Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
நேர்காணல்
புத்தக வாசிப்பே எங்களுக்கு தனித்த அடையாளத்தை தந்தது...
ச.விஜயகுமார்

"அடிப்படையில், என்னை உருவாக்கியவை புத்தகங்கள்தான்!"- என்று பெருமையோடு சொல்லும் ச.விஜயகுமார் மதுரைக்கு அருகில் இருக்கும் மாடக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். மதுரையை அடுத்த திருவாதவூரில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியர். சாதி மறுப்புத் திருமணம் தான் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாகச் சொல்லி, செயலிலும் காட்டியவர். எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் உயர்ந்த இவர் பிறவியிலேயே கண்பார்வையற்றவர். என்னைச் சுற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் வாசித்துக் காட்ட எனக்கு ஒரு ஆள் வேண்டும். ஆனால், கண் பார்வை நன்றாக இருந்தும் புத்தகம் வாசிக்கிற பழக்கம் இன்னும் நம்மிடையே இல்லையே! என்று கவலை தெரிவிக்கும் விஜயகுமார் செம்மலர் வாசகர்களோடு இங்கே பேசுகிறார்.

செம்மலர்: உங்களுக்கு பார்வைக் குறைபாடு எந்த வயதில் ஏற்பட்டது? அதை எப்படி வென்று கல்வி பெற்றீர்கள்?

ச.விஜயகுமார் : என்னையும் சேர்த்து என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அதில் நானும் என் அண்ணன் ஒருவரும் பிறவியிலேயே பார்வையற்றவர்களாகவே பிறந்தோம். மற்ற இருவரும் நல்ல பார்வைத் திறனுடன்தான் உள்ளனர். துவக்கக் கல்வியை நாங்கள் எல்லோருடனும் வழமையான பள்ளியில்தான் பெற்றோம். அப்போது பார்வையற்றவர்களுக்கென்றே இயங்கும் தனிப் பள்ளிகள் குறித்து அறிந்திருக்கவில்லை. பிறகுதான் எங்களுக்கென்றே தனிப் பள்ளி இருக்கிறது என்று அப்பா விசாரித்து வந்து எங்களைச் சேர்த்து விட்டார். மதுரைக்கு அருகிலிருக்கும் பரவையில் புனித ஜோசப் கான்வென்டில்தான் படித்தோம். மேற்படிப்புக்கு சென்னை சென்றோம். பார்வையற்றோருக்கான தனியான பள்ளியில் படிக்கிறபோதுதான் எங்களுக்கென்று தனித்த ஆளுமையை நாங்கள் வளர்த்துக் கொள்ள முடியும் என்று கருதினோம். பிறகு, மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படித்தேன். பிறகு சென்னையில் பி.எட். முடித்து மறுபடியும் மதுரையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது ஆசிரியப் பணியமர்த்து வாரியத் தேர்வெழுதி அரசு வேலைக்கு வந்து விட்டேன்.

செம்மலர் : தமிழ் இலக்கியத்தின் மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது?

விஜயகுமார்: நான் சென்னையில் படித்தது ஆங்கிலப் பள்ளியில். அதுவும் கேரளத்தைச் சேர்ந்த கிருஸ்தவ நிறுவனம் நடத்தி வரும் பள்ளி. அதில் உள்ள பெரும்பாலோர்க்குத் தமிழ் தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு பார்வையற்றோருக்கும், வாய் பேசாத - காது கேளாதோருக்குமான தனித்தனிப் பள்ளிகள். நாங்கள் தமிழ் வழிக் கல்விதான் படித்தோம் என்றாலும், எங்களுக்குள் உரையாடிக் கொள்ளும் போது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப் பட்டோம். எங்களுக்கு ஆங்கிலப் பயிற்சியளிக்க வெளிநாட்டினர் சிலரை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழில் பேசினால் குப்பைத் தொட்டியைத் தலையில் சுமந்து கொண்டு பள்ளி வளாகத்துக்குள் வலம் வர வேண்டும். இப்படிக் கடுமையான தண்டனைகள் உண்டு. இது என் மனநிலையைப் பாதித்தது.

தவிர, எங்கள் குடும்ப சூழலும் எனக்குள் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தியது. எங்கள் பாட்டையா அய்யணன் என்பவர் புலமை நிரம்பப் பெற்றவர். சுற்றியிருப்பவர்கள் பலருக்கும் அவர் தமிழ் கற்றுக் கொடுப்பார். அதே போல எங்கள் அப்பாவும் நிறையத் தமிழ்ப்புத்தகங்களை வாங்கி வந்து வாசித்துக் காட்டுவார், அவற்றுக்கான விளக்கங்களைக் கூறுவார். சிறு வயதிலேயே அப்பா பொதுவுடமை இயக்கக் கூட்டங்களுக்கு அழைத்துப் போவார். அவர் நேரடியாக இயக்கத்தில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு மில் தொழிலாளியாக இருந்ததால், தொழிற்சங்கவாதியாக இருந்ததால் எங்களுக்கும் இதிலெல்லாம் ஈடுபாடு வர ஊக்கம் தந்தார். பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் என்று எது நடந்தாலும் எங்களை கடலை மிட்டாயெல்லாம் வாங்கிக் கொடுத்து சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வார். சின்ன வயதிலேயே நான் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். என்னை இதிலெல்லாம் உற்சாகப்படுத்தும் வகையில்தான் என் நண்பர்களும் இருந்தனர். கவியரங்கங்களில் பங்கேற்றேன்.

நான் 12 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது 'உதிரிப்பூக்கள்' என்றொரு ஒலிநாடாவை வெளியிட்டேன். அது ஒரு நாடகம். சாதியத்துக்கு எதிரான கருத்துக் கொண்ட நாடகம் அது. அதிலும், வர்க்க அடிப்படையை வலியுறுத்தும் நாடகம். நான் வளர்ந்த சூழல் எனக்கு ஒரு வர்க்க உணர்வை என்னுள் ஏற்படுத்தியிருந்ததன் விளைவு இது.

செம்மலர் : ஆசிரியப் பணியில் உங்களது அனுபவங்கள் எப்படி இருக்கின்றன? நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிச் சொல்லுங்கள்...

விஜயகுமார்: எங்கள் பள்ளியில் ஆயிரத்து ஐந்நூறு மாணவர்கள் படிக்கிறார்கள். பார்வையிழந்த ஆசிரியர்கள் பலரும் இந்த ஆசிரியப் பணி என்பது பிரச்சனைகள் நிறைந்தது என்றுதான் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அப்படி ஏதும் பிரச்சனைகள் எனக்கு இல்லை. எனக்கு இது இரண்டாவது பள்ளி. முதன் முதலில் நான் வேலையில் சேர்ந்தது சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்குறிச்சி எனும் சிறிய கிராமத்தில்தான். எம்.ஏ. இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே அதனை இடைநிறுத்தம் செய்துவிட்டு பணியில் சேர்ந்து விட்டேன். அப்போது எனக்கு ஆசிரியர் தொழில்குறித்து ஏதும் தெரியாது. ஒரு கல்லூரி மாணவனின் மனோநிலையோடுதான் அப்போது நான் இருந்தேன். பலரும் எனக்கு நல்ல வரவேற்பு தந்து, உதவிகளும் செய்தனர். நிறைய கற்றும் கொடுத்தனர். பிறகு திருவாதவூர் வந்த போதும் பணி ரீதியாக எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாவற்றுக்கும் முதல் அடிப்படை என்னவென்றால், என்னை நான் தகுதிப்படுத்திக் கொண்டேன். 'தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்!' எனும் டார்வினுடைய கோட்பாட்டினை மனதில் கொண்டு என்னை என் பணிக்கு எல்லா வகையிலும் தகுதிப்படுத்திக் கொண்டேன். எனக்குள்ள குறைப்பாட்டுக்குள் என்னை உட்படுத்திக் கொள்ளாமல், என்னால் எதுவும் செய்ய இயலாது என்று சொல்லி ஒதுங்காமல், மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அந்தப் பணிகளையெல்லாம் நானும் செய்கிறேன். தேர்வுக் கண்காணிப்பு போன்ற பணிகளைத் தவிர மற்ற எந்த வேலையையும் பிறரைப்போலவே நானும் செய்கிறேன். தேர்வுப் பணியை நான் பார்க்க முடியாது என்பதால் அதற்குப் பதிலாக, அதற்கு இணையாக வேறு ஏதாவதொரு பணியினை நானே தலைமை ஆசிரியரிடம் கேட்டுப் பெற்றுச் செய்கிறேன். மாணவர்களின் பிறதுறை ஈடுபாடுகளுக்கு ஊக்கம் தந்து, அதற்காக வேலை செய்வது போன்ற எனது நடவடிக்கைகளை எல்லோரும் பாராட்டுகின்றனர். வாரத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் தமுஎச போன்ற அமைப்புகள் வெளியிட்டுள்ள நாட்டுப்புறப் பாடல்கள், உரைவீச்சு போன்றவை அடங்கிய ஒலி நாடாக்களை நானே ஐந்து நிமிடங்களுக்குச் சுருக்கி, அதனை காலை நேரத்தில், பள்ளி துவங்குகிற போது நடக்கும் இறைவணக்கக் கூட்டத்தில் போட்டுக் காட்டுவேன். இன்று புதிதாய்த் தெரிந்து கொள்வோம் என்று அதற்கு ஒரு தலைப்பும் தந்திருக்கிறேன். இதில் அம்பேத்கார் போன்ற பல தலைவர்களின் உரையையும் இடம் பெறச் செய்திருக்கிறேன். இவற்றுக்கான தமிழ் விளக்கத்தையும் நானே தருகிறேன். இப்படி, புதிய புதிய தடங்களில் மாணவர்களை உட்படுத்துகிறபோது அவர்கள் அதனை வரவேற்கிறார்கள். அதே போல, வகுப்பில் பாடம் சொல்லிக்கொடுக்கிற பணியையும் நான் மிகச் சரியாகச் செய்து விடுவேன். மாணவர்களுக்குக் குறும்படங்கள் பலவற்றையும் நான் போட்டுக் காட்டியிருக்கிறேன். எனக்கான நல்லதொரு சுதந்திரத்தை எங்களது தலைமை ஆசிரியரும், எனது சக ஆசிரியர்களும் தந்திருக்கிறார்கள். இதையெல்லாம் பயன்படுத்தி மாணவர்களை நிறைய வாசிக்கவும் பழக்கி வருகிறேன். எனக்கு வாசிக்கக் கிடைக்கும் நூல்களையெல்லாம் என் சக ஆசிரியத் தோழர்களுக்கும் வாசிக்கத் தருகிறேன். ஒவ்வொரு நாளும் நாம் பள்ளிக்கு வரும்போதும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தோடு மாணவர்களைச் சந்திக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லுவேன். எங்கள் பள்ளிக்கு நீங்கள் வந்தால் எங்கள் ஆசிரியர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஏதாவதொரு புத்தகம் இருப்பதைக் காணலாம். நான் புத்தகங்களைத் தந்து அவர்களை வாசிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்திக் கொண்டு, வாசித்தவர்களைக் கேள்வி கேட்டுக் கொண்டும் இருப்பதையும் நீங்கள் பார்க்க முடியும். இத்தனைக்கும் என்னுடைய அன்றாட ஆசிரியப் பணி எனும் கடமையில் நான் எந்தக் குறைவும் வைக்காமலேயே இவற்றைச் செய்கிறேன்.

செம்மலர் : வழமையான கல்விச் சூழல் என்பது உங்களது பார்வையில் எப்படித் தோன்றுகிறது? இன்றைய கல்வி முறை உங்களுக்கு மனநிறைவைத் தருகிறதா?

விஜயகுமார் : இன்றைக்கு கல்விச் சூழல் மிகவும் நெருக்கடியான ஒன்றாகத்தான் இருக்கிறது. நாம் மாணவர்களை வேறு ஏதோ ஒரு உலகத்துக்கு அழைத்துச் செல்லவே இன்றைய கல்வி பயன்படுகிறது. நம் மண்ணுக்கேற்ற கல்வி இது கிடையாது. இன்னமும் நாம் மெக்காலே வகுத்த கல்வி முறையைத்தான் படித்துக் கொண்டிருக்கிறோம். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை நோக்கி மட்டுமே நமது கல்வி போய்க் கொண்டிருக்கிறது. பத்தாவது வகுப்பில் ஒரு மாணவன் கண்டிப்பாகத் தன்னைத் தரமிக்கவனாக நிரூபித்தே தீர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது, கண்டிப்பாக சாத்தியமற்ற சூழல்தான் நிலவுகிறது. இதுவெறும் மனனக்கல்வியாக மட்டுமே இருப்பதால் வாழ்க்கை குறித்த எந்த அறிதலுமே இல்லாத மாணவர்கள்தான் உருவாகிறார்கள். இந்தச் சூழல் நிச்சயமாக மாற்ற வேண்டிய ஒன்று. நூறு சதவீத தேர்ச்சி முக்கியம் என்று நினைக்கிறோமே அன்றி நூறு சதவீத கல்வி முக்கியம் என்று எப்போது நினைத்தோம்? வாழ்க்கை சார்ந்த, மண் சார்ந்த, மண்ணின் கலை சார்ந்த கல்வி என்பது சிறிதும் கிடையாது. ஒருமுறை நான் எங்கள் பள்ளியில் அமெரிக்க எதிர்ப்பு நாடகம் ஒன்றை நடத்தினேன். அப்போது, பலரும் அதனைக் கட்சி சார்ந்த, அரசியல் சார்ந்த நடவடிக்கை என்று பார்த்தனர். அரசுப் பள்ளியில் இது கூடாது என்றனர். இது நமது பொருளாதார நெருக்கடி தொடர்பானது, நமது வாழ்க்கைக்கு இதனை அறிந்து கொள்வது அவசியம், வெறும் அரசியல் கட்சிப் பிரச்சாரமாக இதனைப் பார்க்கக் கூடாது என்று நான் விளக்கம் தரவேண்டியதாயிற்று. அதனைத் தொடர்ந்து, அது தொடர்பான புத்தகங்களையும், நான் படிக்கக் கொடுத்தேன். எல்லோருக்குமே இப்படிச் சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. நான் எல்லோருடனும் நன்றாகப் பழகி, அவர்களை என் நண்பர்களாக்கிக் கொண்டுதான் எனது நடவடிக்கைகளை முன்வைக்கிறேன். எனவே, இவர் செய்தால் சரியாக இருக்கும் என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட அது உதவுகிறது.

செம்மலர் : நாம் உண்டு, நம்வேலை உண்டு, நம் குடும்பம் - பிள்ளை குட்டி உண்டு என்று கருதக் கூடிய சராசரி மனித சமூகத்தில் உங்களுக்கு இயற்கை ஏற்படுத்தி விட்ட மிகப் பெரிய தடையையும் தாண்டி ஒரு முன்மாதிரி ஆசிரியராக, மனிதராக உங்கள் வாழ்க்கையைப் பயணிக்கிறீர்கள். இது உண்மையில் போற்றுதலுக்குரியது. நீங்கள் அடிப்படையில் நல்ல வாசிப்பாளரும் கூட. புத்தகங்களின் மீது உங்களுக்கு எப்படிக் காதல் உண்டானது?

விஜயகுமார் : சின்ன வயதிலேயே அப்பா பல நூல்களையும் எங்களுக்கு வாசித்துக் காட்டுவார். துவக்கத்தில் அது பெரிய சுமையாகவே தோன்றியது. காரணம் அது விளையாட்டை விரும்பும் பருவம். பாவலர் வரதராஜன் பாடல்களையெல்லாம் அப்பா பாடியே காட்டுவார். நேதாஜி குறித்து, பகத்சிங் குறித்து என்று பல நூல்களை அப்பா மூலமாக அறிய முடிந்தது. ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது கல்லூரி மாணவர்கள் வந்து எங்களுக்காக வாசித்துக் காட்டுவார்கள். அந்தச் சமயத்தில் வைரமுத்து உள்ளிட்ட பல கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் நாங்கள் வாசிக்கத் தொடங்கினோம். எங்கள் பள்ளியின் ஒலி நூலகம் என் புத்தக ஆவலை மேலும் தூண்டியது.

பிறகு, கல்லூரிக்கு வந்தபோது, நண்பர்களைப் போலவே நானும் கவிதைகள் எழுதினேன். கவிதை எழுதுவது என்பது கல்லூரி மாணவர்களுக்கே உரிய தனித்த குணங்களில் ஒன்று. பின்னாளில் நான் 'கலயம்' என்ற பெயரில் சிற்றிதழ் ஒன்றை நடத்தினேன். பெரும்பாலான சிற்றிதழ்கள் போலவே அது மூன்று இதழ்களுக்கு மேல் வெளிவராமல் நின்று போனது. 'புது எழில்' என்ற வாசகர் வட்டம் அமைத்து விவாத அரங்கம், கவியரங்கம் எல்லாம் நடத்தியிருக்கிறேன். எங்களூரில் தமுஎச கிளை துவங்கிய போது அதனை மாணவர் கிளையாகச் செயல்பட வைத்து, கலை இரவு நடத்திய அனுபவம் சுவையானது. எங்கள் கல்லூரி முன்னாள் மாணவர் ரவீந்திரன் என்பவரோடு ஒரு பட்டிமன்றத்தில் பங்கேற்க நேர்ந்தது. அவர் நிறைய நூல்களை வாசிப்பவர். அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டார். நான், படித்து முடித்து விட்டு ஏதாவது பொதுத் தொலைபேசி நிலையம் வைத்துப் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னேன். அவர் உடனே என்னைக் கடுமையாகத் திட்டி விட்டார். மற்றவர்கள் போல நீ அல்ல. நீ உனக்கென்று ஒரு தனித்த அடையாளத்தைப் பெற வேண்டும். நீ மாற்றுத் தளத்தில் உன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். பின்னர், முதன் முதலாக அவர் எனக்கு இன்குலாப் கவிதைகளைக் கொடுத்து என்னை வாசிக்கச் சொன்னார். தொடர்ந்து என்னை அவர் சந்திப்பதும், பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதும் நிறைய நூல்களை அறிமுகம் செய்வதும் என்று தொடர்ந்தார். அதன்பிறகு ஒரு பெரிய நண்பர் பட்டாளமே எனக்கு ஏற்பட்டது. சபரி, நாகேந்திரன், அழகர்சாமி, ராகவன், விஜயகுமார், செந்தில் அரசு என்று ஒரு பெரிய நண்பர்கள் படையே கிடைத்தது. நிறைய நூல்கள் எனக்கு அறிமுகமாயின. இவர்கள் எனக்கு பல்வேறு நூல்களை வாசித்துக் காட்டி உதவினார்கள். பல்வேறு விஷயங்கள் குறித்து நான் எதிர்வினை, விவாதம் செய்யத் தொடங்கினேன். இதனால், அவர்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்துவதும், வாசித்துக் காட்டுவதும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நட்பின் விளைவாக நாங்கள் ஒன்றுசேர்ந்து நாடகங்கள் உருவாக்குவது, கவிதைப் பட்டறைகள் நடத்துவது, வீதியில் கவியரங்கம் என்று இயங்கினோம். சின்ன வயதிலேயே அப்பா எங்களுக்கு அறிமுகப் படுத்திய தமுஎச அமைப்பின் கிளையை எங்கள் ஊரில் தொடங்கினோம். 1999ல் கலை இரவு நடத்தினோம். பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு, அதில்கிடைத்த பரிசுத் தொகையில் புத்தகங்களை வாங்கத் தொடங்கினோம். வீட்டில் செலவுக்குக்கிடைக்கும் காசிலெல்லாம் புத்தகங்கள் வாங்குவோம். கூட்டாக வாங்கி, பொதுவாகப் பராமரித்தோம். எனது வாசிப்புப் பழக்கத்திற்கு எனக்கு அமைந்த நண்பர்கள்தான் மிகவும் முக்கிய காரணம். என் நண்பர்களுள் பலரும் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். மற்றவர்களிலிருந்து நாங்கள் வேறுபட்டு தனித்துவத்தோடு இயங்குவதற்கு நூல்கள் மிக முக்கிய காரணமாக எங்கள் வாழ்க்கையில் பங்காற்றியிருக்கின்றன. எங்களின் சிந்தனை ஒரு மாற்றுப் பாதையில், தளத்தில் பயணிப்பதனால் எங்களின் மீது எல்லோருக்கும் அன்பும், ஈர்ப்பும் உண்டாகியிருக்கின்றன. அதனாலேயே எங்கள் மாணவர்களுக்கு பல்வேறு புதிய செய்திகளையும் நாங்கள் கொண்டு சேர்க்க முடிகிறது. மாணவனை வெறும் மாணவனாக மட்டுமல்லாமல் ஒருசிந்தனையாளனாக அவனை உருவாக்க முடிகிறது. இன்றைக்கும் நான் என் நண்பர்களுடன் கல்வி குறித்தும், சமூகம் குறித்தும், இலக்கியம் குறித்தும், அரசியல் குறித்தும் விவாதங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். இன்றைய கல்வி முறையில் நமது மாணவர்களுக்கு எப்படியெல்லாம் உதவுவது, அவர்களிடையே மாற்று சிந்தனைகளை எந்த வழிகளில் ஏற்படுத்துவது என்றெல்லாம் விவாதித்துக் கொண்டேயிருக்கிறோம். அரசுப் பள்ளியில் நாம் என்ன நல்ல மாற்றங்களைச் செய்தாலும் அரசுக்கு எதிராகச் செய்வதாக ஒரு கருத்தை முன்வைத்து விடுகிறார்கள். எனவே, நாங்கள் எந்தவித எதிர் செயல்பாடுகளையும் செய்யவில்லை. நாங்கள் செய்வது சரியான செயல்களைத்தான் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ளச் செய்வதும் எங்களுக்கு அவசியமாகிறது.

மாணவர்கள் மத்தியில் கூடுதலாக இயங்கி வந்தாலும், நாங்கள் தலித்தியம், பெண்ணியம் குறித்த விவாதங்களை நண்பர்களோடு நடத்துவதுண்டு. புத்தக வாசிப்பின் எல்லையற்ற பயணத்தில் எங்களுக்கு மார்க்சியம்தான் அடித்தளமாக இருக்கிறது. எனவே, எதை வாசித்தாலும் மார்க்சியக் கண்ணோட்டத்துடனேயே அவற்றைப் புரிந்து கொள்வது என்றுதான் நாங்கள் செல்கிறோம். மார்க்சியத்தின் மீதான அழுத்தமான நம்பிக்கையும், தாக்கமும், பிரியமும் எங்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. எனவே, மார்க்சிய அடிப்படையிலான அரசியல் நூல்களையும் நாங்கள் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நமது பார்வை, இந்த அடிப்படையில்தான் நாம் இயங்க வேண்டும் என்ற தெளிவை அவை எங்களுக்குத் தருகின்றன.

இப்போது நவீன இலக்கியங்களையும் தேடி வாசித்துக் கொண்டிருக்கிறோம். முற்போக்கு இலக்கியங்களை விடாமல் வாசிக்கிறோம். நண்பர்களுக்குள் வாசிப்பில் ஒரு ஒருமை - ஒற்றுமை இருந்தாலும் புரிதலில் எங்களுக்குள் எந்தவிதக் கட்டாயத் திணிப்பும் கிடையாது. எனவே, எங்களுக்குள் ஆரோக்கியமான விவாதம் எப்போதும் நடக்கும். எனது மாணவனாக இருந்த பழனிக்குமார் என்பவர் இன்றைக்கு வாசிப்புத் தளத்தில் மிகவும் தீவிரமாக இயங்கி வருபவர். துவக்கத்தில் அவனுக்கு நான்தான் நூல்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். இன்று என்னோடு பல தளங்களில் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறான். இது எனக்குப் பெருமையான ஒன்று.

புத்தகங்கள்தவிர, நான் பெரும்பாலும் எல்லா இதழ்களையும் வாங்கிப் படித்து விடுவேன். கடந்த பத்து ஆண்டுகளாக நான் புத்தக வாசிப்பில் இருப்பதால் எழுத்தாளர்களின் எழுத்துக்களின் மீது எனக்கொரு பார்வை ஏற்பட்டுவிட்டது. எல்லாவற்றையும் வாசிப்பேன் என்றாலும் எனக்கான நூல்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்கிறேன். அவற்றில் தேர்ந்தெடுத்த நூல்களைச் சேகரிக்கிறேன். இலக்கியத் தளம், அரசியல் களம், கல்விப் புலம் என்று எல்லாவற்றிலும் எனது சிந்தனைச் செயல்பாடுகள் இருந்தாலும், என் மனதை நான் கரைத்துக் கொள்வது கவிதைகளில்தான். இசை உள்ளிட்ட எல்லாவற்றிலும் ஈடுபாடு உண்டென்றாலும் என்னுடைய ஆத்மார்த்தமான ஆர்வம் கவிதைகளின் பால்தான் எப்போதும் இருக்கிறது. இன்னார் கவிதைதான் இஷ்டம் என்றில்லாமல் எல்லார் கவிதைகளையும், எல்லாக் கவிதைகளையும் தேடி வாசிப்பேன். ஒவ்வொருவரிடம் ஒரு பாணி இருக்கிறது. அதிலிருந்து நான் என்னை எப்படி வித்தியாசப்படுத்திக் கொள்வது என்றும் யோசிப்பேன். என்னைப் பொறுத்தளவில் புரியாமல் எழுதுவது என்பது ஆரோக்கியமான போக்கு இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், அதே நேரத்தில் கவிதை என்பதற்கு ஒரு குறைந்தபட்ச வரையறை உண்டு. அதற்கென்று ஒரு பார்வை உண்டு. அந்தத் தளத்திற்கு வாசகர்களும் தங்களைக் குறைந்தபட்சமாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் சொல்வேன். அதுதான் என்னுடைய விருப்பம் கூட.

சந்திப்பு : சோழ. நாகராஜன்

படங்கள் : சூர்யா'ஸ்