Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
ஜீவியின் கவிதை குறித்து சொற்கள்

"மண்ணிலே நடப்பது உரைநடை
குதிரை மீதேறிப் பறப்பது கவிதை"
என்று பாடினான் மகாகவி ரசூல் கம்சதோவ். கவிதைகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்வதும், அவற்றைச் சுவைபடச் சொல்வதும் ஒரு அற்புதக் கலையாகும். கேட்போரை உணர்ச்சி வயப்படுத்தும் நல்ல கவிதை.
சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான தோழர் ஜீவி பல கவிஞர்களின் சிறந்த கவிதைகளைத் திறனாய்வு செய்து இந்நூலில் வாசர்களுக்கு வாரி வழங்கியிருக்கிறார். நல்ல கவிதைகளை நாடுவோருக்கு இந்நூலால் நலம்பயக்கும். இதை ஜீவி வார்த்தைகளில் உராய்வில் கவிதை மின்சாரம் பாய்கிறது என்கிறார். பட்டுக்கோட்டையார், மு.மேத்தா, கவிஞர் கந்தர்வனில் துவங்கி தமுஎக சங்கத்தின் இன்றைய புத்திளம் கவிஞர்களின் கவிதைகளை நூல் முழுவதும் தொகுத்துக் கூறியுள்ளார்.
தமிழில் புதுக் கவிதைகள் தோன்றிய துவக்க நாட்களில் ஒரு கவிதை மிகவும் பிரபலமாகி மேடைகள் தோறும் முழங்கியது. நள்ளிரவில் சுதந்திரம் வந்ததைப் பற்றி-
"இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவேயில்லை" என்று ஒரு கவிதை வந்தது. கொஞ்ச நாள் கழித்து அதை மறுத்து இன்னொரு கவிஞர்
"இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவேயில்லை என்று
கவிதை எழுதினாயே அரங்கராசா
பகலில் வாங்கியிருந்தால் மட்டும் இவர்கள்
என்னகிழித்திருக்கப் போகிறார்கள்?"
என்று எழுதினார். இது முந்தியதை விடச் சுவையானது.
பட்டுக்கோட்டையார் பற்றிய ஜீவியின் கருத்து மிகவும் சரியானது. சித்தர்களின் கவி மரபில் கம்யூனியத் தாக்கதோடு தான் பழகிய வாழ்க்கையை அழகிய வரிகளில் பதிவு செய்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பதினொரு வயதில் அவரது கிராமத்துக் குளத்தங்கரையில் அமர்ந்து துள்ளிக் குதிக்கும் மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பட்டுக்கோட்டையார் முதன் முதலில் வெற்றுத் தீப்பெட்டியில் தாளம் போட்டுப் பாடிய கவிதை இதுதான்:
"ஓடிப்போ ஓடிப்போ கொண்டை மீனே - கரை
ஓரத்தில் துள்ளாதே சின்ன மீனே
தூண்டில் காரன் வரும் நேரமாச்சு -ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே சின்ன மீனே!"
-கவிஞரின் ஆரம்ப கால உணர்வு அவர் வாழ்ந்த 29 வயது வரையும் நீடித்தது.
நமது மூதாதையரின் கவிதா மரபுகளையும் உள்ளடக்கத்தையும் எடுத்தாளும் கவிஞர்களே புகழ் பெறுகிறார்கள். இதை வள்ளுவரின் "யான் நோக்குங்காலை நிலன் நோக்கும்" என்ற குறளைக் கவிஞர்கள் கண்ணதாசனும், வைரமுத்துவும் எப்படிக் கவிதையாக்கினார்கள் என்பதைப் படிக்கும்போது வியப்பூட்டுகிறது. கவிஞர் கந்தர்வனின் சில கவிதைகள் சாகாவரம் பெற்றவை.
"விதவிதமாய் மீசை வைத்தோம்
வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்" என்ற கவிதையும்-
"காலைப் பொழுதின் சாம்பல் நிறம் ஒரு கவிதை
கண்மலர் போல் பனியில் நனைந்த பூ
ஒரு பசுங்கவிதை" அவரது கவிதைகள். என்ற கவிதையும்
ஆங்கிலக் கவிஞர்களான லூயிஸ் சிம்சன்,வின்சென்டோ ஹியு டோப்ரா, ஜீர்கஸ்ட்டேலனின் புதுக்கவிதைகளும் இதில் கூறப்பட்டுள்ளன.
"அம்மா, போர்க்களத்திலிருந்து
நுரை தள்ளத்தள்ள
தனியாய் வரும் என் குதிரைக்குத்
தண்ணீர் கொடு!
அதன் முதுகைத் தடவிக் கொடு!
அது இன்னொரு வீரனுக்கும் பயன்படட்டும்
திரும்பி வந்த குதிரையின் மேல்
நான் இல்லையே என்று வருந்தாதே
சுதந்திரமடைந்த இத்தேசம்
உன் மகனின் இன்னொரு வடிவமன்றோ"
என்ற இக்கவிதை தனி ரகமானது.
விநாயகமூர்த்தியின் "பாலுக்கும் ஆடை உண்டு பலரிங்கு அரை நிர்வாணம்" என்ற கவிதையும், மகரந்தனின் "யுத்த உலகத்தில் நான் மட்டும் நிராயுதபாணியாய்" என்ற கவிதையும், மதுரைக் கவிஞர்களின் கவிதைகளும் மணம் வீசுகின்றன. அதிலும், "மணியடிக்க ஒரு சாதி மலம் சுமக்க ஒரு சாதி" கச்சிதமன வரிகள். கூடவே ஹைகூ கவிஞர்களும், அவர்கள் கவிதைகளுமாய் நூல் முழுவதும் கவிதை மணக்கிறது. அகால சொப்பனங்களில் அந்தகாரப் புலம்பல்களில் கசியும் கவிதைகளை விடவும் அசல் வாழ்க்கையின் பதிவுகளாயிருக்கும் இந்தக் கவிதைகள் எனக்கும் எல்லோருக்குமான மனதுக்கும் பிடித்திருக்கின்றன என்கிறார் கவிஞர் ஜீவி. இந்நூலை காலம் வெளியீடு கவினுற வெளியிட்டுள்ளது.

- எஸ்.ஏ.பி.
வெளியீடு :
காலம் வெளியீடு,
25, மருதுபாண்டியர் 4வது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி,
மதுரை - 625 002.
விலை : ரூ.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com