாது. இதுதான் அந்த நகரத்திலிருந்த புகழ்பெற்ற ஷோரூம். மிகப் பிரம்மாண்டமாகவும் குளுகுளு வசதியுடனும் இருந்தது. வெளியில் வீசும் வெப்பமான காற்று உள்ளே வருவதில்லை. உள்ளே இருக்கும் குளிர் காற்று வெளியில் செல்வதுமில்லை. எட்டுமாடிக் கட்டிடம், ஒவ்வொரு மாடியிலும் துணிகள், செருப்புகள், அலங்காரப் பொருள்கள் என ஒவ்வொரு பொருள்களுக்கும் தனித்தனி கவுண்டர்கள். அப்பா அம்மாவைத் தவிர மற்ற எல்லா பொருள்களையும் அங்கே வாங்கிவிடலாம். விலை குறைவாகவும் இருந்தது. இரவு பன்னிரண்டு மணிக்கு வந்தாலும் திறந்திருக்கும். அதற்குள் கடையை அடைத்துவிடுவார்களோ என்று பயப்பட வேண்டாம். உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வந்து வாங்கிக் கொள்ளலாம்.

தன்னைப் போன்ற ஒரு சாதாரண மனுசனுக்கு ராத்திரி பதினோரு மணிக்கு இப்படி ஒரு மரியாதை கிடைக்குமென்று பரத் சௌகான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. திரும்பி பார்த்தபோது உயரமான ஒரு பையன் கும்பிட்டபடி நிற்பதைக் கவனித்தான். நல்ல உயரம். பத்து பன்னிரண்டு வயதிருக்கும், சுருட்டை முடி. காதுகளில் சிறு கடுக்கங்கள், முகம் கறுத்தும் மங்கியும் இருந்தது. பகல் முழுவதும் வேலை பார்த்து களைத்திருந்ததை புன்னகையால் மறைத்துக் கொண்டு சௌகானை வரவேற்றான். அருகில் செல்லும் முன்னால் கொஞ்ச நேரம் அவனையே கவனித்துக் கொண்டு நின்றவன் சாலையின் எதிர்பக்கத்திலிருந்து ஒலித்த கோஷங்களை உற்றுக் கேட்டான்.

“இன்குலாப் ஜிந்தாபாத்!
இன்குலாப் ஜிந்தாபாத்!
பழிவாங்காதே பழிவாங்காதே!
தொழிலாளர்களைப் பழிவாங்காதே!
நியாயம் கேட்ட ஊழியரை
வேலையிலிருந்து விரட்டாதே!
எட்டு மணிக்குமேல் வேலை வாங்கி
ஊழியர் உழைப்பைச் சுரண்டாதே!
-என்று கேட்டது பாவமா? வேலையைப் பறித்தது நியாயமா?

நிர்வாகமே நிர்வாகமே!
சர்வாதிகார போக்கை கைவிட்டு
அழைத்துப் பேசு அழைத்துப் பேசு
உடனடியாக அழைத்துப் பேசு!”

பரத் சௌகான் அதையே கேட்டுக் கொண்டு சிறிது நேரம் நின்றான். இந்த அர்த்த ராத்திரியிலுமா கோசம்?! சௌகான் ரோட்டின் எதிர் பக்கத்தை எட்டிப் பார்த்தான். நாற்பது ஐம்பது பேர் சேர்ந்து நின்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“நீங்க உள்ளே வாங்க சார்” ஒரு சிறுவனின் குரல் அவனது கவனத்தைத் திருப்பியது. பக்கத்தில் இருந்த சிறுவனிடம் “இவர்கள் எல்லாம் யாரு?” என்று கேட்டான்.

அவன் பதில் சொல்வதற்குப் பதிலாய்க் கைகளைக் கூப்பி வணங்கியவாறு, “நீங்க வாங்க கடையை கட்டுற நேரமாயிடுச்சி” என்றான்.

சௌகான் கடையைப் பூட்டியிருப்பாங்களோ என்ற சந்தேகத்துடன்தான் வந்தான். கடை திறந்திருந்ததைப் பார்த்ததும் மனசுக்குள் சந்தோசம். “இவ்வளவு நேரத்துக்கு கடை திறந்திருக்குமா?’ என்று கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

“ஆமாம் சார்! உங்கள போன்றவங்க வசதிக்காகத் தான்” என்றான்.

“சரி இரவு கடையை மூடமாட்டீங்களா?”

சௌகான் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.

“எல்லாம் உங்க வசதிக்காகத் தான்” என்று சிரித்தபடியே சிறுவன் பதில் கூறினான்.

“பெட்ஷீட் எங்க இருக்கு?”

“மூணாவது மாடிக்குப் போங்க சார்” என்று மாடிப்படிகளைக் காட்டினான்.

சௌகான் படியேறும்போது, மற்றொரு சிறுவன், “லிப்டிலே போங்க” என்று சொல்ல சௌகான் “வேணாம் படிகளின் வழியா போறதுதான் நல்லது. உடற்பயிற்சியாக இருக்கும்” என்று பதில் சொல்லிவிட்டு மாடிப்படிகளைக் கடக்க ஆரம்பித்தான். ஷோரூமில் உள்ளவர்களின் பெரும்பான்மையானவர்கள் சிறுவர்களாய் இருப்பது தெரிந்தது. அந்த நேரத்திலும் நல்ல கூட்டம். தன்னைப் போன்றவர்கள் பகலில் வேலைக்குப் போக வேண்டியுள்ளதால் இரவில்தான் நேரம் கிடைத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டே பரத் பெட்ஷீட் கவுண்டரை நெருங்கினான்.

“வாங்க சார்”

அங்கேயும் பதினைந்து பதினாறு வயதுள்ள சிறுவன் சிரித்த முகத்தோடு “என்ன வேணும் சார் ?” - என்று வரவேற்றான்.

“நல்ல பெட்ஷீட்டா எடுத்துப் போடு” என்றான் சௌகான். ரொம்ப நாளாக போட்டிருந்த திட்டம் இப்போதுதான் நிறைவேறப்போகிறது என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான். “சரிங்க சார்” என்று சொல்லிய சிறுவன் பெட்ஷீட்டுகளை எடுத்துப் போட்டான். இரவு பதினோரு மணிக்கும் பத்து பதினைந்து பேர் பொருள்களை வாங்குவதில் மூழ்கிக் கிடந்தார்கள். ஆச்சரியமான விஷயந்தான்! ஏழெட்டு வருசங்களுக்கு முன்பெல்லாம் இந்த மாதிரியான விஷயங்கள் கிடையாது. இராத்திரி பத்து பதினோரு மணிக்கெல்லாம் பொருள்கள் வாங்க கடைத்தெருவுக்கு வருவதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இரவில் இந்த நேரத்துக்கு கடையைக் கட்டி விடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் உலகம் மாறிப் போயிருக்கிறது! விடிய விடிய கடையைத் திறந்து வைத்திருந்தாலும் மக்கள் கூட்டம் குறையாது போலிருக்கிறது என்று நினைத்தான் சௌகான். அதற்குள் “இதெ பாருங்க சார். ஸாங்கேறி பெட்சீட் பேமஸானது சார்” என்று சிறுவன் இரண்டு மூன்று பெட்சீட்டுகளை விரித்துக் காட்டினான்.

நல்ல சிவப்பு நிறத்தில்... பிரின்ட். போர்த்தவாறே பையனின் பேரைக் கேட்டான். பையன் சொல்ல தடுமாறினான். வந்தவன் பெட்சீட்டின் விலையைக் கேட்பான் என்றுதான் எதிர்பார்த்தான். இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் தடுமாற்றம்.

“என் பேரா.... ராமானந்த் சார்” என்றான். புன்முறுவலை உதிர்த்தவாறு. ஒரு கணம் அவன் முகம் பிரகாசித்தது.

“ஒனக்கு எந்த ஊரு?”

“ஜோத்பூர்... சார்” என்றான் மெல்லிய குரலில். இன்னைக்கெல்லாம் அவனுக்கு பதினைந்து வயதுக்கு மேலே இருக்காது. சுருட்டை முடி, நல்ல உயரம், சிறிய கண்கள், கழுத்தில் செயினும் காதில் கடுக்கனுமாய்...

“நீ காதுலெ என்ன போட்டிருக்கே?”

“கடுக்கன். எங்க ஊர்லே எல்லாருமே போட்டுக்குவோம் சார்”

“எதுக்காக போட்டுக்கிறீங்க?”

“தெரியாது சார்” என்றான் கள்ளங்கபடமில்லாமல். அவனிடம் சௌகான், “எங்க ஊர்லே பொம்பளைங்க தான் போட்டுக்குவாங்க” என்றான்.

“எங்க ஊர்லே ஆம்பள பொம்பளை எல்லாரும் போட்டுக்குவோம். எங்க அம்மாவும் அப்பாவும்கூட போட்டிருக்காங்க... என்று கூறிவிட்டு “வேற ரகத்தை பார்க்கிறீங்களா சார்” என்று அவனது கவனத்தைத் திசைதிருப்பினான். சௌகான் திரும்பி பார்த்தபோது அந்த கவுண்டரின் மூலையில் சூப்பர்வைசர்போல ஒருத்தன் அவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். “இதெ பாருங்க சார்! நிறம் பிடிச்சிருக்கா? பஜ்ரா பிரின்ட் ஸ்பெஷல் ஐட்டம்.” அவன் குரலில் உற்சாகம் தொனித்தது. இது பாட் மேரி பிரின்ட், இது ஜெய்ப்பூர் பிரின்ட்” என்று ஒவ்வொரு பேராகச் சொல்லி சுமார் இருபது முப்பது பெட்ஷீட்டுக்களையாவது காட்டியிருப்பான். பரத் சௌகான் அவற்றைப் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தவன்,

“கொஞ்சம் திரைச்சீலைகளைக் காட்டு பார்க்கலாம்” என்றான்.

வேறு ஒரு பக்கத்திலிருந்து ஒரு குரல்:

“ராமானந்தா இங்கேயும் கொஞ்சம் கவனிச்சுக்கோ”

சூப்பர்வைசரின் குரல். ராமானந்த் விரித்துக் காட்டிய பெட் ஷீட்டுகளை அப்படியே போட்டு விட்டு எதிர்பக்கத்திற்கு ஓடினான். ஒரு நொடிக்குள் பல நிறமான திரைச்சீலைகளை அள்ளி வந்து காட்ட ஆரம்பித்தான். கடவுள்கள், பறவைகள், விலங்குகள், இயற்கை காட்சிகள் பிரின்ட் போடப்பட்டிருந்தன.

“இதெல்லாம் ஜோத்பூரிலிருந்து வருது சார். நெசவில் கைதேர்ந்தவங்க உங்களெ போன்றவங்களுக்காக தயாரிச்சது”.

“இதெல்லாம் ஜோத்பூரிலிருந்தா வருது?”

“ஆமாம் சார், எங்க பாக்டரியிலிருந்து... அங்கே நூற்றுக்கணக்கான தொழிலாளிங்க வேலை செய்யிறாங்க...”

தலைப்பாகை, செருப்பு, குர்தா, பைஜாமா மற்றும் அலங்கார பொருள்கள் என்று அந்த கவுண்டர் முழுவதும் ஜோத்பூர் பொருள்கள்தான். அழகாகவும் கண்ணைக் கவர்வதாகவும் இருந்தன.

“இதுலெ அப்படி என்ன விசேஷம்?”

“அப்படி இருக்கறதாலேதான் சார் உங்களெ போல உள்ளவங்க விரும்பி வாங்குறாங்க” என்று சிரித்துக் கொண்டே கூறிய சொற்களில் ஜோத்பூரின் மீது அவன் வைத்திருந்த ஆழமான பற்று வெளிப்பட்டது. ஒரு பெண் மணிபர்ஸ் ஒன்றை எடுத்துக் காட்டி, “இந்த பர்ஸ் எவ்வளவு?”

ராமானந்த் வேகமாக அங்கே சென்று அவளது கையிலிருந்த பர்ஸை வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு விலையைக் கூறினான்.

“வெல ரொம்ப கொறச்சலா இருக்கே!” ஆச்சரியப்பட்டாள்.

“அப்படின்னா மூணு பார்ஸ் வாங்கிக்கங்களேன்” என்றான் ராமானந்த்.

அவள் வேறு சில பர்ஸ்களை எடுத்துப் பார்த்தான்.

“பெட்சீட் புடிச்சிருக்கா சார். வேற பார்க்கறீங்களா?”

“வேண்டாம் இதிலிருந்தே எடுத்துக்கிறேன்”

ராமானந்த் வேறு பக்கத்திலிருந்து ஒட்டகங்கள் போட்ட பெட்சீட்டுகளைக் கொண்டு வந்து காட்டி “இதெ பாருங்க சார். ஒட்டகங்கள் போட்ட ஸ்பெஷல் ஐட்டம் சார்” என்ற அவனது குரலில் சந்தோசம் கலந்திருந்தது.

“அசராமல் உழைக்கிற உங்களுக்கு களைப்பு வராதா?”

பெட்ஷீட்டுகளை விரித்துக் காட்டிய ராமானந்தின் கைகள் அவனையும் அறியாமல் திடுக்கிட்டு நின்றன. ‘என்ன இப்படி ஒரு கேள்வியா? இப்படியும் ஒரு மனுசனா!?’

“இல்லே சார். களைப்படைய என்ன இருக்கு? உங்களெபோல உள்ளவங்களுக்கு சேவை செய்யத்தானே நாங்க இருக்கோம். ஜோத்பூர் ஷீட்டுகளை எடுத்துக்குங்க சார்.”

“ஒனக்கு ஜோத்பூரா?”

“ஆமாம் சார்”

“இங்கே வேலை பார்க்கிற எல்லோருமே ஜோத்பூர்காரங்களா?”

“ஆமாம் சார்”

சௌகானுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஏன் எல்லோரும் ஒரே ஊர்க்காரவங்களா இருக்கீங்க?”

“எங்க மொதலாளிக்கு சொந்த வூரு ஜோத்பூர்தான். அதனாலே தான் அங்கிருந்து ஆளுகளெ கொண்டாந்திருக்காரு”

“நல்லதுதானே?”

அவன் அதை மறுக்கும் பாவத்தில் “அப்படி எல்லாம் ஒன்னுமிலே”

“ஏன் அப்படிச் சொல்லுறே?”

“இது ஒரு ஜெயிலு சார்” அவனது சொற்களில் வெறுப்பு கலந்திருந்தது.

“ஏன் ஜெயிலுன்னு சொல்லுறே?”

“நான் சொல்லுறது நெஜந்தான் சார்?”

“எத்தனை மணிவரைக்கும் வேலை பார்ப்பீங்க?”

“குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ராத்திரி பன்னிரண்டு மணிவரைக்கும்கூட வேலை பார்க்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்கள் வர்றத பொறுத்தது. தீபாவளி சமயத்தில் கடை கட்ட காலையிலே மூணு மணிகூட ஆயிடும் சார். ஏன்தான் இப்படி வாங்கிக் கட்டுறாங்கன்னு தெரியலே” என்றான் மெல்லிய குரலில்.

“நீங்களெல்லாம் எங்கே தங்கியிருக்கீங்க?”

“சேட்டு பெரிசா ஒரு ஹால் கட்டிப் போட்டிருக்காரு அதுலெதான்”

“காலையிலே எத்தனை மணிக்குக் கடை திறப்பீங்க?”

“எட்டு மணிக்கெல்லாம்”

“நீங்க எட்டு மணிக்கே வந்திடுவீங்களா?”

“அதுக்கும் முன்னாலேயே வந்திடுவோம்”

“நீங்க ஜெய்பூருக்கு வந்திருக்கீங்களா சார்? பல இடங்களிலிருந்து வர்றாங்க”

“வந்திருக்கேன்”

“இங்கே ராஜ்பவனை அலங்கரித்து வச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன். நாளைக்கு சுதந்திர தினமில்லியா? நீ போய் பார்த்தியா?” என்று கேட்டான் சௌகான்.

“எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் போய்ப் பார்ப்போம்” என்றான் நக்கலாய். “ராஜ்பவனை அலங்கரித்துள்ள விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?”

“இங்கே வந்த யாரோ சொல்லித்தான் தெரியும்”

“அவசியம் போய் பாரு”.

“எங்களுக்கு அதற்கெல்லாம் ஏதுசார் நேரம்! இந்த ஷோரூம் தான் எங்களோடெ உலகம் காலை எட்டு மணியிலிருந்து ராத்திரி பன்னிரண்டு மணி வரைக்கும் இந்த ஏர்கண்டிஷனிலேயே எங்க வாழ்க்கை மூழ்கிப் போயிடுது”

ரோட்டில் போடும் கோஷம் இந்த நாலாவது மாடியிலும் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

“யாரு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு கோஷம் போடுறது?”

“எங்க சொந்தக்காரவங்க தான் சார்”

“எப்படி சொந்தம்?”

“அவங்களும் இந்த ஷோ ரூமிலே வேலை பார்த்தவங்க தான். சேட்டு வேலையிலிருந்து தூக்கிட்டாரு”

“எதுக்கு தூக்குனாரு?”

“அவங்க ஊருக்கு போக லீவு கொடுக்கலே. எட்டு மணி நேரத்துக்கு மேலே வேலை பார்க்க முடியாதுன்னு மறுத்திட்டாங்க”

“அப்புறம்?”

“சேட்டு அவங்களை வேலையிலிருந்து நீக்கிட்டாரு” என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டான்.

“இங்கே எவ்வளவு சம்பளம் தர்றாங்க?”

“ஒரு நாளைக்கு அம்பது ரூபா”

“ஒனக்கு?”

“எனக்கும் அவ்வளவுதான்”

“நீ ஜோத்பூருக்கு போக சேட் சம்மதிப்பாரா?”

“ம்க்கும். மாசத்தில் ஒரு நாள் கூட லீவு தரமாட்டேங்கிறாரு”

“அப்போ நீங்களும் கோஷம் போடுறவங்களோடெ சேர வேண்டியதுதானே?” என்ற சௌகானின் கேள்விக்கு உடன் பதில் சொல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை. கடையைக் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். ராமானந்த் மெல்லிய குரலில் “நாளைக்கி” என்றான்.

“ஏன் நாளைக்கின்னு முடிவெடுத்தே?”

“சேட்டு நாளைக்குத்தான் சம்பளம் தருவாரு. அதை வாங்கிக் கிடத்தான்.”

அவனது குரலில் சகதோழர்கள் மீதிருந்த நியாயமும் தோழமையுணர்வும் வெளிப்பட்டது. ஷோரூம்கள் சாத்தப்பட்டன. தொழிலாளர்களைத் தவிர வேறு ஆட்கள் இல்லை. மேனேஜர் ரூமை அடைத்து விட்டு கீழே வருமாறு ஜாடை காட்டினார். பரத் சௌகான் எடுத்து வைத்திருந்த இரண்டு பெட் சீட்டுகளையும் ராமானந்த் பேக்கிங் செய்ய முயன்றபோது பைகள் கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் பீரோவில் வைத்து பூட்டிவிட்டார்கள். ராமானந்த் இன்டர்கம்மில் பேசி இரண்டு பைகளை எடுத்து வருமாறு கூறினான்.

“ஒன் அப்பா அம்மா எல்லாம் எங்கே இருக்காங்க?”

“ஜோத்பூருலே சார்”

“அப்பா என்ன செய்யுறாரு?”

“வெள்ளையடிப்பாரு. ஜோத்பூருலெதான் சூரியன் அதிக நேரம் பிரகாசிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா சார்? சூரியனோட கிரணங்கள் செங்குத்தா விழுவதாலே நல்ல உஷ்ணமா இருக்கும்”

“இங்கே இருக்கறதவிட அதிகமாகவா?”

“ஆமாம் சார். இங்கே இருக்கிறதவிட அதிகம்”

“நீ ஏன் ஒங்க அப்பாவோட வேலையை செய்யலே?”

“எனக்கு அது ஒத்துவர்லே சார். யாரும் மதிக்கமாட்டேங்கிறாங்க. காரணமில்லாமலே திட்டுறாங்க. அதனாலே எனக்கு அந்த வேலை புடிக்கலே” என்றதிலிருந்து அவனது வேதனை புரிந்தது.

“நீ படிக்கலியா?”

“படிக்கத்தான் நெனச்சேன். அம்மாவும் கொறஞ்சது பத்தாவது வரைக்குமாவது படி என்று தொந்தரவு பண்ணினா. எனக்கு படிக்க பிடிக்கலே. படிச்ச பிறகு என்ன செய்யறது, சுண்ணாம்பு அடிக்கத்தானே போகணும். அந்த படிப்புக்கு வேற என்ன வேலை கிடைக்கும்? ஜோத்பூரே சேட்டுங்க கைலேதான். பணம், பதவி, அதிகாரம், அந்தஸ்து, அரண்மனை, ஆடம்பரம் எல்லாம் அவர்களுக்குத்தான் சொந்தம். அதனாலேதான் இங்க வந்தேன்” என்று தனது கதையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தான் ராமானந்த்.

“இங்கே அவர்களுடைய அதிகாரமில்லையா?”

சௌகானின் கேள்விக்குப் பின்னால் சிறிது நேரம் ஏதோ சிந்தித்த ராமானந்த் “இங்கேயும் அவர்களின் அதிகாரந்தான். இங்கே இருப்பதை பார்த்தால் ஜோத்பூரே தேவலாம் போல இருக்கு சார்”

“ஏன்?”

“அங்கே வெயில், காற்று, மழை முதலானவை சொந்தமாக இருந்துச்சு. ஆனால் இங்கே அவை எங்களுக்கு அந்நியமா ஆயிடுச்சு. இங்கே ஒரு வகையான சிறைவாசம். இருண்ட குகையில் சிறை வைத்திருக்கிறார்கள். வெளியில் மழை பெய்வதுகூட எங்களுக்குத் தெரியாது. நனைந்து கொண்டு உள்ளே வருவதைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும். ஜோத்பூருலே இதெல்லாம் எங்களுக்குச் சொந்தமாக இருந்தது. அவனது குரலில் தளர்ச்சி வெளிப்பட்டது. கண்களில் கண்ணீர் ததும்பியது. அவனுடன் வேலை பார்க்கும் ஒரு சிறுவன் இரண்டு பைகளை எடுத்து வந்து கொடுத்துவிட்டு “சீக்கிரம்... கல்லா கட்டப்போ றாங்க எல்லோரும் ஒனக்காக காத்துக்கிட்டு இருக்காங்க” என்று சொல்லிவிட்டுப் போனான்.

ராமானந்த் பெட்சீட்டுகளைப் பாக்கிங் செய்து எடுத்துக் கொண்டு பில்லைக் கொடுத்து, “கீழே கவுன்டரிலே பணத்தை கட்டுங்க நான் பின்னாலே வர்றேன்” என்றான். சௌகான் பில்லை வாங்கிக் கொண்டு மாடிப்படிகளில் இறங்கினான். எல்லா கவுன்டர்களிலும் சிறிய கடுக்கன்கள் அணிந்த ஜோத்பூர் சிறுவர்கள் சௌகானையே பார்த்துக் கொண்டிருந்தனர். கீழே சென்ற சௌகான் பில்லுக்கான பணத்தைக் கட்டினான். அவனுக்குப் பின்னால் ராமானந்த் இரைக்க இரைக்க பெட்சீட்டுகளுடன் வந்து நின்றான். மாடிப்படிகளில் ஓடி வந்திருக்க வேண்டும். பரத் சௌகான் பெட்சீட்டுகளுடன் வெளியில் சென்றான். இரவு பன்னிரண்டு மணியைத் தாண்டியிருந்தது. ஷோரூம்களை மூடிவிட்டார்கள். வாசலில் ஒரு பெரிய கார் காத்துக் கொண்டிருந்தது. ஷோரூம் முதலாளியுடையதாக இருக்க வேண்டும். அந்தக் காரை பார்த்ததும் கோஷங்கள் உச்சகதியை அடைந்தது. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அக்கம் பக்கம் உள்ளவர்களின் காதுகளில் எதிரொலித்தன.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com