Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
அந்த ஆகஸ்ட்டும் இந்த ஆகஸ்ட்டும்
மேலாண்மை பொன்னுச்சாமி

2008ம் ஆண்டின் ஆகஸ்ட், 1947 ஆகஸ்ட் போல வரலாறு நெடுகிலும் மறக்க முடியாத நினைவுச் சுவடு பதிக்கிற முக்கியத்துவமானது. மறக்க முடியாத நினைவுச் சுவடு’ என்றால்..?

மனிதனுக்கு அளவுகடந்த ஆனந்தத்தால் இறக்கைகட்டிப் பறந்த தருணத்தைப் போலவே அளவு கடந்த சோகத்தால் இறக்கை வெட்டுண்டு கிடக்கிற தருணமும் மறக்க முடியாதது. நினைவின் தழும்பாக நிரந்தரமாக சுவடு பதித்துவிடும். 1947 ஆகஸ்ட், பிரிட்டிஷ் நாட்டின் கொடி இறக்கப்பட்டு, தேசத்தின் சுதந்திர மூவர்ணக் கொடி உயர்ந்து வானத்தை உரசிய மாதம். நாடே கூத்தாடியது. ஆடுவோமே பள்ளுபாடுவோமே என்று நாட்டுமக்கள் அனைவரும் ஆனந்தப் பள்ளு பாடிய மாதம்.

‘விட்டொழிந்தது வெள்ளை இருட்டு’ என்று நாட்டு மக்கள் உல்லாசத்தில் குதூகலக் கும்மாளமிட்டனர். நாட்டுத் தலைவர்கள் பரவச ஒளிமின்னுகிற பிரகாச முகத்துடன் பரஸ்பரம் ஆனந்த வாழ்த்துகள் சொல்லிக் கொண்டனர்.

2008 ஆகஸ்ட் இறக்கை வெட்டுண்ட இந்தியப் பறவையின் சோகக் கண்ணீர் பெருகி இந்திய மண்ணில் வழிந்து நனைக்கிறது. மக்கள் வேதனையாலும் அச்சத்தாலும் மருண்டு நிற்கின்றனர். ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், ஈராக் மக்களுக்கும் நேர்ந்திருக்கிற இருள்மயமான ரத்த பயங்கரப் பகல்களாக நமது வாழ்வும் ஆகிவிடுமோ என்று திகிலடைந்து கிடக்கிற மக்கள்.

“போகாதே, போகாதே என் பிரதமரே
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்”

என்று எத்தனையோ எச்சரிக்கைகளும், தடைகளும், அறிவுறுத்தல்களும் சொல்லிப் பார்த்துக் களைத்துப் போன தேச பக்த இடதுசாரித் தலைவர்கள் கை பிசைந்து நிற்கின்றனர். இந்தியாவின் மூவர்ணக் கொடி சடசடத்து பறந்து கொண்டிருக்கிற வேளையிலேயே.. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அடிமைச் சாசனம் எழுதித் தருகிற இந்தியாவைப் பார்க்கிறது 2008 ஆகஸ்ட். அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு காண்பதில் மன்மோகன் சிங்குக்கு கொள்ளை ஆசை. ஆசை ஆசையாக ஓடிப் போய் உடன்பாட்டில் கையொப்பமிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

சோவியத் யூனியன் இருந்த காலத்தில் சோவியத் ரஷ்யாவுடன் இந்தியா ராணுவப் பாதுகாப்பு உடன்பாடு கண்டிருந்தது. அந்த உடன்பாடு, இந்தியாவுக்கு அரணாக இருந்தது. ஏனெனில், மூன்றாம் உலகத்தின் அனைத்து நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதை கொள்கையாகவே கொண்டிருந்தது சோசலிச சோவியத் ரஷ்யா.

பாகிஸ்தானை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தான் போராடுகிறது. பாகிஸ்தான் மூர்க்கமான ராணுவத் தாக்குதல். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் எல்லையோர இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் அகதிகளாக வந்து குவிகின்றனர். வந்து குவிகிற அகதிகளை பராமரிப்பதே இந்தியாவுக்கு இயலாததாக இருக்கிறது. கி.பாகிஸ்தான் வங்காளதேசமாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுகிறபோது... அகதிச் சுமை தாளாமல் இந்தியாவும் கைகொடுக்கிறது முக்திவாகினியுடன் இந்திய இராணுவம் போர் நடக்கிறது.

17 நாட்களில் போர் நிறைவடைகிறது. வங்காளதேசம் என்ற புதிய நாடு சுதந்திரம் பெறுகிறது. இந்தப் போர் நடக்கிற நாட்களில் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாகவும், இந்திய நாட்டுக்கு எதிராகவும் ஏழாவது கப்பல் படை என்ற ராட்சஸப் படையை இந்தியா நோக்கி ஏவப் போவதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மிரட்டியது. அனுப்பியும் விட்டது. அனுப்பிய மறுநாளே சோவியத் யூனியன் எச்சரித்தது. “இந்தியாவை நோக்கிப் பயணப்பட்ட ஏழாவது கப்பற்படை இந்த நிமிடமே அமெரிக்கா நோக்கித் திரும்ப வேண்டும். இல்லையேல், சோவியத் ருஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல் படை அமெரிக்கா நோக்கிப் பாயும்.”

அமெரிக்கா நடுங்கியது. உதறலெடுத்தது. பாதி தூரம் போய்விட்ட ஏழாவது கப்பற்படையை “உடனே திரும்பும்”படி உத்தரவிட்டு,தொடை நடுங்கியது. ஆம்.... இந்தியாவை அச்சுறுத்தியது அமெரிக்கா. இந்தியாவை ரட்சிப்பதற்காக அமெரிக்காவை எச்சரித்தது சோசலிச சோவியத் ருஷ்யா. பாகிஸ்தானுக்காக இந்தியாவை அச்சுறுத்திய அந்த அமெரிக்காவுடன் தான், உடன்பாடு, என்ற பெயரில் அடிமைச் சாசனம் எழுதித் தருகிறது இன்றைய இந்திய காங்கிரஸ் ஆட்சி.

அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி போரின் இளைய பங்காளியாகத் திகழ்ந்த இத்தாலி, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் அதிபர்கள் அத்தனைபேரும் தேர்தல்களில் தோல்வியடைந்திருக்கின்றனர். புஷ்ஷுடன் கைகுலுக்கிய டோனி பிளேயர் தமது ஆட்சியை விலையாகத் தந்தார். அணுசக்தி உடன்பாடு என்ற பெயரில் அடிமைச் சாசனத்தில் கையொப்பமிடத் தயாராகிவிட்ட காங்கிரஸ் கட்சியின் ஐ.மு.கூ. அரசு என்ன விலை தரப்போகிறது? தேர்தலில் எதை இழக்கப் போகிறது?

நாடு எத்தனை கொடிய இக்கட்டில் மாட்டிக் கொண்டது இந்த உடன்பாட்டால். இது உடன்பாடல்ல. அடிமை ஒப்பந்தம். சுதந்திரதேவி சிலை தீபம் உயர்த்தி நிற்கிறது அமெரிக்காவின் அடையாளமாக. ஆனால், அமெரிக்கா, சுதந்திரத்தை எந்த நாட்டுக்கும் அனுமதித்ததில்லை. அமெரிக்கா என்றால் சுதந்திர விரோதி என்றுதான் வரலாறு சத்தியம் செய்கிறது. அமெரிக்காவின் மண்ணின் மக்களான பூர்வீகக் குடிகளான சிவப்பிந்தியர்களின் சுதந்திரத்தை சூறையாடிய நரவேட்டை மூலம்தான் அமெரிக்க வெள்ளை ஏகாதிபத்தியம் பிள்ளையார் சுழிபோட்டுத் துவக்கியது. ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து வேலைக்காக அழைத்துவரப்பட்ட கறுப்பின மக்களை சுதந்திரமற்ற பரிபூரண அடிமைகளாக்கி மகிழ்கிறது அமெரிக்கா.

வியட்நாம் சுதந்திரத்தை வேட்டையாட முப்பதாண்டு காலம் நாசகர ராணுவ யுத்தம் நடத்தி அவமானகரமான தோல்வியைத் தழுவியது, அமெரிக்கா. கியூபாவின் சுதந்திரத்தைப் பறித்துவிடுவதற்கான எத்தனையோ கொலைகார நரித்தன திட்டங்களை - பொருளாதாரத் தடைகளை - முற்றுகைகளை நடத்தி நடத்தி மூக்குடைப்பட்டுக் கொண்டிருக்கிற வரலாறு.

ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசைக் கவிழ்த்தி.. அங்கிருந்த மக்களின் சுதந்திரத்தை - வாழ்வுரிமையை - பொருளாதாரத்தை - தொழிலை - நாசம் செய்து சூறையாடியிருக்கிற பயங்கரம். ஐ.நா.சபையை மீறி ஈராக்குக்குள் ராணுவமாக நுழைந்து, அந்த நாட்டு மக்களின் சுதந்திரத்தை சூறையாடி.. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் மரணத்துக்கு காரணமாகி... ஈராக் அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட்டு.. எண்ணெய்ச் சுரங்க சொர்க்கமாக இருந்த ஈராக்கையே நரகமாக்கி மகிழ்கிற குரூர அமெரிக்கா. அடுத்த நாட்டுக்குள் ஐ.நா.வையும் மீறி அத்துமீறலாக பிரவேசித்து, சுதந்திரத்தைச் சூறையாடி மகிழ்கிற அமெரிக்காவுடன் தான், அணுசக்தி உடன்பாடு எனும் அடிமைச் சாசனம்.

ஈராக் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இக்கதி என்றால், இந்தியாவுக்கு நாளை எக்கதியோ?

“அமெரிக்கா நாணயமாக நடந்து கொள்ளும்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார், இந்தியப் பிரதமர். அமெரிக்காவின் “நாணயத்தை” இப்போதே ருசி பார்க்க முடிகிறதே... அமெரிக்கா, தனது சொந்த நாட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்கிக் கொண்டே... உலக வங்கியின் மூலமாக ‘இந்திய நாட்டு விவசாயிகளுக்கான மானியத்தை இந்திய அரசு நிறுத்த வேண்டும்’ என்று வற்புறுத்துவதில் அமெரிக்காவின் “நாணயம்” தெரியவில்லையா?

சுற்றுச் சூழல் கெடுக்கிற மாசுவை வெளியிடாமல் தடுக்கிற உலக நாடுகளின் ஒப்பந்தத்துக்கு கட்டுப்படாமல், தானடித்தமூப்பாக வெளிப்படையாக மீறுகிற “நாணயம்” தெரியவில்லையா?” எங்கள் நாட்டு ஆலை வெளிவிடுகிற மாசுவை குறைக்க மாட்டோம்” என்று கர்வமாகக் கூறுகிற “நாணயம்” போதாதா?

உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே.. மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் சில நிற்கின்றன. முழுவதும் அமெரிக்க ஆலைக் கழிவுகள். அத்தனையும் கொடிய நோய்களையும் தொற்றுக் கிருமிகளையும் பரப்புகிற ஆபத்தான ரசாயனக் கழிவுகள். அந்தக் கழிவுகளை இங்குதான் கொட்டப் போவதாக அடம்பிடிக்கின்றன. துறைமுக அதிகாரிகள் சொல்கிற ஆட்சேபணைகளுக்கும், உத்தரவுகளுக்கும் கட்டுப்படாமல் அத்துமீறலாக கழிவுப் பொருள் கப்பல்கள் நிற்பதாக சமீபத்தில் ஒரு வாரஏடு எழுதியிருந்தது. இதுதான் அமெரிக்க ஏகாதிபத்திய ‘நாணயம்’.

இந்த உடன்பாடு ஏற்பட்டால் போதிய மின்சாரம் கிடைக்கும் என்பதெல்லாம் பொய்யான மிகை பிரச்சாரம். அணுசக்தியில் மின்சாரம் தயாரிப்பதற்கான செலவும் அதிகம் என்று விஞ்ஞானிகளே சொல்கின்றனர். இந்த ஒப்பந்தத்தில் ஆபத்தான ஷரத்துக்கள் நிறைய உள்ளன. இந்திய அணுமின் நிலையங்களை கண்காணிக்கிற அதிகாரமும் உரிமையும் பெறுகிறது அமெரிக்கா. அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா சந்தேகப்பட்டாலே போதும், (எந்தவித நிரூபணமோ, ஆதாரமோ தேவையில்லை) கொடுத்தக் கடன், யுரேனியம் எல்லாவற்றையும் உடனடியாக அவர்கள் சொல்கிற விலைக்குத் தந்தாக வேண்டும்.

உடன்பாட்டில் ஹைட் என்றொரு பிரிவு இருக்கிறது. அது, இந்தியாவின் இறையாண்மையையே இரையாக்கிக் கொள்கிறது. எந்த நாட்டை எதிர்ப்பது, எந்த நாட்டை ஆதரிப்பது என்றெல்லாம் சுய முடிவு எடுக்கிற அதிகாரம் இந்தியாவிடமிருந்து பறி போய்விடும். அமெரிக்கா யாருடன் சண்டை போடுகிறதோ. அந்த நாட்டுக்கு நாமும் நம் படைகளை அமெரிக்காவின் அடியாள்களாக அனுப்பியேயாக வேண்டும். அமெரிக்கா எந்த நாட்டை ஆதரிக்கிறதோ, அந்த நாட்டை நாமும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டும். ஒரு வரியில் சொல்லப் போனால், நமது வெளிநாட்டுக் கொள்கைச் சுதந்திரம் முழுவதையும் பறிக்கிறது இந்த ஒப்பந்தம். உடன்பாட்டில் இல்லாத ஒடுக்குமுறைகளும், நிர்ப்பந்தங்களும் எதிர்காலத்தில் வரலாம். ஏனெனில் அமெரிக்காவின் குணமே அதுதான்.

அமெரிக்காவின் இளைய பங்காளியான இஸ்ரேல் எப்போதும் போருக்குள் சிக்கிக் கிடக்கிறது. இந்தியாவும், இளைய பங்காளியானால் என்னவாகும். நாம் விரும்பாத போர்கள் நம்மீது திணிக்கப்படும்.

இந்தியப் பொருளாதாரம் சீரழியும் - இந்திய விவசாயம் அழியும், இந்தியாவின் இராணுவத்திற்குள் அமெரிக்கா நாட்டாண்மை பண்ணும். இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கைச் சுதந்திரம் பறிபோகும். இந்தியாவை அமெரிக்காவுக்கு அடகுவைக்கும் வேலை வெகுவேகமாய் நடந்து கொண்டிருக்கிறது. வங்காள தேசப் போரில் அமெரிக்காவை எதிர்த்து துணிச்சலுடன் நின்ற இந்திராகாந்தியின் ஆன்மா இந்திய அரசை மன்னிக்காது.

1947 ஆகஸ்ட் - நாடே கொண்டாடி மகிழ்ந்து திளைத்த சுதந்திர மாதம். 2008 ஆகஸ்ட் அமெரிக்காவுக்கு இந்தியாவை அடிமையாக்கும் மாதம். வரலாறு குரூரமாக முரண்பட்டுச் சிரிக்கிறது. ஆயினும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. இந்த உடன்பாடு ஏற்படுவதை கடைசி நிமிடம் வரை எதிர்த்துப் போராடிய தேச பக்த இடதுசாரி சக்திகள் இருக்கின்றன. இந்த ஆபத்தான ஒப்பந்தத்தின் கொடுமைமிகு அனுபவங்களால் கொதிப்புற்று திரண்டெழுந்து போராட இருக்கிற இந்திய மக்கள் இருக்கின்றனர். தேச பக்த இடதுசாரிகள் தலைமையில் இந்திய மக்கள் இந்திய சுதந்திரத்தை நிச்சயமாக மீட்டெடுப்பார்கள். இதை வரலாறு பார்க்கப் போகிறது.

விசித்திர முரண்

கல்பாக்கம் அணுமின் நிலையம் நம் நாட்டுக்கே பெருமை சேர்ப்பதாகும். முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட்ட இந்த அணுமின் நிலையத்துக்கு 25 வயது நிறைவடைந்திருக்கிறது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 25 வது பிறந்த நாளன்றுதான் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் எனும் பெயரில் அடிமை சாசனத்தில் கையெழுத்துப் போடத் துடித்த மத்திய அரசு இடதுசாரிகளின் ஆதரவை இழந்தது என்பது உண்மையிலேயே ஒரு விசித்திர முரண்தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com