Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
இளமதி பதில்கள்

இரா.ராஜேந்திரன்,
மயிலாடுதுறை-1
‘ரௌத்திரம் பழகு’ என்றான் மகாகவி பாரதி. ரௌத்திரம் என்றால் கோபம் என்று மேலோட்டமாகச் சொல்கிறோம். ஆழமான பொருள் என்ன?

அதன் ஆழமான பொருள் அதன் நோக்கத்தில் இருக்கிறது... ‘அநீதி கண்டு பொங்கியெழு’ என்கிற நோக்கத்தில்!

பொன்விழி, அன்னூர்
ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்தப்படுவது பற்றி..?

ஆமாம். ரேசன் அரிசி தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. லாரிகள் பிடிபடுகின்றன, டிரைவர் - கிளீனர்கள் பிடிபடுகின்றனர். ஆனால், உண்மையில் கடத்தியவர் முகமே தெரிவதில்லை. தமிழக ஏழை மக்களின் வயிற்றை ஏமாற்றிவிட்டு ரேசன் அரிசி வெளிமாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிற அளவுக்கு புகழ்பெற்றுவிட்டது.

சமீபத்தில் படித்த புத்தகம்..?

தோழர் பி.சி.ஜோஷி எழுதிய ‘புரட்சி 1957 ஓர் ஆய்வரங்கு’ எனும் அற்புதமான நூல். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய பதிப்பாக வெளி வந்துள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சிப்பாய்களும், மன்னர்களும், மக்களும் இணைந்து நாடு தழுவிய முறையில் நடத்திய பெரும் விடுதலை யுத்தம். இதை வெறும் சிப்பாய்க் கலகமென்று கொச்சைப் படுத்தினர் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள். இந்தக் கருத்தைத் தகர்த்தெறியும் முறையில்தான் அமரர் பி.சி.ஜோஷி இந்த நூலை ஒரு அமர காவியமாகத் தொகுத்தளித்தார். இந்நூல் மாவீரர்களையும், துரோகிகளையும் அம்பலத்தியது. திகலவதி ஜெகதீசனின் தமிழாக்கம் அருமை.

பாவலர் அறிவரசன்,
திருலோக்கி
சேது சமுத்திரத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதே?

ஈ.சிதம்பரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்.
சேது சமுத்திரத் திட்டம் வெறும் கனவுதானா?

அனைவரும் விரும்பி, வரவேற்கிற ஒரு நல்ல திட்டம் சேது சமுத்திரத் திட்டம். ஆனால், பிஜேபிக்கும், ஜெயலலிதாவுக்கும் இந்தத் திட்டம் நிறைவேறி விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறது. எனவே தான் ‘ராமர்பாலம்’ பற்றிப் பேசுகின்றனர். திட்டத்தின் முக்கால்வாசிப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடையும் பெற்றுள்ளார். திட்டம் நிறைவேற வேண்டும் என்பது தான் நம் எல்லோரின் விருப்பமும். ஆனால், தமிழக மக்களும், வரலாறும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறவர்களை மன்னிக்கப் போவதில்லை.

பொன்விழி,
அன்னூர்
நம்மிடம் விருந்தோம்பல் பண்பு தேய்ந்து வருகிறதா இளமதி?

செல்விருந்து பார்த்து, வருவிருந்து காத்திருக்கும் பண்புதான் தமிழருடையது. ஆனால், இன்று 110 கோடி இந்திய மக்களில் 83 கோடிப் பேர் ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டுமே வருமானம் பெறுவதாக அரசே புள்ளி விபரம் தருகிறது. இந்நிலையில் விருந்தாளியே வருவதைத் தவிர்த்துக் கொள்ள நினைக்கும் சூழல்தான். அப்படியும் மீறி வருகிற விருந்தினருக்கு ஒரு சிங்கிள் டீ தந்து அனுப்புவதே பெரும்பாடாகித் தான் போகிறது.

ஆர்.கே.சம்சுகனி,
டி.மாரியூர்
தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்டுக்கள் தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை என்று இல.கணேசன் கூறியுள்ளாரே?

இதிலிருந்து இல.கணேசன் வகையறா தேர்தல் ஜூரம் பிடித்து அலைவது நன்றாகத் தெரிகிறது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் வெறி அவர்களை அப்படி விரட்டுகிறது.

பொன்விழி,
அன்னூர்
தலித் மக்களுக்கு கோயில்களில் நுழைய அனுமதி தந்தால் அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விடுமா?

நிலம் உள்ளிட்ட பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டத்துடன் சமத்துவத்துக்கான போராட்டத்தைச் சேர்த்தே நடத்த வேண்டியுள்ளது. நீங்கள் ஒருவேளை கடவுள் நம்பிக்கையில்லாதவராக இருக்கலாம். தலித் ஒருவரின் வழிபாட்டு உரிமையைப் பிறர் தட்டிப் பறிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இயலாது. இது சமத்துவத்துக்கான போராட்டம் என்று பாருங்கள்.

ஆர்.கே.சம்சுகனி,
டி.மாரியூர்
உணவுப் பொருட்களை என்ன விலை கொடுத்தாவது வாங்குவதற்கு பொதுமக்கள் தயங்குவது கிடையாது என்று ப.சிதம்பரம் பேசியுள்ளாரே?

இது பசி ஏப்பக்காரனைப் பார்த்து புளி ஏப்பக்காரன் கிண்டல் செய்வது போல இருக்கிறது. விலைவாசி உயர்ந்தாலும் வாங்கிச் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்? பட்டினி கிடக்க முடியுமா? ஆனால், இப்போது அரை வயிறுதான் நிறையும் என்பது அவருக்கு ஏன் புரியவில்லை?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com