Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelPeriyar
பெரியார் பேசுகிறார்

தீபாவளி தமிழர் விழாவா?

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

(விடுதலை பிறந்தநாள் விழா மலர் -94 )


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com