Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelPeriyar
பெரியார் பேசுகிறார்

21. காமராசர் ஆட்சி, வாய்தா பூராவும் இருக்க வேண்டும்

Periyar இந்தக் கூட்டம், ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்புப் படையை வரவேற்கும் கூட்டமாகும். உங்களுக்குத் தெரியும் நண்பர் ஆச்சாரியார் பதவிக்கு வந்ததும் நான் அவரைப் பாராட்டினேன்; மற்றவர்களைவிட ஆச்சாரியார் எவ்வளவோ மேல் என்று பேசினேன். கம்யூனிஸ்டுக்காரர்களைவிட, பிரகாசத்தைவிட, ஆச்சாரியார் பரவாயில்லை என்று துணிந்து எழுதினேன்; அவரை ஆதரித்தேன்.

நாம் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டியதில்லை. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, சட்டசபைக்குப் போவதில்லை; மந்திரியாக முயல்வதில்லை; தேர்தலில் நிற்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ‘இதெல்லாம் இல்லாமல் உன்னால் என்ன முடியும்?' என்றார்கள். அதற்குப் பதில் சொன்னேன் ‘யார் வந்தாலும் நமக்கான காரியங்களைச் செய்யும்படி பார்த்துக் கொண்டாலே போதும்' என்று. ஆச்சாரியார் இந்தக் கல்வித் திட்டம் குறித்து மிகவும் பிடிவாதமாக இருந்தார். அதனால்தான் நானும் மிக உண்மையாகக் கண்டித்தேன். நானே வருந்தும்படியாக, அவர் பதவியை விட்டுப் போகும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது.

இன்றைக்கு காமராசர் இந்நாட்டின் முதலமைச்சராக வந்துள்ளார். இனிப் பலரும் சொல்லப் போகின்றார்கள், ‘காமராசரும் பெரியாரும் ஏதோ ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அடிக்கடி ரகசியமாகச் சந்தித்துப் போசுகிறார்கள்' என்றெல்லாம் கூறுவார்கள். இன்றைய தினம் இக்கல்வித் திட்டம் எடுபடும்படியான செய்தி வந்தது குறித்து நாம் பெருமைப்பட வேண்டியதுதான். நாடு முழுவதும் பாராட்டுக் கூட்டம் போடவேண்டியுள்ளது. பெரும்பாலும் அந்தப் புகழ் எல்லாம் காமராசருக்கே போகும்.

நாமும் இந்தத் திட்டத்தை எதிர்த்தோம்; மற்ற எல்லாக் கட்சிக்காரர்களும் இத்திட்டத்தை எதிர்த்தார்கள்; இது குறித்து காமராசரும் எதிர்த்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லிய அதே காமராசர், தான் பதவிக்கு வந்ததும் அதை எடுக்காமல் இருப்பாரானால் என்ன ஆகியிருக்கும்? அவரும் இந்த சுப்பிரமணியம், பக்தவத்சலம் முதலியவர்களுடன் சேர்ந்து கொண்டு கல்வித் திட்டத்தை ஆதரித்துக் கொண்டு இருந்தால், என்ன ஆகியிருக்குமோ, என்னால் சொல்லவே முடியாது.

நமக்கு மகிழ்ச்சிக்குக் காரணம், திராவிடன் முதல் மந்திரியாக வந்ததாகும். காமராசர் வந்ததும் ஆச்சாரியாரின் சீடர்களுக்கு எப்படியோ இருக்கும். அதோடு, இந்த நாட்டில் இருக்கிற பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும், பார்ப்பனக் கூலிகளுக்கும் எப்படியோ இருக்கும். அவர்களுக்கெல்லாம் இந்த மந்திரி சபையே பிடிக்காது. ஆகவே, நாம் காமராசர் மந்திரி சபையை ஆதரித்துத்தான் தீரவேண்டும். எப்போதுமே ஆதரிக்க வேண்டியதுதானா என்பது பற்றி இப்போது ஒன்றும் யோசிக்க வேண்டியதில்லை.

1924 முதல் 1954 வரை ஒரு தமிழன்கூட முதன் மந்திரியாக வர முடியவில்லை. சுப்பராயன், சுப்பராயலு ரெட்டியார், பிரகாசம், ஓமாந்தூர் ரெட்டியார், ராசகோபாலாச்சாரியார் இந்த மாதிரியாக பார்ப்பானும், ஆந்திராக்காரனும்தான் இருந்திருக்கின்றார்கள். அப்படிக்கில்லாமல், முதன் முதலாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன், முதலமைச்சராக வந்திருக்கின்றார். இவர் மந்திரி சபையும் 15 நாளில் தீர்ந்து போகாத மாதிரி இவர் வாய்தா பூராவும் இருக்கிற மாதிரி இருக்க வேண்டும்.

இரண்டாவது, முதன்முறையாகப் பார்ப்பானே இல்லாத மந்திரி சபை இது. இந்தக் காரியம் மிகமிகப் பெருமையானது. இன்றைக்கே அக்கிரகாரம் பேசுகிறது, ‘நம்முடைய ஆச்சாரியார் எங்கே? இந்தச் சாதாரண காமராசர் எங்கே?' என்று. நான் சொல்லுகிறேன் ‘போய்ப் பாரேன்; இப்போது எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று! ‘காமராசர் இந்தத் திட்டத்தை எடுத்தால் அவரை எதிர்ப்போம்' என்று சில காங்கிரஸ்காரர்கள் பேசினார்களாம்! நாளைக்கு அவர்கள் யாரை எதிர்க்கின்றார்களோ பார்க்கலாம்.

சட்ட சபையில் இப்போதுள்ள ‘திராவிடப் பார்லிமென்டரி கட்சி'யில் 23 பேர் இருக்கின்றார்கள். நாளைக்கு அவர்கள்தாம் எதிர்க்கட்சியாய் இயங்கப் போகின்றார்கள். காமராசர் ஆட்சி, இந்தக் கம்யூனிஸ்டுகளுக்குத்தான் பெரிய மண்டைக் குடைச்சல்! இந்தக் கம்யூனிஸ்டுகள், ஆச்சாரியாரிடம் நல்ல முறையில் பல பலன்களை அடைந்து வந்தார்கள். இந்தக் கம்யூனிஸ்டுகள், இந்த மந்திரி சபை மாற்றத்தைப் பற்றிச் சொன்னார்களாம், ‘குடுமி போய், கிராப் வந்திருக்கிறது' என்று. ‘இதனால் என்ன லாபம்!' என்றார்களாம். இவர்களும்தானே இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்ப்பதுபோல் காட்டிக் கொண்டார்கள்? இப்போது, குடுமி போய் கிராப் வந்தால் என்ன செய்யும் என்று தெரிகிறதா?

ஆச்சாரியார் இப்போது அடிக்கடி எங்களை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்வதன் அர்த்தம் அவர் ‘இந்து மகா சபை'க்கு அனுகூலமாக இருக்கிறார்; அது வடநாட்டில் தற்போது சற்று வளர்ந்து வருகின்றது. அதன் மூலம் ஏதாவது பதவி அடைய முயற்சிக்கிறார்.

இந்த நாட்டில் இருக்கும் பத்திரிகைக்காரர்களுக்குப் பெரிய வேதனை. எப்படி இந்தப் பார்ப்பான் இல்லாத மந்திரி சபையைக் கவிழ்ப்பது என்றுதான் யோசித்து வருகிறார்கள். ‘தினமணி' இன்னும் ஒரு மாதத்தில் எதிர்க்கும்; ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' எதிர்க்கும். எல்லாவற்றிற்கும் பிறகு, மெதுவாக ‘இந்து' எதிர்க்கும் என்பதாகக் கூறி, படையினருக்குப் பாராட்டுகள் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.


திருவல்லிக்கேணி கடற்கரையில் ஆற்றிய சொற்பொழிவு. ‘விடுதலை' 15.5.1954.





நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com