Keetru Sancharam
Sancharam Logo
மார்ச் - மே 2008
சிக்கல்
சு.தமிழ்ச்செல்வி

லில்லி டீச்சருக்கு தினந்தோறும் இது ஒரு பெரும் பிரச்சனையாய் போய்விட்டது. படுக்கையை விட்டு மகள் ஜெனிட்டா எழுந்துவிட்டால் போதும். ஆறு மணியிலிருந்து ஏழரை எட்டுவரைகூட மகளோடு கழிப்பறையில் மல்லுக்கட்ட வேண்டியதாயிருக்கிறது. பருப்பை ஓர் அடுப்பிலும் பாலை மற்றோர் அடுப்பிலும் வைத்துவிட்டு வந்து மகள் எழுந்து விட்டாளா என்று பார்த்தாள். அவள் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். சில சமயம் விழித்துக் கொண்டாலுமே கூட தூங்குவது போல் பாவனை செய்யக்கூடியவள்.

“ஜெனி... ஜெனி....”

“ம்”

“எழுந்திருக்கல?”

“ம்... எழும்புறம்மா.”

“பொழுது விடிஞ்சிடுத்துடி எழுந்துரு”

ஜெனிட்டா சோம்பல் முறித்து எழுந்து உட்கார்ந்தாள்.

“பல் வெளக்கிட்டு வா. பால் தாறேன்.”

லில்லியின் கணவன் சேவியர் காலையிலேயே எழுந்து சாம்பாருக்கு தேவையான வெங்காயம், காய் இவற்றை நறுக்கி வைத்துவிட்டு நடைப்பயிற்சிக்குப் போயிருந்தான். அதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைப்பவன். காபி, டீ எதையும் வீட்டில் அவன் எதிர்பார்ப்பதில்லை. வழியில் ஏதாவது ஒரு கடையில் குடித்துக்கொள்வான். இதைக்கூட அவன் லில்லிக்கு செய்யும் உபகாரமாய் நினைத்தான்.

லில்லிக்குத்தான் நிறைய தலைவலி. காலைச் சிற்றுண்டி, மதியச்சாப்பாடு செய்யவேண்டும். அடுக்குக் குவளைகளில் மகளுக்கும் கணவனுக்கும் தனக்கும் தனித்தனியாய் எடுத்துவைக்க வேண்டும். பாட்டில் தேடி தண்ணீர் நிரப்பி, துண்டுதேடி, பைதேடி... இதெல்லாம் போதாதென்று ஜெனிட்டாவின் குடலோடு வேறு தினமும் குத்துச்சண்டை நடத்த வேண்டிருக்கிறது லில்லிக்கு. ஜெனிட்டாவை கழிப்பறைக்கு அனுப்புவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. பலி பீடத்துக்குப் போக பயந்து பின்னுக்கு இழுக்கும் ஆட்டைப்போல பார்க்க பாவமாக இருக்கும். என்ன செய்து தொலைப்பதென்று எதுவும் புரியாமல் விழிப்பாள் லில்லி.

அப்படி என்னதான் இருக்குமோ அவள்குடலில். இம்மியும் இளகிக்கொடுக்காத கல்குடல். எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தாகிவிட்டது. ஜெனிட்டாவுக்கு குடல் பிரச்சனை ஒரு பங்கென்றால் வலிக்கும் என்ற பயம் பத்து பங்காக இருந்து காலைக்கடன் கழிப்பதே பெரும் சிக்கலாகிக் கொண்டிருந்தது. கழிப்பறைக்குள் கால்வைக்கக்கூட பயந்தாள் ஜெனிட்டா.

‘நாட்டுல ஒரு டாக்டர் கூடவா ஒழுங்கா படிச்சி வந்திருக்க மாட்டாங்க. தினசரி காலையில குழந்தைய வெளிக்கு போக வைக்க முடியாத டாக்டருங்க என்ன படிச்சிட்டு வந்திருப்பாங்க.’ லில்லியின் கையாலாகாத்தனம் மருத்துவர்களின் மீது கோபமாகத் திரும்பும்.

ஜெனிட்டா குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே அவளுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. குழந்தை தினமும் வெளிக்குப் போகாது. மலம் இறுகிக் கொள்ளும். அப்போதெல்லாம் குழந்தையைக் காலில் போட்டு முருங்கைக் கீரையின் சிறு காம்பை ஓட்டைக்குள்விட்டு பிடித்துக்கொள்வாள். முருங்கைக் காம்பு வைத்த ஓரிரு நிமிடங்களுக்குள் மலம் எவ்வளவு இறுகி இருந்தாலும் வந்துவிடும். இருப்பினும் மலத்துளையைக் சுற்றி தெறிப்புகள் ஏற்பட்டு ரத்தம் கசிவதை தடுக்க முடியாது. பிறகு அதற்கு மருந்து தடவிக்கொண்டிருப்பாள் லில்லி.

ஜெனிட்டாவை மழலையர் பள்ளியில் சேர்த்த பிறகு முருங்கைக் குச்சி மருத்துவம் முடியாமல் போய் விட்டது. தான் வளர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்வாளோ என்னவோ காலில் உட்காராமல் ஆட்டம் காட்ட ஆரம்பித்து விட்டாள். இப்போது இரண்டாம் வகுப்பிற்கு வந்துவிட்டாள். மருத்துவர்கள் அவ்வப்போது நீட்டு நீட்டான மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறார்கள். அதை மலத்துளைக்குள் விடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அப்படியும் இரண்டு நாட்களுக்குத்தான் நிவாரணம் கிடைக்கிறது. வளர்ந்தால் சரியாகிவிடும் என்கிறார்கள். கீரையும் பாலும் முட்டையும் நிறையக் கொடுக்கச் சொல்கிறார்கள். லில்லியும் கொடுத்துத்தான் பார்க்கிறாள். இவற்றை விடவும் கடை பண்டங்களைத்தான் ஜெனிட்டா அதிகமாய் விரும்பித் தின்று தொலைக்கிறாள். ஒரே பெண்பிள்ளை விரும்பித் தின்பதை வாங்கிக் கொடுக்காமலும் இருக்க முடியவில்லை.

அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு பாலை ஆற்றியபடி ஜெனிட்டாவைக் கூப்பிட்டாள். போராட்ட நேரம் ஆரம்பமாகப் போகிறதே என்ற ஒருவிதமான மிரட்சியுடன் உட்கார்ந்திருந்தவள். “என்னம்மா?” என்றாள்.

“பல் வெளக்கிட்டல்ல”

“ம்”

“இந்தா இதக்குடி”

கவனமாய் பால் டம்ளரை வாங்கிக் கொண்டவள் லில்லியின் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தாள்.

“நல்லா ஆத்திட்டன். சுடாது. சீக்கிரமாக் குடி.”

“ம்”

“வெண்டைக்காய் நறுக்கணும். என்னால நின்னுட்டு இருக்க முடியாது. குடிச்சிட்டு வா சீக்கிரமா” சமையலறைக்குத் திரும்பினாள்.

“அம்மா”

“என்னடி?”

“இன்னக்கி எனக்கு ஆய் வரல்லம்மா”

“என்னக்கித்தான்டி ஒனக்கு அது தானா வந்துச்சி?”

“...”

“எப்பத்தான் இந்த பிரச்சனைத் தீருமோத் தெரியலையே ஆண்டவரே” அருவாமனையை எடுத்துவைத்து கழுவிய வெண்டைக்காய்களை நறுக்க ஆரம்பித்தாள்.

“ஜெனி இன்னுமா பால் குடிக்கிற?”

“இன்னும் கொஞ்சம் இருக்கும்மா”

“குடி மடக்கு மடக்குன்னு”

“ரொம்ப ஆறிப்பொயிட்டுதும்மா. வயத்தப் பெரட்டுது”

“வெத வெதன்னு குடுத்தா சூடா இருக்கு குடிக்க முடியலம்பே. ஆத்திக்குடுத்தா சில்லுன்னு இருக்கு கொமட்டுதும்ப. நீ என்னக்கித்தான் நல்லாருக்குன்னு சொல்லி குடிச்சிருக்குற. சீக்கிரம் குடி.”

“எனக்குப் போதும்மா”

“குடிடி எல்லாத்தையும் குடிச்சாத்தான் ஆய் வரும்”

“அம்மா இன்னக்கி மட்டும் வேண்டாம்மா. எனக்கு ஆயி வரலம்மா”

“இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம். நீ பாலக்குடிச்சிட்டு இப்ப பாத்ரூமுக்குள்ள போவணும் சொல்லிட்டன். நேத்தைக்கு முழுசா வயத்தவிட்டு கழிஞ்சிருந்தாக் கூடஇன்னக்கி, இருந்துட்டுப்போன்னு விட்டுடலாம். ஆட்டாம் புழுக்கையாட்டம் ரெண்டு வந்து விழுந்துது. அதோட எழும்பிட்ட. இன்னக்கிம் இருக்கலன்னா என்ன அர்த்தம்”

“ஆண்டவர் மேல சத்தியமா எனக்கு ஆயி வரல்லம்மா”

“சத்தியம் பண்றியா நீ. ஏற்கெனவே ஓம் ஒடம்புல முக்காவாசி கல்லாவே இருக்கு. இதுல ஆண்டவர்மேல ஆணயிட்டு வேற சத்தியம் பண்றியா? ஒனக்கும் ஒப்பனுக்கும் ஈவு எறக்கங்குறதே இருக்காதாடி. ஒரு பொட்டச்சி கெடந்து புள்ளக்கிட்ட எவ்வளவு போராடுறாள்னு ஒப்பனும் பாவப்பட மாட்டேங்கிறான். நம்ப அம்மா இவ்வளவு கெஞ்சி கூத்தாடுதேன்னு ஓந்நெஞ்சிலயும் சொரக்கமாட்டங்குது. நான் என்னடி பாவம் பண்ணினேன். ஒங்க ரெண்டு பேருக்கிட்டயும் நான் ஒவ்வொரு நாளும் நரகத்த அனுபவிக்கிறன் தெரியுமாடி. ஆண்டவரே என்னை எதுக்காக இப்படி சோதிக்கிற.”

தன் அம்மா புலம்புவதை சகித்துக்கொள்ள முடியாத ஜெனிட்டா “சரிம்மா நான் பாத்ரூமுக்குப் போறன்” என்று எழுந்து வந்தாள். சமையல்கட்டை அடுத்திருந்த கழிப்பறையுடன் கூடிய குளியலறைக்குள் நுழைந்தாள்.

“ஜெனி இரு இந்தா இத வாங்கிட்டு போடி”

“பேப்பர் வேண்டாம்மா. நான் டாய்லெட் பேஷின்லயே போயிக்கிர்றன்”

“அதெல்லாம் வேணாம். நீ எப்பவும் போல பேப்பர்லயே போ நீ போனியா போகலையான்னு எனக்குத் தெரிய வேணாம்”

“நான் சொல்றம்மா”

“நீ ஒண்ணும் சொல்ல வேணாம். நானே பாத்துக்கிர்றன். நீ பேப்பர்லயே போ”

முறைப்புடன் தாளை வாங்கிக்கொண்டவள் கோபத்தில் படீரென கதவை அடித்துச் சாத்தினாள்.

“பாத்துடி. கதவு ஒடஞ்சிடப்போகுது. வீட்டுக்காரங்ளுக்கு காதில விழுந்துட்டா அப்பறம் அதுக்குவேற நான் விளக்கம் சொல்லிக்கிட்டு நிக்கணும். இப்ப அதுக்கெல்லாம் நேரம் இருக்காச் சொல்லு.”

விசில்வந்த குக்கரை இறக்கி வைத்துவிட்டு வெங்காயம் தக்காளி வதக்கிக்கொட்டி புளிக்கரைசல் சேர்த்து சாம்பாரை கொதிக்கவிட்டாள். ரசத்திற்காக சூடான பருப்புத் தண்ணீருக்குள் முழு தக்காளியை எடுத்துப் போட்டிருந்தாள். ரசம் வைக்க வேண்டும், வெண்டைக்காய் வதக்கவேண்டும். கடைசியாய் ஆளுக்கு இரண்டு தோசை ஊற்றவேண்டும். எத்தனையைச் செய்வது? ரசமும் வெண்டைக்காய் பொரியலும் மட்டும் இருந்தாலே போதும். அவளும் ஜெனிட்டாவும் பெரும்பாலும் ரசத்தில்தான் சாப்பிடுவார்கள். சாம்பார் என்றால் ஜெனிட்டாவுக்கு ஆகவே ஆகாது. லில்லிக்கும் சிலசமயம் பிடிக்காமல்தான் போய்விடுகிறது. காரசாரமாய் வத்தல் குழம்போ, புளிக்குழம்போ வைத்தால் இரண்டு வாய் அதிகமாய்ச் சாப்பிடலாமென்று தோன்றும். ஆனால் அவளின் கணவன் சேவியருக்கு சாம்பாரைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது. தினமும் பருப்பை கடைந்து காய்போட்டு வேகவைத்து இறக்கி வைத்துவிட வேண்டும். மூன்று வேளைக்குமே சோறும் சாம்பாரும் கொடுத்தாலும் தின்றுவிட்டுக் கிடப்பான்.

“ஜெனி”

“என்னம்மா?”

“என்னடி பண்ற உள்ள?”

“ஆயி இருக்கப் போறம்மா”

“நீ ஒக்காந்திருக்கிற மாதிரி தெரியலையே. நின்னுக்கிட்டுல்ல இருக்கிற”

“சுவத்தில பெரிய பல்லி ஒண்ணு தாவுச்சிம்மா. அதான் எழுந்தன்”

“சரி ஒக்காந்து இரு”

“ம்”

‘கதவை மூடி வைத்துவிட்டுக்கூட உள்ளே நிம்மதியாய் நிற்க முடியவில்லையே ஆண்டவரே’ முணுமுணுத்துக் கொண்டாள் ஜெனிட்டா.

இந்நேரம் இந்த ஜெனிட்டா குமாரமங்கலம் சுந்தரமூர்த்தி அய்யங்கார் வீட்டு வாரிசாய்ப் பிறந்திருந்தால் இதுபோன்ற பிரச்சனையெல்லாம் அங்கேயும் ஏற்பட்டிருக்குமா என்று ஒரு கணம் நினைத்தாள் லில்லி. இதுபோல் ஒவ்வொரு சம்பவத்தையும் அந்தக் குடும்பத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்கும் பழக்கம் லில்லிக்கு எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இப்போது இது மட்டும்தான் அவளால் முடிகிறது. வேறு என்ன செய்வது? எல்லாமேதான் நடந்துமுடிந்து விட்டதே. திரண்டு வந்த கார்மேகம் மழை பெய்யாமலே கலைந்து போனதைப் போல லில்லி கண்ட கனவுகள் அனைத்தும் வீணாய் சிதைந்து போய்விட்டதே.

லில்லி படித்த அதே பள்ளியில் அதே வகுப்பில்தான் ரெட்டைத்தெரு ராமானுஜ அய்யங்கார் மகள் வனஜாவும் படித்தாள். ஏழாம் வகுப்பிலிருந்தே இருவருக்கும் நல்ல பழக்கம். வகுப்பில் அவளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், மற்ற ஆசிரியர்கள் அவளிடம் காட்டும் அக்கறை ஆகியவற்றை பார்த்த லில்லி வனஜா பேசும் அய்யங்கார் ஆத்து பாஷையும் அவளுடைய பழக்கவழக்கங்களும் ரெண்டும் கெட்டானாய் இருந்த லில்லியைக் கவர்ந்துவிட்டன.

வனஜாவின் பாஷையை தானும் ஓரளவு பேச கற்றுக் கொண்டாள் லில்லி. போதாக்குறைக்கு கடவுளின் அருள் பெற்ற பிள்ளைகள் மட்டும் தான் அய்யங்கார் ஆத்தில் வந்து பிறப்பார்கள் என்றும் வனஜா அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தாள். இது தானொரு அய்யங்கார் வீட்டு பெண்ணாய்ப் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை லில்லியின் மனதில் ஏற்படச் செய்திருந்தது. வனஜாவைப் போலவே நடந்துகொள்ள ஆசைப்பட்டாள். மீன், முட்டை, கறி இவற்றை ஒதுக்கியதோடு அவற்றைக் கண்டால் குமட்டவும் செய்தாள். இவைகளை விரும்பிச் சாப்பிடும் தன் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் ஒருவிதமான அசூயையுடன் பார்த்தாள் தான் ஒரு மதம் மாறிய கிருத்துவப் பெண் என்ற அடையாளத்தை சிரமப்பட்டு மறைக்க முயற்சித்தாள்.

ஆசிரியர் பயிற்சி படிக்க லில்லி வனஜாவைப் பிரிந்து கடலூர் சென்றுவிட்ட போதும் வனஜாவை மட்டுமே அவள் உற்ற தோழியாய் நினைத்தாள்.

கடவுளின் அருள்பெற்ற வனஜாவை ஒருநாள் தற்செயலாய் சினிமாக்கொட்டகை வாசலில் பார்த்தாள் லில்லி. அவள் வேறொரு ஆணுடன் தோள்கள் உரச உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தாள். லில்லி அதைப்பார்த்து அதிர்ந்துதான் போனாள்.

“என்ன வனஜா நீ இவன்கூட வந்திருக்கிற?”

“ஏய் அவன் இவன்னு ஏக வசனத்துல பேசாதடி. காதுல விழுந்துடப்போறது. அவரு இப்ப தாலுக்கா ஆபீஸ்ல நல்ல வேலயில இருக்கார் தெரியுமோ. மாதம் பதினெட்டாயிரம் சம்பளம் வாங்குறாராக்கும்”

“வாங்கட்டுமே அதுக்காக நீ ஏண்டி அவன்கூட வரணும்?”

“என்ன இது கேள்வி. சும்மா பொழுதுபோகாமயா நான் சுத்தறேன். நாங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறம்.”

“வீட்டுக்குத் தெரியுமா?”

“ஒனக்குத் தெரியாதா? எங்கக்கா கூட இப்படித்தான் வேற ஜாதிக்காரன விரும்பி வீட்டுக்குத் தெரியாமே கல்யாணம் பண்ணிண்டா. இப்ப திருக்கோவிலூருல ஜம்முன்னு வாழறா”

“அதிருக்கட்டும் ஒங்க வீட்டுல இதுக்கு ஒத்துக்குவாங்களாடி?”

“திரும்பத்திரும்ப என்ன இது கேள்வி. யாரு ஒத்துக்கணுங்கிற? நான் இவர்கூடத்தான் வாழப்போறன். இவர் ஒத்துண்டா போறாதா?” என்றவள்

“கல்யாணத்துக்குப் பிறகு சொல்றன். ஒருநாள் எங்க ஆத்துக்கு வந்துட்டுப் போ” என்றவாறே அவனுடன் வண்டியில் ஏறிப்போய்விட்டாள்.

குடும்ப மானத்தையும் கௌரவத்தையும் கட்டிக் காக்க வேண்டிய பெண் இப்படி பொறுப்பில்லாமல் போகிறாளே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டாள் லில்லி.

படிப்பு முடிந்த ஓராண்டுக்குள் லில்லிக்கு திருவண்ணாமலைப் பக்கம் வேலையும் கிடைத்தது. மேற்கொண்டு அஞ்சல் வழியில் படிக்க விண்ணப்பித்திருந்தாள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இளங்கலை கணிதம் எடுத்துப் படித்தாள். செமினார் வகுப்புகளுக்கு திருவண்ணாமலைக்குச் செல்வாள். வகுப்பில் வைத்துத்தான் முதன் முதலில் விக்னேஷ்வரனை சந்தித்தாள். பக்கத்து பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து வகுப்பைக் கவனித்தார்கள். அடிக்கடி இவளைப் பார்த்து புன்னகைத்தான். நெற்றிப்பட்டையும் கழுத்தை ஒட்டி தொங்கிக்கொண்டிருந்த ஒற்றை ருத்ராட்சக் கொட்டையும் பதிலுக்கு இவளையும் புன்னகைக்க வைத்தது.

இரண்டொரு நாளில் வனஜாவின் பிரிவை ஈடுசெய்வதாய் இருக்கும் இவனது நட்பு என்று நம்பினாள். நன்றாகப் பேசினான் அவன். வனஜா பேசும் அதே பாஷையில் இனிக்க இனிக்க அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத்தோன்றும் லில்லிக்கு. நாளாவட்டத்தில் அவன் உரிமையோடு அவளைத் தொட்டுத் தொட்டு பேசவும் ஆரம்பித்தான். லில்லிக்கு அப்படி அவன் நடந்துகொள்வதுகூட உள்ளுர மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது. அவனிடமிருந்து விலகிநின்று பழக வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.

தனிமையில் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் தன் வீட்டிற்கு வந்த பிறகு லில்லி கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் முக்கியமான பூஜைகளின்போது சொல்ல வேண்டிய சுலோகங்கள் பற்றியும் ஒவ் வொன்றாக அவளுக்குக் கற்றுக்கொடுத்தான். மூன்றாண்டு முடிவில் கல்யாணம் பற்றி பேசும் போது தான் விக்னேஷ்வரன் வீட்டில் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பது லில்லிக்கு தெரியவந்தது. இவ்வளவு ஆசைஆசையாய் பழகி கடைசியில் பிரிவதா? லில்லியால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லா கனவிலும் மண் விழுந்துவிட்டது என்று கலங்கித் தவித்தாள்.

கடைசியாய் சந்தித்தபோது விக்னேஷ்வரன் சிறியதொருபிள்ளையாரைக் கொடுத்து “லில்லி இது எங்க தாத்தாவோட அப்பா காலத்துலேருந்து எங்காத்து பூஜை அறையில் இருந்தது. இத என்னோட ஞாபகமா நீ வச்சிக்க. ஒனக்கு ஏதாவது கஷ்டம் வந்தாக்கூட இத எடுத்து கைல வச்சிக்கிட்டு நான் சொல்லிக்கொடுத்த சுலோகத்த சொல்லு. கஷ்டமெல்லாம் வெலகிடும். மனசார நான் ஒன்ன விரும்பினதுக்கு என்னால செய்ய முடிஞ்சது இது மட்டும்தான். என்ன மன்னிச்சிடு லில்லி” என்று தழுதழுத்தான் அவனின் கலங்கிய கண்களைப்பார்த்து நெகிழ்ந்து போய்விட்டாள் லில்லி. “பரவால்ல, நீங்க அழுதா, என்னால அத தாங்கிக்க முடியாது. நான் எப்பவும் ஒங்கள நெனச்சிட்டேத்தான் இருப்பேன்.” என்று பதிலுக்கு இவளும் உணர்ச்சிகளை கொட்டிவிட்டு பெருந்தன்மையோடு பிரிந்துவந்து விட்டாள்.

லில்லியால் நிம்மதியாய் இருக்கமுடியவில்லை. தன் தோழி வனஜாவிடம் பிரச்சனையை சொல்லிப் பார்க்கலாமா என்று நினைத்தாள் அவள் மூலமாக ஏதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்குமென்ற நப்பாசையில் அவள் வீட்டுக்குப் போனாள்.

வனஜா அதற்குள் இரண்டு பிள்ளைகளை பெற்றிருந்தாள். இரண்டும் நல்ல சூட்டிகையாய் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தன. வனஜாவை ஒரு ராணியைப்போல் வைத்து பார்த்துக்கொண்டிருந்தான் அவளுடைய கணவன்.

பேச்சை ஆரம்பித்து மெதுவாக தன் விஷயங்கள் அனைத்தையும் சொன்னாள் லில்லி. எல்லாவற்றையும் கேட்ட பிறகு. “எங்கிட்ட ஒரு வார்த்த இதப்பத்தி சொல்லியிருந்தா முன்கூட்டியே நான் ஒன்ன தடுத்திருப்பனே. இப்படி ஏமாந்திட்டியேடி” என்று லில்லிக்காக உண்மையாகவே வருந்தினாள் வனஜா.

“நீயெல்லாம் வேறு ஆள கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழலயா. எனக்கு மட்டும் ஏண்டி இப்படி?”

மெதுவாக இவளின் காதோரம் குனிந்து.

“எங்க மனுஷாள் தம் வீட்டு பொண்ணுங்க எந்த கீழ்சாதி பையன விரும்பினாலும் கல்யாணம் பண்ணிண்டு தொலையட்டுமுன்னு விட்டுடுவாங்க. ஆனா ஆண்பிள்ளைகள மட்டும் அப்படி ஒருநாளும் விடவே மாட்டாங்க. குலம் கோத்திரம், பதினாறு பொருத்தம் எல்லாம் பாத்துதான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. எங்க பையனுங்க வேற பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சி நீ எங்கயாவது பாத்திருக்கிறியா சொல்லு”

மௌனமாய் உட்கார்ந்திருந்தாள் லில்லி.

“வேத்தாள ஆத்துக்குள்ளயே சேக்கமாட்டாங்க. அதுவும் மாட்டுப்பொண்ணா சேக்கணுமுன்னா முடியுமா சொல்லு”

தன்னை விக்னேஷ்வரன் ஏன் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதற்கான காரணம்கூட லில்லிக்கு நியாயமாக தெரிந்தது. வேறுவழியில்லை என்று நினைத்து தன் மனதை தேற்றிக் கொண்டாள்.

பிறகு வீட்டில் ஏற்பாடு செய்த சேவியருடன் மோதிரம் மாற்றிக்கொண்டு அவனுக்கு மனைவியான போதும் விக்னேஷ்வரன் கொடுத்த பிள்ளையாரை மட்டும் மறக்காமல் தன்னுடனே வைத்துக் கொண்டாள். மரப்பிள்ளையாரும் சுலோகமும் அவளுக்கு அவ்வப்போது கைகொடுத்து உதவியதாகவும் நம்பினாள்.

தன் மகள் ஜெனிட்டாவின் கையில் அந்த பிள்ளையாரைக்கொடுத்து சுலோகத்தை சொல்லச்செய்யலாமா என்று அடிக்கடி தோன்றும். அவள் தன் அப்பாவிடம் சொல்லி ஏதாவது புதுப்பிரச்சினை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இது நாள் வரை அப்படி செய்யாதிருந்தாள். ஆனால் இனிமேலும் யோசிக்கக்கூடாது. இன்றைக்கு அதை செய்துவிட வேண்டும். ஜெனிட்டாவே கூட இது என்ன ஏதென்று ஆயிரம் கேள்விகளைக் கேட்கலாம். கேட்கட்டும். கேள்விக்கு பதில் சொல்வது முக்கியமில்லை. நமக்கு காரியம் நடந்தாக வேண்டும். அதுதான் முக்கியம் என்று நினைத்தவள்.

“ஜெனி” என்றாள் கழிப்பறையைப் பார்த்து.

“ம்”

“என்ன ஆச்சா?”

“இன்னும் இல்லம்மா.”

“இரு வர்றன்.” என்றவள் அலமாரியில் மறைத்து வைத்திருக்கும் பிள்ளையாரை எடுத்துவரப் போனாள். அதே நேரம் “லில்லி தயிர் வேணுமா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் சேவியர்

“ரெண்டு ரூபாய்க்கு வாங்குங்க” என்றவள் ‘போச்சி இவன் வந்துட்டான். இன்னக்கும் முடியாது’ என்று தனக்குள்ளே அலுத்துக்கொண்டாள்.

“மணி எட்டு ஆயிடுத்துடி ஜெனி... இனிமே எப்ப குளிக்கிறது எப்ப சாப்பிடுறது. தலவேற கட்டணும்.” சத்தம் போட்டாள்.

“நான் குளிக்கிறம்மா”

“இன்னொரு தடவ ஒக்காந்து பாரு ஜெனி”

“....”

“கிருமிகள் ரெத்தத்துல கலந்துரும் ஜெனி.”

“முடியலம்மா வலிக்குது.”

“ஒக்காந்து ட்ரை பண்ணி பாரு ஜெனி”

கழிப்பறைக்குள்ளிருந்து அழும்குரல் கேட்டது.

“என்ன ஜெனி அழுவுறியா?”

இன்னும் சற்று உரக்க தேம்பினாள் அவள்.

“கதவ தொற ஜெனி. இப்ப எதுக்கு அழுவுற?”

ஜெனிதா கதவைத் திறந்து பேப்பரைக் காட்டிவிட்டு மேலும் சத்தமாய் அழுதாள். பேப்பரில் இரண்டு மூன்று சொட்டு ரெத்தம் மட்டும் இருந்தது.

“எப்பவும்தான் ரெத்தம் வரும். அதோட டாய்லெட்டும் வந்துரும். இன்னக்கி ரெத்தம் மட்டும் வந்துருக்கு. உள்ள இழுத்துக்கிட்டியாடி. இறுக்கி இறுக்கிவச்சி என்னடி பண்ணப்போற. அய்யோ கடவுளே... ஆண்டவரே... என்னால தாங்க முடியலயே...” தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள் லில்லி.

இவற்றையெல்லாம் கவனித்தபடியே தயிரை வாங்கிவந்து வைத்த சேவியர் “லில்லி அவள விடு. நீ பள்ளிக்கொடம் கௌம்புற வேலயப்பாரு” என்றான்.

திரும்பி இவனைப் பார்த்தாள்.

“நானும் ஜெனியும் ஊருக்குப் போறம். நம்ம கொல்லயில இன்னக்கி அறுப்பு அறுக்குதாம். எங்கப்பா வரச்சொல்லி பேசுனாங்க”

“பள்ளிக்கொடம்?”

“நான் ஒரு வாரத்துக்கு மெடிக்கல் லீவு வரும்போதே பாபு வாத்தியார்கிட்ட குடுத்துட்டு வந்துட்டன்.”

“அப்ப ஜெனி?”

“அவளுக்கும் ஒரு வாரம் லீவு சொல்லிட வேண்டியது தான்.”

“என்னங்க இப்புடி திடீருன்னு?”

அதான் சொன்னேன்ல. அறுப்பு அறுக்குதாம். அண்ணங்க யாரும் வீட்டுக்கு வரலயாம். எங்கப்பா பாவம். வயசானவங்க அவங்க. என்ன செய்வாங்க. இந்த முறை நான்தான் போகணும்.”

“ஜெனி எதுக்கு?”

“நான் மட்டுந்தான் போவமுன்னு நெனச்சன். இப்பத்தான் இவளயும் கூட்டிப் போகலாமுன்னு தோணுச்சி. பாவம் தெனமுந்தான் °கூல் போறா. ஒரு வாரம் ஊருல வந்து இருக்கட்டுமே. பக்கத்துவீட்டு புள்ளங்ககூட விளையாடிட்டு வரட்டும். கிராமத்து அனுபவமும் அவளுக்கு கெடச்ச மாதிரி இருக்கும்”

“அப்ப நான் மட்டும் தனியா இருக்கணுமா?”

“நீயும் வேணுன்னாலும் லீவு போட்டுட்டு வாயேன்”

“அதெல்லாம் முடியாது. எங்க ஸ்கூல்ல ஏற்கனவே ரெண்டு பேரு மெடிக்கல் லீவுல இருக்காங்க”

“அப்பன்னா சனிக்கெழம வா. நாங்க இப்ப போறம்.”

“ஜெனி இப்படி இருக்காளே”

“அவள நான் பாத்துக்கிர்றன்.”

“அவ வயிறு ரெண்டுநாளா ரொம்ப சிக்கலாருக்குங்க.”

“நான் பாத்துக்கிர்றன்.”

“ஒங்கக்கிட்ட கூச்சப்படுவாங்க.”

“அத விடு. எங்கம்மா இருக்காங்கல்ல. அவங்க பாத்துப்பாங்க. இப்ப அவள யாங்கூட கிளப்பி விடு.”

“போற வழியில நெல்லை விநாயகா ஸ்வீட் ஸ்டால்ல கொஞ்சம் தின்பண்டம் வாங்கிக்கிட்டு போங்க.”

“ஊருல இல்லாத தின்பண்டமா?”

“ஒரு வாரம். ஒண்ணுமில்லாட்டி ஏங்கிப் போயிடுவாங்க.”

“எனக்குத் தெரியாதா, கொல்லய சுத்தி சோளம் வெளஞ்சிநிக்கிது. களத்துமேட்டுல ஒருபக்கம் பயத்தங்கா. இன்னொரு பக்கம் தொவரை. கேப்ப கருதும் கம்மங்கருதும் வாட்டிக்குடுப்பாங்க எங்கம்மா. அந்த வாசனயே அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்பா. நீ வேணுன்னா அவளக் கேட்டுப் பாரேன்.”

“ஆமாம்மா அனிதா மேரியக்கா நிச்சயதார்த்தத்துக்குப் போனப்ப எனக்கு ஆயா வாட்டிக் கசக்கிக் குடுத்தாங்கம்மா. ஆனா என்னாலதான் நெறயா திங்க முடியல. அப்பா கூட்டிட்டு வந்துட்டாரு.”

“சரி சரி போதும் போ”

அழைத்துக் கொண்டு போயே விட்டான்.

ஒரு வாரத்திற்கு ஜெனிட்டாவோடு மல்லுக்கட்ட வேண்டியதில்லை என்று சற்று நிம்மதியாய் இருந்த போதும் ஜெனிட்டாவைப் பற்றி கவலையாகவே இருந்தது. ‘கிராமத்தில் போய் தினமும் எப்படி வெளிக்குப் போவாளோ யாரும் பார்க்காமல் இஷ்டப்படி முக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்க பாத்ரூம் வசதிகூட இல்லையே’ இதுவரை ஒவ்வொன்றையும் மகளுக்கு பார்த்துப் பார்த்து தன் கையாலேயே செய்து பழக்கப்பட்டுவிட்டாள் லில்லி. ஜெனிட்டா இல்லாதது வெறுமையாய் இருந்தது. ஊரில் வைத்தே அவளுக்கு இந்தமுறை பிள்ளையார் வைத்தியத்தை செய்துபார்த்துவிடுவது என்று திட்டமிட்டுக் கொண்டாள். சனிக்கிழமை எப்போதும் வரும் என்று காத்திருந்தாள்.

சனிக்கிழமை விடிந்ததும் விடியாததுமாக கிளம்பி விட்டாள். ஊருக்கு வரும் முதல் பேருந்தில் வந்திறங்கி லில்லியை சேவியர் எதிர்கொண்டு அழைத்துப் போனான். வீட்டிற்கு போவதற்குள் ஜெனிட்டாவைப் பற்றி ஆயிரம் விசாரிப்புகள்.

அம்மா வரும் என்று ஜெனிட்டாவுக்கு தெரியும். இருந்தபோதும் எப்போது வருவாள் என்று அதைப் பற்றி அவள் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை. லில்லி வீட்டிற்கு சென்ற நேரத்தில் அவள் வீட்டிலும் இல்லை.

“ஜெனி எங்க அவளக்கூப்பிடுங்க.”

“நீ காப்பி குடிச்சிட்டு வா. நம்ம களத்துமேட்டுக்குப் போவம். ஜெனி அங்கதான் போயிருப்பா.” இருவரும் களத்துமேட்டிற்குப் போனார்கள். லில்லி தன் முந்தானை மறைப்பிற்குள் பிள்ளையாரை எடுத்து வைத்துக்கொண்டு வந்திருந்தாள்.

நெல் பட்டறைகளைக் காட்டி “இந்த வருசம் நல்ல விளைச்சல்” என்றான் சேவியர்.

“அதிருக்கட்டும் ஜெனி எங்கங்க?”

பழைய புதர்மண்டிய திட்டை நோக்கி கையைக் காட்டினான். புதர்களின் மறைவில் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் ஊசியா? உலக்கையா? நூலா? கேட்டுக் கொண்டு தூரமாகவும் பக்கம் பக்கமாகவும் பாவாடையை மழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். முந்தைய இரவில் அவர்களின் பாட்டி சொன்ன ஆறுமரக்கால் பல்லுக்காரன் பிடித்துக் சென்று அடைத்துவைத்துள்ள பிள்ளைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்படியெல்லாம் அந்த பல்லுக்காரனிடமிருந்து தப்பித்து வரலாம் என்று தீவிரமாய் யோசித்து ஆளுக்கு ஒரு யோசனையாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

லில்லி தன் மகள் ஜெனிட்டாவின் குரல் வரும் திசையில் பின்பக்கமாய் சென்று அவர்கள் யாரும் அறியாதவாறு மறைந்து நின்று கொண்டாள். குனிந்து ஜெனிட்டா உட்கார்ந்திருக்கும் இடத்தை உற்று பார்த்தாள்.

ரெத்தம் சிந்தாமல் வலிய வேதனை எதுவுமில்லாமல் அதுபற்றிய உணர்வுகூட இல்லாமல் வெகு அனாயசமாய் புதர் மறைவில் ஜெனிட்டா உருவாக்கியிருந்தாள் பொன்னிறத்தில் மின்னும் அதை. அது தன் முந்தானைக்குள் மறைத்து எடுத்து வந்திருக்கும் பிள்ளையாரைப் போன்று உருவத்தில் அப்படியே ஒத்திருந்தது. இதழ்கடையில் சிறு புன்னகை நெளிய இது இனிமேல் தேவையில்லை என்று நினைத்தவள் கையிலிருந்ததை நழுவவிட்டாள். கணவன் நிற்குமிடம் நோக்கி நடந்தாள். தூரத்தில் மாதாகோவில் மணி ஒலித்துக்கொண்டிருந்தது.