Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
"வழக்காறுகளினூடே வரலாற்றைத்தேடி...."
-தி. தங்கவேல்

வைகாசி மாதம் அமாவாசையன்று அந்த மலைக்கிராமத்தில் பேச்சியம்மனுக்குப் பொங்கல். அந்தக் கிராமத்தில் உள்ள அனைவரும் அன்று வேலைக்குச் செல்லவில்லை. குளித்து, மாற்றுடை அணிந்து குதூகலத்துடன் காட்சியளிக்கின்றனர். அந்த ஊருக்கு ஐந்து தலைவாசல்கள். வடக்கே இரண்டு, மற்ற மூன்று திசைகளிலும் தலா ஒரு தலைவாசல். "தள்ளுருகெவ" என்ற இடத்தில் உள்ள கிழக்குத் தலைவாசலில் உள்ள ஓரு கல்லில் உரைந்துள்ளது பேச்சியம்மன் என்ற பெண் தெய்வம். அங்குதான் அதிகாலையில் கிடா வெட்டி பொங்கல் வைக்கப்படுகிறது. இப்பெண் தெய்வத்துக்கான பொங்கல் விழாவில், பெண்கள் யாரும் சென்று கலந்து கொள்வதில்லை. முழுக்க ஆண்கள்தான் செல்கிறார்கள். ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களும், மிராசுகளும் மட்டும் சென்று வழிபாடு நடத்துகின்றனர். ஊர் தெய்வமான 'கொப்பேரனும்', காவல் தெய்வமான 'மண்டு'வும் இரண்டு மருளாடிகளின் மீது வரவழைக்கப்பட்டு, பேச்சியம்மன் தனது கோபத்தை ஊர் மக்கள் மீது காட்டாவண்ணம், இந்த இரண்டு சாமிகளும் பேச்சியம்மனின் கோபத்தை சாந்தப்படுத்தி, இரண்டு கிடாய்களை வெட்டுமாறு பணிக்க, கிடாய் வெட்டப்பட்டு, ஆண்களாலேயே பொங்கல் வைத்து, படையல் இட்டு, வழிபாடு செய்து ஊருக்குள் வந்த பின், ஊரில் உள்ள மற்றவர்கள் தங்கள் வீடுகளில் படையல் இட்டு, பேச்சியம்மனை வழிபாடு செய்கிறார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ள, சடங்குகளால் கட்டமைக்கப்பட்ட, "நாட்டார் வழக்காறு" ஆகும்

'பேச்சியம்மன்' என்பது 'பே(ய்)ச்சியம்மன்' என்பதின் திரிந்த வடிவமாகும். சங்க இலக்கியங்களில் பேய் மகளிர் குறித்த பதிவுகள் உண்டு.

"பிணக்கோட்ட களிற்றுக் குழம்பி
னிணம்வாய்ப் பெய்த பேய்மகளி
ரினையொலி யிமிழ் துணைங்கைச் சீர்ப்
பிணை யூப மெழுந்தாட
வஞ்சு வந்த போர்க்களம்"
(மதுரைக்காஞ்சி 24 -28)

"போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களையுடைய யானைப் பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறைதலைப் பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள்" என்று பாடுகிறார் மாங்குடி மருதனார். புறநானூற்றிலும் இவை மிகுதியாகக் காணப்படுகிறது.

"பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்" என காரைக்கால் அம்மையார் குறித்து திருத்தொண்டர் தொகை போற்றுகிறது.

"பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதை கூறுவதையும் நோக்கலாம். எனவே பேய் மகளிர்க்கும், பிணத்திற்குமான தொடர்பு சங்க காலம் தொட்டு நீடித்து வந்துள்ளது. பே(ய்)ச்சியம்மனுக்கும், பிணங்களுக்குமான தொடர்பு குறித்து புரிந்து கொள்ளாமலே, அவ்வூர் மக்களின் நனவிலிச் செயல்பாடாக ஆண்டாண்டு காலம் நீடித்து வந்துள்ளது. பழங்காலத்தில் பேய் மகளிர் என்பவர் பெண் மாந்திரியர்களாக இருந்திருக்கக் கூடும் என்று கைலாசபதி வரையறை செய்கிறார். பே(ய்)ச்சியம்மன் பேய் மகளிர் என்பதற்கான சான்று, அவருடைய திருவடிவங்கள் பாண்டிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் கழுகுமலைக்கு அருகில் பேச்சியம்மன் மலையொன்றும் இருக்கிறது. அங்கு குழந்தையொன்றை கடிக்கும் கோலத்தில் பேச்சியம்மன் சிலை உள்ளது. எனவே, பேய் மகளிருக்கும், பிணங்களுக்குமான தொடர்பு வழக்கில் இன்றுவரை உள்ளது.

இக்கிராமத்தில் பேச்சியம்மன் உறைந்துள்ள இடம், கிழக்குத் தலைவாசலில் உள்ள ஒரு பெரிய கல்லாகும். கீழ்த் தலைவாசலும்,பேச்சியம்மனும் அமைந்துள்ள இந்தப்பகுதிக்கு "தள்ளுருகெவ" என்பது பெயர். தள்ளறகெவ என்பதுதான் நாப்பிறழ்வால் 'தள்ளருகெவ' என அழைக்கப்படுகிறது. 'கெவ' என்ற சொல்லுக்கு அப்பகுதி மக்கள் கூறும் பொருள் "உயர்ந்த செங்குத்தான பாறை மற்றும் அருவி". பத்தடி தூரத்தில் ஓடும் ஆறு தென்கிழக்கில் நூறு அடி தூரத்தில் முடிவுற்று, செங்குத்தான அருவியாக 300 அடி பள்ளத்தில் குதிப்பதைக் காண முடிகிறது. இந்த அருவியில் ஏதோ ஒன்றைத் தொடர்ந்து தள்ளியதால் "தள்ளறகெவ" எனப் பெயரிட்டு அழைத்துள்ளனர். இது குறித்து எந்த தகவலும் அவ்வூர் மக்களால் சொல்ல இயலவில்லை. மேலும்,பெண் யாரும் பங்கெடுக்காமல், ஆண்கள் மட்டுமே இப்பெண் தெய்வத்திற்கு பொங்கல் இட்டு படையல் செய்வதும் மறைந்து போன தங்களது வரலாற்றின் நீட்சியாக, நனவிலி நடத்தையாக இந்தப் பலியும், படையலும் நடைபெறுகிறது.

"1881- ஆண்டு, அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.ஜே.வால் ஹவுஸ் தனது குறிப்பேட்டில், "பழனி மலைச் சரிவில் வாழும் குன்னுவ சாதியார் தம் சாதிப் பெண்கள் வெள்ளை ஆடையுடுத்த ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இதற்கான காரணத்தை விளக்குவார் யாருமில்லை. இந்த விதிக்குப் புறம்பாக நடந்த பெண்கள் உயரமாகவுள்ள பாறையிலிருந்து உருட்டப்பட்டத்தைப் பார்த்தவர்கள் இன்றும் வாழ்கின்றனர்."

இக்கிராம சமூகம், இறந்துபோன தனது கணவனின் நினைவாக, வெள்ளை ஆடையுடுத்தி, வாழ்நாள் முழுவதும் வேறொருவனுடன் கூடாமல் தனித்து வாழ அனுமதிக்கவில்லை. வேறு இரண்டு திருமண வடிவங்களும் இருந்து வந்துள்ளன. ஒன்று : தன் சாதி சார்ந்த ஒருவனால் வெள்ளி வளையல் அணியப் பெற்று, மணிகளால் தாலி கட்டிக் கொண்டு, பல ஆடவர்களுடன் புணர்ச்சி நடத்த வேண்டும். இதற்கு வளைபோடுதல் என்ற பெயர். இரண்டு : 5 அல்லது 6 வயது பையனுக்கு மூன்று அல்லது நான்கு பெண்கள் மணம் முடிக்கப்பட்டு, பல ஆண்களுடன் புணர்ச்சி நடத்தி குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் (பார்க்க புதுவிசை 2008: 19 மற்றும் 20 இதழ்கள்). இப்படிப்பட்ட திருமணங்களை மானுடவியலாளர்கள் "நிலையற்ற மணக்குடும்பம்" என்று பெயரிட்டுள்ளனர். இக்கிராமத்தில் ஏதோ காரணத்தால், அக்காலங்களில் ஆண்கள் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோனது. இக்கிராம சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டு நடவடிக்கையை அமுல்படுத்த இயலாது. பெருகி விட்ட ஆண்களின் இயற்கை உந்தலைத் தணிப்பதும், தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ளுவதும் (குறிப்பாக பெண் குழந்தைகள்) சமூக தேவையாக முன்நின்றது. இந்த மூன்று வடிவங்களும் நடைமுறையில் இருப்பது அவசியத்தின் பொருட்டு உருவாக்கப்பட்டது. இதனால் பெண்கள் சொல்லவொண்ணாத துயரத்திற்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். கருப்பை அவளிடம் இருந்ததால், அனைத்து கொடூரங்களும், அவளை நோக்கியே திருப்பப்பட்டது. இன்றும், சிசுக் கொலை, "வயிற்றிலேயே பெண் சிசுவைக் கொலை செய்வது" போன்ற நடவடிக்கைகள் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது. பெண்கள் எண்ணிக்கையில் குறையுமானால், "கற்பு", "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற பண்பாட்டு நடவடிக்கைகள் காற்றில் பறந்துபோகும் என்பதற்கு இக்கிராமத்தின் பண்பாட்டு நடவடிக்கையே சாட்சியாகும். இம்மூன்று வடிவத்திற்கும் உட்படாத பெண்களை மலை உச்சியில் இருந்து தள்ளி கொன்றுள்ளனர் அவ்வூர் ஆண்கள். இதனாலேயே, கோபத்துக்குள்ளான பேச்சியம்மனை சாந்தப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஆண்கள் மட்டும் சென்று, பலி கொடுத்து, படையலிட்டு வருகின்றனர்.

ஒரு கிராமத்தின் வழக்காறு, அக்கிராமத்தின் வரலாற்றை தன்னில் உறைய வைத்துள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வில் உணருகிறோம். எனவே, வழக்காறுகளின் வழியாக நமது மக்களின் உண்மை வரலாற்றைக் கண்டெடுக்க முடியும். வழக்காறு என்றால் என்ன?

"மக்களின் மரபசார்ந்த நம்பிக்கைகள், வழக்கங்கள் ஆகியவற்றின் முழுத் தொகுதியே வழக்காறு ஆகும்" கல்விப்புலத்தில் இதை இன்னும் ஆழமாக "இயல்பாகப் பரவும் ஒருவழிமுறைப் பாங்கில் காலம், இடம் ஆகியவற்றின் வழியாக தீவிரமாகத் திரிபடைந்து நிலைத்து நிற்கும், மரபு வழியாகப் பரிமாறிக் கொள்ளப்படும் வெளிப்பாட்டு அலகுகள் நாட்டார் வழக்காறுகள் ஆகும்."

நாட்டார் என்பவர் யார்? ஒரு குறிப்பிட்ட பண்பாட்டைக் கொண்டிருக்கக் கூடிய இனக் குழுவில், சாதியில், கிராமத்தில் அல்லது வட்டாரத்தில் வாழக்கூடிய மக்கள் தொகுதியே நாட்டார் எனப்படுவர். கிராமத்தில் மட்டுமல்ல பெருநகரங்களில் வாழ்பவர்களும் இதில் அடங்குவர். அறிவியல் வளர்ச்சியும், நாகரிகங்களும் திரிபுகளை உருவாக்கும். சில மறைந்தும் போகலாம். காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப புதிய வழக்காறுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. வழக்காறுகள் தடைபட்டு நிற்பதில்லை. செல்பேசிகளில், அவ்வப்போது அனுப்பப்படுகின்ற ஜோக்குகளிலும், குறுஞ்செய்திகளிலும் வழக்காறுகள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதையும் அறிவோம். வழக்காறுகள் 1. வாய்மொழியாகப் பரப்பப்படுவது, 2. மரபுவழிப்பட்டது, 3. ஆசிரியரற்றது, 4. ஒருவித வாய்ப்பாட்டிற்குள் அடங்குவது, 5. ஒரு குழுவினரால் (நாட்டாரால்) பகிர்ந்து கொள்ளப்படுவது, 6. பல்வேறு வடிவங்களாகத் திரிபடைவது, இந்த வரையறைக்குள் வாய்மொழியாகச் சொல்லப்படும் புராணக் கதைகள், கதையாடல், மரபுக் கதைகள், பழமொழிகள், விடுகதைகள் என்பனவும், பண்பாட்டுத் தளத்தில் நாட்டாரால் செய்யப்படுகின்ற சடங்குகள், வழிபாடுகள், நம்பிக்கைகள், நிகழ்த்துன்ற கூத்துக்கள், பாடல்கள் போன்றவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும். இதன் மூலம் தங்களின் வரலாற்றுச் செய்திகளை அடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து கடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதை ஆய்வு செய்வதன் மூலமே, அடித்தள மக்களின் உண்மை வரலாற்றை மீட்டு எடுக்க முடியும். நுண்ணிய (ஆiஉசடி ழளைவடிசல) வரலாறுகளை சிறிது சிறிதாக, சேர்த்து, பின்னர் திண்ணிய (ஆநபய ழளைவடிசல) வரலாறுகளை உருவாக்க முனைவதே நாட்டார் வரலாறுகளை ஆய்வு செய்வதின் நோக்கமாகும். பொதுவாக நாட்டார் வழக்காறுகளையோ, குறிப்பாக நாட்டார் தெய்வங்களையோ, 'மூடநம்பிக்கை' எனச் சட்டென ஒதுக்கி விட முடியாது. அதே சமயம் அதனோடு நெருங்கி காதல் கொண்டு விடவும் முடியாது. மிகவும் எச்சரிக்கையுடனே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நாம் ஏற்கெனவே, கல்விக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் கற்ற வரலாறுகள் வரலாறு அல்லவா? கல்வெட்டியல், நாணயவியல், தொல்பொருள் ஆய்வியல் மூலம் கண்டறிந்த வரலாறு, வரலாறே அல்லவா? எனக் கேள்வி எழுகிறது. அதுவும் வரலாறுதான். எழுதியவர்களின் வரலாறாக அதாவது ஆதிக்க சக்திகளின் வரலாறாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் அளவு கடந்த புகழுரைகளும், மிகைப்படுத்தல்களும், கற்பனை மற்றும் இடைச் செருகல்களும் நிறைந்து காணப்படுகின்றன. தம்மைத்தாமே பெரிது படுத்தவும், பெருமைப்படுத்தவும் விரும்பிய மன்னர்களுக்காக அவரது கருணையை எதிர்பார்த்து நின்றவர்களால் உருவாக்கப்பட்டவைகள்தான் வரலாறாக இன்றளவும் நீடித்து வருகிறது. (உ-ம்) கலிங்கத்துப் பரணி, ஹர்ஷர் சரிதம், மதுரா விஜயம் போன்ற நூல்கள்.

ஓய்வு பெற்ற ஆங்கில தளபதிகள் எழுதிய வரலாறுகள் அனைத்தும், மன்னர்களின் கீர்த்தி, அவர்கள் ஆற்றிய போர்கள், அதனால் குவிக்கப்பட்ட செல்வங்கள், அவர்கள் உருவாக்கிய சாலைகள், இரு மருங்குகளிலும் வளர்க்கப்பட்ட மரங்களும், கட்டப்பட்ட அன்ன சத்திரங்களும்,கோவில்களும் என மன்னர்கள் புகழ்பாடுவதாகவே உள்ளன. ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள், ஆளப்பட்டவர்கள், உழைப்பால் வாழ்ந்தவர்கள், உரிமையை இழந்தவர்கள், இவர்கள் குறித்த பதிவுகள் மறைக்கப்பட்டுவிட்டன. சுதந்திரப் போராட்ட வரலாறு கூட "மகாத்மா காந்தி" என்ற தனிமனிதரின் போராட்டமாக சித்தரிக்கப்பட்டதேயொழிய, அப்போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் மற்றும் உழைப்பாளிகளின் பங்கை மறைத்தனர்.

மறுபக்கம் சமய நம்பிக்கையை வரலாற்றாக்கிய வேலையும் நடைபெற்றது. "வேதகால இந்தியா" என்ற நூலில், மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றில் காணப்படும் செய்திகளை, வம்சாவளிக் கதைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவற்றையே வரலாறாகத் தந்துள்ளனர். நம்பிக்கைகள், மரபுகள் போன்றவைகளை கூட வரலாறாக பதிவு செய்துள்ளனர். இதை நம்பியே ஆக வேண்டும் என்பதை ஒரு சமய ஒழுக்கமாகவும், சமயக் கடமையாகவும் பாமர மக்களிடையே வலியுறுத்தி வந்துள்ளனர். இதன் வெளிப்பாடே, 'ராமர் பாலம்' என்ற பிரச்சனையாகும்.

இந்தியா வேதங்களின் நாடு என சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முதல் இன்றைய மதவெறியாளர்கள் வரை ஒரே குரலில் ஒலித்து வருவதை நாம் அறிவோம். வேத உபநிடதங்களை எழுதும் காலங்களிலேயே, அதற்கு எதிராக சாங்கியம், லோகாயுதம் போன்ற வேத எதிர்ப்பு நூல்களும் எழுதப்பட்டு வேதியர்களுக்கு எதிரான போராட்டங்களும் துவங்கிவிட்டதை இன்றைய இடதுசாரி ஆய்வாளர்கள் வெளிக்கொணர்ந்துள்ளனர். தமக்கு எதிரான தத்துவங்களை அழித்தது மட்டுமில்லாமல், அவர்களையும் அழித்துள்ளதையும் அறிவோம். தமக்கு எதிரான சமணர்கள் எட்டாயிரம் பேரை கழுவில் ஏற்றிக் கொன்று, அவர்கள் நூல்கள் முழுவதையும், நெருப்பிலும், நீரிலும் போட்டு அழித்ததையும் அறிகிறோம். பரபக்கம் வாயிலாகவே கற்றுணர முடிகிறதேயொழிய, சுபக்கச் செய்திகள் ஒன்று கூட கிடைக்கவில்லை. அத்வைதத்தை எதிர்த்துப் போராடிய சித்தர்களையும், அவர்களது நூல்களையும் அழித்தனர். உழைப்பாளர்களுக்கு உதவி புரியும் அனைத்து நூல்களும் அழிக்கப்பட்ட வரலாறே இன்றைய வரலாறு ஆகும். இந்திய நாட்டின் பார்ப்பனியம், வருண, சாதி பாகுபாடுகளை உருவாக்கி, உழைக்கும் மக்களைக் கொடுமைக்குள்ளாக்கிய வரலாறுதான் வேதங்களின் நாட்டின் வரலாறு ஆகும்.

ஒரு பக்கம் மேட்டிமைக்குடி மனோபாவத்தில் எழுதப்பட்ட வரலாறு, மறுபக்கம் பார்ப்பனியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட வரலாறு என இந்த இரண்டு சார்பு வரலாறுகளும், உழைக்கும் மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யவில்லை. வரலாற்றை எழுதுவதற்கும், திரிக்கப்படுவதற்கும், மறைக்கப்படுவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அது ஆதிக்க சக்திகளின் நலன் சார்ந்ததாகும். நமக்கு ஒடுக்கப்பட்டவர்களின், ஒதுக்கப்பட்டவர்களின், உரிமையை இழந்தவர்களின் மீது அக்கறை உண்டு. நமது வரலாற்றுப்பார்வை, அவர்களைப் பற்றிய உண்மைகளை அறிவதிலும், அவர்களது நேரடியான அல்லது மறைமுகமான போராட்டங்களைப் புரிந்து கொள்வதிலும், மனித குல நாகரிகத்தின் முழுமையை நோக்கிச் செல்வதில் அவர்களது பங்களிப்பை உரிய முறையில் உணர்ந்து வெளிப்படுத்துவதற்காக கூர்மையடைய வேண்டும். இத்தகைய பார்வையுடன் கூடிய வரலாற்றை பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் போதிக்கப்படுவதில்லை. உழைப்போருக்கும், உழைப்பைச் சுரண்டுவோருக்கும் இடையே தொடர்ந்து வரும் போராட்டத்தின் வரலாறு போதிக்கப்படுவதில்லை. இந்த வரலாற்றைத் தோண்டி எடுப்பது உழைக்கும் வர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. பொருளியல் வாழ்வின் மேல் கட்டப்பட்ட மேல்கட்டுமானமே பண்பாடு ஆகும். ஒன்று மற்றொன்றில் மேல் தொடர்ந்து வினை புரிந்து வருகிறது. பண்பாடு என்பது பன்முகத் தன்மை கொண்டது. எனினும், வழக்காறுகள் இதில் மிகப் பெரிய இடத்தைப் பற்றி நிற்கிறது. எனவே வழக்காறுகளை ஆய்வு செய்வதின் வழியாக உழைக்கும் மக்களின் வரலாறுகளைச் சேகரிக்க இயலும்.

வழக்காறுகள், மக்களின் வரலாற்றை மூடுதிரை போட்டு மறைத்து வைத்துள்ளது. தெய்வங்களாக, மந்திரச் சடங்குகளாக, தாந்தீரிகங்களாக என ஆன்மீகப் பனுவல்களாகவே உருக்கொண்டுள்ளது. நம்மைவிட மதவெறியர்களுக்கு களம் சாதகமானது. அவர்கள் இதை செவ்வியல் சடங்காக மாற்றம் செய்து கொண்டிருக்கின்றனர். ஜெர்மன் நாட்டின் வழக்காறுகளை ஆய்வுக்கு உட்படுத்திய ஹிட்லர், அதன் முடிவாக "ஆரியனே" உலகை ஆணப் பிறந்தவன் என்ற முடிவுக்கு வந்தான். இதன் விளைவுகளே, லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்ததும், இரண்டாம் உலகப்போரைத் துவக்கியதும் ஆகும். போருக்கான பல்வேறு காரணங்களில் இதுவும் ஒரு முக்கிய காரணமாக முன்நின்றது. தொடர்ந்து கால்நடைகளைக் கொன்று, விவசாய வேலைகளுக்கு கால்நடை எண்ணிக்கை பற்றாக்குறை ஏற்பட்ட பொழுது, யார் சொல்லியும் கேட்காத அந்த விவசாயிகளை, நாட்டார் வழக்காறு ஆய்வுகளில் இருந்து கிடைக்கப்பட்ட ஒரு அனுபவத்தை, சீன விவசாயிகளுக்குக் கூறி, தொடர்ந்து கால்நடைகளைக் கொல்வது மாசே துங் அவர்களால் நிறுத்தப்பட்டது என்பதையும் நாம் அறிவோம். நாட்டார் வழக்காறு ஆய்வில் நன்மையும், தீமையும் உண்டு என்பதைக் கணக்கில் கொண்டு, அணுக வேண்டியுள்ளது. உழைக்கும் மக்கள், தங்களுடைய அனுபவங்களை, வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எழுத்து வடிவில் இல்லாமல், மந்திர சடங்குகளின் வழியாக, நாட்டார் தெய்வங்களின் வழியாக, கதைப் பாடல்களின் வழியாக, அடுத்த தலைமுறையினருக்கு கடத்துகிறார்கள். இப்படி நகர்த்தும் பொழுது, இதிகாச, புராணச் சொல்லாடல்களால் கட்டமைக்கின்றனர். மதவெறியர்களும் இதில் தங்கள் கைவரிசையைக் காட்டவும் செய்கின்றனர். உள்ளே புகுந்து இடைச் செருகலும் செய்கின்றனர். எனவே, சிக்கல் நிறைந்த வலைப்பின்னல்களாக நாட்டர் வழக்காறு காட்சியளிக்கிறது.

கிருத்துவ மதப்பிரச்சாரகர்கள் இந்நாட்டில் நுழையும் பொழுது, இம்மக்களிடம் தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல வழக்காறுகள் மிகவும் இடையூறாக இருந்ததைக் கண்ணுற்றனர். 18ஆம் நூற்றாண்டில் சீகன்பால்கு போன்ற வெளிநாட்டவர்களால், நாட்டார் வழக்காறு குறித்த ஆய்வுகள் தொடங்கப்பெற்று, இன்று வரை ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டு, பனுவல்களாக மாற்றப்பட்டு, அவர்களின் நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கல்விப் புலங்களில், இதற்கான துறைகள் துவக்கப்பட்டு, ஏராளமான ஆய்வுகள் குவிந்தவண்ணம் உள்ளன. நாட்டார் வழக்காறு என்ற மக்களிடத்தில் உள்ள பனுவல்கள், புதிய சொல்லாடல்களால் நிரப்பப் பெற்று ஒரு அதிகார ஒழுங்கிற்கு உட்பட்டு, மீண்டும் பனுவல்களாக நூலகங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இடதுசாரியினரும், 1960களில் இத்துறையில் நாட்டமுற்று, பேராசிரியர் நா.வானமாமலை,பேரா.ஆ. சிவசுப்பிரமணியன், நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வுப் பணியை மேற்கொண்டது. பல்வேறு காரணங்களால் இம்முயற்சி தேக்கமுற்றது. இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் தோழர் அருணன் அவர்கள் எழுதிய "கொலைக்களங்களின் வாக்குமூலம்" என்ற ஆய்வுரை இதன் அவசியத்தை உணர்த்திக் கொண்டிருக்கிறது. மதுரைவீரன், காத்தவராயன், நந்தனார் போன்றவர்களின் வரலாறுகள், பார்ப்பனீய சொல்லாடலால் கட்டமைக்கப்பட்டு, மக்களிடம் உலவி வந்த பொழுது, அவை மறுவாசிப்பு செய்யப்பட்டு, யதார்த்தவாத அடிப்படையில் புதிய சொல்லாடல்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பார்ப்பனீயம் எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆதிக்கச் சொல்லாடலுக்கு எதிரான பாட்டாளி வர்க்கச் சொல்லாடல் ஆகும்.

நாட்டார் வழக்காறு என்ற பனுவலை ஆய்வுக்கு உட்படுத்தும் முறை குறித்தும் நாம் அறிந்து கொள்வது அவசியம். கல்விப் புலங்களின் ஆய்வுகள் பொதுவாக பின்னை அமைப்பியல் (ஞடிளவ ளுவசரஉவரசடைளைஅ) என்ற கோட்பாட்டு வரையறைக்குள்ளாகவே ஆய்வுகள் முடுக்கிவிடப்படுகிறது. பனுவலின் சட்டகத்தின் எல்லையை எக்காரணம் கொண்டும், உடைத்து வெளிவருவதில்லை. பனுவலின் மூலை முடுக்கெல்லாம் பார்வையைச் செலுத்தி, அனைத்து அம்சங்களையும் வெளிக் கொணர்ந்து, புதிய சொல்லாடலால் புதிய பனுவலை உருவாக்கம் செய்கின்றனர். சொல்லாடலுக்கு ஆன அதிகார ஒழுங்கு தீர்மானம் செய்யப்பட்டு விடுவதால், புதிய எல்லைகளை இவர்கள் காண இயலாமல் போய்விடுகிறது. ஆய்வுக்கான இன்னொரு கோட்பாடு பின்னை நவீனத்துவம் (ஞடிளவ ஆடினநசரளைஅ) இந்தக் கோட்பாட்டின்படி பனுவல்கள் பல்வேறு கூறுகளாக கட்டுடைக்கப்பட்டு, ஒவ்வொரு கூறுகள் குறித்தும் விவாதிப்பதோடு இதனுடைய அதிகார ஒழுங்கின் எல்லை முடிவடைந்து விடுகிறது. இடதுசாரிகளின் அணுகுமுறையானது மேற்கண்ட இரண்டு கோட்பாடுகளையும் கவனத்தில் கொள்கிறோம். சொல்லாடலின் அதிகார ஒழுங்கு என்பதில் ஓர் அரசியல் இருக்கிறது. எல்லாச் சொல்லாடல்களும் அரசியல் சொல்லாடல்களே. நாம் யாருக்காக இந்த ஆய்வை மேற்கொள்கிறோம் என்பதில் நமக்கான அரசியல் இருக்கிறது. சுரண்டல் கூட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்திற்கு வலு சேர்க்கவே இந்த ஆய்வை மேற்கொள்கிறோம் என்பதில் தெளிவு நமக்கு இருப்பதால், சொல்லாடலின் அதிகார ஒழுங்கை கேள்விக்கு உட்படுத்துகிறோம். அதனுடைய அதிகார ஒழுங்கின் எல்லைக்குள் நாம் அடங்குவதும் இல்லை. மாறாக, நாட்டார் வழக்காறு என்ற பனுவலை, பல்வேறு கூறுகளாக கட்டுடைத்து, இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள் முதல் பார்வையில், இலக்கியம், தத்துவம், மானுடவியல், பூகோளவியல், சூழலியல், உளப் பகுப்பாய்வியல் என அனைத்து அறிவியல் சாதனங்களுடன் அனைத்தக் கூறுகளையும் ஆய்வுக்குட்படுத்தி, வேண்டாதன கழித்து, நமக்கானவற்றைத் தொகுத்து, பாட்டாளி வர்க்க சொல்லாடல்களால் கட்டமைத்து, புதிய பனுவல்களாக உருமாற்றம் செய்கிறோம். யதார்த்தவாதமும்,சோசலிச யதார்த்தவாதமும், இங்கு நமக்கான தளங்களாக வினைபுரிவதை நாம் அவதானிக்க முடிகிறது. "கொலைக் களங்களின் வாக்குமூலம்" இதற்கான சான்றாக விளங்குகிறது.

உலகமயமும், அதன் தாக்கங்களும் இயல்பாகவே வழக்காறுகளை திரிபடைய வைக்கிறது. இது இன்னும் சிக்கல்களை நமக்கு உணர்த்துகிறது. அனைத்தும் மாறிக் கொண்டிருக்கும் என்பது யதார்த்தம். அப்படி மாறுவது குறித்து நாம் கவலைப்படுவதற்கு ஏதுமில்லை. மாற வேண்டும் என்பதும் நமது விழைவுமாகும். "அனைத்தும் மாறிக் கொண்டிருக்கின்றன" என்ற தன்மையிலேயே நமது ஆய்வுகளைத் துரிதப்படுத்த வேண்டும். பொருளியல் வாழ்வின் தாக்கம், புலப் பெயர்வுகளை ஊக்குவிக்கிறது. புலப் பெயர்வுகளுக்கேற்றாற்போல் வழக்காறுகள் தன்னை புனரமைத்துக் கொள்கின்றன அல்லது மாறுதலுக்குள்ளாகின்றது. மரபானது வாழ்க்கைப் பயணத்தில் காலத்திற்கு ஒவ்வாத சிலவற்றை தன்னிடமிருந்து நீக்கிவிட்டு, காலத்திற்கேற்ற சிலவற்றை சேர்த்துக் கொண்டு தற்காலப்படுத்திக் கொள்கிறது. இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு, நமது உழைக்கும் மக்களின் வரலாற்றை - போராட்ட வரலாற்றை மீட்டெடுப்போம். நனவிலில் அமுக்கம் பெற்றுக் கிடக்கும் அனைத்து மரபுகளையும் ஆய்வுக்குட்படுத்தி, புதிய சொல்லாடல்களை உருவாக்கி, போராடும் நமது வர்க்கத்தை வலுப்படுத்துவோம். வழக்காறுகளினூடே நமது வர்க்கத்தின் வரலாற்றைத் தேடித் தொகுப்போம்.

உதவிய நூல்கள் :

1. நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள் - தே.லூர்து

2. தென்னிந்திய குலங்களும், குடிகளும் (தொகுதி 4) - எட்கர்தர்சன்

3. வரலாறு என்றால் என்ன? பேரா. அ.கருணானந்தன்

4. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் - முனைவர் க.கைலாசபதி