விண்வெளி
எளிமையான ரேடியோ தொலைநோக்கி
மு.குருமூர்த்தி
டி.டி.எச். சேவைக்கான சிறிய டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்தி மழை மேகத்தை கண்டறியும் புதிய வசதியை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஜெ. பெனலன் (69).
இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான அமைப்புகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பாடியில் வசித்து வருபவர் ஜெ. பெனலன். மோட்டார் மெக்கானிக் பிரிவில் பட்டம் பெற்ற இவர் பள்ளி பருவத்தில் பொ. திருகூடசுந்தரனார் எழுதிய அறிவியல் ஆய்வுகள் குறித்த புத்தகத்தைப் படித்தது முதல், அறிவியல்பால் ஈர்க்கப்பட்டார்.
1953-ம் ஆண்டு முதல் இவருக்கு வானியல் ஆய்வில் ஈடுபாடு அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு முக்கிய விண்ணியல் ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்றார் பெனலன். வானியல் ஆய்வுகளை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியும் வழிகளைத் தேடினார் இவர். இந்த தேடலின் விளைவாக வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கியை எளிமைப்படுத்தும் வழிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டார்.
வானியல் ஆய்வில் பொதுவாக கண்ணாடி தொலைநோக்கி மற்றும் ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை கண்களால் காண முடியும். மேகக் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் இதனைப் பயன்படுத்த முடியாது.
நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவை பிரதிபலிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள்.
ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம். ரேடியோ தொலைநோக்கிகளை உருவாக்குவது மிகுந்த செலவு மிக்கதாகவும் உருவத்தில் பெரிதானதாகவும் இருப்பதால் இதனை எளிமைப்படுத்த வேண்டிய அவசியத்தை பெனலன் புரிந்து கொண்டார்.
பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக பெற உதவும் டி.டி.எச். ஒளிபரப்பு முறையில் பயன்படுத்தப்படும் டிஷ் ஆன்டெனா இதற்கு உதவும் என தெரியவந்தது.
டிஷ் ஆன்டெனாவில் இருந்து வரும் வயரை செட்டாப் பாக்ஸ்-க்கு கொண்டு சென்று அதில் இருந்து வயரை இதற்காக மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள கருவிக்கு கொண்டு வந்து அதில் இருந்து மல்டி மீட்டருடன் வயரை இணைக்க வேண்டும். டிஷ் ஆன்டெனா எந்த திசை நோக்கி வைக்கப்பட்டுள்ளதோ அந்த திசையில் வானில் நிகழும் மாற்றங்களை எண்களின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
மழை மேகம், சூரியன், வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தரும் மேகமா? அல்லது மழை தராத மேகமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நட்சத்திரங்கள், கோள்களுக்கு உள்ள எண்களைப் போன்று மேகத்துக்கும் உள்ள எண் மதிப்பீடு அடிப்படையில் துல்லியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் வானிலைத் துறை பணிகளையும் எளிமைப்படுத்த முடியும். இந்த எளிய முறையில் பெரிய அளவில் ரேடியோ தொலைநோக்கி அமைத்தால் ஆகும் செலவில் மிகக் குறைந்த அளவே இதற்கு செலவாகும். மேலும், பள்ளிகளில் இவற்றை உருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு வானியல் நிகழ்வுகளை மிகக் குறைந்த செலவில் எளிய முறையில் கற்பிக்க முடியும்.
அதிகபட்சம் ரூ. 150க்குள் இந்த முறையில் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்க முடியும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கீகாரம்: ரேடியோ தொலைநோக்கி தயாரிப்பில் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படும் இந்த முறை சரியானது என ஊட்டியில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு மையத்தின் வானியல் மையம் அங்கீகரித்துள்ளது. இதேபோல ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விண்ணியல் ஆய்வு மையமும் இது சரியானது என பாராட்டி அங்கீகரித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களின் அங்கீகாரத்தின் மூலம் டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்துவதற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சுமார் 20 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் இதுபோன்ற அமைப்பை நிறுவி, மிகப்பெரிய அளவிலான விஎல்ஏ எனப்படும் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்கலாம்.
2009-ம் ஆண்டு அமெச்சூர் ரேடியோ தொலைநோக்கி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து இத்தகைய ரேடியோ தொலைநோக்கியை பெரிய அளவில் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் பெனலன்.
இன்னும் படிக்க:http://www.viparam.com/index.php?news=14927
http://del.icio.us/post?url=http://www.viparam.com/index.php?news=14927&title=மழைமேகத்தைகண்டறியபுதியவசதி: சென்னைவிஞ்ஞானிக்குதேசியஅங்கீகாரம்
- மு.குருமூர்த்தி ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|