Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
நாட்டுப்புறக் கதை
சிரம பரிகாரம்

- எஸ்.இலட்சுமணப்பெருமாள்

"அரண்மனையில புரோகிதம் பண்றேன்னுதான் பேரு. ஒரு புண்ணியமில்லே. ஒருநாள் ஒரு பொழுதாவது நல்ல சோறு தின்னதுண்டா. உருப்படியா கட்டி அவுத்துப்போட உடுமாத்துக்கு ஒரு சேலை உண்டுமா. ஏதாச்சும் வேத்துநாடு, வேத்து மக்கன்னு பாக்க வீட்டை விட்டு இந்த ஊரை விட்டு அக்கம் பக்கம் போனதுண்டா. அரம்ம்ம்மனையில புரோகிதம் பண்ணுராறாம். அரம்ம்ம்...மனையில"

புரோகிதர் பெண்ஜாதி நடுக் கூடத்துல நின்னுக்கிட்டு ஐயரை பொரியா பொரிச்சுக்கிட்டிருந்தா.

ஐயருக்கு திகுதிகுன்னு இருந்தது. தொங்கிக் கிடந்த அவரோட குடுமிகூட ரோசப்பட்டு நெட்டுக்குத்தலா அவரைப்போலவே வெறச்சமட்டுல நின்னது.

"கூடி வர்ற காலத்துக்குத்தான் குடுமி நெட்டுக்கா நிக்கிதும்பா. இங்கெ நாளன்னைக்கும் குடுமி நெட்டுக்குல குத்திண்டு நின்னுண்டுதான் இருக்கு பிரயோஜனம்? குடி குழியை பறிச்சிண்டு அதல பாதாளத்தை நோக்கி பாய்ஞ்சிண்டுன்னா இருக்கு" அந்தம்மா பேசப்பேச ஐயர் ஓந்திபோல தலயை பொழுதன்னைக்கும் ஆட்டினார். நாக்கை இடப்பக்கமும் வலப் பக்கமும் பல்லுகளுக்கிடையில் அதக்கி அதக்கி பாரியாளை ஒண்ணும் செய்ய முடியாமல் நாக்கை புண்ணாக்கினார்.

"பேசுடி பேசு என்னென்ன பேசுவியோ பேசு. பைத்தியக்காரி. ஏன் எதுக்குன்னுதான் பேசாம இருக்கேன். ஏன் அனாவசியமா கௌரவத்தை விட்டு மஹாராஜாண்ட போய் அதைக் கொடு இதைக் கொடுன்னு கேப்பானேன். இருக்கிற மரியாதை கெட்டிடுமேன்னு மூடிண்டிருக்கேன். நான் வாயைத் திறந்து கேட்டேன்னு வச்சுக்கோ.... கொட்டிக் கொடுப்பா கொட்டி கோடி கோடியா..."

கையை முடிஞ்ச மட்டுல விரிச்சுக் காட்டினார்.

"ஆமாமா கொடுப்பா! கொட்டிக் கொடுப்பா கொட்டி, இவருபோயி கட்ட்டி எடுத்துண்டு வர மாட்டாம வருவார்."

இடுப்புக்குக் கீழே ரெண்டு தொடையிலும் கையை மலர்த்தி ஐயரம்மா வலிப்பம்காட்டி ஆட்டிக் காட்டினாள்.

"வடக்காலே நக்கட்டுமா தெக்காலே நக்கட்டுமான்னு பொழப்பு பொளந்து போய்க் கிடக்காம் இவரு கௌரவம் பாக்குராறாம் கௌரவம். ஹூம்."

ஐயருக்கு பொறுக்கலை. பொத்துக்கிட்டு வந்திச்சு. துள்ளி எழுந்திருச்சார்.

"இப்பொ... இப்பொ..... (விரலால் சொடுக்கு போட்டுக்கிட்டே) இப்பொ போறேன்டி சவால், நான் போயி கேட்டு மஹாராஜா இல்லேன்னு சொன்னா அப்படியே நான் காசிக்குப் போயிர்றேன். நீ காரியம் பண்ணீருடி. இன்னும் பேசிண்டு நிக்கிறதுலெ பிரயோஜனமில்லெ. ஆமா! பார் (பழையபடியும் சொடுக்குப்போட்டு) ஒரு யானையைக் கேட்டு ஓட்டிண்டு வந்துர்றேன். வெறுமனே பொன்னோ பொருளோ இல்லே, யானைடி.... யானை!"

தேவையில்லாம குடுமியை மெனக்கிட்டு அவுத்து நீவி பழையபடி முடி போட்டார்.

ஐயரம்மாவுக்கு இப்பொ நம்பிக்கை வந்திருச்சி. அப்படியே முகத்துல கொஞ்சங்கொஞ்சமா சந்தோசத்தை வரவழைச்சி "நெசம்மாதான் சொல்றேளா. நீங்க கேட்டா மஹாராஜா யானையைக் கூடவா தருவார்?" என்று பக்கமா வந்து நயந்து பேசுனா.

ஐயர் விசுக்கின்னு விலகி திரும்புனார். "ஏன் இன்னும் உனக்கு நம்பிக்கையில்லையா?"

"அதுக்கில்லே யானையைக் கொண்டு வந்தா அதை கட்டி வைக்க இடமில்லையேன்னா" அவளுக்கு விசாரம் வந்திட்டது.

"ஏன் இந்த வீட்டுக்குள்ளாறயே கட்டி வைக்கலாமே. மொகட்டைப் பிரிச்சு யானை நிற்கிற மாதிரி சுவத்தையெல்லாம் இடிச்சு களமாக்கி வை. நான் போயி யானையோட வர்றேன். "ஐயர் அவசர அவசரமா கிளம்பிப் போயிட்டார்.

ஐயரம்மாவுக்கு சந்தோசம் தாங்கலை. யானை இருந்தாலும், ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்னும்பா. யானை மட்டும் வந்திச்சுன்னா இந்த தரித்திரிமெல்லாம் தொலைஞ்சது. இந்த வீடு எம்மாத்திரம். வேலையாட்களை கூப்பிட்டு வீட்டை இடிக்க ஏற்பாடு பண்ணீட்டாள்.

அரண்மனைக்குப் போய் ஐயர் மகாராஜாகிட்டெ தனக்கு யாசகமா ஒரு யானை வேணுன்னு கேட்டதுதான் தாம்சம். கேக்காத ஆள் கேட்டுட்டாரேன்னு ராஜா மந்திரிகிட்டெ ஆலோசனை பண்ணுனார். ஏற்கெனவே மாவுத்தானில்லாம பட்டத்துயானை கட்டுத்தரையிலெயே ஆறு மசாமா கட்டிக்கிடக்கு. அதையே கொடுத்துரலாம்னு மந்திரி ராஜாகிட்டெ அந்தரங்கமாச் சொன்னார்.

"அவுத்து விடுங்கடா புரோகிதருக்கு அரண்மனை பட்டத்து யானையை"ன்னு ராஜா உத்தரவு போட்டுட்டார்.

கட்டுக்களை அவுத்துவிட்டதுதான். யானை ஓஓன்னு நாலாதிக்கமும் பிளிறினதும் திண்டு திண்டுன்னு ஓட்டத்துல பிடிச்சிருச்சி. ஓட்டமுன்னா ஓட்டம் இன்ன மட்டுன்னு இல்லே. மாத்தக்கணக்குல கட்டிக்கிடந்ததுனால வெழங்கொண்டு ஓடுனது. ஐயரு குன்னாங்குன்னான்னு பின்னாடியே ஓடுனாரு. தன்னால துவண்டு போயி வேர்த்து விறுவிறுத்துப்போனாரு. நேரம் மதியமாகிப்போச்சு. யானை ஓட்டத்தை நிறுத்துனபாடில்லெ. ஐயரு கேசுமூசுன்னு மூச்சுவாங்கி கிறங்கிப்போயி அப்படியே லம்பலாடிக்கிட்டெ ஒரு கண்மாய்ப் பக்கமா போயி ஆசுவாசமானாரு.

அங்கே ஒருத்தன் அவன் எருமை மாட்டை கண்மாயில நீய விட்டுட்டு தொறட்டியக் கொண்டு கொடிக்காப்பழம் உலுப்ப புளியம்பழம் உலுப்ப அதைப் பிறக்கி குவிச்சு வச்சுக்கிட்டு தலை மாட்டுல தொறட்டிய வச்சி படுத்த மட்டுல நிம்மதியா பழங்களை தின்னுக்கிட்டிருந்தான். சே! இவன் பாடுதான் தாவலை என்று நெனச்ச ஐயர், "ஏண்டாப்பா எருமை மாடுன்னா பிரச்சனையில்லாம அலுப்பத்து படுத்து எந்திரிக்கலாமோ"ன்னு விசாரிச்சார்.

"ஆமாசாமி மேய விட்டா மேயும் தண்ணிக்குள்ள கிடன்னா கிடக்கும். ரொம்ப சௌரியமான உசுப்பிராணி. நாம அனாவசியமா ஓடிக்கிட்டு திரிய வேண்டியதில்லே. நீங்க கேள்விப்பட்டதில்லையா, எருமை மாட்டுமேல மழை பெஞ்ச மாதிரின்னு"

எதுக்கு அலுப்பு. ஐயருக்கு நல்ல யோசனை தோணுனது.

"டே யப்பா இந்த எருமையை எனக்குக் கொடுத்திரு. அந்த யானையை நீ கொண்டு போயேண்டா. நோக்கு கோடி புண்ணியம். ரொம்ப சிரமப்படுத்துதுடா."

"அப்படியா சாமி....ம்.... உங்களைப் பாத்தாலும் பாவமா இருக்கு. சரி.... அதுக்கென்ன சாமி எருமையை வேணுன்னா நீங்க வச்சுக்கோங்க. யானையை நான் கொண்டு போறேன்."

தொறட்டியோட யானை ஓடுன பக்கமா குறுக்குப் பாதையில் ஓடுனான். கொஞ்ச தூரத்துல யானையை மடக்கி தொறட்டியாலெ அதோட கழுத்தைச் சேத்து நாலு வப்பு வச்சான். அவ்வளதான். யானை ஓட்டத்தை நிறுத்தி, மெல்ல பிளிறுன மட்டுலெ அவன் மேலே ஏறுறதுக்கு வசதியா முன்கால் ஒண்ணை வளைச்சிக் கொடுத்தது. அவன்மேலே ஏறி உக்காந்ததும் பொடதியில் நாலு அடி தொறட்டியால் அடிச்சு வீட்டுக்கு கொண்டு போயிட்டான்.

இந்த வெயிலான வெயிலுக்கு தண்ணியில கிடக்கும் எருமை வெளியேற மாட்டேங்குது. ஐயருக்கு தாகம் பசி அலுப்பு எல்லாம் சேந்துக்கிடுச்சி. எருமையை வெளியே கிளப்ப கண்மாயை சுத்தி சுத்தி வந்து "எய்ந்திரு... எய்ந்திரு.." என்று சின்ன சின்ன கல்லைக் கொண்டு தண்ணிக்குள் வீசிக் கொண்டிருந்தார். அது வெளியேறுனபாடில்லெ. "எருமை மாடுன்னா சரியாவுன்னா இருக்கு" என்று சடைத்து உக்காந்துட்டார். ரொம்ப நேரங்கழிச்சி அந்தப் பக்கமா ஒருத்தன் நடந்து வந்துக்கிட்டிருந்தான். அவனுக்குப் பின்னாடி ஒரு ஆட்டுக் குட்டி அவனைத் தொயந்து விடாம பின்னாடியே ஓடி வந்துக்கிட்டிருந்தது.

ஐயருக்கு அதைப் பாக்க பாக்க ரொம்ப சந்தோசம். இப்படியில்லெ இருக்கணும்.

"ஏண்டா ஆட்டுக்காரா ஆடு உன்னோடதா?"

"ஆமா சாமி"

"நல்ல சமத்தா பின்னாடியே வந்தின்டிருக்கே"

"ஆமா சாமி அதை இழுக்கவோ பறிக்கவோ பத்தவோ வேண்டியதில்லை. இந்த ஆட்டுப் பிறவி ஒண்ணு உடையதாரி எங்கே போனாலும் பின்னாடியே வந்திட்டிருக்கும்."

ஐயர் அவனைக் கெஞ்சத் தொடங்குனார்.

"இந்தாடா டேய் இந்தக்குட்டிய என்னண்ட கொடுத்திட்டு அந்த தண்ணியில கிடக்கிற எருமையை நீ கொண்டு போயேன்டா அதோட எனக்கு சிரமம்னா சிரமம் பெருஞ்சிரமம். தயவு பண்ணுடா"

"சரிசாமி! பின்னே சாமி பாத்து சொல்லும் போது தட்ட முடியுமா? ஆட்டுக்குட்டியை பிடிங்க. பதிலா எருமையை கொண்டு போறேன்". ஆட்டுக்காரன் வேட்டியை தார்ப் பாய்ச்சி கட்டுனான். விறுவிறுன்னு தண்ணிக்குள்ளே இறங்கிப்போயி எருமை மேல ஏறி உக்காந்து அதோட வாலைபிடிச்சு முறுக்குனான். எருமை தண்ணியை விட்டு வெளியேறிருச்சி. வீட்டைப் பாத்து பத்திக் கிளப்பி போயிட்டான். அவன்போன திசையைப் பாத்து ஆட்டுக்குட்டியும் ஓடுது. ஆமா அவன்தானெ வளத்தவன். வளத்தவன் பின்னாடிதானெ போகும். ஐயர் அதை ஓடி ஓடிப்பிடிக்க அதுதிமிறிக்கிட்டு ஓடுனது. இவர் இங்குட்டு இழுக்க அது அங்குட்டு இழுக்க பெரிய போராட்டமே நடந்தது. ஆட்டுக்குட்டி விடுபட்டு ஓடுறதும் இவரு மாறிப்போய் மடக்கிப் பிடிக்கிறதும் அதை தாமரிக்க முடியாமல் கட்டிப்பிடிச்சு உருள்றதுமா ரொம்ப கிறங்கிப்போனார்.

அந்நேரம் அந்தப் பக்கமா ஒருத்தன் சந்தைக்குப் போயிட்டு ஒருபலாப்பழத்தை தலைச் சுமையா சுமந்துக்கிட்டு வந்திட்டிருந்தான்.

"டேய் ஐயா இங்கே வாடாப்பா! நீ நன்னாருப்பே சித்தநாழி இங்கெ வந்துபோ"ஐயர் மே மூச்சு கீ மூச்சு வாங்க அவனைப் பார்த்து தலையை ஆட்டி ஆட்டி கூப்புட்டார். "என்னசாமி நீங்க போயி ஆட்டுக்குட்டியோட மல்லுக்கட்டிக்கிட்டு"

"அதை ஏன்டா கேக்குறே. சரிவிடு. எங்கே போயிட்டு வர்றே? என்னாது?!"

"சாமி சந்தைக்குப் போயிட்டு வர்றேன். வீட்டுல ஒரு முட்டைக் கோழி இருந்தது. அதைச் சந்தையில வித்திட்டு பிள்ளைகளுக்கு தீம்பண்டமா ஒருபலாப்பழம் வாங்குவம்னு போனேன். ரொம்ப கிராக்கி. இருக்கிற துட்டுக்கு பாதி அழுகல்ல ஒரு பழம் கிடைச்சது வாங்கிட்டு வர்றேன்."

"இங்கெ பாரு. இந்த ஆட்டுக்குட்டியை நீ கொண்டு போ. அந்தப் பழத்தை எங்கிட்டெ கொடு. அப்பப்பா... அப்பப்பா சிரமம்னா சிரமம் இதோட அத்தனை சிரமம்டா. இந்தா பிடி கொண்டா பழத்தை."

"அப்பொச்சரி. சாமி பாத்து கேக்கும்போது மாட்டேன்னா சொல்ல முடியும்." பலாப்பழத்தை சாமி தலைக்கு மாத்துனான். ஆட்டுக்குட்டியோட முன்கால்களை இடது கையிலும், பின் கால்களை வலது கையாலும் பிடிச்சு அப்படியே சுழட்டி தோள்மேல போட்டதும் விறுவிறுன்னு நடந்தான்.

அந்தப் பலாப்பழம் இவன் தலையில இருக்கும்போது அழுகலில்லாத பக்கமா வச்சி அழுகலை மேப்பக்கமா இருக்கும்படியா பாத்துக்கிட்டான். அதை ஐயர் தலைக்கு மாத்தும்போது அழுகலை ஐயரோட குடுமியைச் சேத்து சொதுக்குன்னு வச்சு விட்டுட்டான். குடுமி சொதசொதன்னு ஆகி மூஞ்சி மொகறையெல்லாம் அழுகல் ஒழுகிக்கிட்டெ வந்தது. விளுக்கு விளுக்குன்னு விளக்கெண்ணெய்யில விழுந்த எலி மாதிரி முழிச்சிக்கிட்டெ மூஞ்சியை வளிச்சு விட்டுக்கிட்டே நடந்தார். வேற வழியில்லாம நேரா ஊர் நாவிதன் வீட்டைப் பாத்து வந்தார்.

"டேய் குருவையா! டேய்! அடேய்!"

"சாமி வாங்கசாமி வாங்க இதென்ன கோலம். தாக்கல் சொல்லிவிட்டா வீட்டுக்கே வந்திருப்பனே. நீங்க ஏன் இங்கெ வரணும்."

"அது கிடக்கட்டும்டா. இதை இறக்கு. இருக்கிறதை நோண்டி ஒம்பிள்ளைகளுக்கு கொடுறா சாப்புடட்டும். சீச்சீச்சீ... சிரமம்னா சிரமம் அதிசிரமம்போ... இப்பொ பதிலுக்கு நீ நேக்கு ஒருமொட்டை போட்டு விடுறா."

அங்கே ஐயரு பெண்ஜாதி வீட்டையெல்லாம் இடிச்சி மொகட்டை பூராம் பிரிச்சிப்போட்டு தெருவுல உக்காந்துக்கிட்டு யானை இப்பொ வரும் பிறகு வரும்ன்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தா. ஐயரு போய் எதுக்கே மொட்டைக்கட்டையா நின்னார்.

இவரைப் பாத்ததும் அந்தம்மா எந்திரிச்சி ஓடியாந்தது. சுத்திமுத்துப் பாத்துட்டு ஆவலாக் கேட்டது. "ஏன்னா உங்களத்தானெ, யானையை எங்கேன்னா?"

"அட அதை ஏண்டி கேக்குறே. அதைக் கொடுத்துதான். எருமைமாடு மாத்தினேன்."

"யானைக்கு பதிலாவா எருமை மாடு மாத்தினேள். எருமைமாடு எங்கேன்னா?"

"அட அதுக்குத்தாண்டி ஆட்டுக்குட்டியை மாத்தினேன்."

"நன்னாருக்கு போங்கோ. ஆட்டுக்குட்டியை எங்கேன்னா?"

"அதைக் கொடுத்துத்தாண்டி பலாப்பழம் வாங்குனன்."

"அப்பொ பலாப்பழத்தை எங்கேன்னா?"

"தலைய ஙொப்பனாடி செரப்பான்?"


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com