Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

             வாழ்வில் உயர்வு கொள்!

சுயமரி யாதைகொள்தோழா! - நீ
துயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! - (சுய)

உயர்வென்று பார்ப்பனன் சொன்னால், - நீ
உலகினில் மக்கள் எலாம்சமம் என்பாய்;
துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்
ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்
பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு! (சுய)

சேசு முகம்மது என்றும்! - மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்தனென்றும்,
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்!
காசைப் பிடுங்கிடு தற்கே - பலர்
கடவுளென் பார்!இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட
கோயிலென் றால்ஒரு காதத்திலோடு! (சுய)

கோயில் திருப்பணி என்பர் - அந்தக்
கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்து னைக் காசு - கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
வாயைத் திறக்கவும் சக்தி - இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட்கேநீ
தாயென்ற பாவனை யோடும் - உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும். (சுய)

கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
கடவுள் புவிக்கவ தாரம், - அந்தக்
கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,
கழுகொத்த பூசுரர், பரமாத்து, மாக்கள்
கடவுள் அனுப்பிய தூதர் - வேறு
கதைகளினாலும் சுகங்கண்டதுண்டா? (சுய)

அடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதிவரைக்கும்,
மிடிமை தவிர்த்ததும் உண்டோ? - அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ?
குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல்; கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததி னாலே - தம்பி!
வசம்கெட்டுப் போனது நமதுநன்னாடு. (சுய)

உழக்காத வஞ்சகர் தம்மை - மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ?
விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்
விளையாடும் திருடரைச் 'சாமி' என் கின்றார்!
அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர்
முதலெழுத் தோதினும் மதியிருட் டாகும்! (சுய)

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.