Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelPeriyar
பெரியார் பேசுகிறார்

கொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு?

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா?

வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான். வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன். இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.

அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது. கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்? கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன். கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!

இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?

எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

(29.8.73 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஆற்றி உரை)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com