Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelPeriyar
பெரியார் பேசுகிறார்

வகுப்புவாதமா? சமூக வாதமா?

வகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூகவாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது குடிஅரசு தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி, இவைகள் எல்லாம் மறைந்து, இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர, வேறு எவ்விதக் கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார், அல்லாதவர்கள் யார் என்று பார்த்தாலோ அது இவைகளை எல்லாம்விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது, வகுப்பு வித்தியாசம், சாதி உயர்வு-தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இக்கவேண்டும் என்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள்தாம் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள்.

உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும், தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்திருக்க வேண்டும்; பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு, மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு; சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசம் இருக்க வேண்டும்; இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக்கூடாது; எவ்விதச் சட்டமும் செய்யக் கூடாது - என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும், அவர்களது கூலிகளும் தவிர மற்றவர்கள் எல்லோரும், அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள்.

எப்படியென்றால், நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது, சர்க்காரையும், தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டும் என்பதேயாகும். இந்தத் தேசம் பாழாய்ப் போவதற்கும் இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்கும், சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்தச் சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்தச் சமூகத்தார் முதலில் அழிக்கப்பட வேண்டுமென்பதாகும்.

(குடிஅரசு, தலையங்கம் - 19.5.1929)

வகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணர முடியாதவனோ, தன் வகுப்பைப் பற்றி சந்தேகப்படத் தக்கவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்பது தேசத் துரோகம் என்று சொல்லப்படுமானால், அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி, லம்பாடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும். நம்மவர்களுக்கு உண்மையான வகுப்புணர்ச்சி இல்லாததாலேயே, நாம் நாடற்ற நாடோடிகளால் அடக்கி ஆளப்பட்டு வருகிறோம்.
இங்கிலீஷ்காரன் இன்று, அவன் நாட்டின்மீது இத்தனை ஆயிரக்கணக்கான ஆகாயக் கப்பல்கள் பறந்து, பதினாயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வீழ்ந்து, குழந்தைகளும், குட்டிகளும் மாடங்களும் மாளிகைகளும் நாசமானாலும் கூட, ஓர் உயிர் உள்ள வரை போராடியே தீருவேன் என்று சொல்லுவதன் கருத்து, அவன் வகுப்பு உணர்ச்சியின் - வகுப்புவாதத் தன்மையின் உச்சநிலையேயாகும்.

நம் நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்களுக்கு வகுப்பு உணர்ச்சியோ, நாட்டு உணர்ச்சியோ ஏற்படுவதற்கு நியாயமில்லை. ஆகவேதான், ஏன் சண்டை போடவேண்டும்? விட்டுவிட்டுப் போகலாமே என்கின்ற ஞானமும், யார் ஜெயித்தால்தான் என்ன? என்கின்ற ஞானமும் உதயமாகின்றன. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதிக்கம் வந்ததாலேயே நம் நாட்டிற்கு இப்படி அடிக்கடி படையெடுப்புகளும், ஆபத்துகளும் நேருவது மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்களாகிய நாம் நாடோடிகளால், சூத்திரர்களாகக் கருதப்படுகிறோம்.

மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா? பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா? அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் வகுப்புவாதி என்றும் - தேசத் துரோகி என்றும் - உத்தியோக வேடடைக்காரர்கள் என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமற்ற ஈனத்தன்மையின் பயனுமே ஆகும்.

நாம் உத்தியோக வேட்டைக்காரர்களாம்! ஆம் என்றே வைத்துக் கொள்வோம். நாம் உத்தியோக வேட்டை ஆடுவதில் தப்பு என்னவென்று கேட்கிறேன்? திராவிட நாட்டில் ஒரு பார்ப்பானோ - ஓர் ஆரியனோ உத்தியோக வேட்டையாடுவதும், ஒரு திராவிடன் உத்தியோக வேட்டையாடுவதும் என்றால் யாருக்கு உத்தியோக வேட்டை ஆட உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். உத்தியோக வேட்டையாடாத வகுப்பானுக்கு அவன் நாட்டினிடமும், அவன் வகுப்பினிடமும் பொறுப்பில்லை என்பதோடு, அவனை வகுப்புத் துரோகி என்று கூடச் சொல்லத் துணிவேன். ஒவ்வொரு வகுப்புக்கும் அவனது வகுப்பு எண்ணிக்கை அளவுக்கு உத்தியோகம் கொடுக்க ஆட்சேபித்தால் - ஆட்சேபிக்கப்பட்ட வகுப்பை இழிவுபடுத்தியதாகவும், கோழைத்தனமுள்ள, மானமற்ற, யோக்கியதையற்ற வகுப்பாகக் கருதியதாகவும் அர்த்தமாகும். எந்த வகுப்பான் தன்னுடைய வகுப்பு எண்ணிக்கை அளவுக்குத் தனது நாட்டில் உத்தியோக வேட்டையாடிப் பெறவில்லையோ, அந்த வகுப்பான் மானமற்ற கோழை வகுப்பானே வான். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன்?

உத்தியோகம் யார் அப்பன்வீட்டுச் சொத்து? உத்தியோகத்துக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய்-தந்தையார் பாடுபட்ட சொத்து? உத்தியோகம் யாருக்காக, எந்த வகுப்புக்காக நிர்வாகம் செய்யப்படுவது என்பதை ஒரு நாட்டானோ, வகுப்பானோ தெரிந்து கொள்வானேயானால் - மற்ற நாட்டானோ, மற்ற வர்த்தகத்தானோ, மற்ற வகுப்பானோ நம் நாட்டில் வந்து உத்தியோகம் பார்ப்பதைப் பிராணனை விட்டாவது தடுக்க மாட்டானா என்று கேட்கிறேன்.

- (சென்னையில், 8.9.1940இல் சொற்பொழிவு - விடுதலை, 29.8.1950)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com