ராணிதிலக் கவிதைகள்
தோல்வி
இன்று காலையில், என் கண்கள்,
அந்தச் சூரியனை வேட்டையாடின.
என் காதுகளின் மடிப்பில்,
அமர்ந்தபடி,
குயில்கள் பாடுவதும் தப்புவதே இல்லை.
அந்தப் பவழ மல்லியின் நறுமணம்
என் மூக்கை நோக்கியே மலர்ந்து கவிழ்கிறது.
என் விரல்கள் தீண்ட,
வெம்மையில், அக்கனி மேலும் பழுக்கிறது.
இக் கருத்த பாதை,
என் கால்களிலிருந்து விடுபட்டு ஓடுகிறது. அந்தியையும்
சாய்த்து, வீடு திரும்புகிறேன். அறையின்
இருள், நிழலெனத் தோன்றுகிறது
இன்றைய சாயுங்காலத்திலிருந்து,
வழக்கம் போலவே,
எப்போதும் போல்,
நிழல்களிடம் தோற்பவன் ஆகிறேன்.
இல்லை
என் முன்னால்
மழை பெய்கிறது
பெய்யும் மழைக்குப்
பின்புறம் இருக்கும் மலைக்கும் இது தெரியும்.
அது வலுத்துப் பெய்யும்போது
நீர்த்துளிகளையோ,
மலையையோ,
நாம் காண முடிவதில்லை.
அதன் கனக்கும் ஓசையில்,
நம்மின், மலையின் இறுக்கம் தளர்கிறது.
அப்போது
மலையுடன் நாமும் சேர்ந்து
கரைகிறோம் சட்டென, எதிர்
பார்க்காத மழை நிற்கிறது. நின்றபின்,
பார்க்கும்வேளை,
அங்கே மலை இல்லை.
மலையிலிருந்து காண,
அங்கே நான் இல்லவே இல்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|