Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
கரிசல் மண்ணின் கலை

தேவராட்டம்
தாஸ்

தூத்துக்குடி அருகே வாழும் கம்பளத்து நாயக்கர் மக்களால் சக்கம்மா திருவிழாவின்போது ஆடப்பட்டு வந்த கலை தேவராட்டம். இவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை அண்டிவாழ்ந்த மக்கள். இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியிலும் இவர்கள் வாழ்கிறார்கள்.

பண்டைய மன்னர்கள் காலத்தில் இருந்து ஆடப்பட்டு வந்த தேவராட்டம் ஒரு கால கட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினருடையது என்று ஆகிப்போனது ஆய்வுக்குரிய விஷயம். மன்னர்கள் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பும்போது மன்னரை வரவேற்க ஆடப்படும் நடனம் தேவராட்டம் என்று கிராமியக் கலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் முன்தேர்குறுவை மற்றும் பின்தேர்குறுவை என்று இதற்குப் பெயர். மன்னரின் தேரின் முன்னும் பின்னும் போர் வீரர்களும் ஆடல் அணங்குகளும் வரிசையாக அணிவகுத்து ஆடி வருவார்கள். சமயங்களில் மன்னரும் தளபதிகளும்கூட தேரில் இருந்தபடி ஆடுவார்கள். பாடலின்றி நடனம் மட்டுமே இருந்த மரபுப்படி தேவராட்டத்தில் பாடல்கள் கிடையாது.

இந்த ஆட்டத்தில் மேளமே முக்கியமான இசைக் கருவியாகும். உருமி மேளம், தப்பு மேளம் ஆகிய கருவிகளில் எழுப்பப்படும் இசைக்கேற்ப நடன அசைவுகள் இருக்கும். பல சமயங்களில் தேவ துந்துபி எனப்படும் குழல் இசைக் கருவியும் பயன்படுத்தப்படும். ஆட்டக்காரர்கள் குர்தாவும் வேஷ்டியும் அணிந்திருப்பர். மணிக்கட்டில் வண்ணமயமான கைக்குட்டைகளைச் சொருகி இருப்பார்கள். தலைமை நடனக்காரர் முகத்தில் ஒட்ட வைத்த தாடியும், முகமூடியும், சோவிகளை கோர்வையாக உதட்டின் மேல் கட்டியபடி ஆடுவார். அவருடைய நடன அசைவுகளை மற்றவர்கள் பின்பற்றி ஆடுவார்கள்.

தேவராட்டத்தில் 18 அடிப்படை அடவுகள் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைவதால் ஏராளமான துணை அடவுகள் உருவாகின்றன. இவ்வாறு உருவானவற்றில் 72 அடவுகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. விருமாண்டி படத்தில் இடம் பெற்றுள்ள தேவராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கம்பளத்து நாயக்கர்களின் தனிப்பட்ட கலைச் சொத்தாக தேவராட்டம் இருந்ததால் மற்ற மக்களிடம் இது பரவலாக செல்வாக்கு பெறவில்லை. மட்டுமல்லாது, கலை அழிந்து விடும் நிலைக்குச் சென்றது. கலைமாமணி விருது பெற்ற குமாரராமன் இக்கலையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் என்றால் மிகையாகாது. தேவராட்டத்தை மற்ற மக்களுக்கும் கற்பிக்கவில்லை என்றால் தேவர்களின் கலையான தேவராட்டம் அழிந்து விடும் என்று கம்பளத்து நாயக்கர் மக்களை உணர வைக்க அவர் பெரும்பாடுபட்டார். இன்று தஞ்சை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் தலைப்பாகத் தேவராட்டம் மாறியுள்ளதற்கும் அவரே காரணம்.

மக்களின் அன்றாட வாழ்க்கை அசைவுகளை வெளிப்படுத்தும் கலை தேவராட்டம். இன்று வரை தேவராட்டத்தில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலை இருந்தது. பெண் தேவதை வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கும் தேவராட்டத்தில் பெண்களுக்கு இடமில்லை என்ற நிலைமை மாறி தற்போது அனைவருக்கும் கற்பிப்பது என்று ஆனபின் தற்போது பெண்களும் பங்கேற்கிறார்கள். விஜய நகர ஆட்சிக் காலத்தில் தென் தமிழ்நாட்டில் குடியேறிய மக்களால் போற்றப்படும் தேவராட்டம் இன்று கடல் கடந்தும் சென்றுள்ளது என்பது ஒரு மகிழ்ச்சியான தகவலாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com