Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
ஏற்புரை
மக்களின் கண்ணீரும் போராட்ட உணர்வுமே எனது இலக்கியம்
மேலாண்மை பொன்னுச்சாமி

உலகின் மூத்த மொழிகளில் முக்கிய மொழியும், இன்றைக்கும் படைப்பு மொழியாகவும் - பேச்சுமொழியாகவும் உயிர்ப்புடன் இயங்கி வளர்கிற மொழியுமான செம்மொழியாம் நம் தமிழ்மொழியின் அடையாளமாகத் திகழ்கிற திருவள்ளுவர் -

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்"

என்று தீர்க்கமான தெளிவுடன் முன்வைக்கிறார். நவீனத் தமிழின் முகவரியும், முதல்வருமான மகாகவிபாரதியார்-

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்

உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்று உழவை முதன்மைப்படுத்தி கட்டளை இடுகிறார்.

அரசியலுலகின் பேரதிசயமாக எழுந்த அண்ணல் மகாத்மா காந்தியடிகள் "இந்தியாவின் ஆன்மா, கிராமங்களில் வாழ்கிறது" என்று கண்டுணர்ந்து உலகுக்கு உணர்த்தினார்.

"இந்தியா ஒரு விவசாயப் பொருளாதார நாடு" என்று பொருளியல் அறிஞர்களும் மெய்ப்பித்திருக்கின்றனர்.

அமரர் காந்தியடிகள் உயிப்புற்று எழுந்து வந்து, இப்போது தேசம் சுற்றிப் பார்த்தால்.... என்ன சொல்வார்?

கசந்த மனசோடும்,துயரார்ந்த உணர்ச்சிகளோடும் கேள்வியை எழுப்புவார், "இந்தியாவில் இன்றைக்கு கிராமங்கள் வாழ்கின்றனவா?" என்று.

விவசாயப் பொருளாதார நாட்டில் விவசாயம் பெரு நாசத்திற்குள்ளாகியிருக்கின்றது என்பது வேதனை நிறைந்த முரண்.

ஒரு பனியன் பனிரெண்டு ரூபாய் விற்ற போது, பருத்தி ஒரு குவிண்டால் ஆயிரத்து எண்ணூறு ரூபாய். இப்போது பனியனின் விலை முப்பத்தாறு ரூபாய். பருத்தியின் விலையோ அதே உறைந்த நிலையில்தான்.

விவசாயி உற்பத்தி செய்கிற பொருட்களுக்கு விலையில்லை. விற்க சந்தை வசதியில்லை. விவசாயி வாங்குகிற பொருட்கள் யாவும் நிமிடந்தோறும் விலை உயர்கிறது.

உலகுக்கெல்லாம் உணவும், மாவும், எண்ணெய்யும் தருகிற உழவன், உண்ண உணவில்லாமல் பசித்துக் கிடக்கிறான் என்பது நெஞ்சு வலிக்கிற நிஜமாகும்.

நிலம் உள்ள உழவர்களுக்கு வாழ்வு சிதைகிறது. உணர்ச்சி நிறைந்த பாரம்பர்யமிக்க நிலத்துடனான உறவு, அறுபட்டு வருகிறது. விளை நிலங்கள், விலைநிலங்களாகிற பயங்கரம். உலகமயமும், நகர்மயமும் விவசாயத்தை விழுங்கி வருகிறது.

நிலம் உள்ள 'மகா உழவர்'கள் கதியே இதுவென்றால், நிலம் இல்லாத, நிலம் நம்பி வாழ்கிற கூலித் தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட உழைப்பாளிகள், அவர்கள் வீட்டுப் பெண்கள் எப்படி வாழ்வது? எதை நம்பி வாழ்வது? வாழ்வாதாரச் சிதைவுகளும், நகர் நோக்கி பிழைப்பு தேடி புலம் பெயர்வோர் எண்ணிக்கை உயர்வும், பண்பாட்டுச் சேதாரங்களை நிகழ்த்துகின்றன. மனித உறவுகள் சிக்கலாகின்றன. மனித மதிப்பீடுகள் சரிகின்றன.

ஆடு குட்டி மேய்ப்போர், கால்நடை வளர்ப்போர் நிலம் சார்ந்த வாழ்வைக் கொண்டவர்கள். அவர்களின் வாழ்வும், மனமும், பண்பாட்டு மதிப்பீடுகளும் சரிகின்றன.

ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தின் ஒரு பகுதிதான், விருதுநகர் மாவட்டத்து கந்தக பூமியும், மானாவாரிப் பிழைப்பும்.

காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற இயற்கையின் நர்த்தனங்கள் வேறு, மானாவாரி பூமியை ரணப்படுத்துகிறது.

இப்படிப்பட்ட வாழ்விடத்திலிருந்து தான் எனது இலக்கியப் படைப்பு எனும் அருஞ்சுனை ஊற்றெடுக்கிறது. எனது மக்களின் விசும்பலும், கண்ணீர் கரிப்புகளும், கவலைப் பெருமூச்சுகளும், பண்பாட்டுப் பாரம்பர்ய மதிப்பீடுகளை பாதுகாக்கிற போராட்ட உணர்வுகளும் எனது சிறுகதைகளின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஆளும் வர்க்கத்தாலும், அதிகாரத்துவ சக்திகளாலும், ஒட்டுமொத்த சமுதாய அமைப்பாலும் கைவிடப்பட்ட - அவமதிக்கப்பட்ட - அலட்சியப்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட - சுரண்டப்பட்ட இந்தப் பாவப்பட்ட கிராமத்து வியர்வை மனிதர்களின் உள் - வெளி உலகத்தை பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களும் மறந்துவிட்டனர். நகர் சார்ந்த மனித உறவுகளின் உள்முகச் சலனங்களை இலக்கியமாக்குகிற அறிவு ஜீவிகளின் பாராமுகத்துக்கும், பாரபட்சத்திற்கும் உள்ளான இந்த மண் சார்ந்த பாரம்பர்ய விவசாய மனிதர்களின் அகமன உணர்வுகளை யதார்த்தவாத மொழி நடையில் வெளிப்பாடு செய்கின்றன எனது சிறுகதைகள்.

கிராமத்தில் பிறந்து, அங்கேயே வளர்ந்து, கிராமமே வாழிடமாகக் கொண்டிருக்கிற நான், விவசாய அடித்தட்டு மக்களது துயரங்களின் பார்வையாளனல்ல; பங்கெடுப்பாளன். மண்வெட்டி எடுத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்கிற சிறு நில விவசாயிகளில் ஒருவனாகவும், தராசு பிடித்து வியாபாரம் செய்கிற சிறிய மளிகைக் கடைக்காரனாகவும் இருப்பவன், அதனால்தான்.

மானாவாரிப் பகுதிகளில் பருத்தி, மிளகாய் விவசாயம் நடந்த மண்ணில், மக்காச் சோளப் பயிர்கள் மட்டுமே வளர்வதும், வாழ்விடமிழந்து புலம் பெயர்ந்து வருகிற மயில்களும், பச்சைக்கிளிகளும், விவசாயிகளின் பகைவர்களாக மாறுகிற சமகால உழவு உற்பத்தி மாற்றங்களும் கூட எனது கதைகளின்பாடுபொருளாகின்றன.

நிகழ்காலத்து கிராமத்து வாழ்க்கையின் உள்ளோடும் ரத்த ஓட்டம், அதன் வெதுவெதுப்புமிக்க உயிர்ப்புடன் என் கதைகளில் பெருக்கெடுக்கின்றது.

கிராமங்கள் அருமைகளும், அவலங்களும், பெருமைகளும் சிறுமைகளும் நிறைந்தவை. சாதிய ஏற்றத்தாழ்வுகளும், சாதி ஒடுக்குமுறைகளும் மலிந்த எனது மண்ணின் கரிய முகமும் எனது கதைகளில் பதிவாகியிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மக்களின் குடும்பப் பெண்களின் வாழ்வையும், மானத்தையும் காப்பதற்காக நடத்துகிற போராட்டங்களும் எனது கதைகளில் துடிக்கும்.

எனது சிறுகதைகளின் மொழி, எனதுமக்களின் மொழிதான். மண்ணிலிருந்து அருஞ்சுனையென பீறிடுகிற வாழ்க்கையை அதன் மொழியிலேயே - யதார்த்தவாத எளிய மொழியிலேயே - பதிவு செய்திருக்கிறேன்.

சோவியத் யூனியனின் சோசலிசப் பின்னடைவும், தகர்வுகளும் தமிழிலக்கியத்திலும் பிரதிபலித்தது. யதார்த்தவாதம் காலாவதியாகி விட்டது என்ற கூக்குரல் எழுந்தது. மார்க்சீயம் சார்ந்த சமுதாயப் பார்வையும், ஒடுக்கப்பட்ட எளிய கிராமத்து மக்களின் போராட்டங்கள் பற்றிய பரிவுச் சிந்தனையும் எள்ளி நகையாடப்பட்டன; பரிகசிக்கப்பட்டன. அதி நவீன இஸங்கள் குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் பெருங்கூச்சல்களாக எழுந்தன.

சோசலிசப் பின்னடைவு என்ற பேரதிர்வும், பின்நவீனத்துவ அதிகாரக் கூச்சலும் யதார்த்த வாத மொழியில் எழுதிக் கொண்டிருந்த படைப்பாளிகளை சூறாவளிப் பெரும்புழுதிக் காற்றில் மூழ்கடித்து, சுழற்றியடித்தது. பெரும்பாலான படைப்பாளிகள் எழுதுவதை நிறுத்தினர். சிலர் குழம்பித் தவித்து, மாந்த்ரீக யதார்த்தவாத அடிப்படையில் எழுதிப் பார்த்தனர்.

பெருங்குழப்பமும், திகைப்பும் பின்னடைவும் நிறைந்த இருண்ட இந்தச் சூழலில்... குழப்பத்துக்கோ திகைப்புக்கோ இடம் தராமல், நான் தொடர்ந்து யதார்த்தவாத அடிப்படையிலேயே எளிய மக்களைப் பற்றிய சிறுகதைகளை அறுபடாத தொடர்ச்சியாக எழுதிக் கொண்டேயிருந்தேன்.

"முதலாளித்துவமும், நிரந்தரமில்லை; தகரும். சோசலிசப் பின்னடைவும் சாஸ்வதமில்லை; மலரும்" என்ற தத்துவத் தெளிவு என்னுள் ஒளியாகச் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அதனால் அறிவு ஜீவிகள் எனக் கருதப்படுவோரின் பரிகாசத்துக்கும் ஏளனத்துக்கும், இகழ்வுகளுக்கும், "கட்டையதார்த்தம்", "யதார்த்தம் ராமன்கள்" என்ற வசைச் சொற்களுக்கும் பலியாகி விடாமல்.... தொடர்ந்து மன உறுதியுடன் படைப்பு முயற்சியில் ஈடுபட்டேன்.

அந்த மன உறுதி, எனது மார்க்சீய தத்துவ அறிவின் நன்கொடையாகும்.

1972ல் முதல் சிறுகதை எழுதினேன். அது 'செம்மலர்' எனும் முற்போக்கு இலக்கிய இதழில் பிரசுரமாயிற்று. அன்றிலிருந்து இன்று வரை ஏறக்குறைய முப்பத்தாறு ஆண்டுகளாக அறுபடாத தொடர்ச்சியுடன் எனது படைப்பு முயற்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமூகப் பார்வை... அதே தத்துவ நோக்கு... அதே வர்க்க சாய்மானம் என்று பிறழ்வு எதுவும் நிகழாமல்.... வடிவரீதியான மொழிப்பிரயோகங்களிலும், வெளிப்பாட்டு விதத்திலும் மட்டுமே மாறுதல்களும் வளர்ச்சிகளும் நிகழ்ந்தன.

அதனால்தான் வெகுஜன இலக்கிய இதழ்களில் - ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், குங்குமம், இதயம் பேசுகிறது போன்ற புகழ்மிக்க பிரபல்ய இதழ்களிலும் என்கதைகள் உரிய கௌரவத்துடன் பிரசுரம் பெற்றன. பரிசுகளும் பெற்றன.

நடுத்தர வர்க்கத்தை பிரதான வாசகத்திரளாக கொண்டிருக்கிற அம்மாதிரி இதழ்களில், எனது அடித்தட்டு மக்களைப்பற்றிய கதைகள் பிரசுரமாகி.... வாசக மனசாட்சியை அசைத்தன. கிராமங்களைப் பற்றிய கவலைகளும், அக்கறைகளம் ஏற்பட்டன. கிராமங்களின் அவலங்கள் குறித்த ஈரத்தை கசிய வைத்தன.

சிறு பத்திரிகைச் சூழலிலும், பெரும் பத்திரிகைப் பரப்பிலும் ஏககாலத்தில் இயங்கினேன். இதழுக்கேற்ற நிறமாற்றமில்லாமல், எல்லா இதழ்களிலும் எனது கதைகள், எனது கதைகளாகவே பிரசுரமாயிற்று.