Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

             தமிழ் உணவு

ஆற்றங் கரைதனிலே - இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
காற்றிலுட் கார்ந்திருந்தேன் - வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர் - வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
சாற்றுச் சுவைமொழியார் - சிலர்
தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர்; (ஆற்றங்கரைதனிலே)

நாட்டின் நிலைபேசிப் - பல
நண்பர்கள் கூடி இருந்தனர் ஓர் புறம்
ஓட்டம் பயின்றிடுவார் - நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
கோட்டைப் பவுன் உருக்கிச் செய்த
குத்துவிளக்கினைப் போன்ற குழந்தைகள்
ஆட்டநடை நடந்தே - மண்ணை
அள்ளுவர் வீழுவர் அம்புலிவேண்டுவர்; (ஆற்றங்கரைதனிலே)

புனலும் நிலாவொளியும் - அங்குப்
புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில்
இனிது பறந்து பறந் தங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள் !
தனிஒரு வெள்ளிக்கலம் - சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நட்சத்திரம்!
புனையிருள் அந்திப் பெண்ணாள் - ஒளி
போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த (ஆற்றங்கரைதனிலே)

விந்தை உரைத்திடுவேன் - அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்த ஓர் பாட்டுரைத்தாள் - அது
முற்றுந் தெலுங்கில் முடிந்து தொலைந்தது!
பிந்தி வடக்கினிலே - மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்
எந்தவிதம் சகிப்பேன்? - கண்ட
இன்பம் அனைத்திலும் ‏துன்பங்கள் சேர்ந்தன; (ஆற்றங்கரைதனிலே)

பொருளற்ற பாட்டுக்களை - அங்குப்
புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்;
இருளுக்குள் சித்திரத்தின் - திறன்
ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்கூடுமோ?
உருவற்றுப் போனதுண்டோ - மிக்க
உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு?
கருவுற்ற செந்தமிழ்ச் சொல் - ஒரு
கதியற்றுப் போனதுண்டோ அடடா அந்த (ஆற்றங்கரைதனிலே!)

சங்கீத விற்பனனாம் - ஒரு
சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை;
அங்கந்தப் பாட்டினிலே - சுவை
அத்தனையும் கண்டுவிட்டது போலவே
நம்குள்ளர் வாய்திறந்தே - நன்று
நன்றென ஆர்ப்பரித்தார்; அந்த நேரத்தில்
எங்கிருந்தோ தமிழில் - ஓர்
இன்பநறுங்கவி கேட்டது காதினில் (ஆற்றங்கரைதனிலே)

'அஞ்சலை, உன் ஆசை - என்னை
அப்புறம் இப்புறம் போகவிடாதடி
கொஞ்சம் இறங்கிடுவாய் - நல்ல
கோவைப் பழத்தினைப் போன்ற உதட்டினை
வஞ்சி, எனக்களிப்பாய்!' - என்ற
வண்ணத் தமிழ்ப்பதம் பண்ணிற் கலந்தென்றன்
நெஞ்சையும் வானத்தையும் - குளிர்
நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும் (ஆற்றங்கரைதனிலே)

ஒன்றெனச் செய்ததுவே! - நல்
உவகை பெறச்செய்ததே தமிழ்ப் போசனம்!
நன்று தமிழ் வளர்க! - தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக!
என்றும் தமிழ் வளர்க! - கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக!
இன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக!

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.