Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
மக்கள் ஒலிம்பிக்ஸ்

பெய்ஜிங் ஹூவான் யிங் நி!
ஆனந்த்

ஒலிம்பிக்கை நடத்துவதற்கு எந்த நகரம் தேர்வு செய்யப்படப் போகிறது என்று அனைவருக்கும் ஆர்முடன் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். பெய்ஜிங்தான் என்று சீனாவின் கோடிக்கணக்கான மக்கள் எண்ணிக்கொண்டிருந்தபோது சிட்னிதான் அந்த நகரம் என்ற அறிவிப்பு. அவர்களின் முகங்களில் கவலை ரேகைகள் படர்ந்தன. இது நடந்தது 1993ஆம் ஆண்டில். இரண்டு வாக்குகளில் பெய்ஜிங் தனது வாய்ப்பை இழந்தது. சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து சீனாவிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஒலிம்பிக் வாய்ப்பை மறுக்க வேண்டும் என்ற பிரச்சாரம் நடந்தது. இப் போட்டிகளை சீனாவால் நடத்த முடியுமா என்பதைவிட அரசியல் ரீதியான பார்வையே அதிகமாக இருந்தது.

ஆனால் 8 ஆண்டுகள் கழித்து நிலைமை தலைகீழாகத் திரும்பிவிட்டது. முதல் சுற்றில் போதிய வாக்குகளைப் பெறாவிட்டாலும் இரண்டாவது சுற்றில் தனக்கு அடுத்த இடத்திற்கு வந்த கனடாவின் டொரோன்டோவைவிட 34 வாக்குகள் அதிகமாகப் பெற்று 2008 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான உரிமையை பெய்ஜிங் கைப்பற்றியது.

ஆகஸ்ட் 8 முதல் 24 வரை பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதற்கான செலவு 1 லட்சம் கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதனால் சர்வதேச அளவில் கிடைக்கும் மரியாதை, வர்த்தகம், ஒப்பந்தங்கள் என்று ஏராளமான நல்ல அம்சங்களும் சீனாவுக்குச் சாதகமானதாகவே இருக்கும். போட்டிகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்ட உடனேயே ஏற்பாடு செய்பவர்களின் மனதில் ஓடியது தொண்டர்களைப் பற்றியதே ஆகும். தொண்டர்கள் தேவை என்றவுடன் 11 லட்சத்து 25 ஆயிரத்து 799 பேர் மனுசெய்தனர். அதில் 30 ஆயிரம் மையங்களிலிருந்து பணிசெய்யப்போகும் 76 ஆயிரத்து 615 தொண்டர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஏற்கனவே ஜுலை 1 முதல் தங்கள் பணிகளைத் துவங்கி விட்டனர். 98 நாடுகளில் இருந்து இந்தத் தொண்டுப் பணிகளில் பங்கேற்றுள்ளனர்.

37மையங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 10 ஆயிரத்து 500 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள். 28 வகையான விளையாட்டுகள் பெய்ஜிங் ஒலிம்பிக்சில் இடம்பெறுகின்றன. 2004ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக்சை விட இதில் ஒரு விளையாட்டு அதிகமாக இடம்பெற்றுள்ளது. இந்தப் போட்டிகள் நடப்பதற்காக 12 மைதானங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இதில் பறவைக்கூடு என்று அழைக்கப்படும் சீனாவின் தேசிய மைதானம் ஏராளமான மக்களைக் கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பறவைக்கூடு போன்ற வடிவில் கட்டப்படுவதால் அந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு டி.ச.24 அன்று துவக்கப்பட்ட கட்டுமானப்பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. தற்போது இந்தப் பறவைக்கூடு மைதானம் போட்டிகளை நடத்துவதற்குத் தயார்நிலையில் உள்ளது. 80 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தின் மேற்கூரை திறந்துமூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் ஒலிம்பிக் துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பெய்ஜிங்கின் போக்குவரத்து வசதிகளைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விட்டார்கள். ஏற்கனவே இருந்ததைவிட சுரங்க ரயில்பாதைகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தை நேரடியாக இணைக்கும் பாதை உள்ளிட்ட ஏராளமான சுரங்க ரயில்பாதைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச விமான நிலையத்துக்குள்ளேயே ரயில்கள் வந்து பயணிகளை ஏற்றிச்சென்றுவிடும். 11 தானியங்கி ரயில்கள் இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரயிலிலும் அதிகபட்சம் 83 பேர் பயணம் செய்யலாம். செய்திகளை அவ்வப்போது தெரிந்துகொள்ளும்வகையில் நேரலை ஒளிபரப்புடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள் இந்த ரயில்களில் பொருத்தப்படும்.
போட்டிகளைக் காண வருபவர்களின் பயணத்தை எளிதாக்க புதிதாக 7ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதிகரிக்கும் போக்குவரத்தால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் நெருக்கடி ஆகியவற்றைச் சமாளிக்க வாகனங்களுக்கும் ரேஷன் முறை கொண்டுவரப்படுகிறது. பொது மற்றும் தனியார் வாகனங்களுக்கு ஜூலை 20 முதல் செப். 20 வரை பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனியாக நம்பர் பிளேட்டுகள் வாகனங்களுக்கு வழங்கப்படும். ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே இந்த வாகனங்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.

இதன் மூலம் பெய்ஜிங்கில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள் 45 சதவீதம் குறைந்து விடும் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதாவது சுமார் 33 லட்சம் வாகனங்கள் தங்கள் பயணத்தை நிறுத்திக்கொள்ளும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு ஜுலை1ல் நிறுத்தப்படும். இவ்வளவு ஏற்பாடுகள் செய்தால்தான் கூடுதலாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் 40 லட்சம் பேரைச் சமாளிக்க முடியும் என்று போட்டியை நடத்துபவர்கள் கூறுகின்றனர்.

அரசியலாக்கப்பட்டு சீனாவிற்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியாக சீன ஒலிம்பிக் ஜோதி பயணத்தை தடுத்து நிறுத்த ஏற்பாடுகள் நடந்தன. பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஜோதியை ஏந்தி பயணித்தவர்களின் கைகளிலிருந்து பறிப்பதற்கான இழிவான முயற்சிகள் சீன எதிர்ப்பாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.

பல்வேறு கருத்துக்களை மையமாகக்கொண்டு ஒலிம்பிக்ஸ் போஸ்டர்கள் சீனா வெளியிட்டுள்ளது. ஒரு உலகம், ஒரே கனவு என்ற அடிப்படைக் கருத்துடன் `சுமை ஒலிம்பிக்ஸ், உயர் தொழில் நுட்ப ஒலிம்பிக்ஸ் மற்றும் மக்கள் ஒலிம்பிக்ஸ்’ என்று சீன ஒலிம்பிக் குழுப்போட்டிகளை முன்னெடுத்துச் செல்கிறது. இந்தக் கருத்துக்களை முன்னிறுத்தும் வகையில் பல்வேறு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒலிம்பிக்ஸை நினைவுகூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 5 வளையங்களோடு, நட்புறவு மற்றும், அமைதியை வலியுறுத்தும் வகையில் 5 உருவங்களை சீனா வடிவமைத்துள்ளது. பெய்பெய், ஜிங்ஜிங், ஹுவான்ஹுவான், யிங்யிங் மற்றும் நிநி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உருவங்களின் பெயர்களில் முதல்வார்த்தைகளை இணைத்தால் பெய்ஜிங் ஹுவான்யிங் நி என்று வருகிறது. இதற்கு பெய்ஜிங் உங்களை வரவேற்கிறது என்று அர்த்தம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com