Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruScienceTechnology
தொழில்நுட்பம்

உயிர்
ஆங்கிலமூலம்: ஆபிரகாம்.தொ.கோவூர் / தமிழாக்கம்: தமிழநம்பி

பல்வேறு மதங்களின் துய்த(புனித) நூல்களை இயற்றிய எழுத்தாளர்கள், புடவி(universe)யின் உண்மையான இயல்பு பற்றிய அறிவைப் பெற்றிருக்கவில்லை. அவர்களனைவருமே இவ்வுலகம் தட்டையானதென்றும் புடவியின் நடுவாக உள்ளதென்றும் நினைத்தார்கள். இவ்வுலகம் உருண்டையானதென்று கூறிய முதல் ஆளான, கியார்டானோ புரூனோ, உரோமன் கத்தோலிக்கத் திருச்சவையால் எரிக்கப்பட்டு இறந்தார்.

உலகம் இடம்பெயரா நிலையினதென்றும் கதிரவக்கோளே இவ்வுலகைச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றும் கூறும் கிறித்தவ மத நூலான ‘பைபிள்’ கருத்துக்களை எதிர்த்த 'குற்ற'த்திற்காகக் கலீலியோ கத்தோலிக்கத் திருச்சவையால் சிறைக்கனுப்பப்பட்டார்.

புடவியைப் பற்றிய இன்றைய நம் அறிவனைத்தும் வானியலரின் அறிவியல் ஆராய்ச்சிகளால் பெற்றவையேயன்றி, மத நூல்களிலிருந்து பெற்றவை அல்ல. இவ்வுலகம் மற்றைய கதிரவக் கோள்களைப் போலவே நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளித் துகள்களின் தொகுப்புத் திரண்மையால் உருவானதென்று வானியலர் கருதுகின்றனர். பின்னர், இவ்வுலகின் வெதண(temperature) வளிப்புரிய(atmospheric) நிலைகள் பொருத்தமானவையாக அமைந்தபோது வேதியல் வினைப்பாடுகளின் விளைவால் உயிர்த் தோற்றம் ஏற்பட்டது.

எரிமலை மற்றும் கதிரவ ஆற்றல்களின் தாக்கத்துடன், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலையில் சதுப்புவளி(methane), குருவளி (ammonia), நீர் ஆகியவற்றிலிருந்து உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் (livable organic matter) மூலக்கூறுகள் உருவாயின. (நோபல் பரிசு பெற்ற முனைவர் அர்கோபிந்து கொரானாவும் முனைவர் சிரில் பொன்னம்பெருமாவும், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலைகளை, அவர்களின் ஆய்வறைகளில் செயற்கையாக ஏற்படுத்தி உயிர்வாழக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகளை உண்டாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்)

இம்மூலக்கூறுகள் காலப்போக்கில் மறுபகர்ப்புறவும், மெள்ள சேர்மவுயிரகவாக்கம் (slow oxidation) என்கின்ற மூச்சுயிர்ப்பு (respiration) மூலம் ஆற்றலை உண்டாக்கவுமான பண்புகளை வளர்த்துக் கொண்டன. மூச்சுயிர்க்கின்ற உயிர்மப்பொருள் உண்டாக்கிய இவ்வகை ஆற்றலையே நாம் உயிர் என்கின்றோம். மூச்சுயிர்த்துக் கொண்டு, உயிர்ப்பாற்றலை (vital energy) உருவாக்குகின்ற பொழுது உயிர்மப்பொருள் உயிரியாக (உயிர்வாழ்கின்ற ஒன்றாக) ஆகி விடுகின்றது.

மிகத் தொன்மைக் காலத்தில், நிலத்தில் உருவாகிய உயிர்மப் பொருளின் (organic matter) மூலக்கூறுகள் காலப்போக்கில் ஒற்றைக்கல உயிரிகளை (unicellular organisms) உருவாக்கின. இவையே, பல இலக்கக்கணக்கான ஆண்டுப் படிநிலை வளர்ச்சியின் விளைவாக, இன்றைய மரவடை மாவடை(flora and fauna)களைத் தந்துள்ளன.

புகழ்பெற்ற வான்பூதியலர் (astrophysicist) ஆர்லொ சேப்ளி, உயிர்கள் இருக்கக்கூடிய பல இலக்கக்கணக்கான கோள்கள் விண்வெளியில் இருக்கக்கூடும் என்று கூறுகின்றார். இக்கோள்களுள் சிலவற்றில், மாந்தனை விடப் படிநிலைவளர்ச்சியிலும் அறிவுத்திறத்திலும் மிகுந்த வளர்ச்சி பெற்ற உயிரிகள் இருக்கலாமெனவும் சொல்லுகின்றார். சில வான்பூதியலர், இவ்வுலகை அடைந்த எரிகற்கள் மற்றும் வால்விண்மீன்களின் வழியாக உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகள் இங்கு வந்தனவென்று கருதுகின்றனர்.

நிலவில் உள்ள நிலைமைகள் உயிர்நிலைப்புக்கு ஏற்பேய்வு இல்லாமை காரணமாக, நிலவிற்குச் சென்ற விண்செலவர்(astronauts), உயிரின் விளைவாக்கத்திற்குத் தேவையான கீழ்க்காணும் மூன்று பொருள்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அம்மூன்று பொருள்கள்: 1. உயிர்க்கக் கூடிய பொருள் [புரத்துப்பயினம்(proteinic protoplasm)] 2. உணவு, நீர் வடிவில் உணவூட்டம் 3. உயிர்வளி(oxygen).

இம்மூன்றனுள் முதலாவதை அவர்கள் தங்கள் உடல்களிலும், மற்ற இரண்டையும் கொள்கலன்களிலும் எடுத்துச் சென்றனர். இவ்வுயிராக்கப் பொருள்களில் எதிலேனும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பியிருக்க மாட்டார்கள்.

உயிரிகளின் கலன்(cell)களில் காணப்படும் இனிகம்(glucose), கொழுப்புகள், புரத்தம் போலும் ஊட்டமளிக்கும் பொருள்களின் மெள்ள சேர்ம வுயிரகமாக்கம் (மூச்சுயிர்ப்பு) உண்டாக்கும் ஆற்றலின் வடிவமே உயிர்! அது, உயிரிகளின் கண்ணறை எனப்படும் கலன்களில் (cells) நடக்கும் வேதிய எதிர்வினைகளின் விளைவாகும். இந்த, உயிர் உண்டாக்கும் மூச்சுயிர்ப்பு, மெழுகுத்திரி போல் எரிபொருளை எரிப்பது போன்றதிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை. வேதிய எதிர்வினைகளின் வேகத்தில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

ஓர் உயிரியின் உடலில் நிகழும் சேர்ம வுயிரகமாக்கம், எரிபொருள் எரிந்துகொண்டிருக்கின்ற வேகத்தில் நடைபெறுமானால், அதனால் ஏற்படும் உயர்வெதணம்(high temperature) உயிர்க்கக்கூடிய பொருளை அழித்துவிடும். மெழுகுப்பொருள் வேதியச்சிதைவு உறாதவரையில் அதைப் பலதடவைகள் எரியவிடவும் அவிக்கவும் செய்யலாம். அதைப்போன்றே, ஓர் உயிரின் உடலிலுள்ள புரத்துப்பயினீர்(protoplasm) சிதைவுறாமலிருந்தால் இறந்த உடலைச் செயற்கை வழிகளால் பலமுறை உயிர்பெறச் செய்ய முடியும்.

1963இல் அமெரிக்கத் திரைப்பட நடிகர் பீட்டர் செல்லர்சு ஏழுமுறைகள் இறந்தார். ஒவ்வொரு முறையும் மின்துகளிய நெஞ்சவியக்கியைப் (electronic pacemaker) பயன்படுத்தி உயிர்த்தெழுப்பப்பட்டார். ஏழாவது மறுவுயிர்ப்பின் பிறகு, அவர் மேலும் பல படங்களில் நடித்தது மட்டுமின்றி மேலும் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அவிக்கப்பட்ட ஒரு மெழுகுத்திரியை மீண்டும் எரியவிடும் நிகழ்ச்சியில், அவிக்கப்பட்டபோது மெழுகுத்திரியின் சுடர் விலகிப் போனதாகவும் மீண்டும் அதை எரிய விட்டபோது, அச்சுடர் திரும்பி வந்ததாகவும் நாம் சொல்லுவதில்லை.

அதைப்போலவே, பீட்டர் செல்லர்சு இறந்த ஒவ்வொரு முறையும் அவருடைய உடலைவிட்டு உயிர் பிரிந்தது என்பதும் பின்னர் உயிர்ப்பிப்பின் போது, அவ்வுடலுக்குத் திரும்பி வந்தது என்பதும் பொருளற்ற உரைகளே!

- தமிழநம்பி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com