 |
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்
வானம்பாடி
வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?
வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல் எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்
நீநம்பாய் என்று, நிமிர்ந்த என்கண்ணேரில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்;
உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே இருப்பாய் பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண்டே இருப்பார் தென்பாங்கை உன்பால்!
அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்
இசைமழையால் இன்புறுவோம் யாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|