Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelPeriyar
பெரியார் பேசுகிறார்

தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இந்து கோயில்களைத் தரைமட்டமாக்குக

நம் திராவிட மக்கள் புத்தி இல்லாதவர்களாக, மடையர்களாக, காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றனர். இன்னும் நாம், மதத்தின் பேரால், கடவுளின் பேரால் மட்ட சாதி ஆக்கப்பட்டு இழிநிலையில் இருப்பது பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இப்படி எதனால் காட்டுமிராண்டியோ, இழிமக்களோ ஆனோமோ அந்த மதத்தையும், கடவுளையும் பற்றிச் சிந்திப்பதே இல்லை. என்ன காரணம்? நம் மக்களுக்குப் புத்தியும் இல்லை மானம் இல்லை. இதன் காரணமாகவே ஏமாறுகின்றோம். பரம்பரை பரம்பரையாக நாம் ஏன் கீழ்ச்சாதி? பரம்பரை பரம்பரையாக அவன் ஏன் மேல்சாதி? என்று இந்த அதிசய அற்புதக் காலத்திலும் எவன் சிந்திக்கின்றான்? இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும் என்று எங்களைத் தவிர எந்தப் பொதுத் தொண்டுக்காரன் பாடுபட்டான்? எவன் சிந்தித்தான்?

பொதுத் தொண்டன் பொதுத்தொண்டு செய்கின்றேன் என்று கூறுகின்றானே, அவனும் சட்டப்படி சாத்திரப்படி இழிமகன்தானே! அவனும் பார்ப்பானுக்கு சூத்திரன் என்கிற வைப்பாட்டி மகன்தானே என்று நினைத்து, எவன் பொதுத்தொண்டு செய்கின்றான்? மக்களிடம் சென்று “நீங்கள் பக்திமான், மேலானவர், தர்ம புருஷன்'' என்று கூறினால் காசு கொடுப்பான். அதை விட்டுவிட்டு, “நீங்கள் மடையர்கள், கல்லைக் கும்பிடுகின்றீர்கள், சாணியைப் பிள்ளையார் என்கிறீர்கள்'' என்று கூறிக் கொண்டு “பசிக்குது கொஞ்சம் சோறு கொடுங்கள்'' என்றால் என்ன கூறுவான்? “உன்னுடைய லட்சணத்துக்குச் சோறு வேறா? போடா போடா'' என்றுதானே கூறுவான்?

இதுவரையில் இந்த நாட்டில் எவரும் செய்யாத தொண்டை நாங்கள்தான் செய்கின்றோம். இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய தொண்டு ஒன்று இருந்தால், இதுதான் என்று நினைத்தபோது வருகின்றோம். இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல, மடமையைத் திருத்த எந்தப் படித்தவன், புலவன் முன் வருகின்றான்? அவனவன் வயிற்றுப் பிழைப்புக்கே தாம் படித்ததைப் பயன்படுத்துகின்றான். மற்றபடி பணக்கார லட்சாதிபதிகள் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாரும் இதுபற்றிப் பாடுபடுகின்றனரா? இப்படி மக்கள் மூடர்களாய் இருந்தால்தான் நாம் கொள்ளை அடிக்க வசதியாக இருக்கும் என்று கருதிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் தட்டிப் பேச இங்கு ஆளே கிடையாது. மேல் நாட்டுக்காரன் அவற்றை எல்லாம் விரட்டி விட்டு அறிவுக்குப் பொருத்தமான முறையில் கடவுளையும் மதத்தையும் அமைத்துக் கொண்டான். அதன் காரணமாக, அறிவியலில் அதிசய அற்புதங்களை நாளுக்கு நாள் உண்டாக்கிய வண்ணம் இருக்கின்றான். அந்த நாட்டில் இப்படி எல்லாம் ஆக அங்குக் கடவுள் துறையில் மதத் துறையில் அறிவுத் துறையில், மாறுதல் உண்டாக்க அறிஞர்கள் கிளம்பிச் சீர்திருத்தினார்கள். நாம் இத்தனைக் கோயில் குட்டிச் சுவரினை வைத்துக் கொண்டு சாதித்தது என்ன? நம்மை சைனாக்காரனும் பாகிஸ்தானும் விரட்டுகின்றான். ஆண்டுக்கு 250 கோடி செலவில் பட்டாளத்தை வைத்துக்கொண்டு இருந்தாலும், நேரு (இந்தியாவின் தலைமை அமைச்சர்) நடுங்கிக் கொண்டு இருக்கின்றாரே?

தோழர்களே! ரயில் வந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பஸ் வந்து 50 வருஷம் ஆகின்றன. இன்னும் தந்தி, ரேடியோ போன்ற வசதிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கின்றன. இன்னும் இதைவிட அறிவியல் அதிசயம் நம் நாட்டிற்கும் வரப்போகின்றது. லண்டனில் நடக்கும் டான்சையோ சினிமாவையோ இங்கு இருந்து கொண்டே பார்த்துக் களிக்கும்படி "டெலிவிஷன்' வெகு சல்லிசாக வரப்போகின்றது. இந்த டெலிவிஷனால் லண்டனில் சினிமா, நாடகக்காரர்களுக்குப் பிழைப்புக் குறைந்து கொண்டே வருகின்றதாம். காரணம், பலர் டெலிவிஷன் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தே பார்த்துக் கொள்கின்றனர்.

ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் போட்டிப் போட்டுக் கொண்டு, சந்திர மண்டலத்திலும் குடியேற முயற்சி செய்கின்றான். நமக்கு மட்டும் அப்படிப்பட்ட அறிவு இல்லை என்றால், நாம்தான் கல்லைக் கடவுளாகக் கும்பிடுகின்றோமே! மாட்டுச் சாணியையும் மூத்திரத்தையும் பஞ்சகவ்வியம் என்று கலக்கிக் குடிக்கின்றோமே! சாம்பலும் சுண்ணாம்புப் பட்டையும், செம்மண் பட்டையும் அடித்துக் கொள்ளுகின்றோமே! நாம் என்றைக்கு ஈடேறுவது?

முன்னோர்கள் சொன்னார்கள் மதம் சொல்லுகிறது ரிஷிகள், மகான்கள் சொல்லுகின்றனர் என்ற கருதாமல், தாராளமாக அறிவுக்கு ஆராய்ச்சிக்கு வேலை கொடுத்து உன் புத்தி சொல்லுகின்றபடி நட என்றுதான் கூறுகின்றோம். ஆனால், புத்தர் ஒருவர்தான் “உன் புத்திக்கு ஏற்றபடி, அது சொல்லுகின்றபடி நட. முன்னோர்கள் பெரியவர்கள் சாஸ்திரம் சொல்லுகிறது என்று கேட்காதே! உன் புத்தி சொல்லுகின்றபடி நட'' என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியினை ஒழித்துவிட்டார்கள். அந்தக் கொள்கை இன்று சீனா, ஜப்பான், சிலோன், திபெத் ஆகிய நாடுகளில் இருக்கின்றது. இன்று புத்தன் யார் என்று இங்கு பல பேர்களுக்குத் தெரியாது. இப்படிப் புத்தனுக்குப் பிறகு எவனுமே தோன்றவே இல்லையே! இந்த 2500 ஆண்டில் நாங்கள்தான் தோன்றி பாடுபட்டு வருகின்றோம்.
(10.10.1960 அன்று, தூத்துக்குடியில் ஆற்றிய சொற்பொழிவு)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com