தொழில்நுட்பம்
காட்சித்திரையில் மூளையின் வளர்ச்சி
பிறவியிலேயே மூளை முழுவளர்ச்சிபெற்ற உறுப்பு அல்ல. அனுபவங்களின் வாயிலாகத்தான் அது வளர்ச்சியடைகிறது; அதன் நியூரன்களுக்கிடையே புதுப்புது இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறது; இணைப்புகள் நிரந்தரமாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது; தேவைப்படும்போது, நொடிக்கும் நேரத்தில் இணைப்புக் கொடுத்து தகவல்களை மீண்டும் பெறுவதற்கான ஆற்றலை மூளை வளர்த்துக் கொள்கிறது.
Ferret வகைப்பூனைகள் பிறக்குபோது கண்களை மூடியபடியே பிறக்கின்றன. 30 நாட்களுக்குப்பிறகே கண்களைத் திறக்கின்றன. பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு (ferret) வகைப்பூனை முதன்முறையாக கண்களைத் திறந்து பார்க்கும்போது நகரும் பொருட்களை எவ்வாறு பிரித்தறிகிறது என்பதையும் நகரும் திசையை மூளையில் எவ்வாறு பதிவு செய்துகொள்கிறது என்பதையும் காட்சி ஊடகமாக நவீன கருவிகளைக் கொண்டு பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது மூளை எவ்வாறு கற்கிறது என்பது படமெடுக்கப்பட்டிருக்கிறது. டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சிப்பிரிவு இந்த சாதனையை செய்திருக்கிறது.
In vivo two-photon laser scanning microscopy என்னும் சாதனத்தின் உதவியால் மூளைப்பரப்பின் 300 மைக்ரான்களுக்கு அடியில் சில மைக்ரான்கள் தடிமனுள்ள படலம் படமெடுக்கப்பட்டு அதில் நியூரான்களின் ஒழுங்கமைவு பதிவு செய்யப்பட்டுள்ளது. கால்சியம் உப்பை உணரக்கூடிய ஒரு ஒளிரும் பொருள் இந்த பூனைக்கு கொடுக்கப்பட்டு, நியூரான்கள் கண்காணிக்கப்பட்டன. பூனைபார்க்கும் அசைவுகளின் வகைகள் மாறுபடும்போதெல்லாம் நியூரான்கள் புதுப்புது வடிவங்களை பதிவு செய்துகொள்கின்றன.
புதிதாகப்பிறந்த ஒரு மூளை அசைவுகளைப் பிரித்தறியும் பண்பைப் பெற்றிருப்பதில்லை. இட-வலம் அல்லது வல-இடம் ஆகிய இரண்டு அசைவுகளுக்குமே ஒரே எண்ணிக்கையிலான நியூரான்களின் பதிவு காணப்படும். ஆனால் அனுபவங்கள் அடிப்படையில் நியூரான்களின் எண்ணிக்கை மாறுபட்டு பதிவுகள் வலிமை பெற்றுவிடுகின்றன.
ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும்.
மூளையின் வளர்ச்சியை அறிந்துகொள்வதற்கும், நியூரான்களின் செயல்பாட்டை தெரிந்து கொள்வதற்கும் இந்தப் படங்கள் மிகவும் உதவியாக இருப்பதாக மூளை அறிவியலுக்காக இயங்கும் டியூக் இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் டேவிட் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறுகிறார். மூளையில் ஏற்படும் பலவிதமான கோளாறுகளை குணப்படுத்த மூளை நரம்பணுக்கள் எவ்வாறு தம்முடைய செயல்களை ஒருங்கமைத்துக் கொள்கின்றன என்பதை அறிவதன்மூலம் மூளை தொடர்பான மருத்துவ சிக்கல்கள் தீர்க்கப்படுவதற்கு இந்த ஆய்வுகள் துணை நிற்கின்றன.
இன்னும் படிக்க: ( http://www.sciencedaily.com/releases/2008/10/081022135431.htm)
- மு.குருமூர்த்தி ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|