Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sancharam
Sancharam Logo
மார்ச் - மே 2008
நந்தன் கதை:ஒரு மறுவாசிப்பு
மு.சிவகுருநாதன்

வரலாற்றுக்கும் புனைவுக்குமான இடைவெளி சொல்லப்பட்ட/எழுதப்பட்ட/தொகுக்கப்பட்ட அல்லது சொல்லப்படாத/எழுதப்படாத/ தொகுக்கப்படாத வரலாற்றின் இடைவெளியைப் போன்றது தான். புனைவுகளே வரலாறாக கட்டமைக்கப்பட்டிருக்கிற நிலையில் வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யவும், மறுவாசிப்பு செய்யவும் புனைவுகள் பெரும்பங்காற்ற முடியும். பழம் புனைவுகளை கேள்விக்குட்படுத்து வதும், புதுப்புனைவுகளை உருவாக்குவதும் வரலாற் றின் இடைவெளிகளைக் கடக்க/நிரப்ப பெரிதும் பயன்படும்.

அக்னியில் ஆகுதி பெய்து கடவுளை வழிபடும் வழக்கமுடையவர்கள் பிராமணர்கள் (ஆகுதி - யாகத்தில் வளர்க்கும் தீயில் இடப்படும் பொருள்) ஆகுதியாக, வரலாற்றின் பக்கங்கள் நெடுகிலும் நந்தன்களும் ராமலிங்கன்களும் தீயிட்டு எரிக்கப் படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நந்தன் கதை வரலாறா அல்லது புனைவா என்ற கருத்திற்குள் செல்லாமல் நந்தன் என்றொரு மனிதன் வாழ்ந்திருப்பானேயானால் அக்கால சமூகச் சூழல் களில் பின்னணியில் ‘மரக்கால்’ என்ற நாவலைப் படைத்துள்ளார் சோலை சுந்தரபெருமாள். ‘மரக்கால்’ ஒரு குறியீட்டுப் பெயர்; பல்வேறு உள்ளர்த்தங்கள் பொதிந்தது. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமை, போராட்டமாய் இன்றும் தொடர்கின்ற நிகழ்வுகள். இக்குறியீடு நாவலில் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

நாவலைப்பற்றி பேசாமல் நாவல் என்ன பேசுகிறது என்று பார்ப்போம்.

“பிரம்மதேயங்கள் மக்களுக்கு எந்தக் குறையும் வைக்காமல் தான் செயல்படுகிறார்கள்”. சவுண்டிப் பார்ப்பனர்களுக்கு சிவாச்சாரிகளுக்கும், அந்தந்த குடும்பத்தினர்களுக்கு ஏற்றார்போல் பிரம்மதேயம் படியளந்துவிடும் (பக். 20). இரும்புக் கொல்லர்கள், மரத்தச்சர் மற்றும் கொத்தர்களுக்கு, அவரவர் செய்யும் வேலைகளுக்கு ஏற்றார்போல பிரம்மதேயம் படியளக்கிறது. அவர்களின் குடிசைகளைச் சீர் செய்ய தென்னை மட்டை, பாளை, மூங்கில்களை கட்டளை கொடுக்கிறது. கனகதாசியின் வசந்த விலாசத்தில் மட்டும் குச்சிப்பந்தம் எரியவிட 14படி பசு நெய் அளந்து விடப்படுகிறது (பக்.22).

ஆதனூர் பறையர்கள் தங்களுடைய குடிசைகளைப் பத்து அடி உயரக் குறுமாடி வைத்து குறுக்குவில் போட்டுக் கட்டிக் கொள்ள ஆதனூர் பிரம்மதேயம் அனுமதி தந்திருந்தது (பக்.23). இந்த சிறப்பு உரிமை பெற்றவர்கள் ரெண்டு படை சுவர் எழுப்பி அதன் மேல் மூங்கில் சாத்துப் போட்டுக் கட்டிக்கொள்ள முடியும். பிறர் கூம்பாக் கணக்கா சாத்து நிறுத்தி, கொப்பறையாகத்தான் குடிசை கட்டிக் கொள்ள வேண்டும் (பக்.23). நந்தன் கச்சலையை திருமணம் செய்ததற்கு, கட்டளைப் படியாக மஞ்சள் துணியோடு மஞ்சள் துண்டு கட்டிய கயிறுடன் பச்சரிசி, கருப்பொட்டி, தேங்காய் பழத் தோடு கூடிய பெரு மடக்கை, செவலை வளத்திக்கு (நந்தனின் தாய் தந்தை) வழங்கப்படுகிறது (பக்.25).

நந்தன் - கச்சலை, சோடி சேர்ந்ததும், பிரம்மதேயம் அவர்களைத் துணைக்குடிக்கான வழி வாகை செய்யக் கண்காணிகளுக்குக் கட்டளை பிறப்பித்திருந்தது (பக். 26). சிறுகாணி அம்பட்டனுக்கு பண்ணை அடிமை களுக்கு கொடுக்கும் தினப்படி, பிரம்மதேயக் கட்டளையே கொடுத்துவிடும் (பக்.30). சூத்திரத் தெருவிற்கு தீவட்டிகள், அது அணையாமல் எண்ணெய் போட தலையாரி, சண்டாளர்கள் தீவட்டியிலிருந்து குச்சி பந்தங்களைப் பற்ற வைக்கும் உரிமை, புயல், மழை இருப்பினும் அரசமரத்தடி துவட்டி ஏற்றி வைக்கப்படுவதை உறுதி செய்யும் பிரம்மதேயம் (பக்.32). செட்டியாரின் முறையீடான தீர்வைக் குறைப்பு மற்றும் கூடுதல் சோற்றுப் பட்டைக்கு உடன் இணங்கும் பிரம்மதேயம் (பக்.33). பறையர்களின் தலைக்கட்டுக்கள் மாசம் முச்சூடும் கறி ஆக்க மிளகாய் செலவு குட்டானில் அளந்து வைக்கப்படுதல் (பக்.34) என்று பல்வேறு உரிமைகளை வழங்கியிருக்கிறது பிரம்மதேயம்.

‘பார்ப்பானுக்கு மூப்பன் பறையன் அவன் கேட்பார் இன்றி செத்தான்’ என்ற பழிபாவம் தன் இனத்திற்கு வந்துவிடக்கூடாதுங்கிறதில் உணுப்பாய் இருக்கும் மருதவாணம் பிள்ளை தலை எடுத்த பின்னர்தான் பண்ணை அடிமைகளுக்குத் கள்ளுபடி போட பிரம்மதேய அதிபரிடம் அனுமதி வாங்கினார். (பக்.101)

பண்ணையடிமைகளுக்கு உணவுக்குப்படி அளப்பதைப் போலவே ‘கள்ளும்’ வழங்க ஏற்பாடு செய்துள்ளார், மருதவாணம் பிள்ளை. மேலும், “இதுபோல மழை வெள்ளக்காலத்தில் தென்னை மர சாணர்கள் வடிக்கும் கள்ளை, சால்களில் நிரப்பிப்போட்டு இருப்பது சீறிக்கொண்டு கிடந்தாலும் இதுபோல மழை வெள்ளக்காலங்களில் கிடந்து லோலுபடும் இந்த பண்ணை அடிமைகள் உடம்பையும் மனசையும் சூடுபடுத்திக்கொள்ள, உடம்பு வலியை மறக்கடிக்கவும், கசாயம் காய்ச்சிக் குடிச்சிக்க வேண்டிய கசகசப் பட்டையையும், லவங்கப்பட்டையையும் கொல்லி மலை செட்டி மூலம் வாங்கி வைத்துக் கொண்டு மழைக்காலப்படியோடு இதுகளையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார் மருதவாணம்பிள்ளை (பக்.102).

இதுமாதிரி அளக்கவேண்டிய படிகளனைத்தும் அளந்தும், குடிசை போடவும், சாப்பிடவும் வழிவகை செய்கின்றன பண்ணை மாகாணங்கள். அவர்கள் செய்ய மறுத்தாலும் வாதாடிக் கேட்டுப்பெற மருத வாணம் பிள்ளை போன்ற வள்ளல்கள் இருக்கிறார்கள். இந்த பண்ணையடிமைகளுக்கு இது போதாதா? சிவதரிசனம் வேறு வேண்டுமாக்கும்.

திருப்பங்கூர் திரிலோகநாதரை தரிசிக்க பறையர் பண்ணையடிமைகளுக்கு பிரம்மதேய அதிபர் முத்து சாமி தீட்சிதர் அனுமதியும் அளிக்கிறார். இதைவிட வேறு என்ன வேண்டும்? காலந்தோறும் அடிமையாக்கிட இது போதாதா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மாட்டுப் பொங்கல் நாளில் சினைப்பிடிக்காத வறட்டு மாடுகள் மற்றும் பாரவண்டி, ஏருக்குப் பயன்படுத்தி பாடாவதியான மாடுகளை பறைச்சேரியின் தலைக்கட்டுக்கு அனுப்பி கறிபோட்டு பிரித்து பங்கிடும் பிரம்மதேயம் (பக்.180). மேலும், கணபோகத்தில் குடி உரிமையுள்ள அனைத்து சாதியினருக்கும் ஓட்டுவில்லை வீடுகளாகக் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்ற திட்டப்படி ஓட்டு வீடுகள் கட்டப்பட்டது. அடிமைப் பட்டு கிடக்கும் பறையர் பண்ணை அடிமைகளையும், அவர்கள் பசி என்று நோவாமல் வயிற்றுச் சோற்றுக்கும் இடுப்புத் துணிக்கும் சத்திரம் கவனித்துக் கொண்டு இருக்கிறதோட குந்துமிடத்தையும் சேர்த்துப் பேசி முடிவு எடுத்துவிட வேண்டும் என்ற நினைப்பில் பேச்சை கிளப்பி விட்டிருக்கும் ஞானசம்பந்தப்பிள்ளை (பக்.115).

பிரம்மதேயம் பண்ணை அடிமைகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தது சனாதான தர்மம். பண்ணை அடிமகளுக்குச் சலுகை காட்டப்பட்டதாகவும் படியளக்கப்பட்டதாகவும் நாவலில் காணமுடிகிறது. இதனால் ‘மரக்காலுக்கு’ போதிய முக்கியத்துவம் இல்லாமற் போகிறது.

வேத மதங்களுக்கெதிராக சைவ மதம் அனைத்துப் பிரிவுகளிலிருந்து சிலரைப் பொறுக்கியெடுத்து அறுபத்து மூவராக ஆக்கியிருப்பதை ஜனநாயகத் தன்மை கொண்ட விஷயமாக பார்ப்பது (பக்.5), சைவசமயக் கொடுமைகள், ஆதிக்கங்கள், வைதீகத் தன்மைகள், போன்றவற்றைப் பின்னுக்கு தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது. சைவத்தை வேத மதத்திற்குக் கெதிராகவும், பார்ப்பனீயத்துக்கு எதிரானதாகவும் கட்டமைப்பது மற்றொரு பார்ப்பனீயமாகவே மாறி விடும். சைவத்தை அவ்வளவு Positive ஆக பார்க்க வேண்டியதில்லை.

நாவலில் சைவ ஆதரவுக் கூறுகள் நிறைய இருக்கின்றன. “ஓம், ஓம்” என்ற மந்திரத்தின் ஓசை வெளிப்படக் காற்றையே உட்கொண்டு காற்றையே வெளிப்படுத்தினார். சிவமே அவருள் குடிகொண்டது போல் மகாதேவ ஈ°வரரின் ஆலயத்தை அடையப் போகும் அவரை, அவர் கடந்த பின் போவாரின் மீது அவர் கவனம் மேலெழுந்தவாரியாகக் கூடபடவில்லை. இப்படி நடந்து ‘சிவ சிவ’ மந்திரத்தை ஆன்ம வெளியில் உள்ளடக்கிப் போகும் போது வெளிப்படும் அவரின் நடையில் கூட இன்று ஒரு மாற்றம் தெரிந்தது”.

“இந்த மண்ணில் சிவம் ஒன்றே இருந்தது. மன்னர் களிலிருந்து சாதாரணத் தொழில் வழி மக்கள் வரையிலும் சிவத்தையே போற்றி வணங்கினார்கள்” (பக்.221).

“அந்த வஞ்சகர்கள் சிவனையும் தங்களுடைய கடவுளர் என்று சுவீகரித்து சிவமதத்தை அழித்து சர்வமும் வேதமதமாக்கும் திட்டத்துடன் பல பிரம்மதேய அதிபர்களைத் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...” அந்தப் பரதேசியின் பேச்சைக் கேட்ட மருதனுக்கு சர்வமும் விளங்கிற்று (பக்.222).

“சைவப் பரதேசிங்க சனங்க கூடும் இடங்களில் எல்லாம் வேதமதத்துக்குக் காரவங்களை, கடுமையா சாடி தமிழ் மொழிதான் சிவனுக்கு உகந்த மொழின்னும் தெய்வ மொழின்னும் பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கிறத கொள்ளிடக் கரையில் கேட்டுக்கிட்டுதான் வந்திருக்கிறேன்....” (பக்.233).

நந்தன் கதையில் சைவத்திற்கு தானே முக்கியத்துவம் இருக்க முடியும்? என்று கேட்கலாம். ஆனால் அதே காலகட்டத்தில் இங்கு இருந்த பவுத்த, சமண மதங்கள் பற்றிய விவரணைகள் மிகவும் குறைவு.

“இப்போது இந்த திராவிட தேசத்தில் நீச சமண மதத்துறவிகள் பண்ணை மாகாணங்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நீச சாதிக்காரனுங்களை எல்லாரையும் ஒன்றுதிரட்டும் நோக்கத்தில் செயலில் இறங்கியிருக்கிறார்கள் என்பது ருசுவாகியிருக்கிறது” (பக்.76).

“அக்கம்பக்கமெல்லாம் சமணமத சாமியாருங்க கலகத்தைக் கௌப்பிவிட்டு குட்டையைக் குழப்பி மீன் புடிக்கிறானுங்க. நம்ம பிரம்மதேயத்துல சமணமதத் துறவிங்க இதைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கானுங்க.” (பக்.104).

“ராஜாங்கம், நீசனுங்களையெல்லாம் சமண மதத்தில் சேர்க்க தந்திர உபாயத்தைப் பத்தி யோசித்து வருகிறதாகவும் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக அதிகாரத்துக்கு கொண்டு வந்தா சமண மதத்தையும் பரப்ப முடியும்ன்னு சமணத்துறவிகள் சொன்னதையும் பரிசீலிக்கிறதாகவும் இருக்காம்” (பக்.233).

இவற்றையெல்லாம் சைவமேன்மை பேசப்பயன்படுத்தலாமே தவிர நடைமுறைப் பொருத்தப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

மருதவாணம் பிள்ளை பண்ணையடிமைகளுக்கு மட்டும் சலுகை காட்டியவரல்ல. முத்துசாமி தீட்சிதர் மற்றும் கனகதாசி என்று அவரின் கடைக்கண் (பக்.69) பார்வை பட்டோர் பட்டியல் நீண்டது. இதைப் போலவே சிவவடிவேலு உடையார், ஞானசம்பந்தம் பிள்ளை போன்ற சைவத் தொண்டரணியினர் சைவப் புகழைப் பரப்பி நிற்கின்றனர் நந்தனைவிட அதிகமாக.

“அவருக்கு ஒன்று என்றால் ‘சூ’ என்ற கூடிகொள்ள சாதிக்காரவங்க மட்டுமில்லாம மேலண்ட, வடவண்ட பறையர்த்தெரு சனங்களும் இருக்கு. இப்புடி ஒன்னடி முன்னடியா வாழறதுங்க ஞானசம்பந்தன் பிள்ளை கிழிக்கிறக் கோட்டை இதுநாள் வரையிலும் யாரும் தாண்டினது இல்லை” (பக்.109).

பறையர்களும் வெள்ளாளர் உள்பட இதரச் சூத்திரர்களும் ‘ஒன்னடி முன்னடியா’ வாழுகிற சூழலில் பிரச்சினைக்கு வேலை ஏது? அவரவர்களுக்கு இட்ட வேலையையும், விதிக்கப்பட்ட அத்துக்களையும் தாண்டும் போது தான் சிக்கல் வருகிறது.

சிவவடிவேலு உடையார் பண்ணை அடிமைகளுக்கு உள்ள நித்தியப்படியை தவறாமல் அளந்து விடுகிறார். (பக்.109) “உடையான் ஒன்பது குடிக்கு “ஓடு” பிரிக்கிற உரிமையைத் தாரை வார்த்துக் கொடுத்துட்டு சாதி வெள்ளாளன் பார்த்துக்கிட்டு இருக்கமுடியாது,” என்று தன்னோட அங்காளி பங்காளியிடம் பேசும் சிவவடிவேலு உடையாரால் ஞான சம்பந்தம் பிள்ளையைத் தீண்ட முடிவதில்லை. (பக்.109).

“உடையாருங்க குடி ஒன்பதுன்னு சொன்னாலும் இன்னிக்கு வேளாளக்குடியில, பாதிய, தொட்டுட் டாங்க” (பக்.110) உடையாருக்கு பிள்ளைக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இவர்களை சைவம் ஒன்றிணைக்கிறது.

“எப்பவாவது இதுபோல அவசரமாய் ஊர் மன்றத்தைக் கூட்டும் போதெல்லாம் ஞானசம்பந்தம் பிள்ளை, சிவவடிவேலு உடையாரை நந்தவனத்துக்கு அழைத்துக் கொண்டு போய் உக்காந்து பேசியிருந்து விட்டுத்தான் வருவார்.” (பக்.111)

இவர்கள் கூடி எடுக்கும் முடிவுதான் ஊர் மன்றம் எடுக்கும் முடிவு. பார்ப்பனீயத்திற்கு கொஞ்சமும் சளைத்ததில்லை இந்த சிவமதமும்.

நாவலில் கனகதாசி, அவள் மகள் நீலாம்பரி, தர்மவர்த்தினி, கேசி போன்ற தாசிகள் வருகிறார்கள். இதில் கேசி கனகதாசியின் துணையாக வருபவள். எடுபிடி வேலைகள் செய்யத்தொடங்கி இசை, தாளக்கட்டை தட்டி சுப்ரமணிய சிவாச்சாரியின் ‘தேவைக்கு’ உடன்பட்டு, அவள் இடத்திற்கு புதிய காணிக்கை வந்தபின், சுக்கிர வன்னியனால் வசப்படுத்திக் கொள்ளப்பட்டவள் (பக்.14). கேசியும் அவன் தோதுக்கு ஈடுகொடுத்துக்கொண்டு மிதிப் பட்டுக் கிடக்கும் கூளம் போலக் கிடந்தாள் (பக்.15).

“கனகதாசி பனிரெண்டு வயதைத் தொட்டதும் அவள் பூப்பெய்திய சடங்கைப் பிரம்மதேயமே கொண்டாடி சந்தோஷிக்க பிரம்மதேய அதிபர் ஏற்பாடு செய்திருந்தார்” (பக்.67) “மகன் வாலிப பருவத்தின் முறுக்கில் அவன் கனகதாசியின் கொள்ளை அழகிலும் உடம்பின் சூட்சுமத்திலும் லாகிரியை உண்டவன் போல”, (பக். 67) கிடந்த முத்துசாமி தீட்சிதருக்கு வாத்ய ஸ்யானரின் காம சூத்திரத்தின் வழிகாட்டலை அள்ளி வழங்கியவள்.

அவள் மகள், “நீலாம்பரி மாரில் இறுக்கலாகக் கட்டியிருக்கும் கரு நீலநிற கச்சை நெளிவு சுழிவுகளை அடக்கி வைத்துக் கொள்ளவில்லை. அவளின் திரட்சியான, அங்கலாவண்யங்களை முழுமையாக இறுக்கித் தன் வசப்படுத்த வாய்ப்பு இல்லாமல் ஒண்டிக் கிடந்தது” (பக்.68).

இந்த அழகை மகாதேவ ஈஸ்வரர் காண வேண்டு மல்லவா? அதற்குத்தான் சாயரட்சை காலத்தில் கனகதாசி செய்யும் சோடசோபசாரப் பூஜை; இப்பூஜை தாசியின் நிர்வாணத்தை ஈ°வரன் பெயரால் காட்சிப்படுத்துவது. அர்ப்பணம் முடிக்க அரை நாழிக்கு மேல் ஆகும் (பக்.70).

“கனகதாசியின் கூந்தலிலும் கழுத்திலும் மலர்ச் சரங்கள் மட்டுமே பற்றிருந்தன. மாரிலும் இடுப்பிலும் கட்டியிருந்த கச்சை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வெண்திரையில் கருவறை வாயில் சர விளக்கின் ஒளியில் நிழலாகத் தெரிந்த கனகதாசியை அவள் பெற்று இருக்கும் நிர்வாணத் தோற்றத்தை ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது.” (பக்.70)

முத்துக்கள் பதித்த மயில் சிவிகையில் கனகதாசி, நீலம்பரி ஆகியோர் பவனிவரும் உரிமை முத்துசாமி தீட்சிதரால் அளிக்கப்பட்டது. சனாதானத்திற்கு எதிரானதாக கூறப்பட்டாலும் (பக்.67) முத்துசாமி தீட்சிதரால் காற்றில் பறக்கவிடப்பட்டது தாசிகளின் வாழ்வும் உரிமைகளும் கூடத்தான்.

தர்மவர்த்தினியும், “குழந்தைப்பாக்கியத்தை உனக்குக் கொடுத்து விட்டுத்தான் தைப்பிறப்பில் தில்லைவலத்தில் உள்ள உத்தமநாச்சியின் மகள் சிவகாமவல்லிக்கு பல்லக்கு பரிவாரம் அனுப்பி வைக்க இருக்கிறேன்”, என்று சிவவடிவேலு உடையார் சொல்லும்போது நெகிழ்ந்து போய் அவரின் முயக்கத்திற்கு ஈடுகொடுத்தாள் (பக்.120).

தர்மவர்த்தினி தன்னை வஞ்சித்து விட்ட சிவ வடிவேலு உடையாரை பழிவாங்க நந்தனோடு சேருகிறாள். “அவனுள் இருந்த சிவநெருப்புப் பிளம்பு ஒன்று இரவை விழுங்கினது போல் புதுவாசலை திறந்துவிட்டிருந்தது. தர்மவர்த்தினி ஒரு எல்லையில் இருந்து மறு எல்லையை கடந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் மனம் புடைத்து திணறிக் கிடந்தாள் அவள் உடம்பு இரை விழுங்கியப் பறவைபோல நெகிழ்ந்து கிடந்தது” (பக்.141).

நான்கு தாசிகளும் சுயமற்றவர்கள். பிரம்மதேய அடிமைகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. தர்மவர்த்தினி செய்கையை கலகமாக பார்க்க முடியவில்லை. நந்தனின் தோற்றமும் கண்டுகண்டான தேகமும் அவன் முகத்தில் தேங்கி யிருக்கும் ‘சிவ’களையும் அவளை வசியப்படுத்தின (பக்.138). நீசப்பறையனை கூடுவதற்கு சிவலோகநாதனின் அருள் கிடைத்திருக்க வேண்டும்.

இவர்கள் நால்வரைத் தவிரவும் கணிகையர்த் தெரு யுவதிகள் முத்துசாமி தீட்சிதரைக் கண்டு கனவில் சல்லாபித்து தங்கள் ‘உடம்பு’ பெருகி வடிபவர்கள் (பக். 90). இவ்விடத்தில் மாதவி - மணிமேகலை கதையும் சொல்லப்படுகிறது.

வளத்தி (நந்தனின் தாய்), கச்சலை (நந்தனின் மனைவி), குட்டா (அக்கா மகள்) ஆகிய தலித் பெண்களைப் பற்றிய வருணனைகள் தாசிகளைப் பற்றி வருணனைக்கு எவ்விதமும் குறைவு வைக்கவில்லை.

“அவளைப் பாக்கும் போது பனிரெண்டைப் பெத்த உடம்பாகத் தெரியவில்லை. சுருக்கமோ, தளர்ச்சியோ இல்லாமல் திம்முன்னு இருந்தாள். அவள், தான் இன்னும் நாற்பது வயதைக் கூட தொடவில்லை என்று தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தாள்.” வளத்தி (பக்.24).

“பனிரெண்டு வயசில் மூப்பில் இருந்த நந்தனைப் பிடித்துக் கொண்டு ஆதனூருக்கு வந்தபோது இருந்த உடம்பு, அவள் சின்னசாதி செட்டியோடு ஓடும்போது, ஒருபிடி தூக்கலாயும், எடுப்பாயும் தான் தெரிந்தாள், “கச்சலை (பக். 28).

“உன்னையே கட்டிக்கிறேன்னு நிக்கிற ஒக்கா மொவ குட்டா பொதபொதுன்னு வளர்ந்து வீராந்து நிக்கிறா... மொச்சை கண்ட நமப்புல உன்னையே சுத்திக்கிட்டு நிக்கிறவள சீராபேரா அடிச்சி வெரட்டிடாம, அவளை கட்டிக்கடா...” (பக். 47).

இந்த வருணனைகள் முத்துசாமி தீட்சிதர், மருத வாணம் பிள்ளை, ஞானசம்பந்தம் பிள்ளை, சாம்பசிவ குருக்கள், சிவவடிவேலு உடையார், ராமு மழவராயன், சுக்கிர வன்னியன் போன்றோரின் நீசப்பறைச் சாதிப் பெண்கள் பற்றிய எண்ணங்களுக்கு நிகரானது.

கோயில் கட்டளை அடிமைகள் தவில் வாசிக்கும் போது அவர்கள் கள் குடித்து வந்திருப்பதனால் இசைக் கருவிகளில் காட்டும் தடுமாற்றத்தைக் கேட்க முடிந்தது (பக்.89). மாட்டுத் தோல் கூட அவர்களுக்கு சொந்த மில்லாத போது கள் குடிப்பதும், இசையில் தடுமாறுவதும் எப்படி தவறாக இருக்கமுடியும்?

நாவலின் இறுதியில் கலகக்காரனான மருதன் நந்தனோடு சேருகிறான். அவனும் சேர்ந்து தில்லை செல்லும் முடிவெடுகிறான் பக்.224).

“நீ முதலில் மனுசனா வாழும் உரிமைக்காவ கலகம் பண்ணியிருக்கணும், நாங்க அதைச் செஞ்சோம். ஆனா, நீ சிவதரிசனம் காணும் உரிமைக்கு போராடியிருக்க”, என்று நந்தனை விமர்சிக்கிறான் மருதன் (பக்.216).

இருப்பினும் நந்தனின் முடிவை மாற்ற முடியாமல் அவனுக்கு உதவி செய்யப்போய் உயிரையும் விடுகிறான் மருதன். மருதனது கலகக்குரலும் நந்தனது சிவ தரிசனத்தில் காணாமற் போய்விட்டது. இன்றும் கூட நந்தன்கள் தோன்றிக்கொண்டேயிருக்கிறார்கள். அக்னியில் ஆகுதியாக வீழ்ந்து மடிய.

“ஆரிய வேதமதக்காரர்கள் இந்த மண்ணில் காலடி வைக்கும்போது அவர்கள் தலைவன் கிருஷ்ணன்” என்று சைவப் பரதேசி கூறுகிறான் (பக்.221).

“குரு ஷேத்திரத்தில் கிருஷ்ணன் எதிரியின் பக்கத்தில் போரிடும் தனது மக்களாகிய யாதவர்களை குறி வைத்துப் பேசுகிறான்”(பக்.33. - மாயையும் யதார்த்தமும் - டி.டி. கோசாம்பி).

“பல்வேறு மரபினரே ஒன்றாகக் கருதத் தொடங்கிய போது இவர்களை ஒன்றிணைத்து கிருஷ்ணன் என்ற ஒரே மரபு உருவாயிற்று. ஆயினும் முற்றிலும் புதியதான ஒரு மரபை உருவாக்கும் பிரச்சினை இல்லை. ஏதாவது ஒரு வகையில் கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். பின்னர் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டனர் (பக்.34, மேலே குறிப்பிட்ட நூல்).7

கிருஷ்ணன் யாதவர்களின் தலைவன். இவனும் பிராமனீயத்தால் உள்வாங்கப்பட்டான் என்று எண்ண இடமிருக்கிறது.

‘மரக்கால்’ நந்தன் கதையை ஒரு நோக்கில் மறுவாசிப்பு செய்கிறது. தொடக்கத்தில் கூறியது போல் இவை போன்ற புனைவுகள் பல்வேறு தளங்களில் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும். நந்தன் கதையிலும் வேறுபட்ட வாசிப்புகள் சாத்தியமே.

சோலை சுந்தரபெருமாளின் இதர நாவல்களிலிருந்து ‘மரக்கால்’ சிறிது வேறுபட்டிருந்தாலும், முந்தைய நாவல்களின் பாதிப்பை பல்வேறு இடங்களில் உணர முடிகிறது. ‘நஞ்சை மனிதர்கள்’, தொடங்கி ‘மரக்கால்’ வரையிலும் பல பொதுத் தன்மைகள் இருக்கவே செய்கின்றன.

நாவலை வாசிக்கும் போது ஏற்படுகிற சலிப்பு நாவலின் வடிவம், அமைப்பு முறையை மாற்றி வேறொரு உத்தியாக மாற்றியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. நாவலாசிரியரின் தேடல், உழைப்பு, ஆர்வம் ஆகியன பாராட்டத்தகுந்தது. இவை போன்ற புனைவுகளை மறு கட்டமைப்பு செய்யும் கலை, இலக்கிய வடிவங்கள் தமிழில் நிறைய வெளிவர வேண்டும்.

மரக்கால் (நாவல்)
ஆசிரியர்: சோலை சுந்தர பெருமாள்,
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
பக். 287, விலை ரூ. 130


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com