Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
சிறுகதை
கித்தாப்பு

- கா.சி.தமிழ்க்குமரன்

திரை இன்னும் விலக்கப்படவில்லை. உள்ளே அம்மன் அலங்கரிப்பில் பூசாரி மும்முரமாய் இருந்தார். அவருடைய பத்து வயது பையன் உதவியாய் திரைக்கு உள்ளேயும் வெளியேயுமாய் இருந்தான். அவனுக்கு மட்டுமே அனுமதி. அவன் வெளியே வரும் போதெல்லாம் 'டேய்' என்ற சத்தம் வரும். குடு குடுவென்று உள்ளே ஓடுவான். வெள்ளியினால் செய்யப்பட்ட கண்களும் இமைகளும் பொருத்துவதில் மும்முராய் இருந்தார் பூசாரி. கடைசிக் கட்ட அலங்காரம். கடந்த ஒரு மணி நேரமாகவே கோவிலின் வெளியே மக்கள் கூட்டம். வருடம் ஒருமுறை திருவிழா. வெளியூரில் இருந்து வந்திருந்த சொந்த பந்தங்கள் எல்லாம் கோவிலைச் சுற்றி. ஊர் முக்கியஸ்தர்கள் வெளியே ஒரு கண்ணும் உள்ளே ஒரு கண்ணுமாய் நின்றிருந்தார்கள். நேரம் ஆக ஆக ஒருவித படபடப்பு. வழக்கமாய் ஏழு மணிக்கெல்லாம் வந்துவிடுவார். இன்னும் வரவில்லை என்றவுடன் மனதினுள் ஆயிரம் கேள்விகள். மனதினுள் பலவிதமான கற்பனைகள் எழ ஒருவித குழப்பநிலையில் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தனர். வெளியே பெண்கள் கூட்டம் வரிசையாய் பொங்கல் வைத்து இறக்கிய பானைகளுக்கு முன். அம்மனுக்கு பூசை முடிந்ததும் வீடுகளுக்கு செல்ல தயாராய். சிறுவர்கள் அவ்வப்பொழுது அம்மாவிடம் ஓடி வருவதும் இப்போதைக்கு பொங்கல் கிடைக்காது என்றானதும் பக்கத்தில் ஓடி விளையாடுவதுமாய் இருந்தனர். புதுச்சட்டைகள் அழுக்காகிக் கொண்டு இருந்தது.

மக்கள் கூட்டத்தில் பரபரப்பு. ராசா வந்துட்டாக. ராசா வந்துட்டாக கூட்டம் மரியாதையுடன் ஒதுங்கி வழிவிட்டது. நீண்ட நெடிய தோற்றம். கம்பீரமான நடை.. முட்டங்கால் வரை ஜிப்பா அதன்மேல் மஞ்சள் கரைபோட்ட அங்கவஸ்திரம். ஜிப்பாவிற்கும் கீழே தொங்கியது. படிய வாரிய தலை. கன்னங்கள் ஒட்டிப் போயிருந்தாலும் கனத்த மீசை. அதை முறுக்கி திரட்டி மேலே குத்திட்டு நின்றது. கால்களில் பழைய காலத்து செருப்பு முன்பக்கம் வளைவாய். பார்த்தவுடன் கையெடுத்து வணங்கச் சொல்லும் தோற்றம். கூடியிருந்த ஆண்களும், பெண்களும் மிக மரியாதையாய் கையெடுத்து வணங்க. அம்மனுக்கு மிக அருகில் வந்து நின்றார். ஊர் முக்கியஸ்தர்களுக்கெல்லாம் ராசா வந்ததைப் பார்த்தவுடன் மனதினுள் மகிழ்ச்சி. உடன் பூசாரிக்கு மகன் வழியே செய்தி செல்ல திரை விலகியது. முதல் மரியாதையை மிக பக்தியுடன் ஏற்றுக் கொண்டார். பூசாரி அம்மனுக்குச் சாத்திருந்த ஒரு மாலையுடன் பிரசாதத் தட்டை பணிந்து கொடுத்தார். சூடத்தட்டில் புத்தம் புதிய நூறு ரூபாய்த் தாள்.

கோவிலுக்கு வெளியே ஒரு சேரில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி ஊர்ப் பெரியவர்களும், பெண்களும் தரையில் இருந்தனர்.

"ராசா கொஞ்சம் தாமுசமாயிட்டீங்க. நாங்களெல்லாம் பதறிப் போயிட்டோமுங்க."

"ராசா வீட்டுல எல்லாம் சொகமா இருக்காகளா?"

"ராசா குடும்பத்தைப் பார்த்து ரொம்ப வருசமாயிடுச்சு"

"ராசா கார் கம்பெனியெல்லாம் நல்லா இருக்குதாய்யா?"

ஆளுhளுக்கு விசாரிப்புகள்.

"ம்... எல்லாம் நல்லா இருக்காக. எது ராவுக்கு முடிஞ்சா எல்லாரையும் கூட்டீட்டு வாரேன்.

"ராசா குடுத்த எடத்துலதான் ஊர்ல பள்ளிக் கூடம் புதுசா கட்டப் போறோம்யா.

"அப்படியா. ரொம்ப சந்தோசம் நல்ல விசயந்தான்."

செல்லமுத்து தயக்கமாய் எழுந்து "ராசா குடுத்த எடத்துல தீப்பெட்டி ஆபிஸ் ஆரம்பிச்சிருக்கேன்யா, நல்லா போகுதுய்யா"

"வானம் பாத்த பூமியில் நீயாச்சும் மக்களுக்கு வேல குடுக்கிறியே நல்லாயிரு."

செல்லமுத்துவுக்கு ஆசி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.

விளையாடிக் களைத்த சிறுவர்கள் அம்மா மடியில் தலைவைத்து மண்ணிலேயே தூங்க ஆரம்பித்தனர். இந்த பேச்சுக்கள் அவர்களுக்கு சுவாரஸ்யப்படவில்லை.

ஊர் முக்கியஸ்தர்கள் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக் கொண்டனர். ஏனையோர் பெருத்த அமைதி காத்தனர்.

"என்ன முத்துச்சாமி ஒங்களுக்குள்ளயே பேசிக்கிறீங்க..."

"ராசா அதுவந்து,...."

"சும்மா சொல்லுங்கப்பா என்ன தயக்கம்"

"ராசா... அதாவது.. ஜமீன் சொத்துக்களை எல்லாம் கொறச்ச விலையிலேயே ஊர்க்காரங்களுக்குக் கொடுத்துட்டீங்க. உங்க புண்ணியத்துல நாங்களெல்லாம் நல்ல இருக்கோம். ஜமீன் பங்களா இருந்த இடம் ஊருக்குள் இருக்குது. அந்த எடத்துல ஊருக்குப் பொதுவா கல்யாண மண்டபம் கட்டாலமுன்னும் எங்களுக்குள்ள ஒரு ஆசை. நீங்க உத்தரவு கொடுத்தா ஒங்க பேர்லயே கட்டி திறந்தடலாம். இந்தஊர் முழுவதுமே உங்களது இப்ப கடைசியா அந்த இடம் மட்டும்தான் இருக்குது. அதான் எப்படி கேக்குறதுன்னு எங்களுக்குள்ள தயக்கம்...."

அரண்மனை போன்ற அந்தப் பெரியவீட்டை அடித்து அதில் இருந்த தேக்கு உத்திரங்களை எல்லாம் விற்றபின்அந்த இடம் மட்டுமே கட்டாந்தரையாய் இருப்பது கண்ணுக்குள் நிழலாடியது.

நல்லவேளை, இவர்களாகவே கேட்டு விட்டார்கள். நாமளாச் சொல்லியிருந்தா ராசாவுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா என்று நம்மளை இளக்காரமாய் நினைத்திருப்பார்கள்.

"இதுக்கு ஏம்பா இப்பிடித் தயங்குறீங்க. ஊருக்குத்தான கேக்குறீக? எடுத்துக்குங்க, என்ன...தானமாக்குடுத்தா விருத்திக்கு வராதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா இது ஜமீன் சொத்துல்லயா? அதனால ஏதாவது ஒரு வெலப்n பாட்டு நடத்துங்க."

என்ன சொல்வாரோ ஏது சொல்வாரோ என்று தயங்கித் தயங்கிக் கேட்டவர்கள் முகத்தில் ஆனந்தப் பெருக்கு.

"பெரிய மனுசன் பெரியமனுசன் தான். கொஞ்சம் கூட ரோசனை செய்யாம உடனே தாரேன்னுட்டார் பாரேன்.

"அந்தக் காலத்துல ஊர்ல உள்ள முச்சூடம் அவருக்கும் அவர் பரம்பரைக்கும் சேர்ந்ததுதானே!"

"சும்மாவா ஜமீன் குடும்பம்னா. ஒரு காலத்துல எட்டையபுரம் ராசா குடும்பத்துல சம்பந்தம் வச்சிருந்தாங்களாமுல்ல."

"இப்பநாப்புல என்ன... பெரிய கார்க் கம்பெனி அது இதுன்னு ஏகப்பட்ட சொத்தாம்ல"

"துட்டு சேர்ற இடத்துல சேந்துக் கிட்டுதான் இருக்கும்"

"சும்மாவா சேருது. அவரு கொணத்துக்குல்ல சேருது."

"என்ன ஒன்னு காடுகரை எல்லாம் கொடுத்து நம்மளை வெவசாயம் பாக்க வச்சு இங்கேயே இருக்க வச்சுட்டாரு. நம்ம பயலுக நாலு பேருக்கு அவரு கம்பெனில வேல போட்டுக் குடுத்துருக்கலாம்."

"டேய் அதுக்கெல்லாம் ரொம்ப படிக்கணுன்டி. நீயெல்லாம் ஒண்ணுந்தெரியாத கூமுட்டாப்பய.வேணுமுன்னா வாச்மேன் வேலைக்குப் போகலாம்."

"டேய் கஞ்சியோ, கூழோ, கட்டியா திங்குறதை கரைச்சு குடிச்சுட்டுப் போறேன். நாயி மாதிரி வாசல்லயே நின்னுக்கிட்டு அது ஒரு பொழப்பாடா"

"பின்னே, தெரியுதுல்ல... பொத்திக்கிட்டு இருக்கணும்."

கூட்டம் பலவாறாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர் ராசாவின் பெருமைகளை.

"ராசா மகன் செக்கச் சிவீர்னு சின்ன வயசுல பர்த்தது. இப்ப எங்களுக்கு அடையாளமே தெரியாது பெரிய ஆளாய் இருப்பாக. நல்லா இருக்காகளாய்யா."

"ம்.... இருக்கான்.....". சுரத்தில்லாமல்.

வருடம் ஒருமுறை வந்து சிலமணி நேரமே இருக்கும்போது ஊர்க்காரர்கள் எல்லாம் சுற்றி இருந்து பார்ப்பதும் பேசுவதும் பெருமையாய்ப் பூரித்துப்போய் இருந்தார்கள்.

"பூசையெல்லாம் நல்லபடியாய் முடிஞ்சுடுச்சு. நீங்களெல்லாம் வீடுகளுக்குக் கௌம்புங்க. நானும் ஊருக்குப் புறப்படுறேன்."

"ராசா வந்தகாலோட கௌம்புறீங்களே. ஒரு வருசமாச்சும் இருந்து போக மாட்டேங்குறீங்க."

"என்னமோய்யா. வருசம் ஒருக்கவாவது வந்துபோக அந்த ஆத்தா குடுப்பினை இருக்குதே! அதுவே பெரிய விசயமில்லையா. நான் இருக்குற வரைக்கும் வந்து போக ஆத்தா மனசு வைக்கணும்.

"எனக்குப் பிறகு யார் வரப்போறா? " குரல் லேசாய்க் கம்மியது.

"ராசா அப்பிடி எல்லாம் சொல்லக்கூடாது. நம்ம குடும்பத்துக்குத்தான் முதல் மரியாதை. பெரிய மனசு பண்ணி வருசம் ஒருக்கவாவது வந்துபோனாத்தான் எங்களுக்கெல்லாம் பெருமை"

"சரி. .... அப்ப கௌம்புறேன்."

"ராசா....." -தீப்பெட்டி கம்பெனிக்காரர் தயக்கமாய்.

"என்னப்பா சொல்லு"

"ராசா புண்ணியத்துல ஒரு கார் வாங்கியிருக்கேன். அனுமதி கொடுத்தா கார்லயே கொண்டு விட்டுட்டு வந்துடுவேன்."

"இல்லப்பா அவ்வளவு தூரம் கார்ல பிரயாணப்பட உடம்பு ஒத்துக்காது. நான் ரயில்ல போறதுக்கு டிக்கெட் வாங்கிட்டேன். பரவாயில்ல நீ இரு. எல்லாரும் இருங்க. பாப்போம்."

ஒவ்வொருவரும் கையெடுத்து வணங்க பிரியா விடையுடன் கண்கலங்க கிளம்பினார் ராசா.

வானளாவ நின்ற அந்தப் பெரிய கம்பெனியின் வாசலில் நின்றிருந்த குருசாமி ஆள் மாற்றுவதற்கு எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

தூரத்தில் தேசிங்கு ஓட்டமும் நடையுமாய்.

"என்னப்பா இவ்வளவு நேரம்?"

"கோவிச்சுக்காதே குருசாமி கொஞ்சம் அசந்துட்டேன்..."

"சரி சரி நான் கௌம்புறேன்."

டூட்டி மாறியது. சிறிது நேரத்தில் கார் ஹாரன் ஒலிக்க, நெடிய தோற்றத்துடன் காக்கி சட்டை பேன்ட் அணிந்த கன்னம் குழி விழுந்து தடித்த மீசையுடன் அந்த இரும்பு கேட்டை வேகமாய்த் திறந்துவிட்டு விறைப்பாய் ஒரு சல்யூட் அடித்தார் ராசா தேசிங்கு. கை மட்டும் லேசாய் நடுங்கியது யாருக்கும் தெரியாது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com