Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelPeriyar
பெரியார் பேசுகிறார்

பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் - அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாடுகளிலும் எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது. பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லப்படுவதுண்டு. இவை எல்லாம் கடவுளை வணங்கித் தங்களுக்கு நன்மை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கின்றது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்துகொள்வது, ஜீவப் பலி கொடுப்பது, கோவில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப் படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறு பெயர் சொல்ல வேண்டுமானால் ‘பேராசை’ என்றுதான் சொல்லவேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

படித்துப் ‘பாஸ்’ செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால்; பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால்; மோட்சத்துக்குப் போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால் இவைகளெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாகும்.

பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை.
மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளைச் சுத்த முட்டாள் என்று கருதி அவனை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூடச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. எந்த மனிதனும் தகுதியினால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனடைய எதிர்பாராமல் - காரியத்தைச் செய்யாது பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்றுந் தானே சொல்லவேண்டும்?

தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் ‘லைசென்சு’ (அனுமதிச் சீட்டு) கொடுப்பது போலாகிறது. விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க அரிவாள் எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

ஏனென்றால், சகல காரியங்களும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு, கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்திற்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்துவிட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்திருக்கும் ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். சாதாரணமாக, மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது.

அதாவது, ‘எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்’ அல்லது ‘உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்; அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய்’ என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது. இவர்கள் எல்லோரும் - அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளைப் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மையுடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்.

சிலர் சொல்லுகிறார்கள், “மனிதன் பாபி; அவர்கள் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீரவேண்டும்” என்று. “நான் பாபம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும்” என்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்ளுவதானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?

ஆகவே, ‘கடவுள்’ கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்லவேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோசனத்தையும் கொடுக்காமல் போய்விடும். மனிதன் பூசையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்காகப் பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை. குரு (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்காகவே பிரார்த்தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது.

இந்த இரண்டு காரியங்களும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ, முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆத்திகர்கள் கொள்கைப்படி, மனிதனுடைய செய்கையும் எண்ணமும், ‘சித்திரபுத்திரனுக்கோ’ ‘கடவுளுக்கோ’ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காகப் பலன் கொடுக்கத் ‘தீர்ப்பு நாளும்’, ‘எமதர்ம ராஜாவும்’ இருந்தே இருக்கிறார்கள். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பவை - மேற்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனமானவைகளைச் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகின்றன என்பவைகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.


(‘பகுத்தறிவு’ மலர் 1, இதழ் 9, 1935)




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com