Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
சிறுகதை

வேடந்தாங்கல்
பாளையம் சையத்

சுவாமிநாதனின் முயற்சிகள் வீண் போகவில்லை. அரசுநிறுவனத்தில் பணிபுரிந்த அவனுக்கு நீண்ட நாட்களாகவே சட்டம் பயில வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. நுழைவுத் தேர்வுக்கு முயற்சி செய்தான். குழந்தைகளைப் படிக்க வைத்துப் பார்க்க வேண்டிய வயதில் இப்படிக் கஷ்டப்பட வேண்டுமா? என அவன் மனைவி செல்லமாகக் கோபித்துக் கொண்டாள். ஆனால், அவன் மனம் தளரவில்லை. சிரமங்களுக்கிடையே நுழைவுத் தேர்வு எழுதினான். சட்டக் கல்லூரி மாலை நேர வகுப்பில் சேர்ந்து பயிலும் வாய்ப்புக் கிடைத்தது. கல்வி கற்க வயது ஒரு தடை என்பதை உடைத்தெறிந்தான்.

நாற்பது வயதிலும் கலக்கலான கல்லூரி வாழ்க்கையை மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பு பெற்றான். மாலை நேரக் கல்லூரியில் சட்டம் பயில வந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பலதுறைகளில் பணிபுரியும் பவர் ஃபுல் அதிகாரிகள். சுவாமிநாதனைப் போன்று ஒரு சிலர் மட்டுமே கிளர்க் பதவிகளில் பணிபுரிபவர்கள்.

நாள் முழுக்க அலுவலகத்தில் கோப்புகளை எழுதி அலுத்துப் போன அவனுக்கு மாலைநேரக் கல்லூரி இளைப்பாறும் களமாக அமைந்தது. பல துறைகளின் உயர் அதிகாரிகளின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. அந்தப் புதிய அனுபவம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அலுவலகத்தில் தன் பணிகளை முடித்துக் கொண்டு உற்சாகத்துடன் தினமும் கல்லூரி வகுப்பில் ஆஜராகி விடுவான்.
சுவாமிநாதன் சாதாரணமாகவே அனைவரிடமும் கலகலப்புடன் இயல்பாகப் பழகுவான். அவனுடைய பழக்கவழக்கங்கள் கல்லூரியில் நல்ல நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது. முதலில் ‘கெட்டுகெதர்’ மாணவர்கள் அறிமுக விழா ஒன்றை கல்லூரியில் முன்னின்று ஏற்பாடு செய்தான். அந்த நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி அவர்களுக்கிடையே ஆரோக்கியமான உறவுப் பாலம் உருவாக அது அடிகோலியது.

தொடர்ந்து கல்லூரியில் ஆண்டு விழா, கல்லூரி மாணவர்கள் சார்பாக கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம் எனப் பல பயனுள்ள நிகழ்ச்சிகள் நடைபெற உறுதுணையாக இருந்தான். அதனால் மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கும் அவனை மிகவும் பிடித்துப் போனது.

மூன்று ஆண்டு மாலை நேரக் கல்லூரி நாட்கள் கடந்து போன சுவடே தெரியவில்லை. நேற்றுத்தான் நுழைவுத் தேர்வு எழுதி சட்டக் கல்லூரியில் கால் பதித்தது போலிருந்தது. அதற்குள் மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அலுவலகத்தில் அதிகாரிகள் கெடுபிடிகளில் சிக்கித் திணறி, திமிறி சோர்ந்து போய் கல்லூரி வந்துவிட்டால் புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் சேர்ந்து கொள்ள அந்த அற்புத நட்பு வட்டம் சோர்வைப் போக்கிவிடும். அலுவலகங்களில் பல நிலைகளில் பணிபுரிபவர்கள் மாலை வேளையில் மாணவர்களாக ஒன்றாக அமர்ந்து அளவளாவிய அனுபவங்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?

“விடிந்தது கண்ணே! என்றவுடன், அது அவனது காதில் முடிந்தது படிப்பு என்றல்லவா இடியாக இறங்கியது. வேதனை விடியல்களுக்கு வேடந்தாங்கலாக மாலை நேர சங்கமிப்புகள் அஸ்தமனத்தை நோக்கியல்லவா பயணப்படுகிறது! மூன்றாண்டுப் படிப்பு என்பது மூப்பு வரையிலும் இருக்கக் கூடாதா?” - சுவாமிநாதன் பிரிபு உபசார விழாவில் ஏக்கப் பெருமூச்சுடன் பாடிய கவிதையால் எழுந்த கரவொலி நண்பர்கள் இயதத்தைக் கீறி கண்களையும் கலங்கச் செய்துவிட்டது.

பசுமை நிறைந்த நினைவுகள்; இனிய நண்பர்கள் வட்டத்தை உடைத்து விடத் துடிக்கும் காலத்தின் வேகம்; நினைத்தபோது மனது வலித்தது. வயது வித்தியாசம், உத்தியோக பாகுபாடு என எல்லாவற்றையும் ஓரங்கட்டி எல்லோரும் இந்த வகுப்பு மாணவர்கள் எனக் கூடிக் குதூகலித்த நாட்களை மறக்க யாருக்கும் மனம் எளிதில் இடம் கொடுக்கவில்லை. உணர்ச்சிப் பிழம்பாக ஒவ்வொருவரின் உதடுகளிலும் தழும்பிய வார்த்தைகள் அனைவரையும் நெகிழச் செய்தன.

இறுதி ஆண்டுத் தேர்வுகள் முடியும் தறுவாயில்தான் பேராசிரியர் ஞானதேசிகன் அந்த யோசனையைத் தெரிவித்தார்.

“மிஸ்டர் சுவாமிநாதன் ஃபேர்வெல் பார்ட்டியில் நீங்கள் அனைவரும் மேடையில் உருகிய காட்சிகளை என்னால் மறக்க முடியவில்லை. மாலை நேரக் கல்லூரியில் பயில வந்த நீங்கள் இவ்வளவு நெருக்கமான நட்பை வளர்த்துவிட்டீர்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. உங்கள் அனைவரின் ஆரோக்கியமான நட்பு நீடித்து நிலைக்க வேண்டும். அதுதான் என் விருப்பம். அதற்கு ஒரு ஐடியா வைத்துள்ளேன். அதனை உங்களால் மட்டுமே செயல்படுத்த முடியும்”. என்று சொல்லிவிட்டு அவனை ஏறெடுத்துப் பார்த்தார்.

“சொல்லுங்க சார் என்னால முடிஞ்சத கண்டிப்பா செய்றேன்.”

“நம்ம கல்லூரியில் அலுமினி அசோஷியேசன் கிடையாது. அது ஒரு பெரும் குறையாகவே உள்ளது. நீங்கள் முயற்சி செய்து பழைய மாணவர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினால் உங்கள் நண்பர்கள் வட்டம் நீடித்து நிற்கும். கல்லூரியில் சங்கம் உருவாக்கிய சாதனை புரிந்த பெருமையும் உங்கள் நண்பர்களுக்குக் கிடைக்கும்.

பேராசிரியர் ஞானதேசிகன் கூறியது சுவாமிநாதனுக்குப் பிடித்திருந்தது. நண்பர்கள் ரவி, ஜெகதீஷ், அப்துல்லா ஆகியோர்களிடம் பேராசிரியர் கூறிய யோசனையைத் தெரிவித்தான். அவர்கள் முழுமையாக அதனை ஏற்றனர். கூட்டு முயற்சியில் பழைய மாணவர் சங்கத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டான்.

கல்லூரி முதல்வர் அவர்களின் முயற்சிகளுக்கு துணை நின்றார். பேராசிரியர் ஞான தேசிகம் சங்கத்துக்கு சட்ட அங்கீகாரம் பெற்றிடத் தேவையான துணை விதிகள் மற்றும் தேவையான வழிகாட்டுதல்களைச் செய்து கொடுத்தார். நட்புக்கு ஒரு வேடந்தாங்கலாகப் பழைய மாணவர்கள் சங்கம் அமைய வேண்டும் என விரும்பினான். சங்க நிர்வாகக் குழுவில் சுவாமிநாதன் செயலாளர் ஆனான். நீண்ட பெரும் போராட்டங்களுக்கும் சோதனைகளுக்கும் பிறகு சங்கம் பதிவு செய்யப்பட்டது. அதன் மூலம் மாணவர்கள் நட்பு நீடிக்கவும் சமுதாய நலப் பணிகள் ஆற்றிடவும் அவன் ஆர்வமாய் இருந்தான்.

ஒரு சுபதினத்தில் சங்கத்தின் துவக்க விழா நிகழ்ச்சியை சட்டக் கல்லூரி வளாகத்திலேயே நடத்த கல்லூரி முதல்வர் அனுமதி அளித்தார். விழா நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. வி.ஐ.பி.க்களைத் தொடர்பு கொண்டு சங்க துவக்க விழா நிகழ்ச்சியில் அவர்கள் பங்கு பெற ஒப்புதலும் பெற்றாகிவிட்டது. மாவட்ட நீதிபதி விழாவை தலைமை ஏற்று நடத்த ஒப்புக் கொண்டார்.

செயலாளர் என்ற முறையில் சுவாமிநாதன் விழா சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்ய வேண்டியதிருந்தது. உடன் பயின்ற நண்பர்கள் இந்த இடைக் காலத்தில் பணிமாற்றல் காரணமாக வெளியூர்களுக்குச் சென்று விட்டனர். அவர்கள் முகவரிகளைத் தேடிக் கண்டுபிடித்து அனைவருக்கும் விழா அழைப்பிதழ்களை அனுப்பி வைத்தான். விழா நிகழ்ச்சி நாள் நெருங்க அவன் அலுவலகத்தில் விடுப்பு எடுக்க நேர்ந்தது.

அப்போதுதான் அந்தச் செய்தி அலுவலகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

“புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.டி. மூணாம்தேதி நம் அலுவலகத்துக்கு வருகை தருகின்றார்” என்று சூபர்வைசர் சுகுமாரன் முதலில் கூறினார். செய்தி உறுதியானதும் அலுவலகம் களேபரமாகிப் போனது. முதலில் இந்தச் செய்தியைக் கேட்டதும் சுவாமிநாதனின் அலுவலக நண்பர்களுக்கு சுரீர் என்றது. சுவாமிநாதனை நினைத்து அனுதாபப்பட்டனர். கல்லூரியில் பழைய மாணவர் சங்கத துவக்க விழா குறித்து அனைவரிடமும் பெருமையாகச் சொல்லி வைத்திருந்தான். அதே தினத்தன்று எம்.டி. அலுவலக வருகை குறித்த செய்தியினால் சுவாமிநாதன் நிலையை எண்ணி அனைவரும் வருந்தினர்.

“புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.டி. ரொம்பவும் கெடுபிடியானவராம். நம்ம மாவட்டத்தில் ஏற்கெனவே வேலை பார்த்தவராம்.” பக்கத்துச் சீட்டு பரமசிவம் சுவாமிநாதனிடம் புலம்பித் தீர்த்தார்.

மேலாளர் சதாசிவம் நடவடிக்கைகளை நினைத்தால்தான் சுவாமிநாதனுக்குப் பகீர் என்றது. மனிதர் எதற்கும் வளைந்து கொடுக்கமாட்டார். ரொம்பவும் சுப்ரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உடையவர். தன்கீழ் பணிபுரியும் பணியாளர்களை மனிதாபிமானத்துடன் நடத்தமாட்டார். சென்னையிலிருந்து சாதாரண அதிகாரிகள் வருகை தந்தாலே வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவுவார். அதுவும் எம்.டி. பொறுப்பேற்ற கையோடு முதல் விசிட்டாக இங்கு வருகை தருகிறார் என்றால் மேலாளர் கெடுபிடிகளுக்குக் கேட்கவா வேண்டும்?

இப்படித்தான் ஒருமுறை சென்னையிலிருந்து அதிகாரி ஒருவர் வருகை புரிந்தார். அந்த நேரம் பார்த்து சுவாமிநாதன் சித்தப்பா மகனுக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அதிகாரி வருகை காரணமாக அலுவலகத்தில் யாரும் லீவு போடக் கூடாது என கடுமையான உத்தரவு போட்டு விட்டார். சுவாமிநாதன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனுக்கு விடுப்பு அனுமதிக்க மறுத்துவிட்டார். நொந்து போனவன் மனைவியை மட்டும் திருமணத்துக்கு அனுப்பிவிட்டு தேமே என அலுவலகத்தில் வந்து காத்துக் கிடந்தான். சுவாமிநாதன் மீது சித்தப்பாவுக்கு கோபம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

எம்.டி. வருகை காரணமாக அலுவலகத்தில் வேலைகள் பரபரப்பாக நடந்தேறின. வழக்கமான கெடுபிடி உத்தரவுகள் அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டன. எம்.டி. விசிட் முடியும் வரை அலுவலகத்தில் யாரும் லீவு போடக்கூடாது என சுற்றறிக்கை விடப்பட்டது. எம்.டி. வருகை தரும் மூன்றாம் தேதியன்று காலை 9 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்துவிட வேண்டும் என சூபர்வைசர் அனைவரிடமும் கண்டிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார். இது மேலாளர் வாய் மொழி உத்தரவு என மிரட்டினார்.

சுவாமிநாதனுக்கு எரிச்சலாகவும் அவர்களின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாகவும் அமைந்திருந்தன. கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சங்க துவக்க விழா சிறந்த முறையில் நடைபெற வேண்டுமே எனக் கவலைப்பட்டான். அலுவலக கெடுபிடிகளை அவன் கண்டு கொள்ளவில்லை. அதற்கு அவசியமும் இல்லை என நினைத்தான். விழா நடத்த முடிவு செய்த நாளன்று அலுவலகத்தில் விடுப்பு பெற வேண்டும். ஆனால், எம்.டி. விஸிட் காரணத்தைக் கூறி மேலாளர் கண்டிப்பாய் மறுத்து விடுவார். இருப்பினும் மேலாளரிடம் விபரங்களைச் சொல்லி விடுப்பு கேட்க முடிவு செய்தான்.

“சார் ஒரு ரிகொஸ்ட்” என்ன விஷயம் என்பது போல சதாசிவம் அவனைப் பார்த்தார்.

“சார் மூணாம் தேதி எனக்கு லீவு வேணும்” சொன்னதுதான் தாமதம். மேலாளர் எடுத்த எடுப்பிலேயே கடுப்பாகிப் போனார்.

“என்னய்யா புரியாமப் பேசுறீங்க. எம்.டி. விஸிட், அன்றைக்குத்தான் தெரியுமிலே”.

“சார் அன்றைக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டி இருக்கு....”

“எதுவானாலும் நான் சொன்னதுதான்”

“சார் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க... அவன் சொன்னதும் அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

“ஒரு கிளார்க் சொல்றத நான் கேட்கணுமா?”

“சார் இது முன்கூட்டியே முடிவானது...” அவனைத் தொடர்ந்து பேச விடாமல்,

“ஆமாங்கய்யா இனி உங்க கிட்ட கேட்ட பிறகு ஆபீஸருங்க டூரை முடிவு பண்ணலாம்.”

“சார்...” என மீண்டும் வாயைத் திறந்தான்.

“மிஸ்டர், திருப்பித் திருப்பிச் சொல்ல முடியாது. எம்.டி. விஸிட் இருப்பதால் அநாவசியமா யாரும் லீவு போடக் கூடாது. நான் பெர்மிட் பண்ண மாட்டேன். உங்க அட்வைஸ் எல்லாம் தேவையில்லை.”

“சார், இது அநாவசியமில்லே. அட்வைசுமில்லே...” சுவாமிநாதன் சொல்ல வந்த விஷயங்கள் எதையும் கேட்க விரும்பாமல் குரலை உயர்த்தி, “நான் சொல்றத மீறி நீங்க லீவு போட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும். என் நேரத்தை வீணாக்காதீங்க. போய் வேலைய பாருங்க” என எடுத்தெறிந்து பேசினார். அதற்கு மேல் மேலாளரிடம் பேச விரும்பாமல் சுவாமிநாதன் வெளியே வந்தான். செக்ஷன் சூபர்வைசர் சுகுமாரன் எதுவுமே தெரியாததுபோல கோப்பில் மூழ்கிக் கிடந்தார்.

மேலாளர் அறைக்குள் நடந்த உரையாடலைக் கேட்ட அலுவலக ஊழியர்கள் சுவாமிநாதன் மீது பரிதாபம் கொண்டு உச் கொட்டினார்கள். சுவாமிநாதன் தன் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடிவு செய்தான். எம்.டி.யை வரவேற்க சதாசிவமும், சுகுமாரனும் ரயில் நிலையம் வந்திருந்தனர். ரயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

“எம்.டி. வந்தவுடன் ரெஸ்ட் எடுக்க கெஸ்ட் ஹவுஸ் எல்லாம் ரெடியாக உள்ளதா?” என சதாசிவம் கேட்டார்.

“ஆமாம் சார் பியூன் கணேஷனை கெஸ்ட் ஹவுஸில் டூட்டி போட்டிருக்கு” என சுகுமாரன் சொன்னார்.

எம்.டி. வந்ததும் கெஸ்ட் ஹவுஸ் அழைத்துச் சென்று விட வேண்டும் என சதாசிவம் முடிவு செய்திருந்தார். அடிக்கொரு முறை கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். வெயில் சுள்ளென உறைக்கத் தொடங்கியது. சென்னையிலிருந்து வரும் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக வந்து சேரும் என்ற அறிவிப்பைக் கேட்டதும் சதாசிவம் டென்ஷன் ஆனார். இப்போதே மணி 9 ஆகி விட்டது. எம்.டி. வந்ததும் நேராக ஆபீஸ் போகலாம் என்று சொன்னால் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்டார்.

செல்போனில் எண்களைத் தட்டினார். மறுமுனையில் ஹெட் கிளார்க் பேசினார். “எல்லா ஸ்டாப்களும் ஆபீஸ் வந்துட்டாங்களா?” என விசாரித்தார்.

“சுவாமிநாதன் மட்டும் வரல்லே. லீவு லெட்டர் கொடுத்திருக்கார்” என ஹெட் கிளார்க் சொன்னதும் சதாசிவம் முகம் சிவந்து போனது. சூபர்வைசரிடம் பொரிந்து தள்ளினார்.

“பாருங்க சார் இந்த சுவாமிநாதன் எவ்வளவு சொல்லியும் கேளாமல் லீவு போட்டிருக்கார். அவருக்கு சார்ஜ் மெமோ கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க அப்பத்தான் மத்தவங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்” என்றார்.

“ஆமாம் சார்” என சூபர்வைசர் ஆமோதித்தார்.

தாமதமாக வந்து சேர்ந்த ரயில் நின்றதும் சதாசிவம் முதல் வகுப்புப் பெட்டியைக் குறிவைத்து ஓடினார். எம்.டியைக் கண்டதும் ஒரு பெரிய கும்பிடு போட்டார். ரயிலை விட்டு இறங்கிய எம்.டி.யின் கண்கள் வெளியே அலை பாய்ந்தன. எம்.டி.யிடம் சதாசிவம் முதலில் நலம் விசாரித்தார். சூபர்வைசர் சுகுமாரனை அறிமுகம் செய்து வைத்தார். எம்.டி. கெஸ்ட் ஹவுஸ் போக வேண்டும் என்றார். கார் கெஸ்ட் ஹவுஸ் நோக்கிப் பறந்தது. சதாசிவம் சற்றும் எதிர்பாராத விதமாக சுவாமிநாதன் சிலருடன் அங்கு நிற்பதைக் கண்டதும் உடம்பு உஷ்ணமாகிப் போனார். இவன் ஏன் இங்கு வந்தான்?

சாதாரண கிளார்க் அவனை இங்கு வரச் சொன்னது யார்? சூபர்வைசரை முறைத்தார். அவர் எனக்கு எதுவும் தெரியாது என்பது போலப் பார்த்தார். சதாசிவம் மனதுக்குள் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. எம்.டி. உடன் வந்ததால் வெளிக்காட்ட முடியாமல் அடக்கிக் கொண்டார். சுவாமிநாதன் தன் மேலாளரைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான். அவர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தன் கடுகடுப்பைக் காட்டினார்.

காரை விட்டு இறங்கியதும் எம்.டி. சிரித்துக் கொண்டே நேராக சுவாமிநாதன் அருகே வந்து கைகுலுக்கினார். அதனைக் கண்டதும் சதாசிவத்துக்கு தூக்கி வாரிப் போட்டது.

“சுவாமிநாதன் நல்லா இருக்கீங்களா? இன்விடேசன் எல்லாம் கிடைத்தது. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. பங்ஷன் எத்தனை மணிக்கு?” என்று கேட்டார். தன் மேலாளர் முன்பாக எம்.டி. அவனைப் பாராட்டியதும் மனசில் இறக்கை கட்டிப் பறப்பது போலிருந்தது. சுதாரித்துக் கொண்டு, “மதியம் ரெண்டு மணிக்கு பங்ஷன் சார்” என்று பதில் சொன்னான். சுவாமிநாதன் வந்ததும் வராததுமாக எம்.டி.யுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும் சதாசிவம் முகத்தில் இறுக்கம் தளர்ந்து உடல் உதறத் துவங்கியது.

“டி.ஜெ.வெயெல்லாம் இன்வைட் பண்ணி தூள் கௌப்பிட்டீங்க போல”

“ஆமாம் சார் எல்லாம் நம்ம நண்பர்களோட ஒத்துழைப்பு தான்” என்று அடக்கமாகப் பதில் சொன்னான்.

எம்.டி.யுடன் சாதாரணமாக உரையாடியதைக் கண்ட சதாசிவம் திகைத்துப் போனார். அவர்களுக்குள் இருந்த நெருங்கமான நட்பு அவர்களின் உரையாடலில் வெளிப்பட்டதைக் கண்ட மேலாளர் உண்மையில் வெட்கப்பட்டுப் போனார்.

“மிஸ்டர் சதாசிவம், இவர் என்னுடைய கல்லூரித் தோழர் சுவாமிநாதன்” என எம்.டி. அறிமுகம் செய்து வைத்தார். பதிலுக்கு பொய்யான புன்னகை ஒன்றைக் கட்டாயமாக சதாசிவம் வரவழைக்க முயன்றார். ஆனால், உள்ளுக்குள் வேதனை உறுத்தியது. அவசரப்பட்டு சுவாமிநாதனை அலுவலகத்தில் உதாசீனப்படுத்தி விட்டோமே என வருந்தினார். சுவாமிநாதன் களங்கமற்ற முகத்துடன், “சார்தான் என்னோட பாஸ்” எனப் பெருமையாகச் சொன்னான். சதாசிவம் நெளிந்தார்.

“மேனேஜர் சார் நீங்க அலுவலகம் கிளம்புங்க. அப்புறம் புரோகிராம் பற்றி போனில் பேசுகிறேன்” என்றார். சதாசிவம் பரிதாபமாய் மெல்லிய குரலில் “எஸ் சார்” என்று கூறிவிட்டு வெளியில் வந்தார். கல்லூரித் தோழர்கள் கலகலவென பேசிச் சிரித்தவாறு அறையை நோக்கி நடந்தார்கள். அந்த அறை இப்போது வேடந்தாங்கலாக களைகட்டி இருந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com